ஹார்மோனியம் – புல்புல்தாரா – பேங்கோஸ் – தபேலா – டோலக் போன்ற துணைக்கருவிகள் கூட்டம் இல்லாமல் சேதுராமன் கையில் ஒரு பெரிய டேப் – பொன்னம்மாள் கையில் எப்போதாவது பயன்படுத்தும் சிப்லா கட்டை. இவற்றோடு கருத்துப் புரட்சியை மட்டுமல்ல, கலைப் புரட்சியையும் செய்தவர்கள் மதுரை சேதுராமன் பொன்னம்மாள். மேற்சொன்ன கலைநிகழ்ச்சி குழுவின் இருவரும் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள். பொன்னம்மாள் தலித் பிரிவை சேர்ந்தவர்.

கையில் பெரிய பயணப்பெட்டி – ஆடம்பரங்கள் இல்லாமல் ஒரு பெரிய சாக்கு பையில் டேப்பும் – சேதுராமன் அணிந்து கொள்ளும் கசங்கிய கறுப்பு ஜிப்பாவும் – வேட்டியும் இருக்கும். பொன்னம்மாள் கையில் மட்டும் கொஞ்சம் நாகரீகமான பிளாஸ்டிக் சூட்கேஸ். பம்பாய் நிகழ்ச்சிகளுக்கு போயிருந்தபோது பம்பாய் தோழர்கள் அவர்களுக்கு அன்பளிப்பாய் கொடுத்ததாம் அது.

கடந்த 1960-களில் பொன்னம்மாள் சேதுராமன் கலைநிகழ்ச்சி நடைபெறாத பெருநகரங்கள் இல்லை; குக்கிராமங்கள் இல்லை. இவர்களது பிரச்சாரப் புயல் மராட்டிய மாநிலத்தின் பம்பாய் – கர்நாடக மாநிலத்தினுடைய பெங்களூர், தங்கவயல் போன்ற இடங்களிளெல்லாம் திராவிடர் கழக மேடைகளில் சுழன்று வீசியது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் கோயில் இருக்கும் என்று பக்தர்கள் சொல்லிக் கொள்வதைப் போலவே பெரியாரின் கருஞ்சட்டைப் படை இருந்த இடமெல்லாம் பொன்னம்மாள் சேதுராமனின் கருத்தும் – புரட்சியும் இருந்தது. இவர்கள் பாடிய பாடல்களை தாங்களே பயின்று கூட்டங்களில் பாடிய தோழர்கள் ஏராளம்.

இந்த இணையர் மிக எளிமையானவர்கள். கழகத் தோழர்கள் வீடுகளிலேயே சாப்பிட்டுக் கொள்வார்கள். உணவு விடுதிகளுக்குப் போக வேண்டும் என்று சொல்ல மாட்டார்கள். தெருவோரத்து இட்லிக் கடைகளில் காலை இரவு சிற்றுண்டி. பல நேரங்களில் நிகழ்ச்சி முடிந்தவுடன் சேதுராமன் கழகத் தோழர்களோடு மேடையிலேயோ அல்லது வீட்டுத் திண்ணையிலேயோ படுத்துக் கொள்வார். பொன்னம்மாள் மாத்திரம் அந்த சிறிய வீடுகளில் பெண்களோடு தங்கிக் கொள்வார்.

சேதுராமனின் தோற்றத்திற்கும் – ஆற்றலுக்கும் தொடர்பு இல்லை. அவர்களுடைய பிரச்சாரம் பெரியார் வரலாறு – காமராசர் சாதனை – கடவுள் – மூடநம்பிக்கை – சடங்குகள் இவற்றைப் பற்றி பொன்னம்மாள் ஓர் அப்பாவியை போல் கேள்விகள் கேட்க சேதுராமன் அவைகளுக்கு பதில் சொல்லுகின்றன மாதிரி நீண்ட விளக்கங்களைச் சொல்வார். பேச்சின் நெடுக சேதுராமனின் நக்கலும் – கிண்டலும் கூட்டத்தை பெரும் கலகலப்பில் ஆழ்த்தும். இடையிடையே டேப் இசையோடு இருவரும் சேர்ந்து பாடும் பாடல்கள். நிகழ்ச்சி பல சமயம் நள்ளிரவு தாண்டியும் நடக்கும். அது கூட்டத்தையும் – கூட்டத்தில் இருக்கிறவர்கள் கொடுக்கும் உற்சாகத்தையும் பொறுத்தது.

சேதுராமன் சற்று முன்கோபக்காரர். சில நேரங்களில் கழகத் தோழர்களுடனே உரசல் வந்து விடும். பொன்னம்மாள் தான் குறுக்கே வந்து ‘அண்ணே... அண்ணே’ என்று குடைந்து பேசி பிரச்சனைகளின் வேகத்தைக் குறைப்பார். பெரிய கல்வி அறிவில்லாத அந்த எளிய பெண்மணியின் பணிவும் – தன்மையான பேச்சும் எல்லாவற்றிற்கும் மேல் அவருடைய அற்புதமான குரல் வளமும் யாவரையும் ஈர்த்து விடும்.

அந்த காலத்தில் புகழ் பெற்ற நடிகையாகவும் – தமிழிசைக் கலைஞராகவும் இருந்தவர் கொடுமுடி கோகிலம் – ஏழிசை வல்லபி கே.பி.சுந்தராம்பாள் அம்மையார் ஆவார். இவர் அவ்வையார் – பூம்புகார் போன்ற திரைப்படங்களில் அற்புதமாகப் பாடி நடித்தவர். அவருடைய “ஒருவனுக்கு ஒருத்தி என்ற”, “தப்பித்து வந்தானம்மா” போன்ற பாடல்கள் இன்னமும் காற்றோடு கலந்து காலத்தை வென்று நிற்கின்றன. அவருக்கு மிகவும் புகழ் சேர்த்த பாடல் ஒரு பக்தை முருகனைப் பார்த்து அவனுடைய உடல்அலங்காரங்களை எல்லாம் ஏன்? ஏன்? என்று கேள்வி கேட்டு பாடும் சங்கரதாஸ் சுவாமிகளுடைய பாடலாகும்.

“வெண்ணீறணிந்தது என்ன... என்ன...
வேலை பிடித்தது என்ன... என்ன...
கண்மூடி நின்றது என்ன... என்ன...
காவி உடுத்தது என்ன... என்ன...”
என்பது தான் அந்த பாடல்.

இதே பாடலின் மெட்டில் பெரியாரைப் பார்த்து ஒருவர் கேள்வி கேட்பதாக சேதுராமன் எழுதிய ஒரு பாடல் இவர்களுடைய கலைநிகழ்ச்சிகளில் முத்தாய்ப்பானது.

“கருஞ்சட்டை அணிந்தது என்ன... என்ன...
கையில் தடியோடு நின்றது என்ன.. என்ன..”

என்ற ஏராளமான கேள்விகளைக் கொண்ட பாடல் அது. பொன்னம்மாளினுடைய குரல் ஒரு அசப்பில் கே.பி. சுந்தராம்பாளினுடையது போலவே இருக்கும். தமிழிசை உலக பரிபாஷையில் அவருடை உச்சஸ்தாயி சஞ்சாரங்கள் எல்லாம் (குரலை மேலே உயர்த்திப் பாடுவது) பிசிறில்லாமல் ஒரு தேர்ந்த இசை கலைஞனுடையதை போல் “கிண்” என்று நிற்கும். அந்த பாடலை பாடச் சொல்லி இசை நிகழ்ச்சியின் துவக்கத்தில் இருந்து சீட்டுகள் வர துவங்கும். சிலர் பத்து ரூபாய் – இருபது ரூபாய் – ஐம்பது ரூபாய் அன்பளிப்புகளோடு.

ஆனால் அவர்கள் அந்த பாடலை கடைசியில் தான் பாடி அதற்குப் பிறகு சில நிமிடங்களில் நிகழ்ச்சியை நிறைவு செய்வார்கள். 

(‘மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு’ நூலிலிருந்து)

சுயமரியாதை பதிப்பகம், உடுமலைப்பேட்டை 

Pin It