வாழிடங்களின் ஆரோக்கியம் மனிதர்களின் நலம் மட்டும் அல்ல; எல்லா உயிரினங்களின் நலமும் சேர்ந்ததுதான் அது என்பதை கொரோனா தொற்றுக் காலத்தில் உலகம் புரிந்து கொண்டது. தாவரங்கள், விலங்குகள், பறவையினங்கள் அடங்கிய உயிரினங்களின் உலகைப் பற்றி பல ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்த ஆய்வுகள் மனிதன் இதுவரை பார்த்த கண்களைக் கொண்டு சுற்றிலும் இருக்கும் உயிரினங்களை இனி பார்க்கக் கூடாது என்பதை உணர்த்துகின்றன.

எல்லா உயிரினங்களுக்கும் உணர்வுகள் உண்டு

மனிதனுக்கும் சுற்றுப்புறத்திற்கும், மனிதனுக்கும் எண்ணற்ற உயிரினங்களுக்கும் இடையில் இருக்கும் உறவை எவ்வாறு நீதியுடன் கையாளலாம் என்பது பற்றியே நவீன அறிவியல் இன்று மனித குலத்திற்கு எடுத்துச் சொல்கிறது. மற்ற உயிரினங்களுக்கும் மனிதனுக்கு இருப்பது போலவே உணர்வுகளும் சிந்தனைகளும் உண்டு என்பதை வெகுகாலம் ஆய்வாளர்கள் ஏற்கவில்லை. பாலூட்டிகளுக்கும், மனிதனுக்கு முன் தோன்றிய குரங்கினங்களுக்கும் உள்ள ஆற்றலும் அறிவுக்கூர்மையும் மீன்களுக்கு இல்லை என்றே இதுவரை கருதப்பட்டு வந்தது.

இன்றும் பல விஞ்ஞானிகள் மீன்கள் உணர்வு உள்ளவை என்பதை ஏற்க மறுக்கின்றனர். ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக தொட்டி மீன்களின் நடத்தை பற்றி ஆராய்ந்து வரும் சிட்னி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த உயிரினங்கள் உணர்வுப்பூர்வமாக வாழ்கின்றன என்று வலியுறுத்திக் கூறுகிறார்கள்.koi fishமீன்களின் சிந்தனைகள், அவற்றின் சமூக, வாழ்வியல் முறைகளைப் பற்றி புதிய ஆய்வு முடிவுகள் இதுவரை மனிதகுலம் அறியாத பல வியப்பூட்டும் உண்மைகளைக் கூறுகிறது. ஒரு மீன், மற்றொரு மீனிடம் உள்ள பயம், பதட்டம் போன்ற உணர்வுகளைப் புரிந்து கொள்கிறது. அந்த உணர்வுகளை அது பகிர்ந்து கொள்கிறது என்று சமீபத்தில் சயன்ஸ் (Science) என்ற ஆய்விதழில் வெளிவந்த கட்டுரை கூறுகிறது.

மீன்களின் மூளையில் உள்ள ஆக்சிடாசின் (Oxytocin) என்ற வேதிப்பொருள் இதற்குக் காரணமாக உள்ளது என்று மற்றொரு ஆய்வு கூறுகிறது.

ஜீப்ரா மீன்களில் நடந்த ஆய்வுகள்

ஆய்வுக்கூடத்தில் ஜீப்ரா (Zeebra) மீனின் மூளையில் இருந்து இப்பொருள் அகற்றப்பட்டு ஆராயப்பட்டது. அந்த மீன்கள், சக மீன்களின் பதட்டத்தைப் புரிந்து கொள்ள முடியாத உயிரினங்களாக (antisocial) மாறிவிட்டன! இப்பொருளை மீண்டும் செலுத்தியபோது அந்த மீன்கள் இயல்பான நிலைக்கு மாறின.

சக மனிதர்களைப் பரிவுடன் நடத்தும் நம் பண்பிற்கு (care) வரலாற்றுக்கால பழமை உண்டு. மனிதர்கள், பாலூட்டிகள், மீன்கள் போன்ற உயிரினங்கள் பரிணாம ரீதியில் தோன்றுவதற்கு முன்பிருந்த காலத்தில் வாழ்ந்த ஆதி உயிரினங்களிடம் இந்தப் பண்புகள் உருவாகியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

நிம்மதியில்லாத வாழ்வு

வளர்ப்பு மீன்களின் வாழிடம், கடல், ஏரி குளங்களைப் போன்றதல்ல. மீன் பண்ணை, ஆய்வுக்கூடம் மற்றும் மீன் தொட்டியில் வாழும் மீன்களுக்கு மின்சார வெளிச்சம் நிம்மதியில்லாத சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. பளபளப்பு மிக்கக் கண்ணாடிச் சுவர்களை அவற்றால் சகித்துக் கொள்ள முடிவதில்லை.

இயற்கையில் நீர் நிலைகளில் இருக்கும் தாது உப்புகள் தொட்டியில் இருக்கும் நீரில் இல்லை. இதுபோன்ற செயற்கை வாழிடச் சூழல்களில் வாழும் மீன்கள் மன அழுத்தத்தை (stress) அனுபவிக்கின்றன. அவை வேதனை உணர்வை வெளிப்படுத்துகின்றன. சில இன மீன்கள் புதிய சூழ்நிலைகளை விரும்புகின்றன. வேறு சில கூட்டு சேர்ந்து வாழ விரும்புகின்றன.

தொட்டியில் உணவு, சுத்தநீர் போல அவற்றின் வாழிடமும் முக்கியத்துவம் வாய்ந்தது. வளர்ப்பு மீன்களுக்காக பொதுவான ஒரு வாழிடச் சூழலை உருவாக்குவது சுலபமானதில்லை. ஒவ்வொரு இன மீனுக்கும் அவசியமான சூழல் வெவ்வேறானது. ஒவ்வொரு இனத்திற்கும் வேறுபட்ட வளர்ச்சிக் கட்டங்கள் உள்ளன.

ஈல் இன மீன்கள் குஞ்சாக இருக்கும்போது நதியில் மண்ணிற்கடியில் ஒளிந்து கொண்டு வாழ விரும்புகின்றன. வளர்ந்தவுடன் இந்த குணம் அவற்றிடம் காணப்படுவதில்லை.

நடத்தை ஆய்வுகள்

மீன்களின் நடத்தை ரீதிகள் பற்றிய ஆய்வுகள் மிகக் குறைவாகவே நடந்துள்ளன. 2007ல் ஆய்வுக்கூடங்களில் அடைக்கப்பட்ட நிலையில் வாழும் உயிரினங்கள் பற்றி நடத்தப்பட்ட எழுநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு முடிவுகள் விஞ்ஞானிகளால் ஆராயப்பட்டன. இவற்றில் மீன்கள் பற்றிய ஆய்வுகள் 0.1 சதவிகிதத்திற்கும் குறைவாகவே நடந்துள்ளது.

ஆய்வுக்கூடங்களில் தொட்டிகளில் நீண்டகாலம் வாழும் மீன்கள் போன்ற உயிரினங்கள் நிம்மதியில்லாத வாழ்வை நடத்துகின்றன. இதனால் மீன்களின் பதில் வினை புரியும் தன்மை வெகுவாகக் குறைந்து காணப்படுகிறது. இவற்றைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் எவ்வாறு உண்மையானதாக இருக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சால்மன் மீன்கள்

சால்மன் மீன்களின் எண்ணிக்கை குறைந்தபோது மீன் முட்டை பொரிக்கும் கூடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மீன் குஞ்சுகள் நதியில் விடப்பட்டன. ஆனால் அவை அந்த இயற்கை சூழ்நிலையில் வாழ முடியாமல் உயிரிழந்தன. இயற்கையான வாழிடச்சூழல் போல உருவாக்கப்பட்ட பண்ணைகளில் இருந்து கொண்டு வரப்பட்டவை, நதியில் விடப்பட்டபோது அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை உயிர் வாழ்ந்தன.

செடிகள், மறைவிடங்கள் இருக்கும் மீன் தொட்டிகளில் இந்த இன மீன்கள், இச்சூழல் இல்லாத தொட்டிகளில் இருக்கும் மீன்களை விட அதிக இனப்பெருக்கத் திறன் பெற்றவையாக இருந்தன. எதுவும் இல்லாத தொட்டியில் சிறிதளவு கற்கள் போடப்பட்டபோது அதில் இருந்த சால்மன் குஞ்சுகளின் மூளை வளர்ச்சி வேகமாக நடந்தது.

மீன் தொட்டியில் பாறைகளும், கற்களும்

நதிகளில் இருப்பது போல பாறைகள், கற்களை தொட்டியில் போட்டபோது இவற்றின் குஞ்சுகளிடையில் மன அழுத்தம் குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறிய கற்கள், மரக்கிளைகள் போடப்பட்ட தொட்டிகளில் வளர்ந்த மீன்களில் பாக்டீரியா தொற்று குறைவாகக் காணப்பட்டது. மிகச் சிறந்த வாழிடச் சூழலை ஏற்படுத்தினால் வளர்ப்பு மீன்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

தமக்கென்று விருப்பு வெறுப்புகள், தேவைகள், சிக்கலான வாழ்வியல் முறைகளை உடைய மற்ற உயிரினங்களை தன்னுடைய தேவைகளுக்காக பயன்படுத்தவே மனிதன் விரும்புகிறான்.

இதனால் மற்ற உயிரினங்களின் சுதந்திரத்தையும், உணர்வுகளையும் மனிதன் ஏற்க மறுக்கிறான், அலட்சியப்படுத்துகிறான், புறக்கணிக்கிறான். இந்த மனப்போக்கு இருப்பதாலேயே மனிதன் பல உயிரினங்களை தன்னை விட தாழ்ந்தவையாகக் காண்கிறான். சில உயிரினங்களை மட்டும் பாசத்துடன் வளர்க்கிறான். பாம்புகள் போன்ற வேறு சிலவற்றை ஈவு இரக்கம் இல்லாமல் கொல்கிறான்.

மீன்களும் இனவியல் இரைகளே. நிறவெறி, பாலியல் வேறுபாடு அநீதி போல இனவியல் வேறுபாடும் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியது என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். இதிலிருந்து மனித குலம் மீளும் காலமே மற்ற உயிரினங்களுக்கு விடியல் காலமாக இருக்கும்.

மேற்கோள்கள்: https://www.mathrubhumi.com/environment/columns/nature-future-column-on-fishes-and-their-emotional-pain-1.8565835

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It