brainpowerவயது ஏறஏற மூளையின் அளவு சிறியதாகிப் போகிறது. ஒவ்வொரு பத்தாண்டிற்கும் 1.9 சதவீதம் மூளை தன்னுடைய கன அளவை இழக்கிறதாம். மூளையின் கன அளவு சிறியதாகிப் போவதால் மூளையின் வெண்ணிற பகுதியின் அளவு அதிகரிக்கிறது. இதனால் நினைவாற்றல் குறைகிறது.

வயது அதிகரிப்பால் மட்டுமல்லாது, மதுகுடிப்பதாலும் கூட மூளை சிறியதாகிப் போகிறது என்கிறார்கள் அறிவியலார்கள். மிகக்குறைந்த அளவில் மதுகுடிப்பதால் இதயநோயின் பாதிப்புகள் குறைவதாகவும் ஆனால் மூளை சிறியதாகிப் போவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் Framingham Heart Study நிறுவனம் சராசரி வயது 60 ஐக்கொண்ட 1,839 நபர்களை ஆய்வுக்கு உட்படுத்தியது. இந்த நபர்களின் மனைவியர்கள், குழந்தைகளையும் ஆய்விற்கு இந்த நிறுவனம் உட்படுத்தியது. 1999 க்கும் 2001க்கும் இடையில் இவர்கள் அனைவரும் எம்.ஆர்.ஐ . ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஒவ்வொரு வாரமும் இவர்கள் எடுத்துக்கொள்ளும் மதுவின் அளவு, வயது, பாலினம், கல்வி, உயரம், எடை, இரத்த அழுத்தம் இவைகளின் அடிப்படையில் இதய பாதிப்புக்கான சாத்தியக்கூறுகள் அளவிடப்பட்டன.

ஆண்கள் பெண்களைவிட அதிக அளவில் மது குடிப்பவர்களாக இருந்தார்கள். குடிக்கும் மதுவின் அளவும், மூளையின் கன அளவும் எதிர்விகிதத்தில் இருந்தது. அதாவது அதிகமாக மதுகுடிப்பவர்களின் மூளை சிறியதாகப் போய்க்கொண்டிருந்தது.

பெண்கள் குறைவாக மது அருந்துபவர்களாக இருந்தும்கூட, மூளை சிறியதாகிப்போகும் தன்மை பெண்களிடம் அதிகமாக காணப்பட்டது. அவர்களுடைய சிறிய உருவம், பெண்ணுடலில் மதுவின் தாக்கம் போன்ற உடலியல் காரணங்கள் கூட இந்த முடிவிற்கு காரணமாக இருக்கலாம்.

இதிலிருந்து மிகக்குறைவான அளவில் மது குடிக்கும் பழக்கம் இருந்தாலும், மூளையின் அளவு சிறியதாகப் போய்க்கொண்டிருக்கும் என்பதுதான் உண்மை.

எப்படிப் பார்த்தாலும் மதுவினால் தீமையே விளைகிறது என்பது மட்டுமே முடிவான முடிவு.

அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி

Pin It