2011 ஆம் ஆண்டுக்கான 15 ஆம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடங்கியுள்ளது இந்தியா. இந்தியாவின் முதல் குடிமகள், குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், முதல் படிவத்தை நிரப்பி இப்பணியைத் தொடங்கி வைத்துள்ளார்.

பத்தாண்டுகளுக்கு ஒரு முறை இக்கணக் கெடுப்பு நடைபெறும். கடைசியாக எடுக்கப் பட்ட ஆண்டு 2001. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்காகச் செலவிடப் பட இருக்கும் தொகை 5,000 கோடி ரூபாய். ஏறத்தாழ 25 இல் இருந்து 30கோடி வீடுகளில், 25 இலட்சம் அரசுப்பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப் பட உள்ளனர்.

people_2329இதற்கு முந்தைய ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்புகளைவிட, இந்த ஆண்டு எடுக்கப்படும் கணக்கெடுப்புச் சற்று வேறுபட்ட அல்லது ஒரு முக்கியத்துவம் பெறுகிறது என்று சொல்லலாம். அதாவது 15 வயதுக்கு மேற்பட்ட அனைவரின் முழுவிபரங்கள், கைரேகையுடன், தேசிய மக்கள் பதிவேடாக உருவாக்கப்பட உள்ளது.

ஒவ்வொருவரும் வாழுகின்ற இடங்கள், சொந்த வீடா, வாடகை வீடா, கழிவறை வசதி எப்படி, பாதுகாக்கப்பட்டக் குடிநீர் பயன்பாடு, வீட்டில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு, குளிர்சாதனப் பெட்டிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், வாகனங்கள், கணிணிகள், கைபேசிகள், செய்கின்ற தொழில், வருமானம் இப்படி ஒரு குடிமகனின் முழுமையான தகவல்களைப் பதிவு செய்யும் அளவுக்கு, 2011 ஆம் ஆண்டின் இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இவைகளுடன் மதங்கள் அடிப்படை யிலும் கணக்கெடுப்பு இருக்கும். இவை எல்லாம் ஒரு பொதுவான, வழக்கமான கணக்கெடுப்பு என்றுதான் சொல்ல முடியும்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது மக்களைப் பற்றிய விபரங்களைச் சொல்லும் ஒரு புள்ளி விவரப் பேரேடு அல்ல. நாட்டு மக்களின் வாழ்வியல் முன்னேற்றம், குறிப்பாகச் சமூகநீதி அடிப்படையில் வாழ்வியலைச் சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கும் மக்களைப் பற்றிய கணக் கெடுப்புதான் முழுமையா னதாக இருக்கும்.

கடந்த 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பற்றிய சில விவரங்களைப் பார்ப்போம். அந்த ஆண்டின் மொத்த மக்கள் தொகை 102,86,10,328. இது முந்தைய 1991 ஆம் ஆண்டைவிட 181 மில்லியன் அதிகம்.

இதில் ஆண்கள் 53,21,56,772, பெண்கள் 49,64,53,556 பேர்கள். இவர்களின் கல்வியறிவு எழுத்தறிவு போன்ற புள்ளிவிவரங்கள் இருக் கின்றன.

இவைதவிர இந்துக்கள் 80.5 விழுக்காடு, இஸ்லாமியர் 13.4 விழுக்காடு, கிருத்துவர் 2.3 விழுக்காடு,சீக்கியர் 1.9 விழுக்காடு, பவுத்தர் 0.8 விழுக்காடு, சமணர் 0.4 விழுக்காடு என்று மதஅடிப்படையிலான மக்கள் தொகை புள்ளி விவரங்களும் சொல்லப்பட்டு இருக்கின்றன.

இவர்களில் இந்துக்கள் பட்டியலில் 1991 ஆம் ஆண்டு உட்பட்டு இருந்த சமணர்கள் 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் தனியாக பிரிக்கப்பட்டுக் கூறப்பட்டு இருக்கிறார்கள்.

மத அடிப்படையிலான எண்ணிக்கையில், இந்துக்கள் பெரும்பான்மையினராகக் காட்டப் பட்டு இருக்கிறார்கள். அவர்களில் பகுத்தறிவுச் சிந்தனையாளர்களாக, மதங்களை, ஏற்றுக் கொள்ளாதவர்களாக இருப்பவர்களும் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.

இருந்தாலும் கூட அவர்களின் உணர்வுகள் புறக்கணிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் இந்துக்களாகவே பட்டியலிடப்பட்டு இருக்கின் றார்கள். இது அவர்களின் மன உணர்வு, உரிமை களை மீறிய செயலாக அமைகிறது. ஆகவே அப்படிப்பட்ட முற்போக்கான பகுத்தறிவாளர் கள், தாங்கள் மத அடையாளத்தில் அடக்கப் படாமல் இருக்க, மதம் அற்றவர்கள் என்ற ஒரு பட்டியலும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேர்க்கப்பட வேண்டும்.

இந்தியா விடுதலை பெற்றபின் இதுவரை எடுக்கப்பட்ட எந்த ஒரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலும் இதுபோன்ற மதம் அற்றவர் பட்டியல் கணக்கெடுக்கப்படவில்லை.

2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பிலும் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை. மதம் அற்றவர் என்ற கணக்கெடுப்புப் பட்டியல் மிகமிகத் தேவையான ஒரு கணக்கெடுப்பு என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

1931 ஆம் ஆண்டு, அதாவது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்தான், இந்தியாவில் ஒரே ஒரு தடவை சாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுக்கப்பட்டது. அதன்பின்னர், விடுதலை பெற்ற இந்தியாவில், இதுவரை நடந்த எந்த ஒரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் சாதிவாரியாக நடத்தப்பட வில்லை. மாறாக மொத்த தாழ்த்தப் பட்ட மக்களின் கணக்கு அல்லது புள்ளி விவரத்தை அரசு எடுக்கிறது அல்லது சொல்கிறது.

அதனால் இந்திய அரசியல் சாசனப்படி, அவர்கள் பெறவேண்டிய இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி சரியாகவோ அல்லது மொத்தமாகவோ சிடைக்காமல் போய்விடு கின்றது. தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரின் சமூக வாழ்வியலும், சமமாகவே இருக்கிறது என்று சொல்லமுடியாது. குறிப்பாகச் சொல்வதானால், தமிழகத்தின் தென்மாவட்டங்களில் வாழும் தாழ்த்தப்பட்டவர்கள், வேளாண்மையை அடிப்ப டையாகக் கொண்டு நிலவுடைமையாளர்களாக இருக்கிறார்கள்.

வடமாவட்டங்களில் வாழும் தாழ்த்தப் பட்டவர்கள் கல்வி மேம்பாட்டில் உயர்ந்து, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி தலித் சமூக அளவில் சற்று உயர்ந்து நிற்கிறார்கள்.

ஆனால் மேற்கு மாவட்டங்களில் வாழும் தாழ்த்தப்பட்டவர்கள் கல்வியிலும் உயராமல், நிலவுடைமையிலும் இல்லாமையாக சமூகப் பொருளாதார அளவில் மிகமிக கடைக் கோடியில் கிடக்கிறார்கள்.

இவர்களின் நிலையைப் பார்த்த முதல்வர் கலைஞர், அருந்ததியர்களுக்கு 3 விழுக்காடு உள்ஒதுக்கீடு என்று அறிவித்தார். இந்த அறிவிப்பும், ஒதுக்கீடும் வரவேற்கப்பட வேண்டியவைகள்தாம், ஆனால் எந்த அடிப்படையில் இந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பதுதான் புதிராக உள்ளது.

அரசு சொல்கிறது, அருந்ததியர் 7.5 இலட்சம், சக்கிலியர் 7.5 லட்சம் மொத்தம் 15 லட்சம் பேர்கள் எனவே 3 விழுக்காடு இடஒதுக்கீடு என்று. கேள்வி இதுதான். அருந்ததியர் களுக்கான இந்த மக்கள் தொகை எப்படி அறிவிக்கப்பட்டது. எப்போது யாரால் அருந்ததியர் என்ற சாதியினரின் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது ?

இதற்கான பதில் தெளிவாக இல்லை. 1991 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தமிழகத்தில் தாழ்த்தப் பட்டவர்கள் 1,07,12,266. இதில் 32.5 விழுக்காடு, அதாவது 35,00,000 பேர்கள் அருந்ததியர்கள் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. ஆனால் தமிழக அரசுப்படி 15 இலட்சம் பேர்தான் அருந்ததியர் மக்கள் என்று சொல்லி 3 விழுக்காடு மட்டும் இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. அப்படி எனில் எஞ்சியுள்ள மக்கள் தொகைக்கான இடஒதுக்கீடு அதாவது சமூகநீதி இந்த மக்களுக்கு மறுக்கப்பட்டு உள்ளது என்றுதானே பொருள்.

இதற்கு மாநில அரசைக் குறை சொல்ல முடியாது. ஏனெனில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல! மத்திய அரசின் அதிகாரத்தில் அது உள்ளது.

சாதிவாரியான கணக்கெடுப்பு இல்லாததால் ஏதோ அருந்ததியருக்கு மட்டுமே பாதிப்பு என்பதல்ல நமது கருத்து. இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களிடையே இப்படிப்பட்ட நிலை இருக்கவே செய்கிறது. பிற்படுத்தப் பட்டவர்களிலும் சமூக அளவில் மிகமிகப் பின்தள்ளப்பட்டவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் இச் சாதி வாரியான கணக்கெ டுப்பில்தான் சமூக நீதியை வழங்க முடியும்.

இவைகளை எல்லாம் கருத்தில் எடுக்காமல், வெறும் மதங்களை மட்டுமே கணக்கெடுத்துக் கொண்டு, புள்ளிவிவரங்களைச் சொல்லிக் கொண்டு, மக்களின் வாழ்வியலைப் புறம்தள்ளி கணக்குப்போட்டுக்கொண்டும், கணக்கு எடுத்துக் கொண்டும் இருந்தால், மத்திய அரசு மதவாத ‘மனு அரசு’ என்பதை உறுதிசெய்வதாகவே அமை யும்.

சாதிவாரியான கணக்கெடுப்பும், மதம் அற்றவர் கணக்கெடுப்பும் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேர்க்கப்பட வேண்டும் என்ற சமூக நீதியை மத்திய அரசு ஏற்கப் போகிறதா? அல்லது புறக்கணிக்கப் போகிறதா - பார்ப்போம்!

- மாதியக்கவிராயர்

Pin It