சோவியத் யூனியனின் அணுமின் உற்பத்தி பற்றிப் பலர் பல்வேறு விதமான புள்ளி விபரங்களைத் தந்தாலும், சோவியத் யூனியனின் மொத்த மின் உற்பத்தியில் 10 சதவீதத்தை மட்டுமே அணுமின் சக்தி தருகிறது எனச் சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த திரு. P.K.G. மேனன், இந்தியன் எக்ஸ்பிரஸ் வாசகர் கடிதப் பகுதியில் குறிப்பிடுகிறார்.

அணு சக்தியை ஆக்க வேலைகளுக்குப் பயன்படுத்துவது என்பதன் முதன் முயற்சியாக, உலகிலேயே முதல் அணுசக்தி நிலையம் 1954இல் கலுகாவுக்கு அருகில் உள்ள ஒபினின்ஸ்க் என்னும் சிறு நகரத்தில் நிறுவப்பட்டதாக, சோவியத் பிரசுரங்கள் தெரிவிக்கின்றன. என்றாலும், அமெரிக்காவைப் போலவே சோவியத் யூனியனிலும் அணுசக்தி நிலையங்களோடு அணு ஆயுதத் தொழிற் சாலைகளும், அணுமின் நிலையங்களுக்குக் கருவிகளை உற்பத்தி செய்து தரும் தொழிற்சாலைகளும் பரவலாக விரவியுள்ளன.

chernobyl_640

இங்கு ஏற்பட்ட முதல் விபத்து 1958இல் யூரல் மலைச் சாரல் பகுதியிலுள்ள அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து ஆகும். இங்கு அணுக்கழிவுகள் வைக்கப்பட்டிருந்த இடம் ஒன்று வெடித்ததனால் ஏற்பட்ட கதிரியக்கம் 60 கிராமங்கள் வரை பரவியது.

இந்த 60 கிராமங்களையும் சோவியத் யூனியனின் தற்போதைய வரைபடங்களில் காணவில்லை எனவும், இந்தப் பிரதேசத்தில் புல் பூண்டுகள் கூட முளைப்பதில்லை எனவும், இதில் ஏற்பட்ட சேதம் மற்றும் இதர பின் விளைவுகளைச் சோவியத் நாட்டிலிருந்து வெளியேறிய கோராஸ் மெத்தோவ் என்பவர் 1976இல் ஆதாரங்களுடன் நிரூபித்ததாக ஜூனியர் விகடன் தொடர் கட்டுரை கூறுகிறது.

இதற்கு அடுத்த விபத்து 1974இல் காஸ்பியன் கடல் பகுதியில் செவ்செங்கோ அணு உலையில் ஏற்பட்ட விபத்து என்று அறியப்படுகிறது. இங்குள்ள ஈனுலையில் சோடியம் தீப்பற்றியதால் அணு உலை வெடித்தது. கதிரியக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் விளைவுகள் பற்றி விவரமாக எதுவும் வெளியே தெரியவில்லை.

அதற்கு அடுத்த விபத்து 1986இல் ஏற்பட்ட செர்னோபில் விபத்து. உலகில் இதற்குமுன் எவ்வளவோ அணு உலை விபத்துகள் நேர்ந்திருந்தாலும் அணுசக்தியின் ஆபத்து குறித்து உலகம் முழுவதற்கும் புரிய வைத்த பெருமை இந்த விபத்தையே சேரும் என்று சொல்லப்படுகிறது. இதில் விபத்து நடந்த உடனே இறந்தவர்கள் 31 பேர் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. விபத்து நடந்த சமயத்தில் சோவியத் யூனியன் செய்த ஏற்பாடுகளைப் பற்றி உலக நாடுகள் வெகுவாகப் பாராட்டின. அந்த ஏற்பாடுகளினால் உடனடி உயிர்ச் சேதம் தடுக்கப்பட்டது என்றாலும், பல தலைமுறைகளுக்கு வேண்டிய நாசம் இந்த விபத்தால் விதைக்கப்பட்டு விட்டதாகச் சொல்கிறார்கள்.

விபந்து நடந்து ஒரு வருடம் கழித்து மேற்கு ஜெர்மனி யில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. மேற்கு ஜெர்மனியில் ஊனமுடன் குழந்தைகள் பிறப்பது, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பது போன்றவை அதிகரித்துள்ளதற்கும், செர்னோபில் விபத்துக்கும் தொடர்பு உள்ளதாக அதில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் 1000 க்கும் மேற்பட்ட புற்றுநோய் மரணங்கள் ஐரோப்பாவில் நிகழ்ந்த தாகக் கூறப்படுகின்றன. இவ் விபத்து நேர்ந்த உடன் 1,35,000 மக்கள் அதைச் சுற்றி உள்ள இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள் எனக் கூறப்படுகிறது.

செர்னோபில்லுக்கு அருகில் உள்ள செர்னோவ்ஸ்கி என்னும் நகரத்தில் காரணம் கண்டறியப்படாத மர்மமானதொரு நோயின் காரணமாக 130 குழந்தைகள் பாதிக்கப்பட்டு, இவர்கள் கீவ், லெனின்கிராடு, மாஸ்கோ நகர மருத்துவமனைகளில் வெற்றிகரமாகக் குணமாக்கப்பட்டு விட்டார்கள் என மாஸ்கோ ரேடியோ 19-11-88 அன்று அறிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் வானொலி அறிவித்ததாவது,

இந் நோய், சுமாரான தலைமுடியுள்ள, நீல விழிகளைக் கொண்ட குழந்தைகளையே அதிகம் பாதித்துள்ளது. முடி உதிருதல், எரிச்சல், பிரம்மைப் பார்வை ஆகிய அறிகுறிகளோடு இந்நோய் துவங்கியது. இந் நோயின் காரணம் பற்றி ஆராய அரசு பல ஆய்வுக் குழுக்களை நிறுவியது. அதில் ஒரு குழு இந்நோய் செர்னோபில் விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கதிர்வீச்சின் காரணமாக இருக்கலாம் என்கிற கருத்தை முற்றாக ஏற்றுக்கொள்ள மறுத்தது.

இந்நோய் மிகமிக மெதுவாகத்தான் பரவுகிறது என்றாலும், பகுதிவாழ் மக்களிடையேயும், அரசு வட்டாரத்திலும் இது ஆழ்ந்த கவலையளிப்பதாய் உள்ளது. இந்தக் கவலையின் காரணமாகச் சுமார் 15,000க்கும் மேற்பட்ட குழந்தைகளை அதன் பெற்றோர்கள் செர்னோவ்ஸ்கி நகரத்தை விட்டு அப்பால் கொண்டு சென்றுவிட்டிருக்கிறார்கள்.

கீழ்க் குறிப்பிட்டுள்ள இத் தகவல்களையும்மேற்கண்ட செய்திகளின் தொடர்ச்சியாகப் பார்க்கலாம்.

காரணம் அறியமுடியாத மர்மமான நோயின் காரணமாக 160க்கும் மேற்பட்ட குழந்தைகள் ‘கீவ்’ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். முடி உதிர்தல், நரம்புக் கோளாறுகள், மனநிலைப் பாதிப்புகள், பிரம்மைப் பார்வைகள் ஆகியவற்றினால் இக் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுச் சூழலிலும் நிலத்திலும் ‘தல்லியம்’ விஷப் பொருள் அதிகமாகப் பரவியிருப்பதுதான் இந்நோய்க்குக் காரணம் என்று விசேஷ ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

Chernobyl_Children_520

சமீபத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட அர்மீனியன் பகுதியில் அர்மீனியாவின் தலைநகரமான எரவான் நகரில் இயங்கி வந்த அணு சக்தி நிலையம் செயல்முடக்கம் செய்யப் பட்டுள்ளதாகச் சோவியத் பிரதமர் அறிவித்திருக்கிறார்.

இந்த அணுசக்தி நிலையம் இந்த நில நடுக்கத்தால் எந்தச் சேதாரத்துக்கும் உள்ளாகவில்லை என்பதோடு, இது மிகச் சிறந்த பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட ஒரு அணுமின் நிலையம் என்றாலும் மக்களுடைய வேண்டுகோளுக்கிணங்க இந்த நிலையம் செயல்முடக்கம் செய்யப்பட்டதாகவும், இது நிரந்தரமாகவே மூடப்படவும் உத்தேசிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார். 1989 - 90இல் இதை நிரந்தரமாகவே மூடும் பணி தொடங்கி அது இரண்டு ஆண்டுகளில் நிறைவேறிவிடும் என்றார்.

இது அர்மேனியா பகுதியில் உற்பத்தி செய்யப்படும் நீர் மின்சக்தியைப் போல மூன்று மடங்கு மின் சக்தியை உற்பத்தி செய்து வந்தது என்பதும், இது ஜார்ஜியா, அஜர்பைஜான் ஆகிய குடியரசுகளுக்கும் தேவையான மின்சாரத்தை வழங்கி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிலநடுக்க அபாயம் காரணமாகவும், செர்னோபில் விபத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாகவும், சோவியத் யூனியன் 6 அணுசக்தி நிலையங்களை மூடிவிடுவது என முடிவு செய்திருக்கிறது. இத்தகவலைச் சோவியத் யூனியன் அணுசக்தி அமைச்சர் 24-12-88 அன்று அறிவித்திருக்கிறார்.

செர்னோபில் விபத்தையடுத்து மேற்கொள்ளப்பட்ட பணிகள்:

விபத்து நடந்த இடத்தில் சில துப்புரவுப் பணிகளை, மனிதர்கள் கிட்ட நெருங்கவே முடியாது என்பதால் யந்திர மனிதர்களை அனுப்பி, தொலைக் கட்டுப்பாட்டுக் கருவிகளைக் கொண்டு மேற்கொண்டார்கள். கதிரியக்கம் அதிகமாய்த் தாக்க முடியாத ஈயத்தாலான அடிப் பகுதிகளைக் கொண்ட ஹெலிகாப்டர்கள் மூலம் விபத்து நடந்த இடத்துக்கு மேலே பறந்து 40 டன் போரான் கார்பைடையும், 800 டன் சுண்ணாம்புக் கல்லையும், 2400 டன் ஈயத்தையும், மேலும் பல ஆயிரக் கணக்கான கான்க்ரீட் கலவைகளையும் நிலத்தின்மீது கொட்டினார்கள்.

அடிமண்ணிற்குக் கதிரியக்கம் பரவிவிடக் கூடாது என்பதற்காகப் பல நூறு ஏக்கர் நிலப்பரப்பில் ஒருவகைப் பிளாஸ்டிக் துகள் தெளிக்கப்பட்டது. பின்னர் இந்தப் பிளாஸ்டிக் ஈய டின்களில் அடைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. இந்தத் தகவல்களை ‘After Chernobyl’ என்கிற நூலில் ‘Christer Flavin’ என்பவர் குறிப்பிட்டு, ‘Science Age’ ஜூலை 87 இதழில் வெளி வந்ததாகப் “புறப்பாடு” இதழ் தெரிவிக்கிறது.

இந்த அணு உலை வெடித்தபோது 7,000 கிலோ எடையுள்ள 5 முதல் 10 கோடி கியூரிகள் ஆற்றல் உள்ள கதிரியக்க வீச்சுடன் 50 தனிமங்களின் கதிர் இயக்க ஐசோடோப்புகள் காற்றுடன் கலந்து 2,000 கி.மீ. சுற்றளவுக்கு உலக நாடுகளில் பரவியதாகக் கணக்கிடப்படுகிறது. இப்படிப் பரவிய 20 நாடுகளில் கதிர் இயக்கப் பொருள் கலந்துவிட்ட பால், இறைச்சி போன்ற உணவுகள் உட் கொள்ளப்படுவது தடுக்கப்பட்டது. இவற்றின் விலை கடுமையான வீழ்ச்சியைக் கண்டது.

செர்னோபில் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிக்சை செய்வதற்காக இரஷ்யாவுக்குச் சென்று வந்த அமெரிக்க மருத்துவரான டாக்டர் இராபர்ட்கேல் என்பவர், குறைந்தது ஒரு லட்சம் மக்களாவது ஆபத்து விளைவிக்கும் அளவிற்கான கதிரியக்கத்தைப் பெற்றுள்ளனர் என்கிறார்.

விபத்து நடந்த இடங்களைச் சுற்றியிருந்த கருவுற்ற பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்ளுமாறு வேண்டப் பட்டனர். அதிகாரப் பூர்வமான அறிவிப்பு ஏதும் இல்லாமலே இப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

செர்னோபில் விபத்தில் பிரும்மாண்டமான கனத்த கதிரியக்க மேகம் ஒன்று விபத்து நடந்த இடத்திற்கு மேலே எழுந்தது. இது அப்படியே வானில் நகர்ந்து பல இடங்களில் கதிரியக்கமுள்ள மழையைப் பொழிந்தது. இந்த மழையின் காரணமாக மண்ணில் முளைத்தெழுந்த புற்களிலும் கதிரியக்கம் பரவியிருந்தது. இதை மேய்ந்த விலங்குகளும் அபாயகரமான கதிரியக்கத்துக்கு ஆளாயின.

ஸ்வீடன் காடுகளில் ‘மூஸ்’ எனப்படும் ஒருவகைக் காட்டு மான்களை அதன் இறைச்சியின் சுவைக்காக அதிகம் வேட்டை யாடுவார்களாம். இப்படி வேட்டையாடப் படுவதன் காரணமாக அந்த விலங்கினமே பூண்டற்று அழிந்து போய்விடுமோ என்று அரசாங்கம் மான் வேட்டையைத் தடை செய்திருந்தது. ஆனால் செர்னோபில் விபத்துக்குப் பிறகு திருட்டுத் தனமாகக் கூட அந்த மான்களை யாரும் வேட்டையாடுவதில்லையாம். காரணம் அந்த மான்கள் கதிரியக்கமுள்ள புல்லை மேய்ந்து இறைச்சியும் கதிரியக்கத்துக்கு ஆளானதுதான். இதனால் 1,36,000 எண்ணிக்கையளவே இருந்த ‘மூஸ்’ வகை மான்கள் ஒரே ஆண்டில் இரட்டிப்பாகி, 4,00,000மாகப் பெருகியதாம். இப்போது இந்த மான்கள் காடுகளிலும் இடம் கொள்ளாமல் அடிக்கடி மந்தை மந்தையாகக் காட்டோரப் பகுதிச் சாலைகளை ஆக்ரமித்து, அதன் காரணமாக சாலை விபத்துகள் அதிகம் நிகழ்கிறதாம்.

இந்தச் செர்னோபில் விபத்தால் ஸ்வீடன் நாட்டில் அதிகம் பாதிக்கப்பட்டது காவ்லே பகுதியாகும். இரண்டு ஆண்டு களுக்குப் பின் ‘மூஸ்’ மான்களின் கதிரியக்கம் இரட்டிப் பாகியுள்ளது. 1 கிலோ இறைச்சியில் சுமார் 3,000 ‘பெக்காரெல்’ கதிரியக்கம் இருக்கும் என நம்பப்படுகிறது. அடுத்த ஆண்டில் இது இன்னும் அதிகமாகுமாம்.

29.1.89 இந்தியன் எக்ஸ்பிரசில் வெளிவந்த செய்தி:

“செர்னோபில் இன்னும் குடியேற்றத்துக்கு இலாயக்கற்ற இடமாகவே இருக்கிறது. அதன் சுற்று வட்டாரம் 30 கி.மீ. தூரத்துக்குப் பாலைவனமாகக் காட்சியளிக்கிறது. செர்னோபில் விபத்துக்குப் பின் ஏற்கெனவே அங்குக் குடியமர்ந்திருந்த மக்கள் தங்கள் குடியிருப்புகளைக் காலி செய்துவிட்டு வெளியேறி விட்டனர். அதன் பிறகு யாரும் மீண்டும் குடியேறவே இல்லை. இப்போதும் அது யாரும் குடியேற முடியாத பகுதியாகவே காட்சியளிக்கிறது. காரணம் இந்த விபத்தினால் ஏற்பட்ட கதிர்வீச்சின் தாக்கம் இன்னும் தணிந்த பாடில்லை.

இந்தச் செர்னோபில் விபத்துக்குப் பிறகு, அதாவது அர்மீனியன் பகுதி நிலநடுக்கத்துக்குப் பின், பல அணுசக்தி நிலையங்கள் மூடப்படுவதற்கு முன்பே, செர்னோபில் விபத்தின் விளைவாகச் சோவியத் யூனியனில் மின்ஸ்க், ஒடேஸ்ஸா, கிளாஸ்னடார் ஆகிய மூன்று இடங்களிலுமுள்ள அணுசக்தி நிலையங்கள் மூடப்பட்டன. இது தொடர்பான மேலும் சில செய்திகளை 28.8.88 தேதியிட்ட ‘தினமணி’ இதழில், சோஷலிச நாடுகளிலும் அணுமின் உலைக்கு எதிர்ப்பு என்கிற கட்டுரையில் நாகர்ஜூனன் என்பவர் குறிப்பிடுகிறார்.

சோவியத் அணுசக்தி விஞ்ஞானியும், சோவியத் அறிவியல் தலைமைக் குழு உறுப்பினருமான 57வயது விஞ்ஞானி வாலெரி லெகசோவ் 1988 ஏப்ரல் 27ல் தற்கொலை செய்துகொண்டார். அவர், தற்கொலை செய்து கொள்ள தேர்ந்தெடுத்த நாள் செர்னோபில் விபத்து நடந்த நாள். அதாவது 1986 ஏப்ரல் 27இல். செர்னோபில் விபத்து நடந்து சரியாக இரண்டாமாண்டு நினைவு நாளில், அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இவர், குட்சட்டாப் அணுசக்தி ஆராய்ச்சி நிலையத்தின் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்தவர். பல அணுசக்தி நிலையங்களை வடிவமைத்தவர். செர்னோபில் விபத்தின் பின் விளைவுகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கேற்றவர்.

chernobyl_victims_638

செர்னோபில் விபத்தினால் தைராய்டு புற்றுநோய்க்கு ஆளானவர்கள் அறுவை சிகிச்சைக்குப் பின்...

அவர் தற்கொலை செய்துகொண்டதன் காரணம்... மரணப் படுக்கையில் அவர், எழுத்தாளர் அலெஸ் அடெமோவுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது : “அணுசக்தி என்பது கட்டுப் படுத்த முடியாத பேரபாயமாக எழுந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த இதுவரை விஞ்ஞானம் விடைகாண முடிய வில்லை. விடைகாண முடியுமா என்பதும் சந்தேகம். இந்தச் சக்தியின் பேரழிவிலிருந்து மனித குலம் விடுதலை அடைய வேண்டுமானால் அதற்கு ஒரே வழி... இச்சக்தியைக் கையாளாமல் இருப்பதே.” மேலும் அவர் சொன்னார் :“செர்னோபில் விபத்து போன்ற விபத்து இரஷ்யாவில் உள்ள பிற அணுமின் நிலையங்களிலும் நிகழலாம். இதற்கான காரணங்களைத் தடுக்கவே முடியாது”.

இவர் ஆரம்ப முதலே அணுசக்தியின் ஆதரவாளராக இருந்தவர். அணுசக்தியைப் பயன்படுத்துவதைத் தவிர மனித குலத்துக்கு வேறு மாற்று வழியில்லை என்று வாதாடியவர். அணு சக்தியே மனித குலத்தின் எதிர்கால நெருக்கடிகளுக்கு விமோசனமாக இருக்கப் போகிறது என்று வலுவாக நம்பியவர். இறுதி நாட்களில் தன் நம்பிக்கையெல்லாம் தகர்ந்து போனதை அடுத்து, அணுசக்தியின் எதிர்ப்பாளராக மாறியவர்.

1979 அமெரிக்க மூன்றுமைல் தீவு விபத்துக்குப் பின்னிருந்தே பெரும் தொழில் நகரங்களுக்கு அருகில் அணுமின் நிலையங்கள் கட்டுவதற்குச் சோவியத் ஏடான ‘கம்யூனிஸ்டு’ இதழில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்துள்ளது. இருந்தும் இது செர்னோபில் விபத்துக்குப் பிறகே முழுமையாக உணரப்பட்டது.

‘பிராவ்தா’ சோவியத் இதழின் விஞ்ஞான ஆசிரியர் ‘குபரேயவ்’ என்பவர் செர்னோபில் விபத்து பற்றி ஒரு நாடகம் எழுதினார். ‘சார் கோஃபகஸ்’ என்பது நாடகத்தின் பெயர். இது இலண்டன், பாரீஸ், நியூயார்க் உட்பட பல நகரங்களில் நடந்தேறி அமோகப் பாராட்டுதல்களைப் பெற்றது.

சோவியத் யூனியனில் 1958 யூரல் மலை, சிஷ்டிடாவ் என்னுமிடத்தில் அணுக் கழிவுப்பொருள் கிடங்கு வெடித்ததோ, 1974ல் ஷெவ்ஷென்கோவில் பரிசோதனை ஈனுலை வெடித்ததோ, 1983 ஆட்டோமாஷில் உள்ள அணு உலை தயாரிப்பு தொழிற்சாலை வெடித்ததோ வெளியுலகுக்கு உடனடியாகத் தெரியவில்லை. இவை, சோவியத் யூனியனிலிருந்து வெளியேறிய விஞ்ஞானிகள் தந்த தகவல்கள் மூலமும், மற்றும் பல விவரங்கள் சமீபத்திய சோவியத் கொள்கையான ‘கிளாஸ் நாஸ்த்’துக்குப் பிறகு தெரிய வந்தவைகளே. அல்லது மிகக் காலம் கடந்து சோவியத் இதழ்களில் வெளியிடப் பட்டவைகளே.

உதாரணமாய் 1958இல் யூரல் மலைப் பகுதியில் ஏற்பட்ட விபத்து பற்றி சோவியத் அதிருப்தி விஞ்ஞானி டாக்டர் ஜோரஸ் மெட்வேதெவ் 1979இல் எழுதுகிறார். அதன்பிறகே இவ்விபத்து பற்றி விரிவான தகவல்கள் தெரியத் தொடங்கின.

சோவியத் யூனியனில் உள்ள பல அணுசக்தி நிலையங்கள், சோவியத் யூனியனின் ஐரோப்பியப் பகுதியான அர்மீனியா, லிதுவேனியா, லெனின் கிராடு, குர்ஸ்ட், ஸ்மோ லென்ஸ்க், ரோவ்னா ஆகிய பகுதிகளிலேயே அதிகம் உள்ளன.

அணுமின் நிலையங்களுக்கான அணு உலைகள் தயாரிக்கும் தொழிற்சாலை சோவியத் யூனியனில் உள்ள ஆட்டோமாஷ் தொழிற்சாலை. சேர்னோபில் விபத்துக்குப் பிறகு சோவியத் அணுசக்தித் தொழில் எதிர்காலமற்று, பெரும் நெருக்கடிக்குள்ளாகியது. தற்போது இந்தியா போன்ற நாடுகளுடன் சோவியத் யூனியன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் மீண்டும் அணுசக்தித் தொழிலுக்கு நம்பிக்கையூட்டியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Pin It