பேய்ப்படங்களின் தொடர்ச்சியாக, இயக்குநர் விஜய் ஒரு புதுவகையான பேயை அறிமுகப்படுத்தியுள்ளார். ‘பிரேமம்’ என்ற மலையாளப்படத்தை தமிழ்நாட்டில் மலையாள மொழியிலேய 200 நாட்களைக் கடந்தும் ஓடவைத்த சாய்பல்லவி கதாநாயகியாக வருகிறார். கல்லூரிக் காலத்தில் காதலின் விளைவாக, கருவுறுகிறார். அந்தக் கருவைக் கலைத்துவிட்டுப் படிப்பைப் பார்க்கவேண்டும் என காதலன், காதலி இரண்டு குடும்பங்களும் அறிவுப்பூர்வமாகப் பேசுகின்றன. சாய்பல்லவி மறுக்கிறார். ஆனாலும் கட்டாயப் படுத்திக் கருக்கலைப்பு நடக்கிறது. கல்விப்பயணம் தொடர்கிறது. படிப்பு முடிந்து சம்பாதிக்கத் தொடங்கிய பிறகு, அதே காதலர்கள் திருமணம் செய்கிறார்கள்.

படிப்புக் காலத்தில் காதல், அதனால் கரு உண்டாதல் என்பதில் இந்த அணுகுமுறைதான் சரியானது. முடிந்த அளவு, உடலுறவைத் தவிர்க்க முயற்சி செய்யலாம். தவிர்க்க முடியாவிட்டால் அதற்கேற்ற கருத்தடைச் சாதனங்களைப் பயன் படுத்தலாம். அதிலும் தோற்று விட்டோம் என்றால் கருக்கலைப்பு தான் சரியான தீர்வு. ஆனால், கரு உண்டாகிவிட்டது என்பதை, அது உருவாகிய உடனேயே கண்டுபிடித்துக் கலைக்க வேண்டும். இல்லாவிட்டால் பெண்ணின் உடலுக்கு ஆபத்தையும் விளைவிக்கும். மருத்துவர்களும் அதில் தயக்கம் காட்டுவார்கள்.

காதல்வாழ்க்கை என்று இல்லாமல், பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமண வாழ்க்கையில் கூட பிள்ளைபெறும் தொல்லையைத் தவிர்க்க ஆண் கருத்தடை அறுவைச்சிகிச்சை செய்து கொண்டால், பாலியல் தேவைக்கும் தொல்லை இருக்காது. நிம்மதியான வாழ்க்கைக்கும் தொல்லை இருக்காது. இன்றைய மக்கள்தொகைப் பெருக்கச் சூழலில், பெண்ணடிமைச் சூழலில் இது தான் நியாயமானது.

இந்த அறிவியல் அணுகுமுறைக்கு எதிராக வந்துள்ள படம் தான் தியா. கல்லூரிக்காலத்தில் கலைக்கப்பட்ட ‘கரு’ பேயாக வந்து, கருக்கலைப்பை நடத்திய குடும்பத்தினரையும், மருத்துவரையும் பழிவாங்குகிறது. இறந்தவர்கள் எல்லாம் பேயாக வந்தகாலம் போய், கலைக்கப்பட்ட கருக்கள்கூட பேயாக வருகிறது என்பது நாட்டில் பேய்களின் மார்க்கெட் அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

அயர்லாந்தின் கருக்கலைப்புச் சட்டம்

இந்தப் படம் வந்த இதேநேரத்தில், அயர் லாந்து நாட்டில் கருக்கலைப்புக்கு ஆதரவாகப் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதில் கருக் கலைப்புக்கு ஆதரவாகப் பெருவாரியான மக்கள் வாக்களித்தார்கள் என்ற செய்தி வெளியானது.

அயர்லாந்து நாட்டின் பழைய கருக்கலைப்புத் தடைச்சட்டத்தின்படி, கருவில் உள்ள குழந்தைக்கும், கருவைச் சுமக்கும் பெண்களுக்கு உள்ளது போன்றே வாழ்வுரிமை உண்டு என்று கூறுகிறது. இந்தச்சட்ட வரைவை நீக்க வேண்டுமா அல்லது தக்கவைக்க வேண்டுமா என மக்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். தற்போதைய சட்டப்படி தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே கருக்கலைப்பு செய்யப்படும்.

2012 ஆம் ஆண்டு இந்திய வம்சாவளிப் பெண்ணான சவீதா என்பவருக்குக் கருக்கலைப்பு செய்ய இந்தச் சட்டம் தடையாக இருந்ததால் சவீதா மரணமடைந்தார். சவீதாவின் மரணம், அயர்லாந்து மக்களைப் பண்பாட்டுப் புரட்சிக்குத் தள்ளியது. அதன் விளைவாக, கருக்கலைப்புத் தடைச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பான வாக்கெடுப்பில் 66.4 சதவீத வாக்குகள் ஆதரவாகவும், எதிராக 33.6 சதவீத வாக்குகளும் பெறப்பட்டுள்ளன. இந்த வாக்கெடுப்பின் அடிப்படையில் புதிய கருக்கலைப்பு ஆதரவுச்சட்டம் விரைவில் வெளியிடப்பட உள்ளது. (பி.பி.சி தமிழ் 26 மே 2018)

அயர்லாந்தின் அமைதிப்புரட்சியை வாழ்த்தி வரவேற்கிறோம். அதேசமயம் இவ்வளவு காட்டு மிராண்டித்தனமான சட்டத்தை இந்த 2018 ஆம் ஆண்டிலும் அறிவாளிகள், கல்வியாளர்கள், ஜனநாயகவாதிகள், புரட்சியாளர்கள் எல்லாம் வாழ்வதாகப் பேசப்படும் நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் - இவ்வளவு காட்டுமிராண்டித் தனமான சட்டத்தை இன்றுவரை மாற்றாமல் வைத்திருக்கிறார்கள் என்பது நமக்கு ஆச்சரியத்தை உண்டாக்கவில்லை. ஏனென்றால், அயர்லாந்து கிறித்துவ மதவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள நாடு.

1931 லேயே பெரியாரின் கருக்கலைப்பு ஆதரவு

தோழர் பெரியார் தனது சுயமரியாதை இயக்கக்காலத்தில், இந்துமத ஆதிக்கவாதிகளிடம் அடைந்த எதிர்ப்புகளைப்போலவே, இந்த ரோமன் கத்தோலிக்கர்களின் எதிர்ப்பையும், கடும் நெருக்கடி களையும் சந்தித்தார். தனது குடிஅரசு இதழையே நிறுத்த வேண்டிய அளவுக்குத் துன்பங்களைச் சந்தித்தார்.

“கர்ப்பத்தடை முறையைக் கத்தோலிக்கர் மதத்தின் பேரால் எதிர்ப்பதில் மூன்று முக்கிய காரணங்கள் எடுத்துச்சொல்லி வருகிறார்கள். 1.கடவுளுக்கு விரோதமாம். 2.வேதத்துக்கு விரோதமாம். 3.இயற்கைக்கு விரோதமாம். இந்த மூன்று காரணங் களும் முற்றும் முட்டாள் தனமும், மோசமும் நிறைந்த கற்பனைக் காரணங்கள் என்பதுடன் முன்னுக்குப்பின் முரணான காரியங்கள் என்பதுமாகும் என்பதே நமதபிப்பிராயம். இதைப்பற்றி அடுத்தவாரம் விளக்குவோம்” -தோழர் பெரியார், குடி அரசு - 05.11.1933

கிறித்தவர்களின் இந்த முட்டாள்தனத்தின் விளைவாகத்தான் அயர்லாந்தில் இந்த 2018 வரை கருக்கலைப்புக்குத் தடை இருந்துள்ளது. குறிப்பாக பெரியார், 1930 ஆம் ஆண்டிலிருந்தே கருத்தடைக்கு ஆதரவாகக் ‘கர்ப்பத்தடை’ என்ற பெயரில் விரிவான தொடர்கட்டுரையை எழுதினார்.

1930 இல் குடி அரசில் எழுதும் போது கருத்தடையை ஆதரித்தார் என்றாலும், ‘கருக் கலைப்பு’ என்பதை ஆதரிக்கவில்லை. ஆனால், தொடர்ச்சியாக 1931 லிருந்து கருக்கலைப்புக்கும் ஆதரவாக இருந்தார். கருத்தடையை ஆதரித்த போதுகூட பெரியாரின் பார்வை என்பது உலகில் உள்ள வேறு அனைத்துப் பெண்ணியவாதி களைவிடவும் வேறுபட்டதாக இருந்தது. முழுமை யான பெண் விடுதலையை அடிப்படையாகக்  கொண்டிருந்தது.

“கர்ப்பத் தடையின் அவசியத்தைப் பற்றி நாம் கருதும் காரணங்களுக்கும் மற்றவர்கள் கருதும் காரணத்திற்கும் அடிப்படையான வித்தியாசம் இருக்கின்றன. அதாவது பெண்கள் விடுதலை அடையவும் சுயேச்சை பெறவும் கர்ப்பத்தடை அவசியமென்று நாம் கூறகின்றோம்.

மற்றவர்கள் பெண்கள் உடல் நலத்தை உத்தேசித்தும் பிள்ளைகளின் தாஷ்டீகத்தை உத்தேசித்தும், நாட்டின் தரித்திரதிசையை உத்தேசித்தும், குடும்பச்சொத்து குலையாமல் இருக்கவேண்டுமென்பதை உத்தேசித்தும், கர்ப்பத்தடை அவசியமென்று கருதுகிறார்கள். இதை மேல் நாட்டினர் பலர்கூட ஆதரிக் கின்றார்கள்.

ஆனால் நமது கருத்தோ இவைகள் எதையும் பிரதானமாய்க் கருதியது அல்ல. மற்றெதைக் கருதி யென்றால் முன் சொன்னது போல், பொதுவாக பெண்களின் விடுதலைக்கும் சுயேச்சைக்குமே கர்ப்பம் விரோதியாய் இருப்பதால் சாதாரணமாய் பெண்கள் பிள்ளை பெறுவது என்பதையே அடியோடு நிறுத்தி விட வேண்டும் என்கிறோம்,

...மது விலக்கு பிரசாரத்தை விட, தொத்து வியாதிகளை ஒழிக்கும் பிரசாரத்தை விட, இந்த கர்ப்பத்தடை பிரசாரம் மிகவும் முக்கியமான தென்பதே நமது அபிப்பிராயம். ஆதலால் இந்த கர்ப்பத்தடைக்கு நமது நாட்டில் ஒரு ஸ்தாபனம் ஏற்படுத்தி அதன் மூலம் பிரசாரம் செய்ய பொது ஜனங்களில் சிலராவது இது சமயம் முன் வரவேண்டுமென்றே வேண்டிக் கொள்ளுகின்றோம்.- தோழர் பெரியார், குடி அரசு - தலையங்கம் - 06.04.1930

தூத்துக்குடியில் 04.04.1931 அன்று நடைபெற்ற திருநெல்வேலி ஜில்லா 4 வது சுயமரியாதை மாநாட்டில் கருத்தடைக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றினார்.

“நமது பெண்மக்கள் வாழ்விற்கு அவசியமான வகையில் உடைகளையும், நகைகளையும் சுருக்கிக் கொள்ளவேண்டுமெனவும், தேக சக்திக்கும், செல்வ நிலைக்கும் தகுந்த அளவில் குழந்தைகளைப் பெறுவதற்காகக் கர்ப்பத்தடைமுறைகளை அவசியம் கையாளவேண்டுமென்றும் இம்மகாநாடு தீர்மானிக் கின்றது. - குடி அரசு - 12.04.1931

தோழர் பெரியாரைப் பின்பற்றி, பண்பாட்டுப் புரட்சியாக தமிழ்நாட்டுக் ‘கரு’ப்பேய்களை விரட்டுவோம். கல்விக் காலங்களில் கல்வியில் கவனம் செலுத்துவோம். தவறி ‘கரு’ உண்டாகும் நிலை வந்துவிட்டால், தயக்கமின்றி உடனடியாகக் கலைப்போம். எல்லாவற்றையும் விடப் படிப்பு முக்கியம்.

Pin It