உடற்பருமனுக்குக் காரணம் உணவு மட்டும் இல்லை, பொட்டலமிடப் பயன்படும் பிளாஸ்டிக் பொருட்களும் காரணம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். விரைவு உணவுகளே உடற்பருமனுக்கு முக்கிய காரணம் என்று இதுவரை கருதப்பட்டு வந்த நிலையில் உணவைப் பொட்டலமிடப் பயன்படும் பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து கசியும் நச்சு வேதிப்பொருட்களும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்று இப்போது தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் 1980ல் 14 சதவிகிதமாக இருந்த உடற்பருமனால் பாதிக்கப்பட்ட விடலைப் பருவத்தினரின் எண்ணிக்கை இன்று 42 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 2035ல் உலக மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குறிப்பாக குழந்தைகள் மற்றும் விடலைப் பருவத்தில் இருப்பவர்கள் உடற்பருமனால் பாதிக்கப்படுவர் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறியுள்ளது.
பிளாஸ்டிக்காலான பொட்டலங்கள் உணவுப் பொருட்களில் உருவாக்கும் நச்சுத்தன்மையால் உடலின் வளர்சிதை மாற்றத்தினால் ஏற்படும் உடற்பருமன் பாதிப்புகள் பற்றிய இந்த ஆய்வை நார்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.பொதுவாக நாம் உணவிற்காக அதிகம் பயன்படுத்தும் பாலாடைக்கட்டி கோப்பைகள், பழச்சாறு பாட்டில்கள், ஸ்டைரஃபோம் (Styrofoam) என்ற பிளாஸ்டிக்கால் ஆன இறைச்சி உண்ணப் பயன்படும் தட்டுகள், ஒட்டும் பசையுடைய சாக்லேட் பொட்டலங்கள், வெண்ணைப் பொட்டலத்தின் பாக்கெட்டுகள், சமையலறையில் பொதுவாக உள்ள சாப்பாட்டு மேசையில் உணவுத்தட்டில் உள்ள சூடான உணவினால் மேசை பாதிக்கப்படாமல் இருக்கப் பயன்படும் பாலியுரித்தேன் (polyurethane) என்ற பிளாஸ்டிக்கால் ஆன சிறிய விரிப்புகள் (placemats) மற்றும் ஸ்பாஞ்சு தூரிகைகள் போன்ற 34 பொதுவான பிளாஸ்டிக் பொருட்கள் பற்றி ஆராயப்பட்டது.
அடையாளம் தெரியாத நச்சு வேதிப்பொருட்கள்
இப்பொருட்களில் காணப்பட்ட 55,000 வேதிப்பொருட்களை ஆராய்ந்ததில் 629 பொருட்கள் மட்டுமே அடையாளம் காணக் கூடியதாக இருந்தன. இதில் தாலேட்டுகள் (thalates), பினால்கள் (Bisphenols) போன்ற 11 பொருட்கள் வளர்சிதை மாற்றத்தைப் பாதிப்பவை என்று தெரிய வந்துள்ளது. இவை நம் உடலின் எடையை ஒழுங்குபடுத்தும் செயல்முறையைப் பாதிக்கின்றன. இவை செயற்கைக் கருவூட்டல் சிகிச்சையையும் (vitro treatment) பாதிக்கிறது.
வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும் இப்பொருட்கள் அடிபோஜெனிசிஸ் (adipogenesis) என்ற நிலையை ஏற்படுத்துகின்றன. செல்கள் கொழுப்பை கூடுதலாக சேகரிக்கும் பண்பே அடிபோஜெனிசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இதனால் உடல் எடை அதிகமாகிறது. பிளாஸ்டிக் பொருட்களில் வளர்சிதை மாற்றத்தைப் பாதிக்கும் பல வேதிப்பொருட்கள் உள்ளன என்றாலும், அவை முழுவதையும் அடையாளம் காண முடியவில்லை என்று ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரியர் மார்ட்டின் வாக்னர் (Martin Wagner) கூறுகிறார்.
உருவாகும்போதே நச்சுத் தன்மையுடன் உற்பத்தியாகும் பிளாஸ்டிக்குகள்
ஆராயப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் மூன்றில் ஒன்று அடிபோஜெனிசிஸ் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவையே. அன்றாடம் நாம் இவற்றைப் பயன்படுத்தினாலும் இவற்றில் உள்ள வேதிப்பொருட்கள் பெரும்பாலானவை அறியப்படாதவை, ஆராயப்படாதவை, ஒழுங்குபடுத்தப்படாதவை. சுத்திகரிக்கப்பட்ட புதைபடிவப் பொருட்களில் இருந்து கிடைக்கும் கூட்டு வேதிப்பொருட்கள் மற்றவற்றுடன் குறிப்பாக நச்சுப் பொருட்களுடன் நெகிழ்தன்மை, நீர்காப்பு போன்ற விரும்பப்படும் பிளாஸ்டிக்கின் பண்புகளைப் பெறுவதற்காக கலக்கப்படுகின்றன.
பிளாஸ்டிக்குடன் சேர்க்கப்படும் வேதிப் பொருட்கள் அவற்றில் நிலையாகத் தங்கியிருப்பதில்லை. மாறாக அவை கசிந்து நம் உணவுடனும் கலக்கின்றன என்பது இந்த ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மார்ச் 2023ல் மகில் (McGil) பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரை புற்றுநோய் மற்றும் உடற்பருமனை ஏற்படுத்தும் பைஸ்பினால் (BPS) போன்றவை உணவுப் பொட்டலங்களில் ஒட்டப்படும் ஒட்டிகளில் (lables) இருந்து கசிந்து நாம் உண்ணும் உணவுடன் கலக்கின்றன என்பதை எடுத்துக் கூறியது.
பிளாஸ்டிக் உணவுப் பொட்டலங்கள் குறிப்பாக சூடான மற்றும் எண்ணெய்ப் பொருட்கள் அடங்கியவை பிளாஸ்டிக்கின் நிலைப்புத் தன்மையைப் பாதித்து அவற்றில் இருந்து நச்சுப் பொருட்களை கசியச் செய்கின்றன என்று உணவியல் நிபுணர் மற்றும் வேளாண் வேதியியலாளர் ஸ்டெஃபேன் பேயன் (Stephane Bayen) கூறுகிறார். இரத்தம், உடற்பகுதிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டு உடல் நலத்தைக் கெடுக்கும் பிளாஸ்டிக் பொட்டலங்கள் உணவுத்துறையில் பயன்படுத்தப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் கோருகின்றனர்.
ஆறுதல் செய்தி
இந்த ஆய்வில் சில ஆறுதல் தரும் செய்திகளும் வெளிவந்துள்ளன. தண்ணீர் பாட்டில்களை உற்பத்தி செய்யப் பயன்படும் பி இ டி (PET) வகை பிளாஸ்டிக்குகள் உடற்பருமன் பாதிப்பை உண்டாக்கும் நச்சுப் பொருட்களை கசியச் செய்வதில்லை. ஆனால் சில பாலிஸ்டைரின் ஸ்டைரோஃபோம் polystyrene Styrofoam) பிளாஸ்டிக் பொருட்களால் செய்யப்பட்ட பழம் வைக்கும் தட்டு போன்றவை உடற்பருமனுக்குக் காரணமாகின்றன என்று செல் வளர்த்தெடுத்தலின்போது (cell culture) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொருட்களில் அடங்கியிருக்கும் எல்லா ரசாயனங்களையும் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் வெளிப்படைத் தன்மையுடன் வெளியிட வேண்டும். இது நுகர்வோர் மற்றும் பிளாஸ்டிக் தொழிற்துறையினருக்கு தரப் பாதுகாப்பை மேம்படுத்த உதவும். இதனால் உற்பத்தியாளர்கள் தயாரிப்பின்போது பயன்படுத்தும் வேதிப்பொருட்கள் வினை முடிந்து எத்தகைய விளைபொருட்களை உருவாக்குகின்றன என்று தெரியாமல் இப்போது உள்ள நிலை மாறும்.
ஒவ்வொரு மனிதனும் அவனுடைய ஆயுட்காலத்தில் 44 பவுண்டு பிளாஸ்டிக்குகளை உணவின் மூலம் எடுத்துக் கொள்கிறான். அதனால் விரைவு உணவுகளைப் பற்றி நாம் நினைக்கும்போது நம்மை உடற்பருமன் உடையவர்களாக மாற்றி நம் வாழ்நாளைக் குறைக்கும் குற்றவாளிகள் சாக்லெட்டுகள் குளிர்பானங்கள் விரைவு உணவுகள் மட்டும் இல்லை. உணவுகளைப் பொட்டலமிட்டு வரும் பிளாஸ்டிக்குகளும் நம் வாழ்வை விட்டு விடைபெற்றுச் செல்ல வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.
** ** **
- சிதம்பரம் இரவிச்சந்திரன்