பொதுமக்களில் சிலர் செயற்கை முறை கருவூட்டல் இயற்கைக்கு எதிரானது என்பது போல கருதுகிறார்கள். பொதுவாக அதிக பால் உற்பத்தித் திறனுக்கான மரபணுக்களைக் கொண்டிருக்கும் காளைகளின் எண்ணிக்கை மிகக் குறைவே ஆகும். இவைகளை மட்டும் கொண்டு இயற்கை முறையில் இனவிருத்தி செய்வது என்பது முடியாத காரியம் ஆகும். இதன் பொருட்டு வந்தது தான் செயற்கை முறை கருவூட்டல் என்பது. இதில் சில எண்ணிக்கையிலான காளைகளின் விந்துக்கள் சேகரிக்கப்பட்டு அவைகள் பல பசுக்களை கருத்தரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

cow 339

இது தவிர காளைகளை இயற்கை முறை கருவூட்டலுக்காகப் பயன்படுத்தும் போது குறைந்த மரபுத் திறனுள்ள சந்ததிகளை உருவாக்கி விடும் வாய்ப்புள்ளது. ஆனால் செயற்கை முறை கருத்தரிப்பில் காளைகள் முதலில் சந்ததி சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அவைகளின் விந்துக்கள் பயன்படுத்தப்படுவதால் எதிர்கால சந்ததிகளின் உற்பத்தித் திறன் பாதிக்கப்படுவதில்லை. இன்றளவும் இந்தியா பால் உற்பத்தியில் முதலாவது இடத்தில் இருப்பதற்கு இந்தத் தொழில்நுட்பம் ஒரு மிக முக்கிய காரணமாகும்.

காளைகளிடமிருந்து விந்தணுக்களை சேகரிப்பதற்காக பிரத்தியோக பொலிகாளைப் பண்ணைகளை அரசாங்கமே அமைத்துள்ளது. அங்கு காளைகளின் விந்து சேகரிக்கப்பட்டு அவைகளின் தரத்தை ஆய்வு செய்த பின்னர் அவைகளை முறையாக செயற்கைமுறை கருத்தரிப்பில் கால்நடை மருத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

விவசாயத்தில் எந்திரமயமாக்கலால் காளை மாடுகளுக்கு வேலை இல்லாமல் போய் விட்டது. இது மேலும் காளைகளின் பங்கை சமுதாயத்தில் குறைத்து விட்டது. ஒரு பக்கம் அதிக பால் தேவை, மறுபக்கம் காளைகளுக்கு வேலையின்மை. இவையிரண்டும் சேர்ந்து காளைகளின் மேல் ஒரு வித பச்சாதாபத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகத் தான் பொதுமக்களில் சிலர் செயற்கை முறைக் கருவூட்டலை இயற்கைக்கு எதிராகப் பாவித்து, அது தவறு எனப் பொருள் கொள்கிறார்கள். செயற்கை முறை கருவூட்டல் தொழில்நுட்பம் உலகெங்கிலும் பயன்பாட்டில் உள்ள ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொலிகாளைப் பண்ணைகளில் காளைகளின் விந்தணுக்களின் கருத்தரிப்புத் திறனை உறுதி செய்வது ஒரு சவாலான காரியமாகும். ஏனெனில் இங்கு விந்தணுக்களை காளையிடமிருந்து சேகரித்து அதை ஆய்வகத்தில் முறையாக உறைவிந்து குச்சியில் அடைத்து கால்நடை மருத்துவமனைகளுக்கு அனுப்ப வேண்டியிருக்கிறது. இதன் காரணமாக விந்துக்களை நாம் கையாள வேண்டியிருக்கிறது. இதனால் தான் செயற்கை முறைக் கருவூட்டலில் இயற்கைமுறை கருவூட்டலை விட கருத்தரிப்புத் திறன் குறைவாக உள்ளது. இதை அதிகப்படுத்துவது தான் அறிஞர்களின் முன் உள்ள சவாலாகும்.

பசுக்களில் செயற்கைமுறை கருவூட்டல்

காளைகளிடமிருந்து விந்துவை சேகரிக்கும் போது மிகவும் கவனமாக சேகரிக்கப்பட வேண்டும். மேலும் காளைகளை பசுவிடமிருந்து பிரித்து பராமரிக்கப் படவும் வேண்டும். இதைக் காரணம் காட்டி பொது மக்களில் சிலர் இது இயற்கைக்கு எதிரானது என கூறுகின்றனர். காளைகள் முறையாகப் பராமரிக்கப்பட்டு கையாளப்பட வேண்டும் என்பதே அறிஞர்கள் உள்ளிட்ட அனைவரது விருப்பமும் ஆகும்.

செந்தமிழ்ச் செல்வன்

Pin It