அலர்ஜி என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அதன் மூலம் உருவாகும் நோய்கள் பரவலானவை. காற்று மண்டலத்தில் பெரும்பாலான பொருட்களுக்கு ஆண்டிஜென்களை தோற்றுவிக்கும் இயல்பு உண்டு. உணவுப் பொருட்களில் உள்ள ஒரு சில மூலக்கூறுகளுக்கு இப்பண்பு உண்டு. இவை மூச்சுக்காற்று, உணவு, நேரடியாக நம் உடலிற்குள் செல்கின்றன. இவற்றிற்கு எதிராக நம் உடலில் ஆண்டிபாடிகள் உண்டாக்கப்படுகின்றன. மீண்டும் ஒரு முறை இப்பொருட்கள் நம் உடலை அடையும்போது உடலில் இவை பொருட்களில் உள்ள ஆண்டிஜென்களுடன் வினைபுரிகின்றன. இதன் விளைவாக உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் நோய்கள் ஏற்படுகின்றன. இந்நோய்கள் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. காரணம், ஒவ்வொரு மனிதரும் வேறுபட்டவர். உணவு, அவற்றின் தன்மை ஒவ்வொருவருக்கும் வேறுபட்டது. பென்சிலின் போன்ற சில மருந்துகள் அலர்ஜியை உண்டாக்குவதுண்டு.
அலர்ஜி ஏற்பட முக்கியக் காரணம் காற்றில் கலந்துள்ள தூசுக்களே. படுக்கை விரிப்புகள், மெத்தை, தலையணைகள், போர்வைகள், புத்தகங்களில் உள்ள தூசுகள், சாலையில் உள்ள புகை தூசுகள், வீட்டில் ஆங்காங்கே தொங்கும் ஒட்டடைத் தூசுகள் போன்றவற்றை வெப்பமண்டலப் பகுதிகளில் ஒருபோதும் முற்றிலுமாக ஒழிக்க முடியாது. சில பூக்களின் நறுமணம், மகரந்தத்தூள், செல்லப்பிராணிகளின் உரோமங்கள், பறவைகளின் இறகுகள், நண்டுகள், மீன்கள், சில வகை நாய்க்குடைகள், சமையலறையில் இருந்துவரும் சில மணங்கள் போன்ற பல ஒவ்வாமைக்குக் காரணங்கள்.
தீவிர ஒவ்வாமை சில வேளைகளில் உயிருக்கே ஆபத்தாகி விடலாம். இவை anaphailatelic shock என்று அழைக்கப்படுகின்றன. இதற்கு சில மருந்துகளே காரணம். அதனால் எப்போதும் எந்த நோய்க்கும் சுய மருத்துவம் செய்யக்கூடாது. எந்த மருந்து கொடுக்கப்பட்டாலும் அதற்கு பரிசோதனை டோசேஜ் கொடுக்கப்பட வேண்டும். ஒருவருக்கு பென்சிலின் அலர்ஜி என்றால் மருத்துவரிடம் முன்பே அதைச் சொல்ல வேண்டும். தோல், உடலில் ஏற்படும் அரிப்பு, அதனால் சிவந்து போவது, கண்ணைச் சுற்றி, முகத்தில் நீர்கட்டிக் கொள்வது போன்றவை ஒவ்வாமையின் அறிகுறிகள். மூக்கின் உள்புறத்தில் மூச்சு விடும் வழிகளில் ஏற்படும் வினைகளால் தொடர்ச்சியான தும்மல், ஜலதோஷம், கண், முகம் வீங்கிப்போவது, அரிப்பு போன்றவை ஏற்படுகின்றன. இவை அலர்ஜிக்ரைனட்டிஸ் என்று அழைக்கப்படுகிறது. மூக்கில் துளித்துளியாக சளி வந்து கொண்டே இருப்பதால் மூக்கடைப்பு, தொண்டை அடைப்பு ஏற்படுகிறது. தொடர்ச்சியான தும்மல், வலி ஏற்படும். பிராங்க்கில் ஆஸ்துமாவிற்கு மூச்சுக்குழாய்களில், நாளங்களில் ஆண்டிஜென் ஆண்டிபாடிகளுக்கிடையில் நடைபெறும் வினைகளே காரணம். சுவாசக்குழாய்கள் குறுகுவதால் மூச்சு விட சிரமமாக இருக்கும். சுவாசக்குழாய்கள் முழுமையாக அடைத்து அதனால் மோசமான விளைவுகள் ஏற்படலாம். காற்று சுவாசக்குழாய்க்குள் உள்ளும் புறமும் நுழைந்து வெளிவர இயலாமல் இடுங்கிக்கொண்டு நிற்பது போலத் தோன்றும். சுவாசக்குழாய்களிலும், மூச்சு விடும் வழிகளிலும் கபம் அடைத்துக்கொள்வதால் மூச்சு விடும்போது ஒரு தனி சத்தம் ஏற்படும். இது ஆஸ்துமாவின் ஆரம்பம். கபத்தை வெளியே துப்புவதற்கு முயலும்போது வலி ஏற்படும்.
குழந்தைகள், நடுத்தர வயதுக்காரர்களை அதிகமாக இது பாதிக்கும். தோலின் வெளிப்புறம் ஏற்படும் சிவந்த நிறம், அரிப்பு, அதனால் தடித்தல் ஏற்படும். தொண்டைக்கு உள்ளேயும் இதுபோல தடிப்பு வந்து அதனால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். உணவுக்குழாய் மற்றும் சுவாசக்குழாய் பிரியும் இடத்தில் தடிப்பு ஏற்பட்டால் அது லாரிஞியல் இடிமா என்று சொல்லப்படுகிறது. இந்த தடிப்பு சரிவர கவனிக்கப்பட்டால் அது மரணத்தையும் ஏற்படுத்தலாம்.
நோயாளி ஒவ்வாமைக்குக் காரணமான பொருட்களைத் தாங்களாகவே கண்டறிந்து, அவற்றுடன் உள்ள தொடர்பைத் தடுப்பதே சிறந்த தீர்வு. இது நம்மால் மட்டுமே முடியும். ஒவ்வாமை நோய் வீட்டில் ஒருவருக்கு வந்தால் அது மற்றவர்களுக்குத் தொற்றுவதில்லை. ஆனால் தொடர்ச்சியாக சளியும், இருமலும், ஆஸ்துமாவும் இருந்தால் உடல் நோய் எதிர்ப்பாற்றல் குறைகிறது. நோய்க்கிருமிகள் எளிதில் உடலிற்குள் நுழைந்து இரண்டாம் நிலை நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது. இதனால் அலர்ஜியால் மூச்சிரைப்பு, டான்சிலைட்டிஸ், நிமோனியா, காதுகள் பாதிப்படைதல், ப்ராங்கைட்டிஸ் போன்றவை ஏற்படுகின்றன. நோய் தீவிரமாகும் முன்பே கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். நோய் ஒவ்வாமையினால்தானா இல்லை மற்ற நோய்களால் ஏற்பட்டதா என்பதைப் பாதிக்கப்பட்டவர் கண்டறிய முடியும்.
புதிதாக ஒரு உணவு, புதிய நறுமணத்தை முகரும்போது, பாதிப்பு ஏதேனும் ஏற்படுகிறதா என்று புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக, பெண்களைவிட ஆண்களுக்கே ஒவ்வாமை அதிகம் ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவரின் ரத்தம் பரிசோதிக்கப்படும்போது ஈஸ்னோபில்ஸ் என்ற அணுக்கள் கூடுதலாக இருப்பதை அறியலாம். இஸ்ட்டமின் என்ற ஒரு பொருள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதே இதற்குக் காரணம். மருந்துகளை எடுத்துக்கொண்டாலும் ஒவ்வாமையை உருவாக்கும் பொருட்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ளக் கூடாது. இத்தகையவற்றை கட்டாயம் விலக்கிவைக்க வேண்டும். ஒட்டடைத் தூசுகளைத் தவிர்க்க ஈரத் துணியால் சுத்தம் செய்யலாம். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தலையணை, பெட்ஷீட் போன்றவற்றைத் தோய்த்துப் பயன்படுத்த வேண்டும். படுக்கையை தினம் தினம் நன்றாகத் தட்டி விரிக்க வேண்டும். மின்விசிறிகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் தூசுகளை நனைந்த துணியால் துடைக்க வேண்டும்.
இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் முகமூடி அணிந்து செல்ல வேண்டும். புத்தகம், பத்திரிகைகள் இருக்கும் அலமாரிகளை மூடியே வைத்திருக்க வேண்டும்.
எந்த மருத்துவ முறையில் சிகிச்சை மேற்கொண்டாலும் தகுந்த மருத்துவரின் ஆலோசனையின்படியே மருந்து சாப்பிட வேண்டும். இந்தக் கருத்துக்களை மனதில் வைத்து செயல்பட்டால் உடலும், மனமும் நலமாக இருக்கும். பின்னர் ஒவ்வாமை என்ற சொல்லிற்கே நம் அகராதியில் இடமில்லை.
- சிதம்பரம் ரவிச்சந்திரன்