திராவிடர் கழகம் ஆண்டுதோறும் தை மாதத்தில் நடத்திவரும் திராவிடர் திருவிழாவில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு துறையை சேர்ந்தவர்களைத் தேர்ந்தெடுத்து ‘பெரியார் விருது’ வழங்கிப் பாராட்டி வருகிறார்கள். திரைப்பட இயக்குனர் சுசீந்திரனும், திரைப்பட இசையமைப்பாளர் டி.இமானும் 2015ஆம் ஆண்டு பெரியார் விருது பெற்றனர். திரைப்படப் பாடலாசிரியர் யுகபாரதி 2016ஆம் ஆண்டு பெரியார் விருது பெற்றார். இந்த மூவருடைய கூட்டணியில் உருவாகி வெளியாகியிருக்கும் திரைப்படம்தான் ‘மாவீரன் கிட்டு’.

suseendranமாவீரன் கிட்டு திரைப்படத்தில், கிராமங்களில் நடக்கும் ஜாதியத் தீண்டாமை வன்கொடுமை களையும், ஆணவக்கொலைச் சம்பவங்களையும், அதிகாரத்தில் இருப்பவர்களிடம் மேலோங்கியிருக்கும் ஜாதிய ஆணவப்போக்கையும் மிக அப்பட்டமாக, துணிச்சலாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். இந்தப் படத்தின் உரையாடல்களில், ஜாதியெதிர்ப்புக் கருத்துகளை மிகக்கூர்மையாகத் தீட்டியிருக்கிறார் உரையாடல்களை எழுதியிருக்கும் கவிஞர் யுகபாரதி. படத்தின் தொடக்கக் காட்சியில் இருந்து இறுதிக்காட்சி வரை, ஜாதி எதிர்ப்பு என்கிற ஒற்றைக் குறிக்கோளின் மீதே முழு படத்தையும் கட்டியெழுப்பியிருக்கிறார் இயக்குனர்.

திரைப்படம் என்கிற வலிமைமிகுந்த ஊடகத்தில், ஜாதியக் கட்டமைப்புக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட திரைப்படங்கள் மிக அபூர்வமாகவே வருகின்றன. மிகச் சில படைப்பாளிகளே சமூக அக்கறைக் கொண்டவர்களாகவும், ஜாதியெதிர்ப்புக் கருத்துகளில் தீவிரப் பற்றுடையவர் களாகவும், தங்களது படைப்புகளில் தொடர்ந்து இதுகுறித்த பதிவுகளைத் துணிச்சலுடன் செய்பவர் களாகவும் இருக்கிறார்கள். அப்படி அபூர்வமானவர்களில் ஒருவராக நமக்கு கிடைத்திருப்பவர் இயக்குனர் சுசீந்திரன்.

ஒரு திரைப்படத்தை எடுத்து அதைப் பொதுமக்களிடம் பரவலாகக் கொண்டு சேர்ப்பது என்பது இன்று பல கோடிரூபாய்கள் புரள்கிற வணிகமாக இருக்கிறது. வணிகரீதியாக வெற்றிபெற்று லாபம் ஈட்டக்கூடிய ஒரு படத்தில் முதலீடு செய்யத்தான் தயாரிப்பாளரில் இருந்து திரையரங்க உரிமையாளர்வரை ஆர்வம் காட்டுகிறார்கள். பார்வையாளர்களைத் திரையரங்குக்கு வரவைப்பதற்கும் வெற்றிப்பட இயக்குனர் என்கிற அடையாளம் தேவைப்படுகிறது. ஒரு திரைப்பட இயக்குனர், தன்னை வணிகரீதியான வெற்றியாளராக நிலைநிறுத்திக்கொள்வது இங்கு மிகவும் அவசியமானதாக இருக்கிறது.

இதை நன்கு உணர்ந்தவராக இருக்கிறார் சுசீந்திரன். இதுவரை, வெண்ணிலா கபடிக் குழுவில் தொடங்கி மாவீரன் கிட்டு வரை மொத்தம் 9 படங்களை இயக்கியிருக்கிறார். அதில், நான் மகான் அல்ல, ராஜபாட்டை, பாண்டிய நாடு, பாயும் புலி ஆகிய படங்கள் முழுக்க வணிகரீதியான வெற்றியை நோக்கமாக கொண்ட படங்கள்.

அந்தப் படங்களில் ஏற்றுக்கொள்ளமுடியாத சில கருத்துகள் நமக்கு இருக்கக்கூடும். எனவே அந்தப் படங்களை நாம் தற்போதைய அலசலுக்கு எடுத்துக்கொள்ளாமல் தவிர்த்துவிடலாம். இயக்குனர் சுசீந்திரன் சமீபத்தில் ஒரு நேர்காணலில், தன்னுடைய படங்களில், வெண்ணிலா கபடிக் குழு, அழகர்சாமியின் குதிரை, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா, மாவீரன் கிட்டு ஆகிய படங்கள் தனி வகை என்றும், இவை வணிகரீதியான வெற்றியை மட்டுமே நோக்கமாகக் கொண்ட படங்கள் அல்ல என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தன்னுடைய முதல் படமான வெண்ணிலா கபடிக் குழு என்கிற திரைப்படத்திலேயே, கிராமங்களில் நிலவும் ஜாதியச் சமூக அமைப்பைப் பின்னணியாகக் கொண்ட கதைக்களத்தை அமைத்திருப்பார். படத்தில் நாயகன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். ஜாதிரீதியான ஒதுக்குதலுக்கு அவர் ஆளாவதைச் சில காட்சிகளிலும், வசனங்களிலும் காட்டியிருப்பார். திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் நடக்கும் கபடிப் போட்டியில், தன் அணியின் வெற்றிக்கு காரண மானவராக நாயகன் இருப்பார். ஜாதிரீதியான ஒதுக்குதலுக்கு உள்ளானவர்தான், தன் அணியின் வெற்றிக்கு காரணமானவராகவும், அதற்காக தன் உயிரையும் கொடுத்தவராகவும் கதையை அமைத்திருப்பார்.

தமிழில் தலித் வாழ்வியலை ஓரளவுக்குத் தொட்டுக்காட்டிய படமாக இது பலரால் பாராட்டப்பட்டது. குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்டு, வணிகரீதியான பெரும்வெற்றிப்படமாக இந்தப் படம் விளங்கியது. தன்னுடைய முதல் படத்திலேயே, ஜாதிய சமூகச் சிக்கலை ஓரளவேனும் காட்சிப்படுத்தியதும், கதையின் நாயகனாக தலித் சமூகத்தை சேர்ந்த கதாபாத்திரத்தை அமைத்ததும் இயக்குனர் சுசீந்திரன் கொண்டிருக்கும் துணிச்சலுக்கும் சமூக அக்கறைக்கும் முதல் சான்றாகும்.

 சுசீந்திரனின் மூன்றாவது திரைப்படம் அழகர்சாமியின் குதிரை. அவருடைய முந்தைய இரண்டு திரைப்படங்களும், பொழுதுபோக்கு, விறுவிறுப்பு போன்ற அம்சங்களைப் கொண்டிருந்தன. பெரிய அளவிலான வணிக வெற்றியையும் பெற்றிருந்தன. அவற்றில் இருந்து முழுவதும் வேறுபட்டு, கதாநாயகனுக்கு உரிய இலட்சணமாக தமிழ்சினிமா நிறுவியிருக்கும் அத்தனையையும் புறக்கணித்து, கதையையும் கதைக்களத்தையும் மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம் அழகர்சாமியின் குதிரை. எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் சிறுகதை ஒன்றை கதைக்கருவாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். 1980 களின் காலக்கட்டத்தில், ஒரு பின்தங்கிய கிராமத்தில் நடப்பதாக அமைக்கப்பட்ட கதை.

கோயில் திருவிழாவின் போது சாமி வலம்வருவதற்காகச் செய்துவைக்கப்பட்டிருந்த மரக்குதிரை காணாமல் போய்விடுகிறது. அந்த சமயத்தில், ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் மலையில் இருந்து ஒரு நிஜக் குதிரை வழிதவறி ஊருக்குள் வந்துவிடுகிறது. சாமியின் குதிரைதான் நிஜக்குதிரையாக அவதாரம் எடுத்து வந்துவிட்டதாக ஊர்மக்கள் நம்பி வழிபடுகிறார்கள். அந்த நிஜக்குதிரைக்கு சொந்தக்காரர் வந்து கேட்கும்போது குதிரையைக் கொடுக்க மறுக்கிறார்கள். கிராமங்களில் நிலவும் பல்வேறு மூடநம்பிக்கைகளை நகைச்சுவைக்கலந்து கேள்விக்குட்படுத்தியிருப்பார் இயக்குனர்.

படத்தின் கிளைக்கதைகளின் ஒன்றாக, அந்த ஊரிலேயே பகுத்தறிவுக் கருத்துகளைக் கொண்டிருக்கும் இளைஞர்கள் குழு ஒன்று இருக்கும். அந்தக் குழுவில் இருக்கும் ஒருவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்குமான காதல் கதையும் அந்தக் காதலுக்கு எதிராக ஜாதி குறுக்கே நிற்பதையும் காட்டியிருப்பார் இயக்குனர்.

தமிழகமெங்கும் பல ஆயிரம் கிராமங்களில், பெரியாரிய இயக்கங்களின் தோழர்கள் இளைஞர்கள் சின்னஞ்சிறு குழுவாகவாவது இருக்கிறார்கள். ஆனால் சமகால தமிழ் இலக்கியத்திலும், தமிழ் சினிமாவிலும் பெரியாரிய இயக்கத்தை சேர்ந்தவர்கள் குறித்த கதாப்பாத்திரங்கள் மிக மிக அரிதாகவே இடம்பெற்றிருக்கின்றன. அந்த வகையில் பார்க்கும்போது, அழகர்சாமியின் குதிரை படத்தின் இரண்டாவது கதாநாயகனாக வருகின்ற இளைஞரும் அவருடைய நண்பர்களும் மூடநம்பிக்கைகள் மண்டிய அந்த கிராமத்திலேயே பகுத்தறிவுக் கருத்துகளும், ஜாதி மறுப்புக் கருத்துகளும் கொண்டிருப்பவர்களாகக் காட்டியிருப்பது, பெரியாரிய இயக்கங்கள் குறித்த ஒரு சிறு அங்கீகாரமாக நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

 சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ஐந்தாவது திரைப்படம் ஆதலால் காதல் செய்வீர் என்கிற திரைப்படம். தமிழில் வெளிவரும் திரைப்படங்களில், கிட்டத்தட்ட நூறு விழுக்காடு திரைப்படங்கள் ஆண்-பெண் காதல் கதைகளை மய்யமாகக் கொண்ட திரைப்படங்கள்தான். அதிலும், பள்ளி மாணவர்களுக்கு இடையே நடக்கும் விடலைத்தனமான காதல் கதைகளைக் கொண்ட திரைப்படங்களும் கடந்த இருபது ஆண்டுகளில் நிறைய வந்துவிட்டன. அவற்றில் சில வணிகரீதியான வெற்றியையும் பெற்றுவிட்டன.

சமூக அக்கறை கொண்ட இயக்குனரான சுசீந்திரன், பதின்பருவத்து பள்ளி மாணவர்களுக்கு இடையே நடக்கும் காதலை புனிதப்படுத்தாமல், அந்த வயதுக்கே உரிய விடலைத்தனமும் உடற் கவர்ச்சியின் மீதான ஈர்ப்பும் அதனால் ஏற்படுகிற விபரீதமான முடிவும் என்னவென்று சொல்லும் விதமாக இந்த படத்தின் கதையை அமைத்திருக்கிறார்.

 என்னுடைய நண்பர்கள் சிலர், சுசீந்திரனின் இந்தப் படம் காதலுக்கு எதிரான ஒரு படம் என்ற ஒரு எதிர்மறையான விமர்சனத்தை கொண்டிருக்கின்றனர். ஜாதிய உறவுமுறைக்கு எதிரான ஒரு செயல்பாடாகக் காதல் திருமணங்களை நாம் ஆதரிக்கிறோம் என்றாலும், அதற்காக பதின்பருவத்துப் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடக்கும் பாலியல்ரீதியான ஈர்ப்பை, புனிதப்படுத்த வேண்டிய தில்லை. அந்த வகையில், தமிழ் சினிமா காலங்காலமாக காதல் என்பதன் மீது கட்டியெழுப்பியிருக்கும் தெய்வீகம், புனிதம் போன்ற பிம்பங்களுக்கு எதிரான ஒரு படமாக சுசீந்திரனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ஆதலால் காதல் செய்வீர் என்கிற படத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

 இயக்குனர் சுசீந்திரனின் ஏழாவது திரைப்படம் ஜீவா. விளையாட்டுப் போட்டிகளைக் கதைக் களமாகக் கொண்டு மிகச்சில திரைப்படங்கள்தான் தமிழில் வந்திருக்கின்றன. பொதுவாக நாயகன் ஒரு விளையாட்டு வீரனாக இருப்பார், அவருக்குக் கதைப்படி சில எதிரிகள் இருப்பார்கள். அவர்கள் அவனை விளையாட்டுப் போட்டியில் தோற்கடிப்பதற்கான சதிவேலைகளில் ஈடுபடுவார்கள். அவன் அந்தச் சதிச்செயல்களை முறியடித்து கடைசியில் வெற்றிபெறுவார். இப்படித்தான் பெரும்பாலான படங்கள் எடுக்கப்பட்டிருகின்றன.

இவற்றில் இருந்து வேறுபட்டு, இந்தியாவில் எல்லா துறைகளையும் போல, விளையாட்டு துறையிலும் ஜாதி எப்படி ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை அப்பட்டமாக துணிச்சலுடன் பேசிய படம் தான் ஜீவா.

 இந்தியாவில் மிகப் பிரபலமான விளையாட்டாக இருக்கிற கிரிக்கெட் விளையாட்டில், எப்படி பார்ப்பனர்கள் கோலோச்சுகிறார்கள் என்பதை எந்தவிதச் சமரசமும் இல்லாம் பதிவு செய்ய துணிந்ததற்காகவே இயக்குனர் சுசீந்திரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

படத்தில் மிக முக்கியமான காட்சி என்னவென்றால், மாநில அளவிலான ஒரு போட்டியில் வெற்றி பெற்ற அணியை சேர்ந்த நாயகன் ஜீவாவிற்கு பரிசு வழங்கும் போது, கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருக்கும் பார்ப்பனர், நாயகனின் முதுகைத் தடவி பூணுால் அணிந்திருக்கிறாரா என்று பார்ப்பார். இப்படி ஒரு காட்சியை ஒரு வணிக சினிமாவில் வைக்க எத்தனை பெரிய துணிச்சலும் நேர்மையும் இருக்க வேண்டும் என்பதை எண்ணி வியக்கிறோம்.

 இயக்குனர் சுசீந்திரனின் ஒன்பதாவது படமாக சமீபத்தில் வெளிவந்திருக்கும் ‘மாவீரன் கிட்டு’, அவருடைய அழுத்தமான சமூக அக்கறைக்கும் சமரமற்ற நேர்மைக்கும் இன்னும் ஒரு நற்சான்றாக விளங்குகிறது. ஜாதிய சமூகக் கட்டமைப்பிற்கு எதிரான கருத்துகளைத் தாங்கிய படைப்புகள் அவ்வப்போது சின்ன அளவிலேனும் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன.

வழக்கமான கதையமைப்புக்குப் பின்னணியில் ஜாதியப் பிரச்சனைகளைத் தொட்டுச் செல்கின்ற படங்களாக அவற்றுள் பலவும் அமைந்துவிடுகின்றன. அந்தப் படங்களின் இயக்குனர்களும் நம்முடைய பாராட்டுகளுக்கு உரியவர்கள்தாம். இயக்குனர் சுசிந்திரனின் சமீபத்திய திரைப்படங்களான, ஜீவாவும் மாவீரன் கிட்டுவும், ஜாதியச் சிக்கலையே மய்யப்பொருளாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்களாகும்.

இந்த இரண்டு படங்களின் கதைகளிலும், பார்வையாளர்களுக்கு எந்த குழப்பமும் ஏற்படாமல், ‘ஜாதி’ என்பதைத்தான் கதையின் வில்லனாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. கதாநாயகனுக்கு படத்தில் தொல்லைக்கொடுப்பவர்களாக தனிநபர்கள் இருந்தாலும், அதற்கு காரணமாக ‘ஜாதி’தான் இருக்கிறது என்பதை அய்யங்களுக்கு இடமில்லாமல் சொல்வதில் இயக்குனர் உறுதியாக இருந்திருக்கிறார்.

தமிழ்சினிமாவில் பெரும்பாலும், கதாநாயகர்கள் பல்வேறு வீரதீரச் செயல்களை செய்பவர்களாக, பல வில்லன்களை அடித்து துவம்சம் செய்யக்கூடியவர்களாக, எதிரி எவ்வளவு வலிமை மிகுந்தவனாக இருந்தாலும் தன்னுடைய அறிவின் நுட்பத்தாலும், உடல் வலிமையாலும் அவர்களை தோற்கடிக்கும் வீரனாக சித்தரிக்கப்படுவார்கள்.

அத்தகைய போலித்தனத்தை ஒதுக்கிவிட்டு, யார் உண்மையான மாவீரனென்றால், இந்திய சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் ஜாதி என்கிற மிகப்பெரிய எதிரிக்கு எதிரான போராட்டத்தில் தன் உயிரையும் கொடுக்க துணிந்தவனே மாவீரன் என்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.

அந்த வகையில் பார்க்கும்போது, திரைப்படம் என்கிற வலிமை மிகுந்த ஊடகத்தில், சமூகமாற்றத்திற்கான முற்போக்கான கருத்துகளையும், இன்னும் குறிப்பாக ஜாதி என்னும் சமூக அநீதிக்கு எதிரான படைப்புகளைத் துணிச்சலுடனும் நேர்மையுடனும் கொடுக்கிற இயக்குனர் சுசீந்திரனும் நம்முடைய பாராட்டுகளுக்கும் நன்றிகளுக்கும் உரிய மாவீரனே! ஜாதி என்கிற எதிரியை வீழ்த்துவதற்கு இன்னும் பல மாவீரர்கள் உருவாகட்டும்!

Pin It