ஓட்டுண்ணிக் கிருமிகளால்
காற்றடிக்கும் திசையில் பரவுகிற
கொடிய தொற்று நோய் ..
நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு திரிவது
இதன் முதல் அறிகுறி!
நாற்காலிகளைப் பார்த்தால்
அரிப்பெடுப்பது அடுத்த அறிகுறி!
உடனடியாக
தன்மான உறுப்புகள் செயலிழந்துவிடும்
இந்த நோய்த் தொற்று உள்ளவர்களால்
ஓரிடத்தில் நிலையாக இருக்க இயலாது
அடிக்கடி தாவிக் கொண்டே இருப்பார்கள் .
நோயின் தீவிரத்தில்
கண்களிலுள்ள நேர்மை நரம்புகளில் சீழ் பிடிக்கும்
பணப்பார்வை மட்டுமே செயல்படும்.
மனிதாபிமானக் குழாய்களில்
கொழுப்புகள் படிந்து அடைப்பு ஏற்படும்!
நிறக்காரணிகள் பலவீனமடைவதால்
அடிக்கடி தோலின் நிறம் மாறிக்கொண்டே இருக்கும்!
தோலின் தடிமன் ஒரு செண்டி மீட்டர் அதிகரிக்கும்!
நோய் முற்றும் பொழுது
முதுகுத் தண்டுவடம் முற்றிலும் பாதிக்கப்படும்
தரையைப் பார்த்து வளைந்துவிடும்
நிமிர்த்த இயலாது .. !
இந்தக் காய்ச்சலுக்கு
தடுப்பூசியோ மருந்தோ
கண்டுபிடிக்கப்படவில்லை !
ஆகவே பொதுமக்கள்
இந்த அறிகுறிகள் உள்ளவர்களிடம்
எச்சரிக்கையுடன் இருக்கும்படி
கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்...
- மு.ஆனந்தன்