திருப்பூர் மாவட்டம் திருமலைக் கவுண்டன்பாளையம் - தீண்டாமை ஒழிப்புச் சட்டத்துக்கு சவால் விட்டிருக்கிறது. தமிழகம் முழுதும் இதுபோல் எத்தனையோ ‘பாளையங்களில்’ நடக்கும் ஜாதி வெறித் தீண்டாமை இன்னும் வெளிச்சத்துக்கு வராமலே இருக்கிறது என்பதே உண்மை. ஜாதி வெறி இல்லை என்று நிச்சயமாக சொல்ல முடியாது.
அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த தோழர் பாப்பாள் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு சமைத்த உணவு தீட்டாகி விட்டதாகக் கூறி அவரைப் பணி இடமாற்றம் செய்வதற்குத் தூண்டி அரசு அதிகாரிகளையும் பணிய வைத்திருக்கிறார்கள் அங்கே உள்ள கவுண்டர் சமூகத்தின் ஒரு பகுதியினர். இத்தனைக்கும் பாப்பாள் சொந்த ஊர் அது. 15 ஆண்டுகளுக்கு முன்பு இதே பள்ளியில் சத்துணவு சமையராக அவர் பணியாற்றத் தொடங்கியபோது இதே ஜாதி வெறி எதிர்ப்புக் காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டவர்தான் அவர்.
இடையில் ஒரு தலைமுறை மாற்றம் வந்த பிறகும் ‘ஜாதி வெறி’ மனநிலை மட்டும் 15 ஆண்டுகளாக மாறாத நிலையில் இருக்கிறது என்பதுதான் இதில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கிய அம்சம்.
கிராமங்களின் வாழ்வாதாரம் புறக்கணிப்புக்கு உள்ளாகிறது என்பது நியாயந்தான். விவசாயமும் கிராம மக்களின் நிலங்களும், வளங்களும் பெரும் தொழில் நிறுவனங்கள் சுரண்டுவதையும் சூறையாடுவதையும் கண்டிக்கிறோம்; தடுக்க வேண்டும்; என்கிறோம். களத்தில் இறங்கிப் போராடுகிறோம். அத்தனையும் நியாயம்தான். ஆனால் அதே கிராமங்களில் ஜாதி வெறியும் தீண்டாமையும் தலை விரித்தாடுகிறதே; ஊரும் சேரியும் பிரிந்து கிடக்கிறதே; அரசு செலவில் போடப்படும் இலவச உணவை சாப்பிட்டாலும் அதை ‘தீண்டத்தகாத’ ஒருவர் சமைக்கக் கூடாது என்று கொக்கரிக்கும் அளவுக்கு ஜாதி வெறி தலைதூக்கி நிற்கிறதே!
கிராமங்களையும் விவசாயிகளையும் சூறையாடும் பெரும் தொழில் நிறுவனங்களை எதிர்ப்பதில் உள்ள நியாயம் அதே கிராமத்தில் சேரி மக்களாக ஊரிலிருந்து பிரித்து வைக்கப்பட்டு அன்றாடம் அவமானத்தைச் சுமக்க வைக்கும் ஜாதி வெறியை எதிர்ப்பதற்கும் அதே நியாயம் பொருந்தாதா?
ஜாதியமைப்பின் கொடூர வடிவங்களைத் தாங்கி நிற்கும் கிராம அமைப்புகளை அப்படியே பாதுகாத்துக் கொண்டே விவசாயிகளின் உரிமைகளையும், நிலம் நஞ்சாவதையும், சுற்றுச் சூழலையும் மட்டும் தனிமைப்படுத்தி எதிர்ப்பது நியாயந்தானா?
நெஞ்சைத் தொட்டு பதில் சொல்லுங்கள்!