செருப்புக்குத்

தமிழர் சரித்திரத்தில் இடமுண்டு

ஈசன் படியளந்த

இதிகாசக் காலத்தில்

ராமன் செருப்புகளே

ராஜ்ஜியத்தை ஆண்டன.

அரியாசனத்திலிருந்து

ஆட்சி செய்தன

செருப்புகள்.

ராஜராஜனுக்குப் பின்

ராஜேந்திரன் வந்ததுபோல்

அப்பன் செருப்புக்குப் பின்

மகன் செருப்பு...

ராம செருப்புக்கு

வாரிசுச் செருப்புகள் வந்தன.

 

பேட்டா செருப்புகள் போல

வேதச் செருப்புகள் - மத

வாதச் செருப்புகள் - பல

வருணச் செருப்புகள்.

மறுபாதிச் செருப்புகள்

மனுநீதிச் செருப்புகள்...

 

தமிழ்நாட்டில்,

ஓராயிரம் ஆண்டு

ஓய்ந்து கிடந்த பின்னர்

வாராது போல் வந்தது

ஓர் வார்ச் செருப்பு!

ஆரஞ்சு பச்சை

அதன் நடுவே வெள்ளையென்று

வண்ணம் கொண்ட

வார்ச்செருப்பு, பழஞ்செருப்பு!

அது,

வெள்ளைச் செருப்பின்

வாரிசுச் செருப்பு!

 

ராமச் செருப்பும்,

வெள்ளைச் செருப்பும்

தில்லிச் செருப்பும்

தமிழனின்

காலைக் கடிக்கும்

கள்ளச் செருப்பே!

எந்தச் செருப்பு

எங்களுக்குப் பொருந்தும் என்று

தமிழர்

நொந்து கிடந்த

நோய்க் காலத்தில்,

வந்த வைத்தியனே

ஈ.வெ. ராமசாமி.

....... ......... ...........

கடலூர் பணிமுடித்து

மணலூர் புறப்பட்டது

கருத்துச் சூரியன்

ஆளிழுக்கும் ரிக்ஷாவில்

அமர்ந்து,

தொடர்வண்டி நிலையம்

விரைந்தார்.

அப்போது -

வண்டியிலே, அவர்

காலுக்குப் பக்கத்தில்

தொப்பென்று வந்து

விழுந்தது ஒரு செருப்பு!

செத்த எலிபோல

வைதீகமே வந்து

வீழ்ந்தது போல

அதற்குள் வண்டி

முன்னேறிற்று கொஞ்சதூரம்

 

நிறுத்துப்பா மீண்டும்

பின்னாலே போ என்றார்

இழுக்கும் தோழனிடம் ஈ.வெ.ரா.

அப்படியே வண்டி பின்னோக்கிச் சென்றது.

தெருவின் புருவம்போல

மரங்கள் நின்றன, தெருவோரம்

மரங்களுக்குப் பின்னால் பார்த்து

மனிதர்த் தலைவர் சொன்னார்.

 

‘யாரப்பா அங்கே

ஒற்றைச் செருப்பை எறிந்தாய்?

ஒன்றைக் கொண்டு என்ன செய்ய?

நெஞ்சில் உரம் இருந்தால்

மீதி இருப்பதையும் போட்டுவிடு

மிதித்து நடக்க உதவும்.

எங்கே, எறி உன்

இரண்டாம் செருப்பை...’

புற்றுக்குள் பாம்புகள்

புகுந்து மறைவது போல

ராமன் வாரிசு

நகர்ந்து மறைந்தான்...

தமிழர், தலையில் சுமந்த

செருப்பை,

முதல் முதலாகக்

காலில்போட்டு மிதித்தது,

பெரியார் ஒருவரே!

- பிரபஞ்சன்

Pin It