“அனைவரையும் உள்ளடக்கிய சமூகக் கொள்கைகள் தமிழகத்தில் படிப்படியாக உருப்பெற்று வலுப்பெற்றுள்ளன என்பது குறைந்த அளவிலேயே அறியப்பட்டுள்ளது. ஆனால், இதன் முக்கியத்துவம் எந்த அளவிலும் குறைவானதல்ல. இதர பல மாநிலங்களைப் போல அல்லாமல், தமிழ்நாடு உயிரோட்டமுள்ள, திறன்மிகு சுகாதார மையங்களைக் கொண்டிருக்கிறது. சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இலவசமாக இங்கே சுகாதாரச் சேவைகளைப் பெற முடியும்.”

- அமர்த்தியா சென் (An Uncertain Glory: India and its Contradictions நூலிலிருந்து)

தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு, இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கையில் நடைபெறும் ஊழல்களைத் தடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) இந்த நுழைவுத் தேர்வை நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான அளவுகோலாக நிர்ணயிக்க முயற்சி செய்துவருகிறது. எனினும், கல்வி மற்றும் சமூக நீதிக்குத் தீங்கிழைக்கும் என்பதால், இந்தத் தேர்வு கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

நாடு முழுவதற்கும் இது பொருந்தும் என்றாலும் தமிழ்நாட்டுக்கு இழப்பு அதிகம். தமிழ்நாட்டில் பொதுச் சுகாதார அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதன் அடிப்படையையே நீட் தேர்வு தாக்குகிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி, சுகாதாரம் என்பது மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விஷயம். அதாவது, சுகாதாரம் மாநிலப் பட்டியலில் உள்ளது. மாநில அரசுகள் சுகாதார அமைப்புகளை உருவாக்கலாம் அல்லது நீக்கலாம். மாநிலத்தின் பொதுச் சுகாதாரத்துக்கான சட்டபூர்வமான மற்றும் நிர்வாக ரீதியான கட்டமைப்புகள் குறித்த பொதுச் சுகாதாரச் சட்டம் தமிழகத்தில் உள்ளது. இது பல்வேறு அரசு அமைப்புகளுக்கு, அவற்றுக்குத் தேவையான பட்ஜெட் ஒதுக்கீட்டுடன், நன்கு வரையறுக்கப்பட்ட பொறுப்புகளை வழங்குகிறது. இவை அனைத்தும் தீவிரமாகவும் கறாராகவும் செயல்படுத்தப்படுகின்றன. நீட் இந்தச் சட்டத்தின் அடிப்படையோடு முரண்படுகிறது.

பொதுச் சுகாதார நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களிடையேயான முறையான ஒருங்கிணைப்புதான் தமிழ்நாட்டின் பொதுச் சுகாதார நிர்வாகத்தின் வெற்றிக்குக் காரணம். இதற்கு வேறு பல குறிப்பிடத்தக்க காரணிகளும் உள்ளன. கடந்த நூற்றாண்டில் தமிழ்நாடு எதிர்கொண்ட சமூக இயக்கங்கள் தான் இப்படிப்பட்ட செயல்பாட்டுக்கான உண்மையான காரணம். தமிழகத்தில், ஆரம்ப சுகாதார மையங்கள் (பி.ஹெச்.சிக்கள்), சமுதாய சுகாதார மையங்கள் (சி.ஹெச்.சிக்கள்), மாவட்ட சுகாதார மையங்கள் (டி.ஹெச்.சிக்கள்) ஆகியவை அடங்கிய பரந்த ‘இணைப்புச் சங்கிலி’ உள்ளது. இத்தகைய அமைப்புகளில் பணி புரிவதற்கான ஊழியர்கள் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தில் இயங்கிவரும் சமூக இயக்கங்களின் செயல்பாடுகளால்தான் இப்படிப் பல சாதிகளைச் சேர்ந்தவர்களை அணிதிரட்ட முடிந்தது. சுகாதாரத்துறையில் இப்படிப் பரந்துபட்ட அமைப்பு இருப்பதால் மற்ற பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகம், சுகாதாரத்துறையில் ஒரு தனிநபருக்குச் செலவிடும் சராசரித் தொகை குறைவாக இருந்தாலும் அதன் பலன்கள் அதிகமாக இருக்கின்றன. ஆனால், நீட் என்ற ஒரே விஷயம், இம்மாநிலம் பல ஆண்டுகளாக பாடுபட்டுச் சாதித்துவந்ததை அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது.

சுகாதார விளைவுகள்

சமூக அணிதிரட்டல் முறையோடு இணைந்த படைப்பூக்கம் கொண்ட தொழில்நுட்பத் தலையீடுகள் காரணமாக, தமிழ்நாடு பெரும்பாலான சுகாதாரக் குறியீடு களில் மிக மிக நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. சமீபத்திய அரசு புள்ளி விவர அறிக்கை 2015இன்படி சுகாதார அமைப்பின் செயல்பாட்டின் முக்கிய அளவீடான சிசு இறப்பு விகிதம், நாட்டிலேயே மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளது. அதாவது, பிறக்கும் 1,000 குழந்தைகளுக்கு 19 குழந்தைகள் இறப்பு என்ற விகிதத்தில் உள்ளது. இதே விஷயத்தில் இந்தியா முழுவதும் சராசரி எண்ணிக்கை 1,000 குழந்தைகளில் 37 குழந்தைகள் இறப்பு என்ற விகிதத்தில் உள்ளது.

இதேபோல, தாய் இறப்பு விகிதமும் இங்கே குறைவு. ஓராண்டில் பிரசவ கால அல்லது கர்ப்ப கால மரணங்களும் இந்திய சராசரி அளவில் ஏறக்குறைய பாதி என்ற நிலையில் உள்ளது. நாட்டிலேயே மிகச் சிறந்த மகப்பேறு, குழந்தைப் பராமரிப்பு வழங்கும் அமைப்புகளில் ஒன்றாக இம்மாநிலம் விளங்குகிறது. தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்களில் 99ரூ பேர் மருத்துவமனைகளில் பிரசவிக்கின்றனர். இது நாட்டிலேயே மிக அதிக சதவிகிதம்.

அனைவரையும் உள்ளடக்கும் அணுகுமுறை

புதுமையானதும் ஊக்கமளிப்பதுமான கட்டமைப்புகள், இடஒதுக்கீட்டுக் கொள்கைகள் ஆகியவற்றின் மூலம், கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் பணிபுரிய முன்வரும் துடிப்பான பணியாளர்கள் அணியைத் தமிழகம் உருவாக்கியுள்ளது. இந்த அணி, சமூகத்தில் மிகவும் பின்தங்கியவர்கள், மிகவும் சிறு நகரங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட அனைத்துச் சாதிகளைச் சேர்ந்தவர்களையும் உள்ளடக்கியது. இதன் விளைவாகத் தமிழ்நாட் டின் சுகாதாரம் சார்ந்த பணிகளில் நலிவடைந்த சாதிகளைச் சேர்ந்தவர்களின் செயல்பாடு உயர் அடுக்குகளில் உள்ள சாதிகளைச் சேர்ந்தவர் களைவிட அதிகம். தேசிய அளவைவிடவும் இவ்விஷயத்தில் தமிழகம் முந்தியிருக்கிறது.

உதாரணமாக, தேசிய குடும்ப சுகாதார சர்வேயின் 3ஆவது அட்டவணை (2005-06), சாதிவாரியான சுகாதாரக் குறியீடுகளைக் கணக்கிட்டது. இதன்படி, தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட பிரிவினரில் (எஸ்.சி.க்கள்) ஐ.எம்.ஆர் விகிதமானது, 1,000 பிறப்புகளில் 37 இறப்பு என்பதாக உள்ளது. அகில இந்திய அளவில் இது 66. உத்தரப் பிரதேசத்தோடு ஒப்பிட்டால், அங்கே மேலடுக்குகளில் உள்ள சாதியினரின் (எஸ்.சி., ஓ.பி.சி அல்லாதோர்) ஐ.எம்.ஆரைவிட (71) தமிழகத்திலுள்ள தாழ்த்தப் பட்டவர்களின் (எஸ்.சி.க்கள்) ஐ.எம்.ஆர் விகிதம் குறைவு.

குழந்தைகளும் தாய்மார்களும்

குழந்தை நோய்த்தடுப்பு மற்றும் தாயின் கர்ப்ப காலப் பராமரிப்புக் குறியீடுகளிலும் உத்தரப்பிரதேசத்தில் மேலடுக்குகளில் உள்ள சாதிப் பிரிவினரைவிடத் தமிழ்நாட்டு நலிவடைந்த பிரிவினரின் நிலை மிகவும் மேம்பட்டதாக உள்ளது. தமிழ்நாட்டில் குழந்தை நோய்த் தடுப்பு விகிதம் 81ரூ. உத்தரப்பிரதேசத்தில் 23ரூ. தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்களில் 88 சதவிகிதம் பேர் சுகாதார மையங்களில் குழந்தைகளைப் பிரசவிக் கிறார்கள். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் இப்படிப்பட்ட மருத்துவ அமைப்புகளில் குழந்தை பெறும் பெண்களின் சதவிகிதம் வெறும் 21ரூ. பொதுவாக, தமிழ்நாட்டில் ‘தலித்’ மக்களுக்குச் சிறந்த மருத்துவ வசதிகள் (80ரூ) உள்ளன. இது உ.பியைவிட (15ரூ) மிக அதிகம். மேலும் அங்கு இதே வசதி பெறும் உயர் சாதியினரும் குறைவுதான் (21ரூ).

மகப்பேறின்போது தொழில்முறை சுகாதார ஊழியரின் (டாக்டர், நர்ஸ் அல்லது மருத்துவச்சி) உதவி கிடைக்கிறதா என்பது சுகாதாரத் துறையிலுள்ள இன்னொரு குறியீடு. தமிழ்நாட்டில் கர்ப்பமான பெண்களில் 91 சதவிகிதம் பேருக்கு மகப்பேறின்போது இப்படிப்பட்ட சுகாதார ஊழியர்களின் உதவி கிடைக்கிறது. ஆனால் உத்தரப்பிரதேசத்தில் வெறும் 27 சதவிகிதம் பேருக்குத்தான் இது கிடைக்கிறது. தமிழகத்தில் இந்த உதவியைப் பெறும் பட்டியலினப் பெண்கள் 82 சதவிகிதம். உயர் சாதிப் பிரிவினரிடையேயும் உ.பியில் இது வெறும் 40ரூ தான். அங்கு இந்த வசதியைப் பெறும் தலித் பெண்கள் சதவிகிதம் வெறும் 20 தான்.

ஆக, மருத்துவத்துறையில் இப்படிப்பட்ட அனைத்துக் குறியீடுகளிலும் அனைத்துப் பிரிவினரிடையேயும் தமிழ்நாட்டின் நிலை பல மாநிலங்களைக் காட்டிலும் மிகவும் சிறப்பாகவே உள்ளது. படைப்பூக்கம் மிகுந்த, ஊக்கமளிக்கும் கட்டமைப்புகள், சமூக நீதிக் கொள்கைகள் ஆகியவற்றின் விளைவாகவே இவையெல்லாம் சாத்தியமாகியிருக்கின்றன. இவற்றின் மூலம் தமிழ்நாடு ஒப்பீட்டளவில் சமூக ரீதியில் வெவ்வேறு பிரிவினரிடையே சமமான முன்னேற்றத்தை உறுதி செய்துள்ளது.

இது தமிழ்நாட்டில் எப்படிச் சாத்தியமானது?

பொது சுகாதாரத்தில் தமிழ்நாடு செலவழிக்கும் அளவைவிட அது செயல்படும் விதமும் செயல்திறனும்தான் இதன் வெற்றிக்கு முக்கியக் காரணம். தமிழகம், சுகாதாரத்துக்காக நீண்ட காலமாகத் தொடர்ந்து செலவு செய்து வருகிறது அகில இந்திய அளவைவிட தமிழ்நாட்டின் சராசரி தனிநபர் சுகாதாரச் செலவு அதிகம்தான். உதாரணமாக, 2013-14ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சுகாதாரக் கணக்கு அறிக்கையின்படி சராசரி தனிநபர் சுகாதாரச் செலவு ரூ.1,254. இதற்கான அகில இந்திய சராசரி ரூ.1,042.

ஹரியானா போன்ற மாநிலங்கள் சுகாதாரத்துக்காக அதிகம் செலவழிக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டின் மருத்துவத் துறை இவற்றைவிட மிகச் சிறப்பாக செயல்படுவதாக அமர்த்தியா போன்ற ஆய்வாளர்கள் தங்கள் நூலில் குறிப்பிடுகிறார்கள். தமிழகத்தின் சுகாதாரச் சேவைகள் மேம்பட்ட சுகாதாரத்தை ஏற்படுத்துவதையே இது காட்டுகிறது. பயன்பாட்டு முறைகள், அரசு சுகாதாரச் சேவைகளை மக்கள் பெறுவதற்கான வசதிகள் ஆகியவைதான் விளைவுகளை முடிவு செய்வதில் முக்கியப் பங்களிப்பை வழங்குகின்றன.

தொழில்முறைக் கல்வியில் தமிழ்நாடு நடைமுறைப்படுத்திவரும் இடஒதுக்கீடு கொள்கைகளால் அனைத்துப் பிரிவுகளி லிருந்தும் நிறைய டாக்டர்கள் உருவாவதைச் சாத்தியமாக்கியுள்ளது. இதுதான் சுகாதாரச் சேவைகளை அனைத்து சமூகத்தினரும் அணுகுவதையும், பெறுவதையும் உறுதி செய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது. அதேநேரத்தில், மாநிலம் அரசு சுகாதார உள்கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும், ஆரம்ப மற்றும் மூன்றாம் நிலை சுகாதார வசதிகளை அனைவருக்கும் வழங்கு வதற்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கைகளை வகுத்துள்ளது.

“சுகாதாரப் பணிகளுக்கான மாநில திட்டமிடல் கமிஷனை மால்கம் ஆதிசேஷையா தலைமையில் முதன்முதலில் அமைத்தது தமிழ்நாடுதான். இது ஆரோக்கிய சேவைகள், மருத்துவக்கல்வி, குடும்பக்கட்டுப்பாடு, ஊட்டச் சத்து, சுகாதாரம், தன்னார்வ அமைப்புகளின் பங்கு, ஹோமியோபதி உள்ளிட்ட உள்நாட்டு மருந்துகள் குறித்த பிரச்னைகளை ஆழமாக ஆராய்வதற்கான கமிஷன் இது” என சாரா ஹாட்ஜஸ் என்னும் ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.

இவற்றுடன், தமிழக அரசு 22 மருத்துவக் கல்லூரிகளைக் கட்டியுள்ளது, இது நாட்டில் உள்ள மொத்த மருத்துவக் கல்லூரிகளில் 11.9ரூ இதில் தமிழகத்துக்கு அடுத்த நிலையில் மகாராஷ்டிரா உள்ளது (10.8ரூ). இந்தியாவில் மொத்த மருத்துவக் கல்லூரி இடங்களிலும் தமிழ்நாட்டின் பங்கு (11.1ரூ) அதிகம்தான்.

தமிழக அரசு, கிராமப்புற சுகாதார அமைப்பில் மருத்துவர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான புதுமையான, ஊக்கமளிக்கும் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது. இதுதான் மருத்துவ அதிகாரிகள் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் பணிபுரிவதற்கு ஆர்வத்துடன் முன்வருவதற்கான காரணம். இந்த ஆரம்ப சுகாதார மையங்கள் மற்ற மாநிலங்களை விட அதிக வசதிகளுடன் உள்ளன. மாவட்ட மருத்துவமனைகள் அல்லது ஆரம்ப சுகாதார மையங்களில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு மருத்து வத்தின் அனைத்துக் கிளைகள் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கல்விக்கான முதுநிலைப் பட்டப்படிப்பில் சேர்க்கையின்போதே மருத்துவப் பணிகளில் ஒதுக்கீடு வழங்கும் ஏற்பாடு இருப்பது, அவர்களுக்கு ஊக்கமளிக்கும் மற்றொரு முக்கிய அம்சம்.

மாநிலத்தில் அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமல்லாமல் தனியார் கல்லூரிகளிலும்கூட முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கு இன்-சர்வீஸ் ஒதுக்கீடு 50ரூ வழங்கியுள்ளது. மேலும், மாநில சுகாதார அமைப்புக்குள் மருத்துவர்களைத் தக்கவைத்துக் கொள்வதை உறுதி செய்வதற்காக இந்த ஒதுக்கீடு மூலம் முதுநிலைப் படிப்பை (எம்.டி./எம்.எஸ்) முடித்தவர்கள் அரசு மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் பத்தாண்டுகளாவது பணியாற்ற வேண்டும் என்னும் நிபந்தனையும் உள்ளது. மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கையில் பின்பற்றப்படும் இந்த ஊக்கமளிப்பு, நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் கிராமப் புறங்களில் பணியாற்றுவதை உறுதிசெய்கிறது.

உதாரணமாக, கடந்த ஆண்டு, இன்-சர்வீஸ் ஒதுக்கீடு மூலம் அரசு கல்லூரிகளில் படிப்பை முடித்த (நீட் தேர்வுக்கு முன்பு) குறைந்தபட்சம் 300 (மாநில ஒதுக்கீட்டில் 50 சதவிகிதம்) எம்.டி./எம்.எஸ். மருத்துவர்கள், கிராமப்புற சுகாதார அமைப்பில் பணிபுரி கிறார்கள். தனியார் பள்ளிகளில் உள்ள அரசு சீட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். அனைத்து சூப்பர் ஸ்பெஷாலிட்டி டி.எம்./எம்.சி.ஹெச். பாடங்களுக்கும் இதேபோன்ற ஊக்கமளிக்கும் கட்டமைப்புகள் தமிழகத்தில் உள்ளன. இவை சமூக நலன்களை உள்ளடக்கிய சுகாதார விளைவுகளை உருவாக்குவதற்கான திறன் மிக்க சாதனமாக இருந்து வருபவை. இவற்றையெல்லாம் இப்போது நீட் செய லிழக்கச் செய்யும்.

மருத்துவம் கார்ப்பரேட்மயமாதல்

நீட் தேர்வு மருத்துவ அமைப்பு முறையை கார்ப்பரேட்மயமாக்குவதற்கும் வழிவகுக்கிறது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவ வசதிகள் சிறப்பானதாக இருந்தாலும்கூட, சமீப காலங்களில் தனியார்மயமாக்கலுக்கு இந்த மாநிலம் இடமளித்து வருகிறது. கார்ப்பரேட் மருத்துவமனைகள் மருத்துவக் களத்தில் பெருமளவில் இறங்கியுள்ளன. தமிழகத்தில் கார்ப்பரேட் மருத்துவமனைகள் அதிகரிப்பதற்கு நீட் தேர்வும் கூடுதல் வாய்ப்பாக அமைந்துள்ளது. பெருநகரங்களில் செயல்படும் பயிற்சி மையங்கள் மூலம் பயில்வதற்காக நீட் தேர்வில் வெற்றிபெற விரும்புவோர் பெருமளவு பணத்தைச் செலவழித்து அப்போலோ போன்ற உலகத்தரம் வாய்ந்த கார்ப்பரேட் மருத்துவமனை கனவு காணும் நிலையில்,

நீட் தேர்வில் வெற்றிபெற முடியாமல், தற்கொலை செய்துகொண்ட அனிதா போன்ற மாணவ-மாணவிகள், மருத்துவக் களத்திலிருந்து வெளியேற்றப்படுவது தொடர் கதையாகும்.

பொது சுகாதாரத்துக்கு நீட் என்ன செய்யும்?

தமிழ்நாட்டில் மருத்துவத் துறையில் எட்டப்பட்டுள்ள அனைத்து சாதனைகளையும் நீட் தேர்வு தலைகீழாக புரட்டிப்போட்டுவிடும். மருத்துவம் மற்றும் பன்னோக்கு சிறப்பு மருத்துவக் கல்வி பயில்வதற்காகக் கல்லூரிகளில் சேர இத்தனை ஆண்டுகளாகக் கட்டமைக்கப் பட்டு வந்து, மருத்துவர்களை உருவாக்கிய வழிமுறை இப்போது சீர்குலையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த சமூகப் பொறுப்புணர்வு உள்ள மருத்துவ அலுவலர் களின் ஆதரவு இல்லாமல் போய்விட்டால், மருத்துவத் துறையில் அரசின் முதலீட்டுக்கும் இடமில்லாமல் போய்விடும்.

கட்டுரையாளர்: சென்னை வளர்ச்சி ஆய்வு மய்யப் பேராசிரியர்

Pin It