மலைப்பகுதிதான் கதைக் களம் என்பதால் அதன் இயற்கை அழகுகளை மட்டும் காட்சிப்படுத்த வில்லை. அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் டீக்கடை, அதில் கணவன் மனைவிக்குள் நடக்கும் சண்டை, கடை திறந்தவுடன் முதன் முதலாக கடனுக்கு டீ கேட்பவர்கள், அவர்களுடன் சண்டை, தரைப்பகுதி யிலிருந்து ஃபாரஸ்ட் பவுண்ட் கல்லைத்தாண்டி, மலைக்கு நடந்துசெல்லும் ஒத்தையடிப் பாதைகள், கழுதைப்பாதைகள், குதிரைப்பாதைகள், காய்ந்து போன போதைப்புல் காடுகள் மலை ஏறும் பாதையில் சிலையே இல்லாத சிறுதெய்வத்தின் கோயில். நடுக்காட்டின் டீக்கடை, பால் இல்லாத கட்டஞ்சாயா, மலைப்பகுதியில் ஒருவருக்கொருவர் உரத்த குரலில் தொடர்பு கொள்ளும் முறை, மனநலம் பாதிக்கப்பட்ட பெண், பல ஆண்டுகளாகத் தண்ணி வாடையே பார்க்காத கம்பளியைத் தோளில் போட்டுக்கொண்டு செல்லும் மனிதர்கள், எழவுக்கு தகவல் சொல்லச் செல்பவர்கள், ஏலக்காடுகளில் இரவு நேரத் திருட்டுக்கள், இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகள், கள் குடிப்பது, வானம் பார்த்த பூமிகள், அவற்றை நம்பியுள்ள மனிதர்கள், இளைஞர்களுடன் வீம்பு பிடித்து உடல் உறுதியைச் சோதிக்கும் பெருசுகள், இருங்குச் சோளக்காடு எனபல காட்சிகள் நம்மை 1980க்குக் கொண்டுசெல்கின்றன.
முக்கியமாக, இளம் வயதுக்காரர்களுக்கு இணையாக ஏல மூட்டையைத் தூக்கிக் கொண்டு நடந்து கொண்டே, “அந்தக் காலத்திலே நானெல்லாம்” என்று இடை விடாமல் 5 நிமிடம் பேசிக் கொண்டு செல்லும் அந்தப் பெரியவர்….அந்தக் காட்சிக்காகவே இன்னொருமுறை பார்க்கலாம்.
தேக்கடியிலிருந்து நெடுமங்கண்டம் வழியாக மலைப்பாதையிலேயே மூணார் செல்லும் சாலை யானது மிகவும் அழகானது. பூப்பாறை வரையில் அந்தச்சாலையின் இருபுறமும், அழிக்கப்படாத 50 சதவீதப் பரப்புக்கு மேல் பணப்பயிர்கள் இல்லாத உண்மையான காடுகளைப் பார்க்கலாம். அந்தப் பகுதிகள் தான் கதைக்களம். (அந்தச் சாலைக்குக் கீழே தான் நியூட்ரினோ திட்டம் செயல்படஉள்ளது)
அங்குள்ள ஏலத்தோட்டங்களில் சுரண்டப் படும் அனைத்து ஜாதிகளையும் சேர்ந்த தொழிலாளர் களோடு இரண்டு மணிநேரம் வாழ்ந்து விட்டு வந்த மனநிலையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் தோழர் லெனின்பாரதி.
இப்படத்தில் வரும் நூற்றுக்கணக்காக கேரக்டர்கள் திண்டுக்கல், தேவாரம், பண்ணைப்புரம் பகுதிகளிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களது சொந்தக் குரலிலேயே நடிக்க வைக்கப்பட்டிருக் கிறார்கள். கதாநாயகன் ஆண்டனியை ரங்கசாமி என்றே அழைக்கலாம். அவரும் திண்டுக்கல்காரராம். சரியான வாய்ப்புகள் கிடைத்தால் இவரும் விஜய்சேதுபதி போல உயரலாம்.
இந்தப்படம் ஜாதிஒழிப்பையோ, பெண் விடுதலையையோ, பகுத்தறிவையோ பேசவில்லை. நிலமில்லாத அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மிக இயல்பாகப் பதிவு செய்துள்ளது. இந்தப்படத்தில் பல காட்சிகளில் நமக்கு மாறுபட்ட கருத்து உண்டு. குலதெய்வம், மலைக்கிராமங்களில் வாழ்பவர்களிடையே உள்ள மூடநம்பிக்கைகள், இயற்கை விவசாயம், சில இடங்களில் தேவர் குடும்பங்களின் ஜாதிப் பெயர்கள் (எ.கா. வீரணன்) என வருகின்றன. ஆனால், அந்த விசயங்கள் கதைக்களத்தின் உண்மை நிலையை விளக்குவதாகத் தோழர் எண்ணியிருக்கலாம். நிச்சயமாகப் படத்தின் நோக்கம் நிலமற்ற ஏழைகளின் வாழ்க்கை நிலையைக் காட்டுவதுதான் என்பதால், அவற்றை மறந்து, பாராட்டலாம். யதார்த்த சினிமா என்பதற்கு மாறாக சில காட்சிகளும் உள்ளன. அதாவது, படத்தின் பெரும்பாலான கேரக்டர்கள் ரொம்ப ரொம்ப நல்லவர்களாக மட்டுமே காட்டப்பட்டுள்ளது. ஓரிருவரைத் தவிர உழைப்பாளிகள், கிராமத்துக்காரர்கள் அனைவருமே நல்லவர்கள் என்பது போலக் காட்டுவது யதார்த்தமாக இல்லை.