‘காட்டாறு ஏடு’ நான்காம் ஆண்டில் நுழைகிறது. எமது நோக்கம் இதழ் நடத்துவது அல்ல; பெரியாரியலைப் பரப்புவது. நாம் தொடங்கிய நேரத்தில் வலைப்பூக்களும், சமூக வலைத்தளங்களும் கருத்துப்பரப்பலில் பெரும் இடத்தைப் பிடித்திருந்தன. இருந்தாலும் அச்சு ஊடகத்தில் ‘காட்டாறு’ போன்ற ஒரு இதழுக்குத் தேவை உள்ளது என்று கருதி அச்சுஇதழாகத் தொடங்கினோம். அதே நேரத்தில் சமூக வலைத்தளங்கள், இணைய தளம், மொபைல் ஆப்ஸ் என அனைத்து வடிவங்களிலும் காட்டாறு பரவியது.

‘காட்டாறு’ அச்சு இதழைப் படிப்பவர்களின் எண்ணிக்கையைவிட இணையத்திலும், மொபைல் ஆப்ஸிலும் படிப்பவர்கள் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. எனவே, பெரும் செலவு பிடிக்கும் அச்சு இதழை நிறுத்திவிடலாம் என எண்ணி, அதற்காக ஒரு கருத்துக்கணிப்பை நடத்தினோம்.

80 சதம் வாசகர்கள் அச்சு இதழ் அவசியம். காலத்திற்கேற்ப மாறுவதும் அவசியம் என இரண்டு கருத்துக்களையும் கூறினர். அச்சு இதழை மட்டும் பரிந்துரைத்தவர்கள் பெரும்பாலும் 40 வயதைக் கடந்தவர்களாகவும் ஏதோ ஒரு அமைப்பில் இயங்குபவர்களாகவும் இருக்கிறார்கள். நமது இலக்கு 30 வயதுக்கும் கீழானவர்கள் மட்டுமே. அந்த இளந்தலைமுறை இணையமும், செயலியும், இணையத் தொலைக்காட்சிகளும் தான் மிகவும் அவசியம் என்று தெரிவித்தினர்.

எனவே, வருங்காலத்தில், இணையத்திற்கும், செயலிக்கும், இணையத் தொலைக்காட்சிக்கும் முக்கியத்துவம் அளிப்பது. காலப்போக்கில், தேவையைப் பொறுத்து, மெது மெதுவாக அச்சு இதழைக் குறைத்துக்கொள்வது அல்லது நிறுத்துவது என முடிவு செய்தோம்.

ஆரியப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளப் பாடுபடும் அமைப்புகள் - ‘யூ ட்யூப் சேனல்’ என்ற நிலையில் இருந்து, அனிமேஷன் வீடியோக்கள், கேம்கள் என்ற நிலைக்கு உயர்ந்து விட்டனர். நாம் இன்னும் எழுத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். இந்நிலை எமக்கு மிகப்பெரும் குற்ற உணர்ச்சியையும் - இயலாமை உணர்வையும் - வெட்கத்தையும் உண்டாக்கியுள்ளன. எதிரிகள் ஏவுகணைத் தாக்குதலில் இறங்கிவிட்ட பிறகும், நாம் இன்னும் கவண் கல்லில் எதிர்த்தாக்குதல் நடத்துவதைப் போல உணருகிறோம்.

அச்சு ஊடகத்தில், தட்டச்சு செய்வது தொடங்கி, லே அவுட், அச்சகம் என அனைத்திலும் நமது ஆதரவாளர்களும் நண்பர்களும் ஏராளமாக உள்ளனர். அதனால் காட்டாறு போன்ற இதழ்களை நடத்துவது எளிதாக இருக்கிறது. ஆனால் அனிமேஷன் படங்களை உருவாக்க ஒட்டுமொத்த திராவிடர் இயக்கங்கள் எவற்றிலும் தொழில்நுட்பம் அறிந்தவர்கள் இல்லை என்றே கூறலாம்.

நமது போராட்டம் பழைமையான கருவிகளை மட்டுமே நம்பி நடக்கிறது. காலத்திற்கேற்ற பரப்புரைக் கருவிகளை நாமும் இயக்க வேண்டும். அதற்குரிய தொழில் நுட்பப் பயிற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், எவ்வளவு உயர்ந்த தத்துவமானாலும் மக்களைச் சென்று சேராது. நமது அடுத்தகட்டப் பாய்ச்சலுக்கு, பெரும் பொருளாதாரம்கூடத் தேவைப்படாது. தொழில்நுட்ப அறிவு தான் தேவை.

20 ஆண்டுகளுக்கு முன்பு நமது இயக்கங்களில் தமிழ் தட்டச்சு செய்யத் தெரிந்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இன்று கணினியிலும், மொபைல் ஃபோன்களிலும் தட்டச்சு செய்யத் தெரியாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்த மாற்றம் தான் நமது பரப்புரைக்குப் பெரும் பலமாக உள்ளது. அதுபோல, இன்றைய தேவை இணையத் தொலைக்காட்சிகளும், அனிமேஷன் வீடியோக்களும், அனிமேஷன் விளையாட்டுக்களும் தான். இவற்றுக்குரிய தொழில்நுட்பப் பயிற்சிகளைப் பெற்று நம்மைத் தகவமைத்துக் கொள்ளாவிட்டால், அது இந்தச் சமுதாயத்திற்கு நாம் இழைக்கும் மாபெரும் துரோகம் ஆகும்.

காட்டாறு உறுதியாக அடுத்தகட்டத்திற்குச் செல்லும். இதுவரை காட்டாறு ஏட்டிற்கு ஆதரவளித்த அனைவருக்கும் மிக்க நன்றி. எமது அடுத்தடுத்த முயற்சிகளுக்கும் வழக்கமான தங்களது பேராதரவு கிடக்கும் என நம்பிப் பணியைத் தொடர்கிறோம். நன்றி.

Pin It