இந்து மத சாஸ்திரங்களும், சம்பிரதாயங்களும் அந்த மதத்தைப் பின்பற்றும் மக்களுக்கு ஏராளமான பண்டிகைகளையும், விழாக்களையும் திணித்துள்ளன. எல்லா மதங்களுமே தம்மைப் பின்பற்றும் மக்களுக்கு விழாக்களை எழுதாத சட்டங்களாக நடைமுறைப்படுத்துகின்றன. ஆனால் முற்போக்கு அமைப்புகளில் உள்ள தோழர்கள், எந்த அமைப்பிலுமே இல்லாவிட்டாலும் பகுத்தறிவாளர்களாக வாழும் தோழர்கள் அனைவருக்கும் இந்த விழாக்கள் ஒருபெரும் சிக்கலாக உள்ளன.

பக்கத்து வீடுகளைப் பார்த்து நமது குழந்தைகளும் புதிய ஆடை கேட்பார்கள். இனிப்புகள் கேட்பார்கள். பட்டாசு வெடிக்க வேண்டும் என்பார்கள். கிறிஸ்மஸ் நட்சத்திரம் கேட்கிறார்கள். நாம் அவர்களின் சின்னச் சின்ன ஆசைகளை மிரட்டி அடக்கிவிடுகிறோம். அல்லது குழந்தைகளின் மீதான பாசத்தில், இந்த மதவிழாக்களைக் கொண்டாட அனுமதிக்கிறோம்.

அறிவுக்குப் பொருந்தாத, மதச்சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் நாம் மத விழாக்களைக் கொண்டாடாமல் இருப்பது சரியானது. ஆனால் அதற்காக விழாக்களே இல்லாமல், எந்திரத்தனமாக வாழவேண்டும் என்பதும் மிகமிகத் தவறு. மதவிழாக்களுக்கு மாற்றாக, காதலர் நாள் விழா, மேதின விழா போன்றவற்றை நம் இல்ல விழாக்களாகக் கொண்டாடத் தொடங்கலாம். பெரியார், அம்பேத்கர், ஜோதிபா பூலே, சாகுமகராஜ், காமராசர், டி.எம்.நாயர் மற்றும் திராவிடர் இயக்கத் தலைவர்களின் பிறந்த நாட்களைக் கொண்டாடலாம்.

விழா என்றால் அன்றைய நாளில் பொதுக்கூட்டம் போடுவதோ, மேடை போட்டுக் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதோ, மைக்கைப் பிடித்துக் கருத்துச் சொல்லிக் கொண்டிருப்பதோ அல்ல. அவை அமைப்பு நடவடிக்கைகள். அவற்றை அமைப்புகள் நடத்திக்கொள்ளட்டும். அதில் தவறில்லை. அதேசமயம், இல்லங்களில் மதவிழாக்களுக்கு ஒரு மாற்றை முன்வைக்க வேண்டும் என்பதை ‘விடுதலைவெளி’ வலியுறுத்துகிறது. முதல்கட்டமாக, காதலர்நாள் மற்றும் பெரியார் பிறந்த நாளை நமது இல்லவிழாக்களாக அறிவிக்கிறது.

ஜாதியச் சமூகத்திடம் கற்கவேண்டியவை

இரத்த உறவுகளுக்கு மாற்றாக - கொள்கை உறவுகளை மேலும் மேலும் மேம்படுத்த - நமது குடும்பங்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டே செல்லவேண்டும். குடும்பவிழாக்களில் நம் குடும்பங்கள் இணைந்து ஒரு நேரம் ஒன்றாக சாப்பிட்டுவிட்டுச் செல்வதால் மட்டும் ஜாதி கடந்த உறவுகள் உருவாகி விடாது.

சில மகளிர் சுயஉதவிக்குழுக்கள் வருடத்திற்கு ஒருமுறை நாமக்கல் மாவட்டம் கொல்லி மலைக்குச் சுற்றுலா செல்கிறார்கள். வீட்டிற்கு ஒரு வருடத்திற்குத் தேவையான சோம்பு, சீரகம், வெந்தயம், மிளகு, கசகசா, ஏலக்காய், பட்டை, கொத்தமல்லி, கிராம்பு போன்ற நறுமணப்பொருட்களை வாங்கிச் சேமித்துக் கொள்கிறார்கள். நாடார் ஜாதியில் சில உறவின்முறைச் சொந்தங்கள் ஒன்றிணைந்து, வருடத்திற்குத் தேவையான அரிசியை மொத்தமாகக் கொள்முதல் செய்து அடக்க விலையில் தமது மக்களுக்குப் பிரித்தளிப்பார்கள். இவைபோல, ஜாதி உறவுகளின் செயல்பாடுகள் பல உள்ளன.

ஜாதி உறவுகள் கடைபிடிக்கும் பல பண்பாட்டு நடவடிக்கைகளை நாமும் மேற்கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிதான் இந்தப் பயணம். இப்படிப்பட்ட சந்திப்புகள், பயணங்கள், ஒருங்கிணைப்புகளில் குடும்பங்களுக்கிடையே உரசல்கள் வரலாம். ஒருவருக்கொருவர் கருத்து முரண்பாடுகள் வரலாம். அவை உருவாவது இயல்புதான். ஜாதி உறவுகளுக்குள் வராத முரண்பாடுகளா? ஒரு ஜாதிக்குள்ளேயே எவ்வளவு வெட்டு, குத்துக்கள் நடைபெறுகின்றன? ஒரு சில குடும்பங்களுக்கு இடையே நடக்கும் சண்டைகள் ஒரு கிராமத்தையே - ஒரு நகரத்தையே நிலைகுலைய வைக்கும் நிகழ்வுகளை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், தன் ஜாதிக்கொரு இழுக்கென்றால் சண்டை போட்டுக் கொள்ளும் குடும்பங்கள் அனைத்தும் ஒன்றுசேர்கின்றன. மாற்று ஜாதியோடு சண்டைபோட ஒன்றாக இணைகின்றன.

ஜாதி உறவுகளுக்கு மாற்றாகக் கொள்கை உறவுகள் உருவாக வேண்டும் என்று எண்ணுபவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இவை. அமைப்புகளைக் கடந்து, அனைவரும் ஒரு சமுதாயமாக ஒன்றிணைய வேண்டும் என்பது நமது ஆவல். முதற்கட்டமாக, அமைப்புகளுக்கு உள்ளேயே, ஆண்கள் மட்டுமே சந்தித்துக்கொள்ளும் புள்ளிகளுக்கு இணையாக - குடும்பங்களாகச் சந்தித்துக் கொள்ளும் புள்ளிகளை அதிகப்படுத்தவேண்டும்.

மிக அவசியமாக, திராவிடர் இயக்கங்கள் அந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இயக்கக் குடும்பங்கள், இரத்த உறவுகளுக்கு மாற்றாக கொள்கை உறவுகளாக மாற வேண்டும். சமூக வலைத்தளங்களில் இயங்கும் வெவ்வேறு திராவிடர் இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் தற்போது நட்பாகி வருகின்றனர். வரவேற்கத் தக்க மாற்றம் இது. இந்த உறவுகள் மேலும் குடும்ப உறவுகளாக உயரவேண்டும்.

விழாக்களும் வணிகமும்

முன்னேறிய நாடுகளில் கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டித்தான் வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்குகிறார்கள். ஆகையால் தான் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்மஸ் காலங்களில் எலக்ட்ரானிக்ஸ், ஹோம் அப்ளையன்ஸ், கணினிகள், செல்ஃபோன்கள், ஆடைகள் போன்ற அனைத்துப் பொருட்களுக்கும் ஏராளமான தள்ளுபடிகள் அறிவிக்கப்படுகின்றன. அந்தப் பண்பாட்டைப் பின்பற்றித்தான் இந்தியாவிலும் இந்துமத விழாக்களின் காலத்தில் தள்ளுபடிகளும், அதிரடி விலைக் குறைப்புக்களும், சலுகைகளும் அறிவிக்கப்படுகின்றன. அதனால், பெரும்பான்மை மக்கள் - ஏன் பகுத்தறிவாளர்களும்கூட வேறு வழியின்றி இந்து மதம் கட்டளையிடும் நாளில்தான் வீட்டிற்குத் தேவையான துணிகளை, பொருட்களை வாங்கவேண்டிய நிலையில் இருக்கிறோம்.

இயற்கை வாழ்வு, இயற்கை விவசாயம், இயற்கை உணவு, சிறுதானிய உணவு, பேலியோ உணவு என எந்த பண்பாட்டுமுறையை எடுத்துக் கொண்டாலும் அவை வணிகத்தோடு பிண்ணிப் பிணைந்துதான் உருவெடுக்கின்றன. தமிழ்த்தேசிய மாநாடுகள், மார்க்சிய - லெனினியக் குழுக்களின் புரட்சிகர மாநாடுகளில்கூடமாற்று உணவுப்பொருட்களின் விற்பனை - மாற்றுப் பண்பாடு தொடர்பான வணிகங்கள் நடைபெறுகின்றன.

அந்தப் பண்பாட்டின் வரிசையில், பிப்ரவரி 14 ல் வரும் காதலர் நாளில், புத்தாடைகள் உடுத்துவோம். இனிப்புகளுக்குப் பதிலாக ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன்களைச் சமைத்து, பக்கத்து வீடுகளுக்கு அன்பளிப்பாக வழங்குவோம். இந்துப் பண்டிகை என்றால் ஸ்வீட், கிறிஸ்தவர்கள் விழா என்றால் கேக், இஸ்லாமிய விழா என்றால் பிரியாணி என்பது போல, திராவிடர் விழா என்றால் அன்றைய நாளில் இறைச்சிகளைப் பறிமாறுவோம். அப்படி ஒரு அடையாளத்தை உருவாக்குவோம். தேவைப்பட்டால், இந்த விழாவை ஏன் கொண்டாடுகிறோம்? என்பதை 10 வரிகளுக்குள் ஒரு வாழ்த்து அட்டைபோலத் தயாரித்து இறைச்சிகளோடு வழங்கலாம்.

நமது குழந்தைகளுக்கும், நமக்கும் பிப்ரவரி 14, செப்டம்பர் 17 ஆகிய நாட்களை மய்யமாக வைத்து புதிய ஆடைகள் வாங்கலாம். ஆலோசனைச் சொல்வதோடு மட்டுமல்லாமல் செயலிலும் இறங்குகிறது ‘விடுதலை வெளி’. ஆம். 14.02.2017 ல் கொண்டாட உள்ள காதலர் நாள் விழாவுக்குப் புதிய ஆடைகள் வாங்க ஒரு சுற்றுலாவை அறிமுகப்படுத்துகிறது.

ஜனவரி முதல் வாரத்தில், பெங்களூர் நகரத்திற்குச் சுற்றுலாவாகச் சென்று புதிய ஆடைகள் வாங்கிவரத் திட்டமிட்டுள்ளோம். விலை மலிவாக அனைத்து வகையான ஆடைகளும் வாங்க பெங்களூர் சரியான இடம் எனப் பலரும் தெரிவித்ததால் அங்கு செல்கிறோம். நமக்கு அருகிலேயே தமிழ்நாட்டிலேயே மாற்று நகரங்கள் இருந்தால் தெரிவியுங்கள். போக்குவரத்துச் செலவுகளைக் குறைத்துவிடலாம். இப்போதே அதற்கான செலவுகளுக்குத் திட்டமிடுங்கள். தீபாவளி, பொங்கலுக்கு புதிய ஆடை வேண்டும் என்று விரும்பும் குழந்தைகளுக்கு நமது விழா என்று ஒன்று வருகிறது, அப்போது வாங்கலாம் என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்லிப் புரிய வையுங்கள்.

ஜனவரி 7, 8 சனி, ஞாயிறில் சுற்றுலா முடிவு செய்யப்பட்டுள்ளது. வர விரும்புபவர்கள் முன்கூட்டிய பெயரைப் பதிவு செய்து கொள்ளுங்கள். தங்குமிடம், உணவு, போக்குவரத்துச் செலவுகளைத் திட்டமிட வேண்டியுள்ளது. எந்த இயக்கத்தில் பணியாற்றினாலும் சரி, எந்த இயக்கத்திலுமே இல்லாவிட்டாலும் சரி காதலர்நாளைக் கொண்டாட விரும்புபவர்கள் இந்தப் பயணத்தில் இணையலாம். அல்லது தங்கள் அமைப்புகள் சார்பிலும் இதுபோல இல்லங்களில் விழாக்களை நடத்தலாம். சுற்றுலாக்களை முன்னெடுக்கலாம்.

மதவிழாக்களுக்கு எதிராக நாமும் நமது விழாக்களின் அடிப்படையில் நுகர்வு வெறியை வளர்க்க வேண்டும் என்பற்காக நாம் எதையும் முன்னெடுக்கவில்லை. மதவிழாக்களுக்கு முற்றிலும் மாற்றாக - மதக்கட்டளைகளுக்கு எதிராக - நமக்கு அவசியமானவற்றை மட்டுமே நம் விழாக்களில் வாங்க வேண்டும். நமது இல்லங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதோ, ஆடைகள் வாங்குவதோ, இந்த நாட்களில் மட்டும் என்று முடிவெடுத்து வாங்கவேண்டும். அவசியமே இல்லாமல் - நுகர்வு வெறிக்காக - ஆடைகள், பொருட்கள் வாங்கிக்குவிக்கக் கூடுதலாக இதுவும் ஒருநாள் என்று நினைப்பவர்களுக்கு இப்பயணத்தில் அனுமதி இல்லை. பயணத்திற்கு வர விரும்புவர்கள் தொடர்பு கொள்ள வேண்டி எண்கள்: திருப்பூர் வேணி 77084 58086, தாராபுரம் பூங்கொடி 95006 70620

Pin It