ஒவ்வொரு முறையும் சமையல் செய்யும் போதெல்லாம் பல கேள்விகளுட னேயே உள்ளே நுழைவதாய்ப் பல தோழர்கள் என்னிடம் பகிர்ந்ததுண்டு. நானும் அப்படியே. ஒருமுறை அம்மா சொன்னார், யாராவது செய்து கொடுத்து அதை ருசித்துச் சாப்பிட வேண்டும் என எனக்குமே அப்படித் தோன்றி இருக்கிறது. எந்தக் காலம் ஆயினும் பெண்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயத் துடனேயே தன் வாழ்க்கையை நகர்த்த வேண்டி இருக்கிறது.

மேற்குறிப்பிட்ட அத்தனை கோரிக்கைகளும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது. சமையல் செய்து கொண்டே வீட்டைப் பராமரிப்பது, குழந்தை களைக் கவனிப்பது என பலதும் செய்ய வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு. அதே நேரத்தில் பெண்கள் தினத்திற்காக அவளை பெருமைப்படுத்துகிறேன் என்கிற பெயரில் பெண் என்பவள் மல்டி டேலண்ட் என்கிற ஒரு எலும்புத் துண்டு வார்த்தை வேறு...

இந்தக் குடும்பம், குழந்தை, அழகுசார் கட்டமைப்பு, பாகுபாடு என எல்லாமும் அவளை ஒடுக்குவதை அறியாமல் இருக்கவே அல்லது அதை உணராமல் இருக்கவே இது போன்ற வார்த்தைகள் ஆண்களிடம் இருந்து வருகிறது எனத் தோன்றும்.

தோசை அம்மா தோசை...

அம்மா சுட்ட தோசை...

அப்பாக்கு 4...

தம்பிக்கு 3...

தங்கைக்கு 2...

அம்மாக்கு 1...

என்கிற ரீதியில் தான் பெண்கள் எந்தக் கதாபாத்திரத்தில் இருந்தாலும் அவளுக்கு உணவு கூடக் குறைவாய்க் கொடுக்க வேண்டும் என்பதைக் குழந்தைகளின் பாடப்புத்தகங்களில் கூட விதைக்கின்றனர். பெண்கள் அளவாக உண்ண வேண்டும், சத்தமாய்ச் சிரிக்கக் கூடாது, குடும்பத்தின் கவுரவ மையமாய் இருக்க வேண்டும், போன்றவை எழுதப்படாத விதி இல்லை; எழுதப்பட்ட விதி தான்.

அம்மா சமையல் செய்கிறார், அப்பா பேப்பர் படிக்கிறார். தம்பியோ, அண்ணனோ அவர் விளையாடுகிறார். அக்கா வீட்டைப் பெருக்குகிறார். பெண் என்பவள் வேலை செய்பவள். ஆண் விளையாடப் பிறந்தவன். விளையாட்டு அதுவும் வெளி விளையாட்டுக்கள் பெண்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்காகவே சோட்டாங்கல், ஆடுபுலி ஆட்டம் (அதில் கூட ஆடும் புலியும் தான்) நொண்டி எனப் பெண்களுக்காகவே இவை ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. கிராமங்களில் பெண் குழந்தைகளுடன் ஆண் குழந்தைகள் போய் நொண்டி விளையாடினால் பொட்ட மாதிரி விளையாடுர என பெண்களே கடிந்து கொள்வதை நாம் பார்த்து இருக்கிறோம். ஆக நாம் மேற் குறிப்பிட்ட அனைத்தும் பெண்ணின் வரலாற்றை மீட்டெடுக்க, சமூகத்தில் சரி நிகராய் சுயமரியாதை யுடன் இயங்க வழிவகுக்கும்.

கருப்பு இராஜகுமாரி

தமிழ்த்திரை உலகின் முதல் கனவுக்கன்னி என்று அழைக்கப்பட்ட டி.ஆர்.ராஜகுமாரியை தனது படத்தின் கதாநாயகி என பி.கே. சுப்பிர மணியம் அறிவிக்கும் போது அனைவரும் கேலி செய்தார்களாம். காரணம் டி.ஆர்.ராஜகுமாரி கருப்பாய் இருப்பதால். ஒப்பனைக் கலைஞர் அவருக்கு ஒப்பனை செய்ய மறுத்து விட்டார். பின்னாளில் அவரின் நடிப்புத் திறமையை நாம் அனைவரும் அறிவோம். இந்தச் சிவப்பு அழகு கிரீம் இந்த வார்த்தையே அவ்வளவு வக்கிரமானதாய் இருக்கிறது. இந்த வெள்ளை மோகத்தால் தாழ்வு மனப்பான்மையில் தற்கொலை செய்து கொண்ட பெண்களின் விவரம் கூட வெளியில் தெரிவது இல்லை.

அழகு என்பது நிறம் தொடர்புடையது என்கிற கற்பிதம் வீட்டில் இருந்தே தொடங்குகிறது. உறவுக்காரப் பெண் ஒருத்தி கர்ப்பமாய் இருந்தால் அவளின் அம்மா அவளிடம் எந்நேரமும் பெண் குழந்தை வேண்டாம்; ஆண் குழந்தை வேண்டும். அப்படியே பெண் குழந்தை பிறந்தால் வெள்ளையாக இருக்க வேண்டும் என்பார். இப்போது குழந்தை பிறந்து விட்டது. பெண் குழந்தை, அதுவும் கருப்பாய் அவர்கள் வருத்தப் படுகிறார்கள். அவர்கள் கோபப்படுகிறார்கள், அவர்கள் அடுத்த முறை வெள்ளையான பெண் குழந்தைக்கோ ஆண் குழந்தைக்கோ காத்திருக் கிறார்கள். யார் அவர்கள்?

அவர்கள் தான் வரதட்சணை கேட்டுக் கொளுத்தப்பட்டபோது தீப்பெட்டி எடுத்துக் கொடுத்தவர்கள். சமூக, குடும்ப அழுத்தத்தால் தற்கொலை செய்தவளின் தூக்கிக் கயிற்றை மாட்டி விட்டவர்கள்.

குடும்பச்சங்கிலி

இன்னொரு கதையையும் சொல்ல விரும்புகிறேன். ஒரு திருமணம் நடக்கிறது. அது மதம் மறுத்த திருமணம். நமக்குத்தான் அது மறுப்பு. அவர்களைப் பொருத்தவரை காதல் திருமணம் கருப்பு, நீல, சிகப்பு வாடை இல்லாத சராசரி இணையர்கள் திருமணத்திற்கு நான் சென்று இருந்தேன். மணமகன் இந்து, மணமகள் மலையாளக் கிறித்தவர். திருமணமோ இந்து முறைப்படி நடந்தது. திருமணம் ஆன 3 ஆவது மாதத்தில் இருந்தே குழந்தை பெற்றுக் கொள்ளச் சொல்லித் தொந்தரவு. அந்தப் பெண்ணிற்குத் தற்போதைக்கு விருப்பம் இல்லை. காதல் இணையும் தனக்குச் சாதகமாய் இல்லை. உளவியல் ரீதியில் மோசமாய்த் தொந்தரவு செய்ததால் பெற்றுக் கொள்கிறார்.

குழந்தை பிறந்ததும் இந்துப் பெயர் வைக்கச் சொல்லி டார்ச்சர். குலதெய்வ வழிபாட்டைப் பின்பற்றச் சொல்லி வற்புறுத்தியதோடு, குழந்தைக்குக் கோவிலில் காது குத்தச் சொல்லிப் பிரச்சினை. பெண்ணோ கிறித்துவர். திண்டாடிக் கொண்டு இருக்கிறார். அவர் தனிக்குடித்தனம் செல்ல அனுமதி மறுப்பு. ஒரு எல்லைக்கு மேல் பொறுக்க முடியாமல் தனிக் குடித்தனம் வருகிறார். அதன் பிறகு இன்னும் அதிகமான வன்முறையை எதிர் கொள்கிறார் வார்த்தைகளால். மேலும் அவர் திருமணமாகி வந்த நாளில் இருந்து அடுப்பறையில் தான் அவர் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார். அங்கேயே சமைத்து அங்கேயே சாப்பிட்டு, வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். இப்போது அதுவும் இல்லை. அவர் விருப்பப்படி உடை உடுத்தினார் இப்போது அதுவும் இல்லை.

இந்தக் கதை இப்போது நடந்து கொண்டிருக்கும் உண்மைச் சம்பவம். நம் கோரிக்கைகள் எவ்வளவு முக்கியத்துவமானவை, அவசியமானவை பெண்களுக்கு என்பதை இந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையே சொல்லிவிடும். இதில் எல்லாமுமே அடங்கி இருக்கிறது. சமையல், குலதெய்வ வழிபாடு, குழந்தை பெற்றுக் கொள்ள அல்லது மறுக்க உரிமை இல்லாமை, பொருளாதாரச் தற்சார்பு இன்மை மற்றும், தான் திருமணம் செய்த இணையின் குடும்பம் என்ன நம்பிக்கை, என்ன பண்பாட்டுக் கட்டமைப்பை நம்பி இருக்கிறார்களோ அதையே தான் பெண்ணும் தொடர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் படுகிறாள்.

எந்த நம்பிக்கையின் வழிப் பயணப்பட்டாலும் அது திருமணம் என்கிற ஒற்றை முடிவால் பல பெண்களின் அடிப்படை சுயம் கூட கேள்விக்கு உள்ளாக்கப்படுவதோடு, வாழ்வதற்கான குறைந்த பட்ச வழிகளையும் அடைத்துவிடுவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் இந்தச் சமூகத்தில், குடும்பத்தில், திருமணத்தில் உள்ளது. போராட்டத்தின் ஊடே தான் பெண்ணின் இருப்பு இருந்தாலும் அடிப்படை உரிமைகள்கூடப் போராடிக் கிடைக்காத போது நாம் அதிரடியான பல முன்னெடுப்புகளை எடுக்க வேண்டி உள்ளது.

அதே போல் ஒரு பெண்ணாய் இருந்து ஆணாய் மாற எத்தனிக்கும் ஒரு திரு நம்பியின் அடிப்படை உரிமைகளை, அவர்களின் கோரிக்கை களைக்கூட நாம் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டியது நமது கடமை. ஒடுக்கப்பட்டதிலும் ஒடுக்கப்பட்டவர்களாய் இருக்கும் பெண் ஒரு திருநம்பியாய் (ஆணாய்) மாற நினைக்கும் போது, அதை விட அதிகமாய் இந்த ஆணாதிக்கச் சமூகத்தில் ஒடுக்கப்படுவது குறித்து நாம் விரிவாய் பேச வேண்டியது அவசியம். பல பெண்கள் தன் சுயபாலாய் நினைக்கும் ஆணாய் மாறும் அந்தக் கால கட்டத்திற்குள் பல ஒடுக்கு முறைகளைச் சந்திக்கின்றனர். குறிப்பாக, கிராமத்தில் வசிக்கும் பெண்களின் வீட்டில் அவர்களுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கும் போது அவர்கள் அடையும் துயருக்கு அளவு இல்லை. அவர்களைப் பொறுத்தவரை நான் ஒரு ஆண். எப்படி ஒரு ஆணைத் திருமணம் செய்து கொள்ள முடியும்? என்கிற மன அழுத்தத்தில் வீட்டை விட்டு வெளியேறி அதன் பிறகு அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளைச் சொல்லி மாளாது.

அனைவரும் சமையல் அறைகளை உடைத்து அதாவது அறைகளைத் தடைகளாகப் பார்க்கிறேன். அதை உடைத்து அந்த நேரத்தை மிக பயனுள்ள சமூகப் பணிக்காக பயன்படுத்த வேண்டியது அவசியம். முன்னைவிட இப்போது தலைதூக்கி இருக்கும் மிக மோசமான பெண்களுக்கு எதிரான வன்முறையானது நுட்பமானது. ஆழமான விழிப்புணர்வுடன் உற்று நோக்கி அதைக் களைய, நேரத்தை மிக நேர்த்தியாகக் கையாள வேண்டிய தேவை இருக்கிறது

நுகர்வுப் பண்பாட்டில் இருந்து விடுபட்ட வளாய், விருப்பம் இல்லை எனில் குடும்ப அமைப்பு முறையில் இருந்து விடுபட்டவளாய், தாய்மை என்ற வட்டத்திற்குள்ளும் குடும்ப அரசியலின், தனிச் சொத்தின் ஆரம்பப் புள்ளியான குழந்தை பிறப்பில் இருந்து தன்னைப் பிரித்து எடுத்தவளாய், சம உரிமைக்கு இடமில்லாத ஆணிடம் காதல், பண்பாடு, கலாச்சாரம் போன்ற உணர்வுச் சிக்கல்களில் சிக்காத நடைமுறைச் சாத்தியப் பெண்ணாய், வார்த்தைகளால், உடலால் சுரண்டப் படுகிறோம் என்பதை உணர்ந்து எதிர்த்துக் குரல் கொடுப்பவளாய், அடிப்படைச் சட்டம் தெரிந்த வளாய் இருக்கப் பெண்ணானவள் முன் நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறாள்.

அதுமட்டுமே போதுமானதாய் இல்லை. இதைச் சட்டமாக்கி அனைத்துப் பெண்களும் சுயத்துடன் தனக்கான வாழ்வை, தான் விரும்பியவாறு வாழ்வதற்கு மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை நடைமுறைக்கு கொண்டுவர அனைவரும் கூட்டாகச் சேர்ந்து குரல் கொடுப்பதும் அவசியம்.

அ.வெண்ணிலாவின் ஒரு கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது

“உள்ளே வீசப்படும் செய்தித் தாளை அப்பாவிடம் கொடுக்கவும், கீரை விற்பவள் வந்தால் அம்மாவைக் கூப்பிடவும் கற்றுக் கொள்கிறது குழந்தை யாரும் கற்றுத் தராமலே....”

ஆணாதிக்கக் குடும்ப முறை, சமூகக் கட்டமைப்பு, தேவை இல்லாமல் சமூகமும் குடும்பமும் தூக்கிச் சுமக்கிற கலாச்சாரச் சிந்தனை, செயல்பாடுகள் இவையே குழந்தைகளுக்குச் சொல்லி விடுகின்றன அம்மா என்பவள் சமையல் அறையில் இருப்பவள். அப்பா கால் மேல் கால் போட்டு பேப்பர் படிப்பவர் என.

அப்பாவைப்போன்ற துணைவன்வேண்டும்

பொதுவாக, இப்போது இருக்கும் இளம் பெண்கள், ஆண்களிடம் ஒரு ஃபேசன் ஸ்டேட் மெண்டை பார்க்கலாம். தனக்கு வரும் இணை அப்பாவை போல் இருக்க வேண்டும் என பெண்ணும், தனக்கு வரும் பெண் அம்மாவைப் போல் இருக்க வேண்டும் என ஆணும் நினைக்கின்றனர். தன் அப்பா அம்மாவைப் பெரும்பான்மைக் குடும்பங்களில் எப்படி ஆள்கிறார் என அந்தப் பெண் பார்த்தும், மகளிடம் அவர் காட்டும் அந்த அன்பை மட்டும் மையப்படுத்தி - அதுகூட பெண் சொல் மீறி நடக்கக் கூடாது என்பதற்காக அந்த ஆண் ( அப்பா) பயன்படுத்தும் யுக்தியாகவே மகளிடம் அதீதமாகப் பாசம் காட்டுகின்றார். (விதி விலக்குகள் இருக்கலாம்) அதனால் அம்மாவை அப்பா நடத்தும் விதம் பற்றி எல்லாம் யோசிக்காமல், அப்பா போல ஆணைப் பெண்கள் கேட்கின்றனர்.

அம்மா போலப் பெண் வேண்டும் என ஆண் கேட்பதில் பெரிய ஆச்சர்யம் இல்லை. அவனுக்கு அம்மா போல குடும்ப அமைப்பில் அடங்கிய, சமையல் அறையில் தன் பிழைப்பை நடத்திய, தாயானவள் தெய்வம் என்று பெயரெடுத்த, அந்த அம்மாவை அவனுக்கு ‘ரீ பிலேஸ்’ செய்ய மற்றும் ஒரு அடிமை தேவை. இதுவும் ஒரு ஆணாதிக்க யுக்தியே.

யாரும் யாருக்கும் மறுபிம்பமாக மாற முடியாது. இதை இக்கால இளம் பெண்களும், ஆண்களும் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் பெண்களுக்கான சட்டக் கோரிக்கை மட்டுமாக இதை நான் பார்க்கவில்லை. இது அனைவருக்கு மானது. வருங்காலத்தில் இது பலவகையில் குற்றங்கள் குறைய வழி வகை செய்யும். ஏனெனில், குறிப்பாக இக்கோரிக்கையில் பாலின சமத்துவத் திற்கான கோரிக்கைகள் மட்டும் இன்றி ஆண்கள், பெண்கள் என்ற இந்த இரண்டு பாலும் ஒருவரை ஒருவர் சிறு வயதில் இருந்தே சரியாக புரிந்து கொள்ள, பழக, குடும்பம் என்கிற அமைப்பைத் தாண்டிக் கற்க இவை உதவும். மேலும் இது பெண்களுக்கானதாக மட்டும் பார்க்கவில்லை. பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என அனை வருக்கும் மிகத் தேவையான அடிப்படை உரிமை யாகவும் அதை மீட்டெடுக்கவும் உதவும் அனைவரும் சேர்ந்து கரம் கோர்த்தால்...

தோழர் அபிநயா சக்தி, மனிதி அமைப்பு