08.01.2017 சென்னையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 5000 த்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று திரண்டு பேரணியாகச் சென்றுள்ளனர். இது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் தன்னிச்சையாகத் திரண்ட இளைஞர் கூட்டம். சமூக வலைத்தளங்களில் மட்டும் செய்தி பரப்பித் திரண்ட மாணவர் கூட்டம் என்றெல்லாம் சமூக வலைத் தளங்களில் பலரும் எழுதி வருகின்றனர்.

பீட்டாவால் தடை வந்த நாளில் இருந்தே பல பார்ப்பன கார்ப்பரேட் சாமியார்கள், பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்கள், ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் இயங்கும் என்.ஜி.ஓக்கள், இந்து தேசிய, தமிழ்த்தேசிய எண்ணம் கொண்ட பல தோழர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்து தேசியமும் –தமிழ்த்தேசியமும் முரண்பட்டவை அல்ல என்பதற்கு ஆதாரம்தான் இந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான முதல் அணிதிரட்டல். இது தன்னிச்சையாகத் திரண்ட கூட்டம் அல்ல. ஜாதி, மத ஆதிக்க இச்சையால் நான்கு வருடங்களாகத் திட்டமிட்டு திரட்டப்பட்ட கூட்டம்.

ஶ்ரீஶ்ரீரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர் என்பதற்கு தொலைக்காட்சி நேர்காணல்களும்ம், அவர்களது ட்விட்டர் பக்கங்களும் ஆதாரமாக உள்ளன. அவற்றை இணைத்துள்ளோம்.

பீட்டா என்ற பன்னாட்டுத் என்.ஜி.ஓவுக்கு இணையாக பல நாடுகளிலும் கிளை பரப்பிச் செயல்படும், பிக்கி BiCCI என்.ஜி.ஓ வும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பல ஆண்டுகளாகப் பணியாற்றியிருக்கிறது. அந்த அமைப்பின் தலைவர் சீனிவாசன் ஒரு பார்ப்பனர். பொறுப்பாளர் களாக காங்கேயம் காளை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் கார்த்திகேய சிவசேனாதிபதி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.வி.சாமி நாதன் அவர்களின் பேரன் என பல பெரும் பணக்காரர்கள், நிலவுடைமையாளர்கள், இடைநிலைச்சாதி ஆதிக்கவாதிகள் உள்ளனர்.

BiCCI மட்டுமல்லாமல், ஊயசந Care and Welfare, JustVolunteerIndia, Arappor, thozhan, LitTheLight, thuvakkam, Dhagam ஆகிய என்.ஜி.ஓக்களும், இன்னும் வெளியில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாத சில என்.ஜி.ஓக்களும் கடந்த நான்கு ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஆதரவைத் திரட்டியுள்ளனர். Bicci  அமைப்பும், காங்கேயம் காளை ஆராய்ச்சி நிலையமும் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.டி. நிறுவனங்களில் பரப்புரை நடத்தியுள்ளன. பல்வேறு நாடுகளிலும் லாபி செய்துள்ளன.

கடந்த பல ஆண்டுகளாக தமிழ் சினிமாக்களில் காமெடியன்களாக நடித்துக் கொண்டிருந்த துக்ளக் சோ, எஸ்.வி.சேகர் போன்றவர்கள் காரியக் கிறுக்கர்களாக இருந்தனர் என்பதை நாம் பார்த்திருப்போம். இது டிஜிட்டல் காலம். காமெடியன்கள் டிஜிட்டல் அவதாரம் எடுத்துள்ளனர். Chennai Memes, Smile Settai, Put Chutney  என்று பல முகங்கள் எடுத்து, இவைகளை வைத்து இக்கால ஆப்ஸ் தலைமுறையைச் சிரிக்க வைக்கின்றனர்.  சோ, சேகர் வகையறாக்களைப் போலவே, இந்து மதத்தைக் காப்பாற்றுவதில் முன்னணியில் நிற்கின்றனர்.

ஜல்லிக்கட்டை எதிர்ப்பது, ஆதரிப்பது என இரண்டு நிலைகளிலும் பார்ப்பனத் தலைமையிலான தொண்டு நிறுவனங்களும், பார்ப்பனக் கார்ப்பரேட் சாமியார்களும், அவர்களின் மறைமுகத் தொண்டர்களும், இடைநிலைச்சாதி வெறியர்களும் சம அளவில் இருக்கின்றனர்.

பார்ப்பன - பன்னாட்டு நிறுவனங்கள் - பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்கள் - இந்திய தேசிய முதலாளிகள் - ஆர்.எஸ்.எஸ் - தேசிய இன உணர்வுக் குழுக்கள் - ஜாதிவெறிக் குழுக்களின் கூட்டுத் திட்டங்கள் தான் ஜல்லிக்கட்டுக்குத் தடையும், தடையை நீக்கத் தொடங்கப்பட்ட  போராட்டங்களும்.. பார்ப்பன எதிர்ப்பு, சர்வதேச அரசியல் இவற்றைப் புரிந்து கொள்ளாமல் ஈழவிடுதலைப் போராட்டங்களின் நாம் கறைந்தது போல, இந்த இந்து மயமாகிப்போன தமிழர் பண்பாட்டு அடையாளங் களை மீட்கும் போராட்டங்களிலும் நாம் கறைந்து விடாமல், வினையூக்கிகளாக (catalyst)  இருக்க வேண்டும்.

Pin It