தமிழ்நாட்டில் கடந்த 2013 ல் பேலியோ உணவுமுறை அறிமுகமாகியது. அதை அறிமுகப் படுத்தியவர் நியாண்டர் செல்வன். பேலியோவை வெகுமக்களிடம் கொண்டு சென்றது ‘ஆரோக்கியம் நல்வாழ்வு’ என்ற பார்ப்பனக் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பு என்று தான் நாம் அறிந்திருப்போம். ஆனால் உண்மை அது அல்ல. பேலியோ உணவுமுறையை தமிழ்நாட்டுக்கு 1931 லேயே குடி அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. அறிஞர் மயிலை.சீனி.வேங்கடசாமி அவர்கள் 21. 06. 1931 குடி அரசு எட்டில் மாமிச உணவைப் பற்றிய சில குறிப்புகள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.

அதில், பேலியோவில் தற்போது பரிந்துரைக்கப்படும் உணவுவகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இறைச்சி, முட்டை, பால், மிருகக்கொழுப்பு, ஈரல், காய்கறி, முளை, மீன், மீன் எண்ணெய் அதாவது ஒமேகா போன்றவை இன்று நாம் கடைபிடிப்பதைப் போலவே பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இரவு உணவு அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். பகலில் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது வரை மிக நுணுக்கமாக மயிலை.சீனி.வேங்கடசாமி எழுதியுள்ளார். பேலியோவுக்கு நாங்கள் தான் முன்னோடி என இனி எந்தப் பார்ப்பன அமைப்பும் கூறிவிட முடியாத அளவுக்குத் தெளிவாக குடி அரசு அக்கட்டுரையைப் பதிவு செய்துள்ளது.

பேலியோ உணவு முறைக்கு எதிராக சைவர்கள் இன்று எழுப்பும் அனைத்து எதிர்வினைகளும் அப்போதே எழுப்பப்பட்டு, அதற்கு பதில் கொடுக்கப்பட்டவைதான். 21.06.31 ல் பேலியோ விளக்கக் கட்டுரை வெளியாகியுள்ளது. அதற்கு எதிர்வினையாக  எ.சுப்பையா என்பவர் கடும் மறுப்புக் கட்டுரையை எழுதியுள்ளார்.

அந்த சைவ ஆதரவுக் கட்டுரையையும் முழுமையாக தனது குடி அரசு ஏட்டில் வெளியிட்டார் தோழர் பெரியார். 09.08.1931 குடி அரசில் மறுப்புக் கட்டுரை வெளியாகி உள்ளது. பிறகு அந்த சைவ ஆதரவுக் கட்டுரைக்கு மறுப்பாக, மயிலை.சீனி.வேங்கடசாமி அவர்களே மீண்டும் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அக்கட்டுரை 13.09.1931 குடி அரசில் வெளியாகி உள்ளது.

இப்போது சில பார்ப்பன, தமிழ்த்தேசிய சைவர்கள் கூகுள் தகவல்களை வைத்து நம்மிடம் வாதாடுவதைப் போலவே, அப்போதும் பல வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகளை சான்றாகக் காட்டி சைவத்தைப் பெருமைப்படுத்த முனைந்துள்ளனர். ஆனால் அந்த ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகளையும் மறுக்க இயலாத அறிவியல் கட்டுரைகளை முன்வைத்து குடி அரசும் எதிர்வினை ஆற்றியுள்ளது.

குடி அரசின் மாமிச உணவு முறைக்கு எதிராக அப்போது ‘லோபகாரி’ என்று ஏடு கடும் எதிர்வினைகளை நடத்தியுள்ளது. லோபகாரிக்கு எதிராக குடிஅரசும் தொடர்ந்து பேலியோவை ஆதரித்து கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. அடுத்தடுத்த இதழ்களில் அவற்றைத் தொடர்ச்சியாக வெளியிடுவோம். குடி அரசின் உணவுமுறையை, திராவிடர் பேலியோவை பெரியார் தொண்டர்கள் முன்னெடுப்போம். பார்ப்பனக் கும்பல்களின் பிடியில் அறிவியல் உணவுமுறை சிக்கிவிடாமல் தடுப்போம்.

மாமிச உணவைப்பற்றிய சில குறிப்புகள்

-மயிலை.சீனி.வேங்கடசாமி

தேக சுகத்துக்கேற்ற உணவு எது என்பதை யாராய்ந்த மேல்நாட்டு அறிஞர்கள் கலப்பு ஆகாரந்தான் (அதாவது மாமிசமும், மரக்கறியும்) சிறந்தது என்று முடிவு செய்திருக்கிறார்கள். மாமிச உணவு மனிதருக்கு எவ்வளவு அவசியமோ அவ்வளவு மரக்கறி உணவு மனிதருக்கு இன்றியமையாத தாகும். ஏனெனில் மாமிச உணவில் இருக்கும் சத்துக்கள் மரக்கறி உணவில் கிடையாது. மரக்கறி உணவில் இருக்கும் சத்துக்கள் மாமிச உணவில் இல்லை. ஆகவே மாமிச உணவையும், காய்கறிகளையும் கலந்து சாப்பிட வேண்டியது அவசியமாகிறது.

மாமிச உணவைச் சாப்பிடுவது இழிவானது, தாழ்வானது, பாவமானது என்று மூடக்கொள்கை இருந்து வருகிறது. மாமிசம் சாப்பிடுவதனால் தாமச குணமும், ரஜோ குணமும் ஏற்படுவதாகச் சொல்லுகிறார்கள். சாந்தகுணம் ஏற்படுவதற்காகக் காய்கறிகளைச் சாப்பிடவேண்டும் என்று சொல்லுகிறார்கள். பெளத்தம், ஜெயினம், இந்துமதம் ஆகிய இம்மூன்று சமயங்களும் சேர்ந்து இந்தியரை மரக்கறி உணவுசாப்பிடச்செய்து, அதன் பயனாக இந்தியரை மீளா அடிமைக் குழியில் அமிழ்த்தி விட்டது. மரக்கறி உணவு (சைவசாப்பாடு) மாத்திரம் சாப்பிடுவதனால் இந்துக்கள் தேகபலமும் அறிவுபலமும் குறைந்து நாளுக்கு நாள் நோயுற்றுப் போகிறார்கள்.

மாமிச போஜனம் செய்கிறவர்களை சைவபோஜனம் செய்கிறவர்கள் தாழ்வாக நினைக்கிறார்கள். மாமிச போஜனம் செய்கிறவர்களில் சிலர், மற்றவர் தங்களை இழிவாகக் கருதுவார்களென்று நினைத்துத் தாங்கள் சைவர்கள் (மரக்கறி புசிக்கிறவர்கள்) என்று சொல்லிக் கொண்டு மறைவாக மாமிசம் புசிக்கிறார்கள். இவ்விதம் செய்வது அறிவீனமாகும். உண்மையில் மாமிசபோஜனம் செய்வோர் தாழ்ந்தவரல்லர், மரக்கறி ஆகாரம் சாப்பிடுகின்றவர்கள் தான் மாமிசம் புசிப்போரை விடத் தாழ்ந்தவராவார்.

எப்படியென்றால், மாமிசம் புசிப்போர் மரக்கறி உணவையும் சாப்பிடுகிறார்கள்.ஆகையால் அவர்கள் உண்ணும் ஆகாரத்தில் தேக சுகத்துக்கு வேண்டிய எல்லா ஜீவ சத்துக்களும் அமைந்திருக்கின்றன. ஆனால், மரக்கறிமாத்திரம் புசிக்கிற சைவர்களின் சாப்பாட்டில் எல்லா ஜீவ சத்துக்களும் ((Vitamins) அமைந்திருக்கவில்லை. ஆகவே சைவர்கள் குறைந்த சத்துள்ள ஆகாரத்தைப் புசிப்பதனால் நிறைந்த சத்துள்ள ஆகாரத்தைப் புசிக்கும் மாமிசம் சாப்பிடுவோருக்கு தாழ்ந்தவராவார்.

இனி மாமிச போசனத்திலுள்ள சில குணங்களை இங்கு எழுதுவோம். இங்கு எழுதப்படும் விஷயங்கள் எனது அபிப்பிராயம் அல்ல. உலகோரால் நன்கு மதிக்கப்பட்டு புகழ் பெற்ற மேனாட்டு டாக்டர்கள் ஆராய்ச்சி மூலமாகக் கண்டறிந்த உண்மைகளையே இங்கு எழுதுகிறேன்.

முதலில் நெய் அல்லது கொழுப்புகளை எடுத்துக்கொள்வோம். கொழுப்புகள் இரண்டு வகைப்படும். அதாவது தாவரக்கொழுப்பு, மிருகக்கொழுப்பு என்பன. தாவரங்களில் இருந்து எடுக்கப்படும் என்ணெய், பருத்திக் கொட்டைநெய், தேங்காயெண்ணெய் முதலியன தாவரக் கொழுப்புகளாம். மிருகங்களிலிருந்து கிடைக்கும் வெண்ணெய், நெய், மீன் எண்ணெய் (ஊடின-டஎைநச டிடை) மாமிசங்களிலிருக்கும் கொழுப்புகள் முதலியவைகளை மிருகக்கொழுப்பு எனப்படும்.

இந்த இரண்டுவிதக் கொழுப்புகளில் மாமிசக் கொழுப்புகள்தான் (வெண்ணெய், நெய், மீன் எண்ணெய் முதலியன) உடம்புக்கு அதிக நன்மை செய்வதாகக் கண்டறிந்திருக்கிறார்கள். இன்னும் விளக்கமாகச் சொல்லவேண்டும் என்றால் தாவரக் கொழுப்பாகிய எண்ணெய் வகைகளில் (Vitamin A) என்னும் ஜீவசத்துப்பொருள் கிடையாது. வெண்ணெய், நெய், மீன் எண்ணெய் முதலிய மிருகக் கொழுப்புகளில் (Vitamin A) என்னும் ஜீவசத்துப்பொருள்கள் ஏராளமாயிருக் கின்றன. அன்றியும் மீன் எண்ணெயில் (Cod-liver oil Vitamin D) என்னும் ஜீவசத்தும் இருக்கிறது. (Vitamin E) ஜீவசத்துப் பொருள்களைப்பற்றி தனியே பிறகு எழுதப்படும்.

ஈரல் (Liver) என்பது ஆடு, மாடு, பறவை முதலிய எல்லாப் பிராணிகளின் உடம்பில் உள்ள ஒரு உறுப்பாகும். இதைச் சாப்பிடுவதனால் மிகவும் நன்மை உண்டாகும் என்று டாக்டர்கள் சொல்லுகிறார்கள். இதில் நான்கு வகை ஜீவசத்துப் பொருள்கள் (Vitamins-A,B,C, and D) இருக்கின்றனவாம். அன்றியும் (Manganese) என்னும் உலோகசத்தும், அயன் என்னும் இரும்புச்சத்தும் இருக்கின்றன. இது மிகவும் முக்கியமான ஆதாரம் என்றும் இதை மனிதர் வாரத்துக் கொருமுறையாவது சாப்பிடவேண்டும் என்றும் பிரபல டாக்டர்கள் சிபாரிசு செய்கிறார்கள்.

மாமிசம் ஆடு முதலிய பிராணிகளின் மாமிசம் உடம்புக்கு பலம் தருவதாகச் சொல்லுகிறார்கள். அன்றியும் மாமிசத்தில் (Phosphorus ) என்னும் ஒருவகை உப்பு இருக்கிறது. இந்த உப்பு தேகத்திலுள்ள ஜீவ அணுக்கள் வளர்வதற்கு அவசியமானது.இன்னும் இரத்தத்திலும் இந்த உப்பு ஓரளவு இருக்க வேண்டியது அவசியமானது.

மூளையிலும் Phosphorus என்னும் உப்பு இருக்கிறது. அன்றியும் தேகத்துக்கு நன்மை தரக்கூடிய அனேகவித கொழுப்புகளும் இதில் உள்ளன. இன்னும் மூளையில்  தாமிரம் என்னும் செம்புச்சத்தும், துத்தநாகச் சத்தும் இருக்கின்றன.

மீன்கள், மீன்வகைகளில்  A,B,D என்னும் மூன்றுவகை ஜீவசத்துக்களும் இருக்கின்றன. அன்றியும் அயோடின் என்னும் உப்பும், தாமிரம்என்னும் செம்புச்சத்தும் இருக்கின்றன.

முட்டை: இதில் கொழுப்பு வகைகள், கால்சியம், பாஸ்பரஸ் என்னும் உப்புகள், இரும்புச்சத்து ஆகியவைகள் இருக்கின்றன. முட்டை பாலுக்கும், ஈரலுக்கும் அடுத்தபடியான முக்கியமான ஆகாரம். ஆனால், இதை ஒருநாளைக்கு இரண்டு அல்லது மூன்றுக்குமேல் சாப்பிடக்கூடாது. சைவர்கள் முக்கியமாக பிராமணர்கள் தற்காலத்தில் வெளிப்படையாகச் சாப்பிடும் மாமிச ஆகாரம் முட்டையே. முட்டை பறவைகளின் வயிற்றிலிருந்து வெளிப்படுகிறதை அறிந்திருந்தும் அவர்கள் இதை தாவர உணவு (Vegetable food) என்று சொல்லுகிறார்கள். நமது நாட்டில் கோழி முதலிய பறவைகளை வளர்த்துப் போதிய அளவு முட்டையை உற்பத்தி செய்யவில்லையென்று டாக்டர்கள் வருத்தப்படுகிறார்கள்.

மாமிச உணவை உண்ணும்போது முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விஷயம் ஒன்று உண்டு. அதாவது மாமிசங்களோடு காய்கறி, கீரை முதலிய தாவரங்களையும் கலந்து சாப்பிட வேண்டும். மாமிசத்தை மாத்திரம் தனியாகச் சாப்பிடக்கூடாது. மாமிச உணவுடன் மரக்கறிகளையும் கலந்து சாப்பிடுவதால் உடம்புக்கு அதிக நன்மை உண்டாகிறது.

மூளையை உழைத்து வேலைசெய்கிறவர்கள் மாமிச உணவைப் பகற்காலத்தில் சாப்பிடக் கூடாது. ஏனென்றால் மாமிசம் ஜீரணமாவதற்கு அதிக நேரங்கொள்ளும். ஆகவே அதை சாப்பிட்டவுடன் மூளைக்கு வேலை கொடுத்தால் அது சரியாக ஜீரணமாகாமல் கஷ்டப்படுத்தக் கூடும். ஆகவே மூளை வேலை செய்கிறவர்கள் ஓய்வாக இருக்கிற மாலைகாலத்தில் மாமிசம் சாப்பிடுவது நல்லது. அதாவது இராப்போஜனத்தில் மாமிச உணவைச் சாப்பிடலாம்.

மூளையை உழைத்து வேலை செய்கிறவர்கள் மீன் சாப்பிடுவது நல்லது என்று டாக்டர்கள் சிபாரிசு செய்கிறார்கள். ஏனென்றால் மாமிச உணவுகளில் எளிதில் ஜீரணமாகக்கூடியது மீன்தான். ஆகையால் ஓடி ஆடிப் பாடுபடாமல் ஓரிடத்தில் உட்கார்ந்து மூளையைச் செலுத்தி வேலை செய்கிறவர்கள் மீன் உண்பதால் அவர்களுக்கு அஜீரணம் முதலிய துன்பங்கள் உண்டாகாது.

பால், தயிர், மோர் முதலியவைகளும் மாமிச உணவேயாகும். சைவர்கள் இவைகளை மாமிசம் என்று நினைக்கிறதில்லை. இதைச் சைவர்கள் தாங்கள் உண்பது மட்டுமல்லாமல் சுவாமிக்கு அபிஷேகமும் செய்கிறார்கள். சைவர்கள் மாமிச உணவாகிய பால், தயிர், நெய்களைச் சாப்பிடாமல் இருந்தால் அவர்கள் கதி அதோகதியாய்விடும். பால், தயிர்களை அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உஷ்ணதேசமாகிய இந்தியாவில் பாலைத் தயிராக்கிச் சாப்பிடுவது தான் நல்லது என்று டாக்டர்கள் அபிப்பிராயப்படுகிறார்கள். தயிரைச் சாப்பிடுவதால் தேக சுகம்பெற்று அதிகநாள் ஜீவித்திருக்கமுடியும் என்பது அறிஞர்களின் அபிப்பிராயம். பசும்புல், பச்சை இலை தழை முதலியவைகளை மேயும் பசுவின்பால் அதிகச் சத்துள்ளதாக இருக்கும். காய்ந்த வைக்கோல் முதலியவைகளைத் தின்னும் பசுவின் பாலில் அதிக சத்துகள் கிடையா.

Pin It