இதிகாச காலங்களில் விதைக்கப் பட்டு, மன்னர்கள் ஆட்சியில் வளர்த்து எடுக்கப்பட்ட-உலகில் எங்கும் இல்லாத பிறப்பின் அடிப்படையில் இந்திய மனித சமுகத்தை மனித குல விரோதிகள் ஆன பார்ப்பனர்கள் வேதமதமான இந்து மதத்தையும், அதன் புனித நூல்களாகக் கருதும் மனுதர்மம், பகவத்கீதை, வேத ஆகமங்கள் அடிப்படையில் நாலுவர்ணம், நாலாயிரம் சாதிகளாகப் பிரித்து சாதிக்கொரு தொழில் சாதிக்கு ஒரு குடியிருப்பு(ஊர்,சேரி) என பிரித்து, நல்லான் வகுத்தது அல்ல நீதி-வல்லான் (பார்ப்பான்) வகுத்ததே நீதி என்று சாம, பேத, தான, தண்டம் என்ற வழி முறைகளை கடைப்பிடித்து, அதை சனாதான வேத இந்துமதம் என்ற பெயரில் 5,000 ஆண்டுகளாக மனித சமூகத்தை கல்வி அறிவற்ற மக்கள் ஆக ஆக்கி வைத்தனர் ஆரிய பார்ப்பனர்கள்.

periyar 296இச்சாதி அமைப்பு முறையை எதிர்த்த வேதமத எதிர்ப்பு இயக்கங்களை தங்களுக்கே உரித்தான நேரடியான மறைமுகமான வன்முறையால் அழித்தனர் ஆரிய பார்ப்பனர்கள். சான்றாக இராமயண சம்புகன், மகாபாரத ஏகலைவன், 8000 சமணர்கள், தில்லை நந்தன் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியில் கலெக்டர் ஆஷ்,விடுதலை இந்தியாவில் பல்லாயிரம் மக்களால் மகாத்மா என்று அழைக்கப்பட்ட தோழர் காந்தியார் உட்பட வேத மதமான இந்துமதம் வகுத்த வர்ண முறைகளுக்கு எதிராக பேசினார்கள், செயல்பட்டார்கள் என்று படுகொலை செய்யப்பட்டனர் ஆரிய பார்ப்பனர்களால்!

பார்ப்பன வன்முறைக்கும், படுகொலைக்கும் இன்றைக்கும் சான்றாக விளங்குவது புதைப்பொருள் ஆராய்ச்சியாளர்களால் அகழ்வு ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலைகள், புத்தக் கொள்கைகள் பதித்த தூண்கள் நமக்கு ஆரிய பார்ப்பன கொடூரத்தை விளக்குவதாக உள்ளது.

இந்தச் சமூக அமைப்பும் (குலத்தொழில், சாதி தீண்டாமை ஊர், சேரி ஆகியவை களைக் காப்பதுதான் அழியாத சனாதனம்) மன்னர்கள் ஆட்சி முடிவுற்று கிழக் கிந்தியக் கம்பெனி நிர்வாகத்தில் இந்தியா வரும் வரை மேற்க்கண்ட சமுதாய அமைப்பை மனுதர்ம சட்ட விதிகளின்படி-நேரடியாகவும்,மறைமுகமாகவும் பார்ப்பனர்கள் காப்பாற்றி வந்தனர்.

கிழக்கிந்தியக் கம்பெனி 1757-இல் 18 வயது ராபர்ட்கிளைவ் யூனியன் ஜாக் கொடியை ஏற்றி இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தான். அதுவரை அரசு கல்வி வேலை வாய்ப்பை சமஸ்கிருதமொழி மற்றும் மனுதர்ம அடிப்படையில் மறுத்து வந்ததை நிராகரித்து எல்லோருக்கும் கல்வி அதுவும் அறிவியல் முற்போக்குச் சிந்தனைகள் கொண்ட ஆங்கில வழிக்கல்வியை ஆங்கிலேய அமைச்சர் அவையில் சட்டக்குழு உறுப்பினராக இருந்த தாமஸ் பேபிங்டன் மெக்காலே கொண்டு வந்தார். அதன் பிறகே அரசு கல்வி வேலைவாய்ப்பு பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு ஓர் அளவிற்கு கிடைக்கப் பெற்றது.

இப்பரவலாக்கும் (அரசுகல்வி வேலைவாய்ப்பு - இடஒதுக்கீடு) முறையை சனாதான தர்மம் என்ற பெயரில் இந்து மதத்திற்கு விரோதமானது என்று கூறி அன்றும் சரி-இன்றும் சரி இந்தியாவில் தேசிய மற்றும் மாநில கட்சிகளில் உள்ள பார்ப்பனர்கள் கடுமையாக எதிர்த்தனர், எதிர்த்தும் வருகிறார்கள். தங்களுக்கு ஆட்சி, அதிகாரங்கள் கையில் கிடைக்கும்போது எல்லாம் அதைப் பயன்படுத்தி சமத்துவம் சமூகநீதியை சொல்லுவதற்கு தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள். அப்படியான ஒரு கால கட்டமான 1954-இல் கலகக்காரர் தோழர் பெரியாரின் “மக்களை மடையர்களாக்கும் மதவெறி ஆட்சி” என்ற உரையையும், “முன்னுதாரணமற்ற பேராளுமை இவரே” என்ற பதிவையும் இளைஞர்கள் அறிந்து கொள்ளப் பதிவுசெய்கிறேன்.

முன்னுதாரணமற்ற பேராளுமை இவரே!

இந்திய வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியாளராக அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள், சிந்தனையாளர்களாலும் கல்வியாளர்களாலும் அறியப்பட்டு அறிவிக்கப் பட்டுள்ளார்கள்.

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் பேசிய பிரபல எழுத்தாளர், சாகித்திய அகாடமியின் முக்கியப் பொறுப்பாளர் பொன்னீலன் அவர்கள் உரையாற்றும் பொழுது (25.12.2011) ஓர் அரிய தகவலை அங்கே பதிவு செய்தார்கள். அது இதோ:

“சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் கிழக்கு ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில், உலக தத்துவ அறிஞர்கள் மாநாடு நடந்தது. மாநாட்டைப் பொறுப் பேற்று நடத்திக் கொண்டிருந்தவர் உலகப் பேரறிஞர் வால்ட்டர் ரூபன். அவர் தத்துவ அறிஞர் மட்டுமல்ல. ஒரு மாபெரும் இந்தியவியலாளரும் கூட; மாநாட்டு ஓய்வு நேர வேளையில் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா இன்னும் சில இந்திய அறிஞர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார் அவர். அப்போது வால்ட்டர் ரூபன் இந்தியத் தோழர்களிடம் ஒரு வரலாற்றுப் புதிர் கேள்வியை முன் வைக்கிறார்.

“இன்றைய இந்தியாவின் முன் உதாரணமே இல்லாத மகத்தான மானுட ஆளுமையுடையவர் யார்? (Who is the unprecedented Human personality of the present india?) கேள்விக்கு விடை தெரியாமல் தோழர்கள் திகைத்தனர். வால்ட்டர் ரூபன் பதில் சொல்லுங்கள் என வற்புறுத்துகிறார். வேறு வழியின்றி தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பெயரைத் தயக்கத்துடன் சொல்லவும்,

“இல்லை, இல்லை; காந்திக்கு முன் உதாரணம் கவுதம புத்தன் என்கிறார் ரூபன். மீண்டும் பதில் சொல்ல வற்புறுத்தியும், ஜவகர்லால் நேருவின் பெயரை முன்மொழிகிறார்கள்.

“இல்லை,இல்லை நேருவுக்கு முன் உதாரணம் அசோகன்” என்று சொல்லிய இந்தியத் தோழர்களின் வாயை அடைத்து விடுகிறார் வால்ட்டர் ரூபன்.

நீங்களே சொல்லுங்கள் என்று தோழர்கள் வேண்டிக்கொள்ள வால்ட்டர் ரூபனே,தான் எழுப்பிய அந்த வரலாற்றுப் புதிர்க் கேள்விக்குரிய விடையை சொன்னார்.

இன்றைய இந்தியாவின் முன் உதாரணமற்ற பேராளுமை பெரியார் ஈ.வெ.ரா.தான்! என்றார்.

இந்திய அறிஞர்களுக்கு அதிர்ச்சி. எப்படி? எப்படி? வால்ட்டர் ரூபனே அதற்கும் பதிலளித்தார். இந்தியச் சமூகத்தில் மேலிருந்து கீழேவரை பரவி, சமூக வளர்ச்சியை முடக்கிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய நோய் வருணாசிரமம் அல்லது மனுதர்மம் அல்லது வைதீகம். இந்த நோய்க்கு எதிராகத் தெளிவாக மூர்க்கமாகப் போராடுகிறவர் பெரியார் ஈ.வெ.ரா. தான்.. முன்னுதாரணமற்ற பேராளுமை இவரே என்று கூறினார் வால்ட்டர் ரூபன். -புரட்சி எழுத்தாளர் பொன்னீலன் கூறிய தகவல்

மக்களை மடையர்களாக்கும் மதவெறி ஆட்சி - தோழர் பெரியார்

நான் சிறிது நாட்களாக மத சம்பந்தத்தைப் பற்றி தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகிறேன். காரணம் என்னவென்றால், இப்பொழுது பார்ப்பனர்களும், பார்ப்பன ஆதிக்கம் கொண்ட அரசும் மத சம்பந்தமானவைகளைத்தான் பிரசாரம் செய்து வருகின்றன. இந்தியாவில் ஏறக்குறைய ஒரு கோடி கிருஸ்துவர்களும், இரண்டு கோடி முஸ்லிம்களும் உள்ளனர். இவர்கள் போக மீதி உள்ள மக்கள் 27கோடியும்-இந்துக்கள் என்ற தலைப்பில் உள்ளனர். அதில் ஒரு கோடிக்கும் குறைவாகத்தான் பார்ப்பனர்களாக இருக்கலாம். அதாவது, அவர்கள் 100-க்கு இரண்டே முக்கால் பேர்கள் வீதம் உள்ளனர்.

இவ்விதமாக சுமார் 4 கோடி மக்கள் போக, மீதியுள்ள 26 கோடி மக்களையும் இப்போது பார்ப்பனர்கள் அரசியல் முதல் மற்றெல்லாத் துறைகளிலும் சர்வாதிகாரம் கொண்ட முறையில் ஆண்டு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். நம்மவர்கள் யாராகிலும் அய்க்கோர்ட் நீதிபதி, அமைச்சர் போன்றவர்களாக இருந்த போதிலும் - அவர்கள் பார்ப்பனர்களால் இயற்றப்பட்ட, பார்ப்பன ஆதிக்கச் சட்டத்திற்குத்தான் உட்பட்டு நடக்க வேண்டும்.

இப்பொழுதுள்ள இந்திய அரசியல் சட்டமும் சிறப்பாக, இந்திய நீதி(இந்து லா) சட்டமுமே-மநுதர்ம சாத்திரம்தான். அதாவது, இதை ஆதாரமாகக் கொண்டுதான் அனைத்தும் ஏற்படுத்தப் பட்டுள்ளன.

அரசாங்கம் வாயளவில் - சாத்திரமில்லை, சாதி வேற்றுமையில்லை, மக்கள் யாவரும் ஒன்று என்று பேசுமே தவிர, காரியத்தில் எதை எடுத்துக் கொண்டாலும், சாத்திரப்படி என்றும், மதத்தின் காரணமாக என்றும் கூறும். வெளிப்படையாக மக்களை ஏமாற்றவே இவ்விதம் கூறி, உண்மை யிலேயே மதம், சாத்திரம் இவைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று முயற்சித்து வருகிறது.

இங்கு யார் இந்த நாட்டை மதச்சார்பற்ற நாடு என்று சொல்ல முடியும்? இந்து மத மொழியான (வடமொழி) இந்தியாவை அரசாங்க மொழி யாகக் செய்தான் என்றால், அது வடமொழி என்ற காரணத்தால் தான். எப்படியாவது பார்ப்பானின் மொழியான சமஸ்கிருதத்துக்கு சலுகையளிக்க வேண்டுமென்றே, ஏறக்குறைய - இம்மொழிக்கு ஒற்றுமையாக உள்ள இந்தி மொழியைக் கொண்டு வருகிறார்கள்.

அரசாங்கத்தின் அடையாளமே (கோயில்) கோபுரம் என்பதாக வைத்துள்ளனர். இவை யாவும் மதத்தையும், கடவுளையும் காப்பாற்ற ஏற்படுத்தப் பட்டவை தான்.

எனவே, வர்ணாசிரம தர்மத்தைக் காப்பாற்ற, அரசாங்கமும் உடந்தையாக இருக்கிறது. ஒரு நாட்டில் உள்ள மக்களை அடிமைகளாகவும், முட்டாள்களாகவும் செய்ய வேண்டுமானாலும்-முதலில் அங்குள்ள மதத்தைக் காப்பாற்ற வேண்டும். பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பது, அரசியல் பார்ப்பனத் தந்திரம். வேறு எவ்வித வழியிலும் மக்களை மடையர்களாகவும்-அடிமைகளாகவும் செய்ய முடியாது என்று உணர்ந்து கொண்ட அரசாங்கம், இன்று இங்குள்ள இந்து மதத்தை மிகவும் கவனமான முறையில் பல வழிகளிலும் காப்பாற்றி வருகிறது.

இந்து மதம் என்பது, உலகத்தில் உள்ள எல்லா மதங்களையும் விட 1ஆம் நெம்பர் பித்தலாட்டம் கொண்ட மதம். மற்ற மதங்களைப்போல் இதற்கு ஒருவித ஆதாரமும் கிடையாது. முஸ்லிம் மதம் என்றால்-அது எப்பொழுது தோன்றியது; யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்பனவற்றிற்கு சரித்திர சம்பந்தப்பட்ட பூரண ஆதாரங்கள் உண்டு. இவ்விதமே கிருஸ்த்துவமும், சீக்கியமும் ஆதாரங்களைக் கொண்டுள்ளன. ஆனால்,இந்து மதம் என்பது எப்பொழுது தோன்றியது;யாரால் தோற்றுவிக்கப் பட்டது என்ற கேள்விக்கு விடையே கிடையாது.

ஆனால், உண்மையிலேயே சரித்திர ஆதாரங்களைக் கொண்டுள்ள நம் திராவிடமும், திராவிடன் என்ற உண்மைகள், நம் சமயக் கோட்பாடுகள் என்பவை மறுக்கப்படு கின்றன. உலகில் பிறவி தோற்றங்களின் பேரால் ஒவ்வொருவரும் மங்கோலியன், ஆரியன் என்றிருப்பதைப்போல், நம்நாட்டில் பிறவியின் பேரால் நாம் திராவிடர்கள்.

எப்படி நாய் வர்க்கத்திலும் ராஜபாளையம், கோம்பை என்றும், குதிரை வர்க்கத்திலும் வேதாரணியம், காங்கயம் என்றும் பிறவி அடையாளத்தின் பேரால் பெயர்கள் உள்ளனவோ, அதேபோல் நம் பிறவியின் பெயரால் திராவிடர்கள். வசிக்கும் நாடு திராவிட நாடு. பேசும் மொழி தமிழ் என்பதால் தமிழ்நாடு என்றும், தமிழர் என்றும் சொல்லுகிறோம்.

இவ்வித ஆதாரங்களே தவிர, மற்ற பூணூல் போடுவதாலும், பஞ்சகச்சம் கட்டுவதாலும், உச்சிக் குடுமி வைப்பதாலும், சாம்பல், மண் பூசுவதாலும் என்ற அர்த்தமற்ற ஆதாரங்களைக் கொண்டும் நாங்கள் கூறவில்லை. இதை அரசாங்கம் உணர்ந்தாலும், இவ்வித திராவிடம், திராவிடன் என்ற பெயர்களைப் பொது இடங்களில் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஆதாரமற்ற இந்து மதமும்-வேதங்களும் இன்று நிலைத்து நிற்கின்றன.

- 10.10.1954 அன்று சென்னையில் ஆற்றிய உரை. விடுதலை 12.10.1954

நன்றி: தந்தை பெரியார் 135ஆம் ஆண்டு பிறந்தநாள் ‘விடுதலை‘மலர், பெரியார் ஒரு சகாப்தம். ஏன்? எப்படி? அறிஞர்கள் பதில் -திராவிடர் கழக வெளியீடு.

Pin It