சாதியையும் தீண்டாமையையும் ஒழித்துக்கட்டும் பெரும்பணியில் எத்தனையோ பேர் இறங்கி இருக்கிறார்கள். ராமானுஜர், கபீர் போன்றவர்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுடைய செயல்பாடுகளை எல்லாம் ஏற்கவும், அவற்றைப் பின்பற்றி நடக்குமாறு இந்துக்களைத் தூண்டவும் உங்களால் முடியுமா? ஸ்ருதியும் ஸ்மிருதியும் மட்டுமல்ல, சதாச்சாரமும் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டளைகளாகும் என்று மநு வலியுறுத்தி உள்ளார். இங்கு சாஸ்திரங்களை விட, சதாச்சாரத்துக்கே உயர்ந்த மதிப்பு தரப்பட்டு உள்ளது.

யத்யதாச்சர்யதே யேந் தர்மய வாடதர்மமேவ் வா : I

தேஸ்ஸ்யாசரண் நித்யம் சரித்ரம் தத்திகீர்திதம் : II

hindu religionஇதன்படி சதாச்சாரம் என்பது, தர்மமாயினும் அதர்மமாயினும், சாஸ்திரங்களோடு ஒத்துப்போனாலும் மாறுபட்டாலும் அதையே பின்பற்றி நடக்க வேண்டும். அப்படியானால், சதாச்சாரம் என்றால்தான் என்ன? சதாச்சாரம் என்பது சரியான செயல்கள் அல்லது நல்ல செயல்கள் - அதாவது நல்ல, நியாய உள்ளம் படைத்த மனிதர்களின் செயல்கள் என்று எவரேனும் நினைத்தால், அது முற்றிலும் தவறு.

சதாச்சாரத்தின் பொருள் அதுவல்ல; பழமையான பழக்க வழக்கங்கள் - அவை நல்லதாயினும் கெட்டதாயினும் - அதையே சதாச்சாரம் என்பர் :

யஸ்மின் தேசே ய ஆச்சார் : பாரம்பாயக்ரமாகத : I

வர்ணாநாம் கில் ஸர்வேஷஷம் ஸ ஸதாச்சார் உச்யதே : II

கடவுள் சொல்லாததை செய்ய தடைவிதிக்கும் சாஸ்திரங்கள்

சதாச்சாரம் என்றால் நல்ல செயல்கள் அதாவது, நல்ல மனிதர்களின் செயல்கள் என்று புரிந்து கொண்டு அந்த நல்ல வழியிலே மக்கள் நடந்து விட்டால் என்ன செய்வது என்று பயந்து, வேறுவிதமாகப் புரிந்து கொள்வதற்கு இடமே வைக்காமல் சில கட்டளைகளை ஸ்மிருதிகள் பிறப்பித்து உள்ளன. அதாவது, ஸ்மிருதிகள், சுருதிகள், சதாச்சாரங்கள் ஆகியவற்றுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில், கடவுள்களின் நல்ல செயல்களே ஆனாலும், அவற்றை கூடப் பின்பற்றி நடக்கக்கூடாது என்று அந்தக் கட்டளைகள் இந்துக்களுக்கு விதித்துள்ளன. இது மிகவும் அசாதாரண மானதாக, மிகவும் வக்கிரமானதாகத் தோன்றலாம். ஆனால், தேவர்கள் சொல்வதை மனிதர்கள் செய்யக் கூடாது என்று இந்துக்களுக்கு சாஸ்திரங்கள் தடைவிதித்து உள்ளன என்பதே உண்மை.

சீர்திருத்தவாதியிடம் உள்ள இரண்டு ஆற்றல் வாய்ந்த ஆயுதங்களான பகுத்தறிவையும் ஒழுக்கத்தையும் அவன் பெறமுடியாமல் செய்வது என்பது, அவனை செயலற்றவனாக்குவதே ஆகும். பகுத்தறிவுக்கும் ஒழுக்கத்துக்கும் சாதிக்கும் உள்ள தொடர்பை எண்ணிப் பார்ப்பதற்கான சுதந்திரமற்ற நிலையில் மக்கள் இருக்கும்போது, நீங்கள் சாதியை எப்படி ஒழிக்கப் போகிறீர்கள்? சாதியமைப்பு என்கிற கோட்டையில் பகுத்தறிவுக்கும் ஒழுக்கத்துக்கும் இடமே இல்லை. அந்தக் கோட்டைக்குள்ளே இருப்பது பார்ப்பனப் படை. அது, அறிவாளி வர்க்கமாகவும் இந்துக்களின் பிறவித் தலைவனாகவும் உள்ள படை. அது வெறும் கூலிப்பட்டாளம் அல்ல. தன் தாயகத்துக்காக ஜீவமரணப் போராட்டம் நடத்தும் வீரப்பட்டாளம்.

இந்துக்களிடையே உள்ள சாதி அமைப்பைத் தகர்த்தெறிவது - ஏறக்குறைய அசாத்தியம் என்று நான் நினைப்பது ஏன் என்பது இப்போது உங்களுக்குப் புரியும். எப்படியானாலும், சாதி அமைப்பு என்னும் கோட்டையில் பிளவு ஒன்றை ஏற்படுத்துவதற்கே யுகங்களாகும். சாதிய அமைப்பைப் பிளவு படுத்த நீண்டகாலம் ஆகும் என்றாலும் சரி அல்லது அந்தப் பெரும்பணியை வெகுவிரைவில் முடித்துவிடலாம் என்றாலும் சரி, நீங்கள் ஓர் உண்மையை மறக்கக்கூடாது.

சாதிக்கோட்டையில் பிளவு ஏற்படுத்த வேண்டுமென்றால், பகுத்தறிவுக்கும் ஒழுக்கத்துக்கும் ஒரு சிறிதும் இடம் கொடுக்காத வேதங்களுக்கும் சாஸ்திரங்களுக்கும் வெடி வைத்தே தீர வேண்டும். ஸ்ருதிகள் மற்றும் ஸ்மிருதிகளாலான மதத்தை அழித்தொழிக்க வேண்டும். வேறு எந்த செயலும் பயன் தராது. இதுவே என் முடிவான கருத்தாகும்.

“மதம் ஒழிக்கப்பட வேண்டும்” என்று நான் கூறினேன். நான் இப்படிக் கூறுவதன் தூபாருள் சிலருக்குப் புரியாமல் இருக்கலாம். சிலருக்கு கலகம் விளைப்பதாகத் தோன்றலாம். சிலருக்குப் புரட்சிகரமாகத் தோன்றலாம். ஆகவே, என் நிலைப்பாடு என்ன என்பதை விளக்கி விடுகிறேன். கொள்கைகளுக்கும் விதிகளுக்கும் இடையே வேற்றுமை உண்டென்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா என்பதை நான் அறியேன். வேற்றுமை உண்டென்றே நான் எண்ணுகிறேன். அது மட்டுமல்ல; இந்த வேற்றுமை உண்மையானது, முக்கியமானதென்றும் நான் கூறுகிறேன். விதிகள் நடைமுறையை ஒட்டியவை. ஏற்கனவே நிர்ணயித்தபடி நம் வேலைகளைச் செய்து முடிப்பதற்கான பழகிப்போன வழிமுறைகளே அவை. கொள்கைகளோ அறிவு ரீதியானவை. ஒரு விசயத்தைப் பற்றி ஆராய்ந்து முடிவெடுக்கும் சரியான முறைகள்; ஒருவன் ஒரு வேலையைச் செய்து முடிப்பதற்கான வழிமுறை என்ன என்பதை விதிகள் விளக்கிக் கூறுகின்றன. கொள்கைகள் அப்படி எந்த ஒரு குறிப்பிட்ட வழிமுறையையும் விளக்கிக் கூறுவதில்லை.

இந்து மதமா, சட்ட விதியா?

விதிகள் சமையல் குறிப்புகளைப் போல. என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பதை மட்டும் கூறுகின்றன. கொள்கைகள் (எடுத்துக்காட்டாக ‘நீதி') ஒருவர் தன் விருப்பங் களையும் நோக்கங்களையும் எதை ஒட்டி அமைத்துக் கொள்வது என்ற பார்வைக் குறிப்பைத் தருகின்றன. ஒருவர் தன் பணியைச் செய்து முடிக்க முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியவை எவை? மனதிலே ஆழமாகப் பதியவைத்துக் கொள்ள வேண்டியவை எவை? என்பதில் ஒருவருடைய சிந்தனைக்கு வழிகாட்டுவது கொள்கை.

ஆக, விதிகளுக்கும் கொள்கைகளுக்கும் இடையே வேறுபாடு இருக்கிறது. அதாவது விதிப்படி செய்யும் செயலுக்கும் கொள்கைப்படி செய்யும் செயலுக்கும் இடையில் - அளவிலும் பண்பிலும் வேறுபாடுள்ளது என்பதே உண்மை. ஒரு கொள்கை தவறானதாக இருப்பினும் அந்தக் கொள்கை வழிநின்று செய்யும் செயல் மனமறிந்து செய்யப்படுவதும் பொறுப்புணர்ச்சியோடு கூடியதும் ஆகும். விதி என்பது சரியான தாக இருக்கலாம். ஆனால், விதிப்படியான செயல் எந்திரகதியில் ஆனது.

மதச் செயல்பாடு சரியான செயல்பாடாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், குறைந்த பட்சம் பொறுப்புணர்ச்சி உள்ள செயல்பாடாக அது இருந்தாக வேண்டும். இந்தப் பொறுப்புணர்ச்சி ஏற்பட வேண்டும் என்றால், மதம் கொள்கைகளால் மட்டுமே ஆனதாக இருந்தாக வேண்டும். விதிகளால் ஆனதாக இருக்க முடியாது. மதம் வெறும் விதிகளாகச் சீரழிந்து போகிற அந்தக் கணமே - அது மதம் என்று அழைக்கப்படுவதற்கான அருகதையை இழந்து விடுகிறது. ஏனென்றால், உண்மையான மதச் செயல்பாட்டின் சாரம்சமாகிய பொறுப்புணர்ச்சியையே அது அழித்து விடுகிறது. இந்த இந்து மதம் என்பதுதான் என்ன? கொள்கைகளின் தொகுப்பா அல்லது விதிமுறைகளா?

வேதங்களிலும் ஸ்மிருதிகளிலும் சொல்லியிருக்கிறபடி பார்த்தால் இந்து மதம் என்பது சடங்கு, சமூகம், அரசியல், சுகாதாரம் பற்றிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கலவையாகவே இருக்கிறது. இந்துக்களால் மதம் என்று சொல்லப்படுவது, எண்ணிலடங்காத கடமைகளும் கட்டுப்பாடுகளுமே தவிர வேறில்லை. எல்லா காலங்களுக்கும் எல்லா நாடுகளுக்கும் எல்லா மனித இனங்களுக்கும் ஏற்ற, உலக மக்கள் அனைவருக்கும் ஒத்துவரக்கூடிய ஆன்மீகக் கொள்கைகளாக இந்து மதம் இல்லை. ஒருவேளை அப்படியிருந்தாலும் கூட, அதுபோன்ற ஒரு கொள்கை இந்து மதத்தவன் ஒருவனின் வாழ்க்கையை வழிநடத்தக் கூடியதாக இல்லை. இந்து மதத்தவன் ஒருவனுக்கு ‘தர்மம்' என்பது கடமைகளும் கட்டுப்பாடுகளும்தான். தர்மத்தைப் பற்றி வேதங்களிலும் ஸ்மிருதிகளிலும் கூறி இருப்பதையும் அவற்றிற்கு விளக்க உரைகள் எழுதியிருப்பவர்கள் அதைப் புரிந்து கொண்டிருக்கும் விதத்தையும் பார்த்தால் இது தெளிவாகும்.

வேதங்களிலும் பெரும்பாலும் தர்மம் என்னும் சொல், மதச் சட்டங்கள் - மதச் சடங்குகள் என்னும் பொருளிலேயே கையாளப்படுகின்றன. ஜெய்மினியும் கூட தன் ‘பூர்வ மீமாம்சை' யில், "வேத விதிகளின் ­மூலமாக வரை யறுக்கப்பட்டுள்ள விரும்பத்தக்க லட்சியம் அல்லது பலனே தர்மமாகும்'' என்று கூறுகிறார். அப்பட்டமாகச் சொன்னால், இந்துக்கள் ‘மதம்' என்று அழைப்பது உண்øமயில் சட்டங்களைத்தான் அல்லது சட்டமாக ஆக்கப்பட்டுள்ள வகுப்புவாரி நீதிநெறிகளைத்தான். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால், இந்தச் சட்டங்களின் தொகுப்பை மதமென்று சொல்ல நான் மறுக்கிறேன்.

(சாதியை ஒழிக்கும் வழி என்ன? நூல்)

Pin It