ஈழத்தின் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு கண்டன பொதுக் கூட்டம் ‘குருதியில் உறைந்த மே 17’ என்ற தலைப்பில் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் மே 17 ஆம் தேதி மாலை தேனிசை செல்லப்பா எழுச்சி இசையுடன் தொடங்கியது. ‘முள்ளி வாய்க்காலில் சிந்திய குருதி - தமிழின விடியலை முன் நகர்த்தும் இது உறுதி’ என்று மேடையில் பின்புறம் பதாகை அமைக்கப்பட்டிருந்தது. மேடைக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த ஒளிச்சுடரை கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஏற்றி, கூட்டத்தில் உறுதிமொழியைப் படித்தார். கரங்களில் மெழுகுவர்த்தியை ஏந்திய கூட்டத்தினர், உறுதிமொழியைத் திருப்பிக் கூறினர். 

“முள்ளி வாய்க்கால் முடிந்த கதை அல்ல; முள்ளி வாய்க்காலில் புதைக்கப்பட்ட வீர வித்துக்களுக்கு, வீர வணக்கம்; அமைந்து விட்ட தமிழ் ஈழ அரசை சூழ்ச்சியால் சிதைத்து, அழித்த இந்திய பார்ப்பனிய சர்வதேச சூழ்ச்சிகளை மக்கள் மன்றத்தில் தொடர்ந்து அம்பலப்படுத்துவோம். விரைவில் தொடங்க இருக்கும் விடுதலைப் போராட்டத்துக்கு தாய்த் தமிழகம் தோள் கொடுக்கும் என்று உறுதி ஏற்கிறோம். முள்ளிவாய்க்கால் முடிந்த கதை அல்ல; முள்ளி வாய்க்கால் முடிந்த கதை அல்ல.” - என்ற உறுதி மொழி எடுக்கப்பட்டது. 

தொடர்ந்து வீ. பொற்கோவன் வரவேற்புரையாற்ற கரு. அண்ணாமலை தலைமையில் தோழர்கள் செ. செயசீலன், மு. வெங்கடேசன், சு. துரைராசு முன்னிலையில் பொதுக் கூட்டம் தொடங்கியது. அன்பு தனசேகர், வழக்கறிஞர் அமர்நாத், இதழாளர் அய்யநாதன், பொதுச்செயலாளர்கள் விடுதலை இராசேந்திரன், கோவை இராமகிருட்டிணன், துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் இந்திய ஆட்சியையும், துரோகத்துக்கு துணை நின்ற தி.மு.க. ஆட்சியையும் கண்டித்து உரையாற்றினர். தஞ்சை தமிழன் நன்றி கூறினார். இனவெறித்தாக்குதலுக்கு பலியான தமிழர்களின் புகைப்படக் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பொது மக்கள் புகைப்படக் காட்சிகளைக் கண்டு, கண்ணீர் சிந்தினர். 

கழகத்தில் இணைந்தனர் 

எம்.ஜி.ஆர் நகர் பொதுக் கூட்டத்தில் தோழர்கள் சோ. மதிவாணன்,ம.முரளி, தி. வெங்கடேசன், செ.தமிழ்ச் செல்வன், அ. தினேஷ்குமார், விஜயகுமார் ஆகியோர் பெரியார் திராவிடர் கழகத்தில் இணைந்தனர். பொதுச் செயலாளர்கள் முன்னிலையில் கழகத் தலைவர் அனைவருக்கும் மேடையில் ஆடை போர்த்தினார். 

உலக தேசிய இனங்களின் விடுதலை போராட்டங்கள் நூல் வெளியீடு 

சென்னை எம்.ஜி.ஆர். நகர் கழகக் கூட்டத்தில் ‘உலக தேசிய இனங்களின் விடுதலை போராட்டங்கள்’ என்ற நூலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட இதழாளர் அய்யநாதன் பெற்றுக் கொண்டார். பாரதிதாசன் பதிப்பகம் வெளியிட்ட இந்நூலின் ஆசிரியர்கள் வி.நி. தமிழ்மாறன், வி.தமிழ்க்குமரன். 11 நாடுகளின் விடுதலைப் போராட்ட வரலாறுகள், இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Pin It