கி.மு. ஆயிரமாவது ஆண்டுகளில், அசோகப் பேரரசு, தெற்கில் நாசிக் வரையில் பரவியிருந்தது. அப்போதும் தமிழ்நாடு தமிழரசர்களாலேயே ஆளப்பட்டது.

கி.பி. ஆயிரமாவது ஆண்டுகளில், அக்பர் பேரரசு, இந்தியாவின் விரிவான பகுதிகளை ஆண்டது. அப்போ தும் தமிழ்நாட்டைத் தமிழரசர்களே ஆண்டனர்.

மாலிக் கபூர் படையெடுப்புக்குப் பின்தான் பாண்டியர் அரசு சிதைந்தது. இது நடந்தது 1310இல். தெலுங்கு நாயக் கர்கள் ஆட்சியில் தமிழ்நாட்டில் பார்ப்பனியப் பண்பாடும், பார்ப்பனிய வீட்டு வாழ்க்கை முறையும் சமய வாழ்க்கை முறையும் கெட்டியாகப் பரப்பப்பட்டன. வருணசாதியில் உயர்சாதியான பார்ப்பனர்களும்; சூத்திரச் சாதிகளில் உயர்வான கார்காத்த வேளாளர்களும் தெலுங்கு நாயக்கர்களும் ரெட்டிகளும் தமிழ்நாட்டில் நில உடைமை ஆதிக்கம், அரசுப் பணிகளில் ஆதிக்கம் கொண்டு, பெரிய எண்ணிக்கையிலான கீழ்ச்சாதி மக்களின் வாழ்க்கையைச் சிதைத்தனர். இந்தச் சூழலில்தான் வெள்ளையர் ஆட்சி 1801இல் சென்னை மாகாணத்தில் நிலைபெற்றது.

வெள்ளையர்களின் ஆட்சி மேலேகண்ட கட்டுக்கோப்பைக் குலைக்கவில்லை.

வெள்ளையர் காலத்தில் 1916இல் தோற்றுவிக்கப்பட்ட நீதிக்கட்சி ஆட்சி, 1920 திசம்பர் முதல் 1926 நவம்பர் வரையிலும்; சுயேச்சைகளைக் கொண்ட ஆட்சி 1926 முதல் 1929 வரையிலும்; பின்னர் 1930 முதல் 1937 சூலை வரையில் ஆண்ட நீதிக்கட்சி ஆட்சியும், மத்தியச் சட்டப்பேரவை ஆதிக்கம், சென்னை மாகாணத்தில் பார்ப்பனரின் மாகாணச் சட்டமன்ற ஆதிக்கம்; மாகாண அரசு வேலைகளிலும் மற்றும் சென்னை மாகாண எல்லைக்குள் இயங்கிய மத்திய அரசுத் துறைகளின் வேலைகளிலும் பார்ப்ப னரின் பேராதிக்கம் இவற்றை ஒழிக்க எல்லாம் செய்தன. சமயம், மதம், மடங்கள், கோயில்களில் பார்ப்பனர்களுக்கும் மேல்சாதிச் சூத்திரர்களுக்கும் இருந்த ஆதிக்கத்தை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தன.

ஆனால் சென்னை மாகாண அரசு தன்னுரிமையை - ஓர் அரசுக்கு உரிய உயர் அதிகாரங்களில் தன்னாட்சியைப் பெற்றிருக்கவில்லை.

அப்படிப்பட்ட உரிமை சென்னை மாகாணத்துக்கு வேண்டும் என்பதற்கு மாறாக, ‘தமிழ்பேசும் மாவட்டங்களுக்குத் தன்னுரிமை வேண்டும்’ என்ற கோரிக்கை தில்லி மாநிலங்கள் அவையில், 1926இல், சி. சங்கரன் நாயர், பி.சி. தேசிகாச்சாரி ஆகி யோரால் முன்மொழியப்பட்டது. அது 15.3.1926 இல் தோற்கடிக்கப்பட்டது.

பிறகு, 1931இல், தமிழ்பேசும் மாவட்டங்கள் மற்றும் உள்ள மொழி மாகாணங் களுக்குத் தன்னுரிமை வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை, மாநிலங்கள் அவையில் சி. சங்கரன் நாயர் மீண்டும் முன்மொழிந்தார். அத்தீர்மானமும் தோற்கடிக்கப்பட்டது.

1935ஆம் ஆண்டைய அரசுச் சட்டப்படி, 1937இல், முதலாவதாக நடந்த பொதுத் தேர்தலில், சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி என்கிற திராவிடக் கட்சி படுதோல்வி அடைந்தது; காங்கிரசுக் கட்சி பெருவெற்றி பெற்றது.

சி. இராசகோபாலாச்சாரியார் சென்னை மாகாணப் பிரதமர் (PREMIER) ஆனார். அவர், காந்தியாரின் நிர் மாகாணத் திட்டங்களின்படி, இந்தி மொழிப் பாடத்தை 6ஆம் வகுப்புக்கு மேல் கட்டாயப் பாடமாகத் திணித் தார். தமிழறிஞர்களும், தமிழ்இன இளைஞர்களும், தமிழ்நாட்டு மாணவர்களும், பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தினரும், கற்றறிந்த தமிழ்த்தாய்மார்களும் இந்தித் திணிப்புக்கு எதிராகக் கொதித்தெழுந்தனர். ஏறக்குறைய 1300 பேர் சிறை புகுந்தனர்.

பெரியார் ஈ.வெ.ரா. சென்னை, பெல்லாரி, கோவை சிறைகளில், இந்தி எதிர்ப்புக்காகத் தண்டனை அனு பவித்தார். பெரியார் இயக்கத்தின் இந்தி எதிர்ப்புப் பரப்பு ரைப் படை, 11-9-1938இல் சென்னை திருவல்லிக் கேணிக் கடற்கரையை அடைந்தது. அப்படையை வரவேற்கும் எழுச்சி மிக்க அக்கூட்டத்தில் தான், “தமிழ் நாடு தமிழருக்கே!” என்ற அரசியல் கொள்கை முழக் கத்தை, ஈ.வெ.ரா. எழுப்பினார். அம்முழக்கம், 1939 இலேயே “திராவிட நாடு திராவிடருக்கே!” எனப் பெரி யாரால் மாற்றம் பெற்றது.

இவையெல்லாம் தமிழ்மாவட்டங்களில் தான் நடை பெற்றன; மற்ற மொழி மாவட்டங்களில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி நடைபெறவில்லை; நாட்டுப் பிரிவினைக் கோரிக்கையும் எழுப்பப்படவில்லை.

1940இல் திருவாரூர் நீதிக்கட்சி மாநாட்டில், எல்லாத் திராவிட மொழித் தலைவர்களும் பங்கேற்றனர்; “திராவிட நாடு” படம் திறந்து வைக்கப்பட்டது. அதன் பிறகும் தமிழ்நாட்டைத் தவிர்த்த மற்ற திராவிட மொழி மாநிலங்களில் நாட்டுப் பிரிவினைக் கோரிக்கை பரப் பப்படவில்லை.

1942இல் இந்தியாவுக்கு வந்த பிரிட்டிஷ் அமைச்சரவைக் குழுவின் தலைவர் சர். °டாப்ஃபோர்டு கிரிப்° என் பவரிடம், தனித் திராவிட நாடு பற்றிய கோரிக்கையை முன்வைக்காமல்,

“சென்னை மாகாணத்தைத் தில்லி ஆட்சித் தொடர் பிலிருந்து விடுவித்து, அப்பகுதி மட்டும், நேரடியாக, பிரிட்டிஷாரால் ஆளப்பட வேண்டும்” என்றே பெரியார் தலைமையில் சென்ற குழுவினர் கோரினர். இது, சுதந்தர நாடு கோரியது ஆகாது. சென்னை மாகாணம் பற்றிய அந்தக் கோரிக்கையைத் தமிழ்நாட்டு நீதிக் கட்சித் தலைவர்களான ஈ.வெ. இராமசாமி, என்.ஆர். சாமியப்பா, ஊ.பு.அ. சவுந்தர பாண்டியன், எம்.ஏ. முத்தய்யா செட்டியார் ஆகிய நால்வர் குழுவே கிரிப்° குழுவிடம் முன்வைத்தது. அக்கோரிக்கையை ஏற்க முடியாது என, 1945இல் கிரிப்° குழு பரிந்துரைத் ததை ஏற்று, பிரிட்டிஷ் அரசு அறிவித்தது.

அந்நேரத்தில் தான், திருச்சிராப்பள்ளியில், 1945 செப்டம்பர் 29, 30இல் நடைபெற்ற - திராவிடர் கழக மாநாட்டில், முதன்முதலாகத் “தனிச் சுதந்தர திராவிட நாடு” பற்றிய தெளிவான - திட்டவட்டமான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதில் தடுமாற்றம் ஏதும் இல்லை.

ஆனால் இதை அடைய வேண்டித் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்கள் :

1. 1948இல் இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போராட்டம்;

2. வடநாட்டார் கடைமுன் மறியல் போராட்டம்;

3. 1960இல் “தமிழ்நாடு நீங்கிய இந்திய தேசப்பட எரிப்புப் போராட்டம்” முதலானவை மட்டுமே. இவையும் தமிழ்நாட்டோடு நின்றன.

இந்நிலையில், “தனிச்சுதந்தரத் திராவிட நாடு” கோரிய பெரியார் இயக்கம் ஓர் அரசியல் கட்சியே ஆகும். ஆனால், பெரியார் தொண்டர்களில் பலரும், மற்றோரும், “பெரி யார் இயக்கம் ஒரு சமுதாயப் புரட்சி இயக்கமே” என்று தவறாகவே கொள்கின்றனர். ஓர் அரசை அமைக் காமல் எந்தப் புரட்சியையும் எவரும் செய்ய முடியாது; பெரியாரின் கொள்கைகளை நிறைவேற்றிட இயலாது என்பதை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

திராவிடர் கழகத்திலிருந்து 1949இல் பிரிந்த திராவிட முன்னேற்றக் கழகம், 1962 வரை “திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கை” பற்றிப் பேசியது; எழுதியது. ஆனால், தி.மு.க. தேர்தலில் ஈடுபட்டதால், “தேர்தல் முடிந்த பிறகு, வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்கும் போது கூறவேண்டிய, ஒற்றை இந்திய விசுவாசம் பற்றிய உறுதிமொழியை, தேர்தலில் போட்டியிட வேட்பாளர் விண்ணப்பம் தரும் போதே கூறிட வேண்டும்” என்று அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டவுடன், திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டது. இது மாபெரும் அவலம் ஆகும்.

இது நடைபெறுவதற்கு முன்னரே, சென்னை மாகாணம், மொழிவாரியாக, 1.11.1956இல் பிரிக்கப்பட்டது. அன்று முதல் 1973இல் பெரியார் மறையும் வரை யில், “தனிச் சுதந்தரத் தமிழ்நாடு வேண்டும்” என்ற கோரிக்கை திராவிடர் கழகத்தாரால் தூக்கிப் பிடிக்கப் பட்டது.

இந்திரா காந்தி ஆட்சியின் 1975ஆம் ஆண்டைய அவசர கால ஆட்சிக் கொடுமைகளுக்கு ஆளான திராவிடர் கழகம், இந்திய ஒருமைப்பாட்டை ஏற்றுத் தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம், “தனிச்சுதந்தரத் தமிழ்நாடு” கோரிக்கையைக் கைவிட்டது.

திராவிடர் கழகத்திலிருந்து 16.11.1975இல் வெளி யேற்றப்பட்ட என்னைப் போன்ற தி.க. உறுப்பினர் களால், 8.8.1976இல் உருவாக்கப்பட்ட “பெரியார் சமஉரிமைக் கழகம்” எடுத்த எடுப்பில், “தன்னுரிமை மொழிவாரி மாநிலங்களைக் கொண்ட மதச் சார்பற்ற சமதர்ம இந்தியக் கூட்டாட்சியை அமைப்பது” என்ப தைத் தன் அரசியல் குறிக்கோளாக ஏற்றுக்கொண்டது.

“பெரியார் சம உரிமைக்கழகம்” என்ற பெயர், 1981 முதல் 1988 வரையில் நடந்த விவாதங்களுக்குப் பின்னர், “மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி” என, 13-03-1988இல் மாற்றப் பெற்றது; கொடி யும் அதற்கு ஏற்ற வண்ணம் உருமாற்றம் பெற்றது.

இந்த அரசியல் குறிக்கோளை அடைவதை அறி விக்கும் தன்மையில், புதுதில்லியில், மவுலங்கர் மன்றத் தில், 1991 அக்டோபர் 18, 19, 20 நாள்களில் மாபெரும் மாநாடுகளை நடத்தியது.

பஞ்சாபைச் சார்ந்த - உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜித்சிங் பெயின்° தலைமையில், “உண்மை யான இந்தியக் கூட்டாட்சிக்கான விவாதக்குழு” 20.10.1991இல், அமைக்கப்பட்டது. நீண்ட இடை வெளிக்குப் பின்னர், 2000 முதல் தில்லி, பஞ்சாப், தமிழ்நாடு, ஜம்மு முதலான இடங்களில் ஒருங்கிணைப் பாளர் வே. ஆனைமுத்து தலைமையில் விளக்கக் கூட்டங்களும், மாநாடுகளும், கலந்துரையாடல்களும் நடைபெற்றன.

2011, 2012, 2013ஆம் ஆண்டுகளில் முறையே மறைமலைநகர், பல்லாவரம், வேலூர் முதலான இடங்களில், “தன்னுரிமைத் தமிழ்நாடு கோரிக்கை மாநாடுகள்” நடத்தப்பெற்றன.

2012ஆம் ஆண்டில் தமிழ்நாடு, தில்லி, பஞ்சாப் முதலான பகுதிகளிலும்; 2013இல் தமிழ்நாடு, தில்லி, பஞ்சாப், ஜம்மு முதலான பகுதிகளிலும் வே.ஆனைமுத்து தலைமையில், இதற்கான இணக்கமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

“பாதுகாப்பு, பண அச்சடிப்பு, செய்தித் தொடர்பு ஆகிய மூன்று துறைகள் தவிர்த்த, மற்றெல்லாத் துறை அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்ட மொழிவாரித் தன்னுரிமை மாநிலங்களைக் கொண்ட - உண்மையான, மதச்சார்பற்ற, சமதர்ம இந்தியக் கூட்டாட்சியை நிறுவுவோம்” என்பதே, மார்க்சியப் பெரி யாரியப் பொதுவுடைமைக் கட்சியின், இறுதி அரசியல் இலக்கு ஆகும்.

அத்துடன், நம் முன் உள்ள உடனடிப் பணிகளான - தமிழ்வழிக் கல்வித் திட்டம் வந்து சேரவும், விகிதாசார வகுப்புவாரி இடப்பங்கீடு கோரிக்கை வெற்றி பெறவும் ஆன வேலைத் திட்டங்களை வகுத்திடுவோம்!

இவற்றுக்கான விழிப்புணர்வைத் தமிழரிடையே பெரிய அளவில் உண்டாக்குவோம்; போராடுவோம்.

இதனைக்கருதி, வரும் 2014 சனவரி 4 சனி, 5 ஞாயிறு ஆகிய நாள்களில் அரியலூர் மாவட்டம் செயங் கொண்ட சோழபுரத்தில் மங்களம் திருமண மண்டபத் தில் கூடுவோம்; பேசுவோம்; கலந்துரையாடுவோம் - வாருங்கள், வாருங்கள்! எனத் தமிழின இளைஞர் களையும், மாணவ மணிகளையும், தமிழ்ப்பெருமக் களையும், தமிழ்த் தாய்மார்களையும் அன்புடனும் ஆவலுடனும் மனமார அழைக்கிறோம்!

“தன்னுரிமைத் தமிழ்நாடு காணத் தமிழர்கள் திரண்டெழுவோம் வாருங்கள்! வாருங்கள்!”

Pin It