உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவரும், மக்கள் உரிமைகளுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் போராடிவருபவரும், மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவராகயிருப்பவருமான வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களின் 99ஆம் அகவை யையொட்டி 23-11-13 அன்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், ‘உயிர்வலி’ என்ற ஆவணப் படம் வெளியிடப்பட்டது. இந்த ஆவணப் படம் தமிழர்களின் உள்ளங்களைப் பதைபதைக்கச் செய்துள்ளது. இராசிவ் காந்தி கொலை வழக்கில், மனதறிய எந்தக் குற்றமும் செய்யாத - நிரபராதியான பேரறிவாளன், மரண தண்டனைக் கயிறு தன் கழுத்தை எப்போது இறுக்கிக் கொல்லும் என்ற உயிர்வலியோடு, 22 ஆண்டுகளாகச் சிறையில் இருப்பது மாபெரும் அநீதியான கொடுமை என்பதை ‘உயிர்வலி’ ஆவணப்படம் எண்பிக்கிறது.

1991 மே மாதம் திருப்பெரும்புதூரில் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள இராசிவ்காந்தி வந்தபோது மனித வெடிகுண்டு தாக்குதலால் கொல்லப்பட்டார். நேருவின் பேரன் - இந்திராகாந்தியின் மகன் - இந் நாட்டின் தலைமை அமைச்சராக இருந்தவர் என்ற காரணங்களால் இந்த வழக்கு விசாரணை, தொடக்கம் முதலே முறையாக நடத்தப்படவில்லை. மேலும் இந்த வழக்கு தடா (தீவிரவாதம் மற்றும் சீர்குலைவுகள் தடுப்புச் சட்டம்) சட்டத்தின்கீழ், சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையில் பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. காவல்துறையில் மாவட்டக் கண்காணிப்பாளர் பதவிக்கு நிகரான பதவியில் உள்ள ஒருவர் முன்னால் குற்றஞ் சாட்டப்பட்டவர் கொடுக்கும் வாக்குமூலம் சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்படும். தடா சட்டத்தின் கீழ் அல்லாத வழக்குகளில் காவல்துறை அதிகாரியிடம் குற்றவாளி அளித்ததாகக் கூறப்படும் சாட்சியம் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஏனெனில் அச்சாட்சியம் குற்றவாளியைத் துன்புறுத்திப் பெறப்பட்டதாக இருக்கும் எனக் கருதப்படுவதால்! தாடா சிறப்பு நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யமுடியாது. உச்சநீதிமன்றத்தில்தான் மேல்முறையீடு செய்ய வேண்டும்.

முதல் கோணல் முற்றும் கோணல் என்பதுபோல், தடா சிறப்பு நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்ட 26 பேருக் கும் மரண தண்டனை விதித்தது. இத்தீர்ப்பு தமிழகத் தில் மட்டுமின்றி உலகெங்கும் உள்ள மானுட உரிமை செயற்பாட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்தது. ஆனால் அப்போது நடுவண் புலனாய்வுத் துறையால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலை வராக இருந்த டி.ஆர். கார்த்திகேயன், 26 பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனை, இராசிவ் காந்தி கொல்லப்பட்டதற்குக் கிடைத்த நியாயமான தீர்ப்பு என்று பெருமிதம் கொண்டார். ஆளும்வர்க்கத்துக்கு விசுவாச மாக நடந்துகொண்டதற்காக, பின்னாளில் கார்த்திகேயன் சி.பி.அய். தலைவராக அமர்த்தப்பட்டார்.

26 பேரின் மரண தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. 22 பேரின் மரண தண்டனையை நீக்கியும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வரின் மரண தண்டனையை உறுதிசெய்தும் உச்சநீதிமன்றம் தீர்ப் பளித்தது. அதன்பின், நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரின் கருணை விண்ணப்பம் குடியரசுத் தலைவர் மாளிகையில் 19 ஆண்டுகள் கிடப் பில் போடப்பட்டிருந்தது. தன் பதவிக்காலம் முடிவதற் குச் சற்று முன்னால், குடியரசுத் தலைவர் பிரதீபா இம்மூவரின் கருணை விண்ணப்பங்களை ஏற்க முடியாது என்று மறுத்துவிட்டார்.

இந்நிலையில் 23-11-13 அன்று வெளியிடப்பட்ட ‘உயிர்வலி’ ஆவணப் படத்தில், தடா சிறப்பு நீதிமன்றத் தில் வழக்கு விசாரணையின்போது, பேரறிவாளன் வாக்குமூலத்தைப் பதிவு செய்த சி.பி.அய். கண்காணிப்பாளர் வி. தியாகராசன் திடுக்கிடும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த ஆவணப் படத்திற்காக, தற்போது புவனேசு வரத்தில் வாழும், வி. தியாகராசன் அளித்த பேட்டியில், “என்னிடம் அறிவு (பேரறிவாளன்) வாக்குமூலம் கொடுத்த போது, “அந்தப் பேட்டரிகளை எதற்காக வாங்கி வரச் சொன்னார்கள் என்று எனக்குத் தெரியாது” என்றார். ஆனால் வாக்குமூலத்தை நான் முழுமை யாகப் (Verbation) பதிவு செய்யவில்லை. அவரது முழுமையான வாக்குமூலத்தைப் பதிவு செய்திருந் தால், வழக்கின் போக்கே மாறியிருக்கும். தவிர, பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப் படையில் மட்டுமே அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பார்க்கும்போது, 22 ஆண்டுகளுக்கு முன் நடந்த இச்செயல் எனக்கு மிகவும் வேதனை அளிப்பதாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

மேலும், மற்றொரு உறுதியான உண்மையையும் திட்டவட்டமாக வி. தியாகராசன் தெரிவித்திருக்கிறார். “முதன்மையான குற்றவாளியான சிவராசன் விடு தலைப்புலிகளின் தலைமையகத்துக்கு அனுப்பிய செய்தியில், இராசிவ் காந்தியைக் கொல்லத் திட்டமிடப் பட்டுள்ள செய்தி நளினியைத் தவிர, வேறு எவருக்கும் தெரியாது என்று கூறுப்பட்டிருந்தது. இந்த உண்மை சி.பி.அய். தலைமைக்கு நன்கு தெரியும். இந்த வழக்கில், இச்செய்தி, மறுக்கமுடியாத உறுதியான சான்றாதார மாகத் திகழ்கிறது. எனவே பேரறிவாளனுக்கு இராசிவ் காந்தியைக் கொல்லத் திட்டமிடப்பட்டிருப்பது பற்றியோ, அதற்காகத்தான் பாட்டரிகளை வாங்கிக் கொடுக்கிறோம் என்பதோ தெரியாது. எனவே உறுதியான சான்றா தாரத்தின் அடிப்படையில் அல்லாமல் வெறும் ஊகத்தின் அடிப்படையில் மேலோட்டமான தன்மையில் ஆராய்ந்து, மரணதண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாகப் பேரறிவாளனின் மரண தண்டனை என் உள்ளத்தை உறுத்திக் கொண்டேயிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

பேரறிவாளன், இராசிவ் காந்தி கொல்லப்படப் போகிறார் என்பதை நன்கு அறிந்திருந்தும், அதற்கான மனித வெடிகுண்டு செய்வதற்காகப் பாட்டரிகளை வாங்கிக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தான் பேரறிவாளனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இத்தகைய குற்றச்சாற்றுக்கான ஆதாரம் இல்லை என்கிற உண்மை முன்பே எல்லோருக்கும் தெரியும். ஆயினும் ‘உயிர்வலி’ ஆவணப் படத்தில், வி. தியாக ராசன் கூறியிருப்பதன் மூலம், பேரறிவாளன் குற்ற மற்றவர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்குகிறது.

எனவே இராசிவ் காந்தி கொலை வழக்கில், பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற பகை உணர்ச்சியுடன் இந்த வழக்குப் புனையப்பட்டு, உச்ச அளவான மரண தண்டனை அப்பாவிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது என்பது எல்லோரும் அறியும் வகையில் இப்போது இந்த ஆவணப் படத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.

மரண தண்டனை விதித்த நீதிபதிகளில் ஒரு வரான கே.டி. தாமசு, “இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடாது. ஏனெனில் அப்படி நிறைவேற்றினால் ஒரே குற்றத்திற்காக இரண்டு தடவைகள் தண்டனை நிறை வேற்றப்பட்டதாகும்” என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்த ஆவணப் படத்தின் இயக்குநர் பிரகதீசுவரன், “தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் முன்பு தண்டனைக் கைதியின் பின்னணியை ஆராய்ந்து, உண்மையிலேயே அவர் இந்த உலகத்தில் வாழத் தகுதியில்லாதவர்தானா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லியிருக் கிறது. அதன் அடிப்படையில் பேரறிவாளனின் பின்ன ணியை அறிவுபூர்வமாக ஆவணப்படுத்தியுள்ளோம். இதன் பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வந் துள்ளன” என்று கூறியுள்ளார்.

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்த டி.ஆர். கார்த்திகேயனும், “இராசிவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள் ளவர்கள் 22 ஆண்டுகள் சிறையில் இருந்த பிறகும் தூக்கிலிடப்பட வேண்டுமா என்பது குறித்து நீதிபதி கே.டி. தாமசும், நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யரும் கொண்டுள்ள கருத்தை நானும் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார் (தி இந்து, 25-11-13).

பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், முதல மைச்சர் செயலலிதாவுக்கு அளித்துள்ள விண்ணப் பத்தில், தற்போது வெளிப்பட்டுள்ள உண்மைகளின் அடிப்படையில் பேரறிவாளனையும் மற்ற இருவரை யும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டு அரசும், தமிழ்நாட்டில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் ஒன்றிணைந்து, நடுவண் அரசுக்கு அழுத்தம் தந்து, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் உடனே விடுதலை செய்யப்படு வதற்குப் பாடுபட வேண்டும்.

Pin It