இங்கிலாந்தில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறி, அமெரிக்கர் இங்கிலாந்து ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற விதைபோட்டவர் தாமஸ் பெய்ன் - Thomas Paine.

அப்போது முதல் அறிவியல் ஆய்வு மிகவிரைந்து வளர்ந்தது.

இப்போது அமெரிக்க அறிவியல் அறிஞர்கள் - ஓர் இந்திய அறிஞர் உட்பட, மிகப் பெரிய கண்டுபிடிப்பைச் செய்திருக்கிறார்கள். அது என்ன?

நாம் வாழும் இந்த நிலத்திலிருந்து 1300 கோடி ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கிற ஒரு நட்சத்திரக் கூட்டத்தை அவர்கள் இப்போது கண்டுபிடித்திருக் கிறார்கள்.

செவ்வாய் (Mars)க் கோள் என்கிற சிவப்புக் கோள் வரை சென்று, அந்தக் கோளுக்கு வெளிப்புறத்தில் சுற்றிச்சுற்றி, அந்த செவ்வாய்க்கோளில் என்னென்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்திட வேண்டி, ஹரிகோட்டாவிலுள்ள விண்வெளி ஆய்வு மய்யம்,

15-11-2013 அன்று, “மங்கள்யான்” - என்ற பி.எஸ்.எல்.வி.சி விண்கலத்தை அனுப்பியிருக்கிறது.

அந்தச் செவ்வாய்க் கோளில் குடியேறி வாழ்வ தற்காக, கி.பி.2025இல் பயணம் போவதற்கு உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான பணக்காரர்கள் முன் பதிவு செய்திருக்கிறார்கள். அங்குப் போனால் ஒரு போதும் உயிரோடு திரும்பிவர முடியாது என்று தெரிந்த பிறகு, அங்குப் போக இவர்கள் கோடிக்கணக்கான ரூபா செலவு செய்ய முன்வந்திருக்கிறார்கள்.

ஆகப் பெரிய இந்த அளவுக்கு அறிவியல் வளர்ச்சி பெற்ற அமெரிக்காவில், 2013 நவம்பர் 1-2இல், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் தீபாவளியைக் கொண்டாட, அமெரிக்க நாடாளுமன்ற இந்தியக் குழுவினர் ஏற்பாடு செய்தனர்.

122 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் 103 கோடிப் பேர் இந்துக்கள். தமிழகத்தில் வாழும் 7.5 கோடிப் பேரில் 90 விழுக்காட்டினர் - 6.4 கோடிப் பேர் இந்துக்கள். இவர்களுள் ஓர் 25 இலட்சம் பேர் பார்ப் பனர்கள்.

அமெரிக்க நாடாளுமன்றத்திலும், இந்தியா முழு வதிலும், தமிழகம் முழுவதிலும் மிக மிகச் சிறப்பாக இவர்களால் தீபாவளி கொண்டாடப்பட்டது.

காலங்காலமாக வடஇந்தியாவில் கொண்டாடப் பட்ட தீபாவளி கொண்டாட்டம், கி.பி.15ஆம் நூற் றாண்டு முதல் தமிழகத்தில் கொண்டாடப்படுவதாக ஒரு சாரார் கூறுகின்றனர்.

இப்படிப்பட்ட இந்தியாவில்தான், பெரியார் ஈ.வெ.ரா. 26-12-1926இல் “பார்ப்பனர் அல்லாதார் சுயமரி யாதை இயக்கம்” நிறுவப்பட எல்லாம் செய்தார்.

அதன் ஒரு கூறாக, பார்ப்பனப் புரோகித விலக் கத்தை 4-11-1926லேயே அவர் அறிவுறுத்தினார். அப்போது முதல் அங்கொன்றும் இங்கொன்றுமாக - “பிராமணியம் ஒழிந்த - பார்ப்பனியம் ஒழிந்த திரு மணங்கள், நீத்தார் இறுதிக் கடன்கள், திதிகள்” நடந்தன.

1926-1930களில் “பார்ப்பனியம் ஒழித்த வீரர்கள் பட்டியல்” என்று, “குடிஅரசு” ஏட்டில் தொடர்ந்து செய்தி வெளிவந்தது. அதேபோல், “தீபாவளி கொண்டாடாத தீரர்கள் பட்டியல்”, “விடுதலை” நாளேட்டில், 1940-50களில், ஆண்டு தவறாமல் வெளிவந்தது.

அக்காலம் வரையில் தமிழகத்தில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 100க்கு 20 பேர்களே. இன்று தமிழ கத்தில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் ஆண்களில் 85 விழுக்காட்டுப் பேர். பெண்களில் 65 விழுக்காட்டுப் பேர். நகர்ப்புறம், நாட்டுப்புறங்களில் இன்றும் கீழ்ச் சாதிப் பெண்கள் படிப்புப் பெறவில்லை. சரி!

அப்படிப் படிப்பு வளர்ந்த பிறகு - அமெரிக்கா, இந்தியா தமிழகம் இங்கெல்லாம் தீபாவளி கொண்டாடப்படுவது ஏன்? புரோகிதத் திருமணங்கள், கருமாதிகள், திதிகள், குடமுழுக்கு விழாக்கள், தேர் திருவிழாக்கள் நடப்பது ஏன்?

முதலில் தீபாவளி கொண்டாடப்படுவது எதற்காக?

கந்த புராணத்தையும் இராமாயணத்தையும் கரை காண ஆராய்ந்து படித்தவர், பெரியார். அவர் தீபாவளி பற்றி என்ன சொன்னார்?

தென்னாட்டில் வாழ்ந்த திராவிட அரசனான நரகா சுரனை, திருமால் என்கிற கிருஷ்ணன், தேவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு கொன்றான். கொல் லப்பட்ட நரகாசுரனும், அவனுடைய தாயும், கிருஷ்ண னால் கொல்லப்பட்டு நரகாசுரன் மோட்சம் அடைந்த அந்த நாளை எல்லா மக்களும் மகிழ்ச்சியாகக் கொண் டாட வரம் தரும்படி, கிருஷ்ணனிடமே வேண்டினர். எனவே நரகாசுரன் கொல்லப்பட்ட நாளை எல்லோ ரும் மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்கள் என்பதை இடைவிடாமல் பெரியார் சொன்னார்.

எனவே மோட்சத்துக்குப் போக விரும்புகிறவர்கள் - தமிழர்கள் உட்பட, இராட்சசன் ஆன நரகாசுரன் கொல்லப்பட்ட நாளை, புத்தாடை உடுத்தி - பேருணவு களை உண்டு கொண்டாடுவதுதான், தீபாவளி எனப் பெரியார் விளக்கம் தந்தார்.

இது திராவிடருக்கு - தமிழருக்கு இழிவைச் சேர்ப்பது; தேவர்கள் - பூதேவர்கள் என்கிற பார்ப்பனர்களுக்கு உயர்வைச் சேர்ப்பது என்பதை, இடைவிடாமல் 46 ஆண்டுகள் பரப்புரை செய்தார். அவரைப் பின்பற்றும் பெரியார் தொண்டர்கள், அவர் மறைவுக்குப் பிறகு 40 ஆண்டுகளாக அதைப் பரப்புரை செய்கிறோம்.

இன்று, தீபாவளி நாளில் தமிழக மக்களுக்கு வாழ்த்து உரைத்த மாண்புமிகு தமிழக முதல்வர் செயலலிதாவும், பெண் வேட்டைக்குப் பெயர் போன காஞ்சி சங்கராச்சாரி செயேந்திர சரசுவதியும் -

“நரகாசுரன் என்னும் கொடியவனை, மகாலட்சுமி துணையுடன், திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது...” என மகிழ்ச்சி பொங்க வாழ்த்துச் செய்தி விடுத்திருக்கிறார்கள்.

1927 முதல் 1973 முடிய 46 ஆண்டுக்காலம் பெரியாரும், பிறகு அவர்தம் தொண்டர்களும் ஏடு களில் எழுதியும், மேடைகளில் முழங்கியும், ஆராய்ச்சி நூல்களை விற்றுப் பரப்பியும் - அதற்குப் பிறகும் 85 விழுக்காட்டுப் பேர் கல்வி அறிவு பெற்ற தமிழ்நாட்டில் 2013லும் பெரிய சிறப்போடு தீபாவளி கொண்டாடப் படுவது ஏன்? ஏன்? ஏன்?

1.            2012-13 கல்வி ஆண்டில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும்; கல்லூரிகளிலும் 25 இலக்கத்துக்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

மேல்நிலை வரையில் எல்லோரும் 12 ஆண்டு களும்; கல்லூரி, தொழிற்கல்லூரி வரையில் சிலர் 16 ஆண்டுகளும் கல்வி கற்றார்கள்.

அவர்களுக்கு அறிவு ஊட்டிய முதலாவது ஊடகம் கல்வி தான். இந்தக் கல்வியில் 5ஆம் வகுப்பு முதல் 8 ஆண்டுகளில் படிக்கும் எந்தப் பாடப் பகுதியிலும்; மற்றும் கல்லூரி வகுப்புகளிலும் கந்தபுராணம், கம்ப இராமா யணம், வில்லி பாரதம் இவற்றுக்கு விளக்கம் தரும் பாடங்களே கற்பிக்கப்படுகின்றன. இவற்றை மாணவனோ, ஆசிரியரோ ஆராய்ச்சிக் கண்கொண்டு பார்க்கவோ, கேட்கவோ முடியாது; அது கூடாது.

“வழக்கத்தால் மாடுகளும் செக்கைச் சுற்றும்” என்று புரட்சிக் கவிஞர் பாடியதற்கு இணங்க - எந்தச் சாதிக்காரரும் - எந்த அளவு படித்த, படிக்காத பெற்றோர் செய்யும் எதையும் - முதலில், வழக்கத்தால் இளைய தலைமுறையினர் அப்படியே செய்கின்றனர்.

மேலும் அவர்களுக்குத் தரப்படும் கல்வியில், ‘பகுத்தறிவு ஆராய்ச்சி மனப்பான்மை’ என்பதற்கு இடமே இல்லை.

1.            (அ) 1967 முதல் தொடர்ந்து 46 ஆண்டுகளாகத் தமிழ் நாட்டை ஆண்ட திராவிடக் கட்சிகள் இரண்டும் - திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம் பற்றிய வரலாறுகளை எந்த வகுப்பிலும், எந்தப் பாடப் பகுதியிலும் கற்றுத்தரவில்லை.

திராவிட இயக்கப் பெருந்தலைவர்கள் - புரட்சியான செய்திகளை வெளிப்படுத்தியவர்களான டாக்டர் நாயர், டாக்டர் நடேசன், சர்.பி. தியாகராயர், பண்டித அயோத்தி தாசர், பெரியார் மற்றும் பாரதியார், டாக்டர் அம்பேத்கர், பாவேந்தர், காமராசர்; போன்ற மேதைகளின் வர லாறுகளைத் தனிப் பாடங்களாகவோ, துணைப் பாடங் களாகவோ படிப்புத் திட்டத்தில் வைத்துக் கற்பிக்க வில்லை.

1.            (ஆ) மதவாதிகளான இந்து, இ°லாம், கிறித்துவர் செய்வது போல் - முறையே அவரவர், மதத்தத்து வம் சார்ந்த வேத பாடசாலைகள், அரபுக் கல் லூரிகள், இறையியல் கல்லூரிகளை நிறுவி, முறையான மதம் பற்றிய பாடங்களை 7 ஆண்டு கள் கற்றுத் தருவது போல், திராவிட இயக்கத்தார் செய்யவில்லை.

இந்த அடிப்படை இல்லாமல்-காமராசர் 1955இல் தொடங்கி வைத்த கல்விப் புரட்சியால் இங்கு ஏற்பட் டுள்ள ஏட்டுப் படிப்புக் கல்வி, பகுத்தறிவு, சுயமரியாதை, இனமான உணர்வு, தாய்மொழி உணர்வு ஓங்க இடம் தராததாக அமைந்துவிட்டது.

(2)          கல்விக் கூடத்துக்கு அப்பால் அறிவைத் தருகிற - மற்றும் அறிவைச் சிதைக்கிற பணிகளைத் திறமை யாகவும் வலிமையாகவும் செய்யும் ஊடகங்கள் பல உள்ளன. இவை இரண்டாம் நிலையில் உள்ள அறிவூட்டும் கருவிகள்.

காட்சியாக - கேட்பாக உள்ள தொலைக்காட்சி, கருத்துப் பரப்பல் பணியில் 56 விழுக்காடு இடத்தைப் பிடித்துக் கொண்டது; நாள் ஏடுகள், பருவ ஏடுகள், பன்மொழி ஏடுகள் என, அச்சு ஊடகம் 28 விழுக்காடு இடத்தை அடைத்துக் கொண்டது. திரைப்பட உலகம் 11 விழுக்காடு இடத்தை அடைத்துக் கொண்டது; வானொலி, நாடகம், நாட்டியம், இசை, இணையம் முதலான ஊட கங்கள் மேலேகண்ட ஊடகங்களைவிட மிக விசை யாகவும் வலிமையாகவும் வளர்ந்து வருகின்றன.

“மாற்றம் வரக்கூடாது” என்று இன்றும் நம்புகிற மதவாதிகள், மதநிறுவனங்கள் - இவற்றை அப்படியே கட்டிக்காத்து வருகின்றன. பழமையை - பழக்கத்தை - வழக்கத்தைக் கட்டிக் காப்பதற்குப் பன்னாட்டு முத லாளிகளும், இந்நாட்டு முதலாளிகளும் - மதம், இனம், சாதி, கட்சி, இயக்கம், என்கிற வேறுபாடுகளைக் கடந்து பழமையை நிலைக்க வைத்திட, எல்லாம் செய்கின்றனர்.

இவற்றை அடியோடு ஒழிக்க வல்லது எது? பழைய அமைப்பை அடியோடு மாற்றியே தீரவேண்டும் என் பதைத் தலையான குறிக்கோளாகக் கொண்ட ஓர் அரசு அமைக்கப்பட எல்லாம் செய்வது தான் இதை மாற்றிட ஒரே வழி.

இது எங்கோ எட்டாத தொலைவில் இருக்கிறது. அதை எட்டிப் பிடித்திட, மேலேகண்ட முதற்கட்டப் பணி கள் நடந்தாக வேண்டும். அதற்கு நாம் எல்லோரும் சேர்ந்து வழி அமைப்போம், வாரீர்!

Pin It