‘அவுட் லுக்’ (மார்ச் 10) ஏட்டில் அருந்ததி ராய், அம்பேத்கர் நூலுக்கு எழுதிய முன்னுரிமை குறித்து வழங்கிய பேட்டியின் ஒரு பகுதி ஏற்கனவே பெரியார் முழக்கத்தில் (மார்ச் 20) வெளி வந்தது. பேட்டியின் மற்றொரு பகுதி:

கேள்வி: காந்தி ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிடவில்லையா? அவர் நமது நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தரவில்லையா?

பதில் : இதை சுதந்திரம் என்று சொல்வதைவிட வேண்டுமனால் ‘அதிகார மாற்றம்’ என்று சொல்லலாம். காந்திய-அம்பேத்கரிய விவாதத்தில் ‘ஏகாதிபத்தியம், சுதந்திரம்’ போன்ற வார்த்தைகள் நமது புரிதலில் இன்னும் சற்று ஆழமாகவும், சிக்கலாகவும் மாறிப் போகிறது.

அம்பேத்கர் முதல்முறையாக, 1931 ஆம் ஆண்டு காந்தியைச் சந்தித்தார். அப்போது, காங்கிரஸ் மீதான அம்பேத்கரின் தீவிர விமர்சனம் குறித்து காந்தி கேட்கிறார். அதற்கு அம்பேத்கர் அளித்த பதில் மிக பிரபலமானது: ‘காந்திஜி! எனக்கென்று தாயகம் ஏதுவுமில்லை; தீண்டத்தகாதவர்கள் பெருமைப்பட இங்கு எதுவுமில்லை.”

அவர் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய பின்னரும்கூட, பிரித்தானியப் பேரரசுக்குப் ‘பொறுப்புணர்ச்சி’யுடன் நடந்து கொண்டார். ஆனால், ஒரு சில ஆண்டுகளிலேயே முதல் தேசிய ஒத்துழையாமை இயக்கம் பிரித்தானியர்களுக்கு எதிராகத் திரும்பியது. இலட்சக்கணக்கான மக்கள் அவரின் அழைப்பை ஏற்று திரண்டனர். எனினும், அவர் மட்டுமே பிரிட்டிஷார் பிடியிலிருந்து இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத் தந்தார் என சொல்வது சரியல்ல. நிச்சயமாக, அவருக்கும் அதில் ஒரு தனிப் பங்கு இருந்தது. முழுப் போராட்டத்தின் ஒரு கட்டத்தில், சமத்துவமின்மை பற்றி ஒரு சமூக சீர்திருத்தவாதியைப்போல் அவர் பேசியிருக்கிறார். ஆனால், பாரம்பரிய சாதிய ஏற்றத் தாழ்வு அமைப்பு, பெரு நிலவுடமையாளர்களின் அதிகாரத்தில் அவர் என்றுமே தலையிட்டதில்லை என்பதை யாராலும் மறுக்க முடியாது.

டாடா, பிர்லா, பஜாஜ் போன்ற தொழிலதிபர் களின் வீட்டில் இருந்துகொண்டு, அவர்கள் ஆதரவுடனேயே காந்தி தனது அரசியல் நடவடிக்கை குறித்து சிந்தித்தார். எனவே, அவர்களுக்கு எதிராக, காந்தி ஒரு போதும் செயல்பட்டதில்லை. அதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். அவர்களில் பலர், முதல் உலகப் போரில் பெரும் பணம் ஈட்டினர். பிரிட்டிஷ் ஆட்சியின் கட்டுப்பாடுகளும் அவர்களின் இன மேலான்மையும் மீது அவர்கள் வெறுப்புற்றனர், எனவே, அவர்கள் தேசிய இயக்கத்தின் பின்னால் தங்கள் பலத்தைக் காட்டத் தொடங்கினர்.

காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய பின்னர், அகமதாபாத் நூற்பாலை நிர்வாகத்தினரால் எந்தப் பயனும் அடையாத தொழிலாளர்கள் தொடர்ச்சியான வேலை நிறுத்தம் செய்தனர். நூற்பாலை முதலாளிகள் பிரச்சனையைத் தீர்த்து வைக்க காந்தியை நாடினர். தொழிலாளர் தகராறு களில் காந்தியின் தலையீடு, தொழிற்சங்கங்களை அவர் கையாண்ட விதம், வேலை நிறுத்தத்தின்போது தொழிலாளர்களுக்கு அவர் செய்த அறிவுரை என... இவை அனைத்தும் விடுகதைபோல் புதிரானவையாக இருக்கின்றன.

காந்திய நடைமுறைகள் வியப்பான திருப்பங்களைக் கொண்டவை. எடுத்துக்காட்டாக, 1924 ஆம் ஆண்டு பூனாவுக்கு அருகில் டாடா குழுமம் கட்டுமானம் செய்யவிருந்த முல்ஷி அணைக்கு, அருகில் இருந்த கிராமவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிலிருந்து மும்பையில் உள்ள ஆலைகளுக்கு மின்சாரம் உற்பத்தி செய்ய இருப்பதாகச் சொல்லி, போராட்டத்தைக் கைவிடு மாறு காந்தி அம்மக்களுக்கு கடிதம் எழுதினார். உலக வங்கி உதவியுடன் உருவாக இருந்த ‘சர்தார் சரோவர்’ அணை திட்ட வழக்கில், 2000 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததுபோல் இருந்தது காந்தியின் வாதம்.

அம்பேத்கர் உடனடியாக அதில் குறுக்கிட்டு, “காங்கிரஸ் சுதந்திரத்துக்காகப் போராடுகிறது என்பதைவிட, அது யாருடைய சுதந்திரத்திற்காகப் போராடுகிறது என்பதுதான் மிக முக்கியமானது” என்றார்.

Pin It