தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை கோவை மாவட்டம் நடத்திய "சூழலியல் ஒரு பார்வை" நிகழ்வு 21.08.2021 அன்று அறிவார்ந்த வகையில் நிகழ்ந்து முடிந்தது. கலந்து கொண்ட தோழர்கள் நண்பர்கள் உறவுகள் அனைவருக்கும் மனம் நெகிழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை கோவை மாவட்டம் நடத்திய 8 வது நிகழ்வு என்பது கூடுதல் பெருமிதம்.

வழக்கம் போல புதிதாக ஒன்றை தேடி புறப்படும் சிந்தனையில்.... தட்டிய பொறி தான் சூழலியல் பற்றிய தேடலும் தேவையும். சூழலியலைப் புரிந்து கொள்ளும் சமூகமே விழிப்போடு இயங்கும். இன்னும் ஆழமாய் சூழலியல் குறித்து தேட வேண்டிய தேவைக்கு உள்ளாகி இருக்கிறோம்... என்பதும் புரிய வேண்டும்.

இயற்கையை பண்டமாக பார்க்கும் மனோநிலை சூழலியலுக்கு எதிரானது. மனிதர்கள் வாழும் எல்லா இடத்திலும் இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பு இருக்க வேண்டும் என்பது தான் அடிப்படை. நகர்ப்புற காற்று என்பதே ஒரு சூழலியல் அரசியல் கூறுதான் என்று தெரிய வருகையில்.. சூழலியல் குறித்தான அறிவின் தேவையும் அவசியமும் காலத்தின் கட்டாயமாகிறது.

கூட்டத்தின் முதல் நிகழ்வாக கவிஞர் காதலாரா இந்தியாவின் வனமகன் "ஜாதவ் பயேங்க்" குறித்த சிறப்பான ஓர் உரையை நிகழ்த்தினார்.

காடுகளை நினைக்கும் போதே மனதுக்குள் சிறகு விரியும். காடென்பது மந்திர சொல். காடு இல்லை என்றால் நாடு இல்லை என்பது அடிக்கோடிடப்பட வேண்டிய செய்தி. காடு ஒரு சூட்சுமம். அதிலிருந்து பிறப்பது தான் நம் மேட்டிமை. ஒவ்வொரு பறவையும்... ஒரு மரத்தையாவது நட்டு விடும் காடு தான் இந்த உலகின் வீடு.

பறவைகளின் ஆரவாரத்தை....... அழகியலை....... மரமோடு மரமாக நிற்கையில் காண முடியும். காக்கை குருவி எங்கள் கூட்டம் என்ற பாரதியின் வரிகளை உணர காடே உறுதுணை. அப்படி காட்டுக்காகவே தன் வாழ்நாளை அர்பணித்துக் கொண்டவர்தான் இந்த "வனமகன்" ஜாதவ் பயேங்க்.

இவர் பிரம்மபுத்திரா நதி அருகே ஒரு வனத்தையே உருவாக்கி இருக்கிறார் என்பது எத்தனை பெரிய ஆச்சரியத்தை நமக்குள் விதைக்கிறது. இது அசாமில்..... கோகிலாமுக் என்ற இடத்திற்கு அருகே 100 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள வனப்பகுதி. 1979-களின் துவக்கத்தில் ஆரம்பித்த இவருடைய மரம் நடுதல் தற்போது ஐந்து புலி... மூன்று காண்டாமிருகம்...... பறவை பட்சிகள் ஊர்வன என்று எண்ணற்ற விலங்குகளின் வாழ்விடமாக மாறியிருக்கிறது. இப்படி....இந்த தனி ஒருவனைப் பற்றி காதலாரா பேச பேச நமக்குள் ஒரு மானுட காடு விரிந்ததை உணர்ந்தோம். காடுகளின் தேவை குறித்து உணர்ந்த ஒரு தனிமனிதனின் வீரியம் இன்று விருட்சமாகி நிற்பதை ஆச்சரியத்தோடும் அவசியத்தோடும் மெய் சிலிர்க்க உள் வாங்கினோம். தம்பி காதலராவின் பேச்சில் தனித்துவம் வாய்க்கப்பட ஆரம்பித்து விட்டது. வாழ்த்துவோம்.

ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியதை ஒரு தனி மனிதன் செய்திருப்பது தான்....... எது தேவையோ அதுவே தர்மம் எனப்படுவது. காட்டுக்குள் தான் தங்கி இருக்கும் வீட்டை யானை இடித்து தள்ளுவதைக் கண்டு சந்தோசம் கொண்ட இந்த வனமகன்....... தான் விதைத்த கருத்தியலை கண்டடைந்து விட்டார்.

அடுத்து கோ லீலா அவர்கள் எழுதிய "மறைநீர்" நூல் குறித்து... சூழலியாளர் "ஐயா கோவை சதாசிவம்" அவர்கள் உரையாற்றினார். அதுவரை ஒரு சிறுவனைப் போல ஆச்சரியத்தோடு எங்களின் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டிருந்த பெருந்தன்மைதான் பெரியவர்களின் வடிவம். பொடியனுங்க.... பேசறானுங்க.... அப்புறம் வருவோம் என்று அவர் நிகழ்வுக்குள் வந்ததும் ஓடி விடவில்லை. நமக்கான நேரத்துக்கு வந்துட்டு மற்றவர்களின் நேரம் மண்ணா போனா நமக்கென்ன என்று அவர் எண்ணவில்லை. முழு நிகழ்விலும் இருந்து விட்டு இறுதியாக கேட்டுக் கொண்டு வெளியேறினார். இடையே அவரின் இருத்தல் நிகழ்வுக்கு கிட்டத்தட்ட மறைநீர் தான். மறைந்திருந்த பலம்.

சரி இப்போது....... அது என்ன மறை நீர் என்றொரு கேள்வி வரும் தானே. சொல்கிறேன்.

ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் தான் மறை நீர். நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருளுக்குள்ளும் அதை உருவாக்க......... செலவழிக்கப் பட்ட நீர் மறைந்திருக்கிறது. நீரின்றி எதுவும் இல்லை. நீரே ஆதாரம். அது பற்றி....... அதன் போக்கு பற்றி... அதன் அழிவு பற்றி.. இந்த மானுடம் அதை கை கழுவி விட்டது பற்றி...... என்று அத்தனை தகவல்கள் நிறைந்த நூல் இந்த மறைநீர் நூல்.

ஒரு கோப்பை தேனீர் கோப்பைக்குள் தேநீராக உருமாற... 140 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது என்று இந்த நூல் பொட்டில் அடித்து கூறுகிறது. ஏன் மற்ற நாட்டுகாரன்லாம் நான் நீ ன்னு போட்டி போட்டுக் கொண்டு இந்தியாவில் உற்பத்தியை செய்கிறார்கள் என்று இப்போது புரிகிறதா. ஒரு கார் உற்பத்தி ஆக வேண்டுமானாலும் அதற்கு எத்தனை லிட்டர் நீர் தேவை ஆகும் என்று யோசித்துக் பாருங்கள். அவ்வளவு நீரை செலவழிக்க அவன் என்ன முட்டாளா. இருக்கவே இருக்கிறோம் நாம். அதுதான்....இங்கு தொழில் வளம் என்ற பெயரால்...... உழைப்பாளிகள் நிறைந்த இந்தியாவில் வேலை வாய்ப்பு என்ற பெயரில் நம் நீர்வளத்தை எல்லாம் சுரண்டி எடுத்து போகிறார்கள். இப்போது கூட சூயஸிடம் நீர் வளத்தைக் கொடுத்து விட்டு கை கட்டி காசு குடுத்து போத்தலில் நீர் வாங்க போகிறோம். ஏற்கனவே அப்படித்தான்..... என்றாலும்...... இனி நிலைமை இன்னும் மோசமாக கூடும்.

இன்று வீண் செய்யும் ஒவ்வொரு சொட்டும் எதிர் காலத்தில் நம்மை கொட்டும்... என்பது தான் விதி.

இந்த பூமி 70% நீரால் ஆனது. அதனால் தான் இது பூமியாய் ஆனது. இந்த பூமி தோன்றிய காலத்தில் இருந்த நீரின் அளவு தான் இன்றும் இருக்கிறது. டைனோசர் குடித்த நீரைத்தான் இன்று நாமும் குடித்துக் கொண்டிருக்கிறோம்.....போன்ற தகவல்களை போகிற போக்கில் கொஞ்சம் காட்டமாகவே வீசிப் போனார்... கோவை சதாசிவம் ஐயா. விலங்குகளின் தேவை... காடுகளின் சூழல் என்று சூழலியலின் சூட்சுமம் குறித்து அவர் மொழியில் அட்டகாசப்படுத்தினார். நிதானமான நிறுத்தல்களோடு அவருக்கு கொடுத்த மணித்துளிகளை நிரப்பி சொட்டினார்.

தீர்க்கமாய் யோசித்தால் புரியும். இங்கு எல்லார் குடித்த நீரைத்தான் எல்லாரும் குடிக்கிறோம். நீருக்கு ஜாதி மதம் கிடையாது. ஒவ்வொருவரின் கழிவும் மீண்டும் சுத்திகரிப்புக்குள் சென்று மீண்டும் பொதுவாகி வரும் நீரைத்தான் மீசை முறுக்குபவனும் குடிக்கிறான். ஒதுக்கி வைக்கப்படுபவனும் குடிக்கிறான். இயற்கை சிரிக்கிறது...... சிறு பிள்ளைத்தனமாய் இனம் பிரித்துக் கொண்டு திரியும் மனித பேதைகள் கண்டு. எல்லாரும் சுவாசிக்கும் காற்றைத்தான் எல்லாரும் சுவாசிக்கிறோம். சின்ன வெங்காய சாதி என்று சொல்லப்படும் நாசிக்குள் சென்று திரும்பும் காற்றுதான் பெரிய வெங்காய சாதி என்று சொல்லப்படும் நாசிக்குள்ளும் சென்று வருகிறது. ஆக...... சாதியில் பெரிய வெங்காயம் சின்ன வெங்காயம் என்று பிரித்துக் கொண்டது நாம் தான். காற்று இல்லை.

நதி நீர் இணைப்புகளின் கோமாளித்தனம் குறித்து பேசினார். நதிகள் உலகின் நரம்புகள் என்றார். நரம்புகளை அறுத்து விட்டு ஆற்றோரம் குத்த வைத்து கன்னத்தில் கை வைத்து அமர்ந்து கொண்டிருப்பதை தாண்டி என்ன செய்தான் மனிதன் என்று கேள்வியும் எழுப்பினார். இருக்கும் அத்தனை ஆறுகளையும் நொய்யல் உள்பட கெடுத்து சாக்கடையாக்கி விட்டது மானுட பெருமை. இன்னொன்று.......நதி நீர் வீணாக கடலில் கலக்கிறது என்று பல பெரிய மண்டைகள் கூறிக்கொண்டு அலைவது அறிவிலிகளின் கூடுதல் கறை என்கிறார். கடலில் கலந்தால் தான் மழையின் நீட்சி அதன் போக்கில் வழக்கம் போல எழுச்சி பெரும் என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். சூழலியிலின் சூத்திரம்.......ஒரு கோப்பை நீரை கூட கூடுதலாக புதிதாக பிறந்த மனிதனுக்காக இந்த இயற்கை உருவாக்காது என்பது. நீர் தோன்றுகையில் எத்தனை சதவீதம் இருந்ததோ அத்தனை சதவீதம் தான் இன்றும் இருக்கிறது என்ற செய்தி சிந்தனையில் சொட்டும் ஆதி கால தத்துவம்.

பாலைவனத்தில் ஒரு போர் குழாய் இருக்கிறது. அதன் அருகே மாசு படிந்த நீர் ஒரு வாளியில் இருக்கிறது. அங்கே ஒரு செய்தியும் எழுதப்பட்டிருக்கிறது. அந்த தூசு படிந்த நீரை போர் குழாய்க்குள் கொட்டிய பிறகு போரை அடி. நீர் வரும். தாகம் தீர்த்துக் கொள். பிறகு மறக்காமல் மீண்டும் நீரை வாளியில் நிரப்பி வைத்து விட்டு போ.... என்று ஒரு கதையை சொல்லி முடித்தார்.

கதையல்ல நிச்சயமாக அது கதையல்ல. அது தான் காலம். இங்கே நாம் செய்ய வேண்டிய மானுட பண்பின் வாழ்வியல் கடத்தல் அது. முடிவுறாத சுவாசம் தான் இந்த பூமி என்று சிந்திக்க தொடங்கினோம்.

இரண்டு தலைப்புகளையும் ஒட்டி மறைநீரின் ஆசிரியர் கோ லீலா அவர்கள் தனக்கே உண்டான தனித்துவதில் மிக அற்புதமான சிறப்புரையை ஆற்றினார். கட்டெறும்பு எப்போது வரும்.......... சிவப்பெறும்பு எப்போது வரும்........... கரையான் எப்போது எப்போது புற்று கட்டும் என்று கோ லீலா........ அவரின் அனுபவ அறிவில் இருந்தும் படைப்பாற்றலின் தெளிவிலிருந்தும் காடும் நீரும் வெளியும் ஆகாயமும் என்று வெளிச்சம் பாய்ச்சினார். காடுகளின் இருளில் தான் உலகத்தின் ஒளி துளிர்க்கிறது என்று புரிய வைத்தார். எந்த சீதோஷ்ண நிலைக்கு என்ன நிகழும் என்று அவர் பேசிய ஒவ்வொன்றும் இயற்கையின் மடியில் ஊஞ்சலாடும் தகவல்.

இயற்கையை ஒரு போதும் மனிதர்கள் காக்க வேண்டாம்.......என்று தான் உரையையே தொடங்கினார். என்னடா இது என்பது போல பார்த்தோம். தொடர்ச்சியில் துணைக்கால்களோடு வீறு நடை போட்டது இயற்கையின் லாவகம். இயற்கைக்கு தன்னை காத்துக் கொள்ள தெரியும். இடையே புகுந்து மனிதன் அதை கெடுக்காமல் இருந்தால் போதும். இயற்கையோடு இயந்து வாழ்தல் தான் அடுத்தடுத்து பூமியின் இருத்தலைத் தக்க வைத்துக் கொள்ளும் நுட்பம். ஒரு பத்து பேருக்காக இயங்கும் உலகத்தில் இருந்து வெளி வர வேண்டும்.....என்பது தான் ஏதேச்சதிகாரத்துக்கு எதிரான முழக்கம். தேவைக்கு வாழ்தல் தான் முறை. வாழ்தலுக்காக தேவையை மாற்றிக் கொண்டே போவது...... அது நாமே உருவாக்கி வைத்த பொருளாதார ஆப்பு. அதெல்லாம் இயற்கைக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அதன் போக்கில்.......குறுக்கே வரும் எதுவும் அழியும். இயற்கை பற்றிய அறிவுள்ளது பிழைத்து கொள்ளும். அவ்வளவே.

இன்னொரு விஷயம் மிக ஆச்சர்யமூட்டியது.

அதாவது.... ஒரு செடியை நடும் போது அதற்கு போடப்பட்ட மண்ணை அளவெடுத்துக் கொள்கிறார்கள். பிறகு... நீர் ஊற்றப்படுகிறது. செடி ஓரளவுக்கு வளர்ந்து விட.... அதன் எடை கூடி விடுகிறது. ஆனால் அதன் அடிவயிற்றில் இருக்கும் மண்ணின் எடை முன்பு செடி நடப்படுகையில் இருந்த அதே அளவு தான் இருக்கிறது. ஆக மரம் எடுத்துக் கொண்டது நீரை மட்டும் தான்...... மண்ணை அல்ல என்பது இயற்கையை நெருங்க....நெருங்க நாம் தரிசிக்கும் அற்புதமான முன்னுரை.

குமரிக்கண்டம் போல கடலுக்குள் நெகிழி கண்டமே இருக்கிறது என்று சொல்கையில்.... நமக்கு தூக்கி வாரிப் போட்டது. என்னடா பண்ணி வெச்சிருக்கோம் இந்த பூமியை என்று நம்மை நாமே கண்கள் முழிக்கும் எமோஜியாக பார்த்து கொள்ள தான் வேண்டி இருக்கிறது.

இப்படி தம்பி காதலாரா... அய்யா கோவை சதாசிவம்...... மறைநீர் கோ லீலா மூவரின் உரைகளின் வாயிலாக நாம் கண்டடைந்தது இயற்கை எனும் பேராசானை மதிக்க கற்றுக் கொள்தல் தான். மண்ணை மலடாக்காமல் இருப்பது பற்றி தான். எந்த கொம்பனாலும் செய்ய முடியாத வடிகட்டி மணலை கொள்ளை கொள்ளையை அள்ளி செல்லாமல் இருப்பது தான். பூமியின் நுரையீரல் நதிகளில்..... சாயக்கழிவுகளை கொட்டாமல் இருப்பது தான். அதன் வழித்தடத்தை மரிக்காமல் இருப்பது தான். யானைகளின் வழித்தடத்தில் கரண்ட் சாக் வைக்காமல் இருப்பது தான்.

காடுகள் குறித்தும்....சூழலியல் குறித்தும்... நீரின் தேவை குறித்தும் இப்படி ஏராளமான செய்திகளை தெரிந்து கொண்டதில் இயற்கை சார்ந்த நம்பிக்கை கூடியது. கிடைத்த நேரத்தில் தோழர்கள் முடிந்தளவு இயற்கை குறித்த தெளிவை விதைத்தார்கள் என்றே நம்புகிறேன். தொடர்ந்து இயற்கையை கூர்ந்து கவனிப்போம். அதை அதன் போக்கில் நகர விடுவோம். சத்தமில்லாமல் கூட பயணிப்போம். கூடி குணம் செதுக்கும் குடில் இந்த பூமி. இனியாவது இயற்கைக்கு எதிரான.....குற்றம் நிகழ்த்தாதிருப்போம்.

- கவிஜி

Pin It