இந்தியாவின் பலவீனம் அதன் மறதி.
ஒரு மகாத்மாவை ஞாபகமிருக்கும் அளவு அது
இன்னொரு மகாத்மாவை
நினைவில் வைத்திருக்கவில்லை.
காந்தி கஸ்தூரிபாயைக் கொண்டாடியதை விட
இன்னொரு மகாத்மாவான ஜோதிராவ் பூலே
தனது மனைவி சாவித்திரிபாய் பூலேவை அதிகம் கொண்டாடினார்.
நீங்கள் ஆணாக இருந்தால் ஜோதிராவ் பூலே போலவும்
பெண்ணாக இருந்தால் சாவித்திரிபாய் பூலே போலவும்
உங்கள் மனதைப் பழக்குங்கள்!
பெண்களுக்கான விடுதலையை
உருவாக்க முடியும்.
இக்கவிதை ஜனவரி மூன்றாம் தேதி சாவித்திரிபாய் பிறந்தநாளை நினைவுபடுத்தும் விதமாக கவிஞர் கரிகாலன் தன் முகநூல் பதிவில் பதிவுசெய்திருந்தார். இத்தருணத்தில் இக்கவிதை என் நினைவுக்குள்வந்தது. சாவித்திரிபாயைப் படிக்கிறேன் எனும் நாடகம் வாசித்தபோது ஏற்பட்ட அனுபவம் நாடகத்தைப் பார்க்கும் பொழுது கூடுதலான மன உந்துதல், மனஎழுச்சி, ஆதிக்க அதிகாரத்தின் மேல் பல கேள்விகள் எழுப்பவேண்டிய தருணத்தை எனக்குள் மட்டுமல்ல நாடகத்தைப் பார்த்த அனைவருக்குமே ஏற்பட்டிருக்கும் என்பது என் எண்ணம்.
பாண்டிச்சேரி கோபி நவீன ஓவியர், மணல் மகுடி நாடக நிலம் நாடகங்களில் நடித்தவர், இசைக்கலைஞர், யாழ் நாடக அமைப்பின் நவீன நாடகச்செயல்பாட்டாளர் என நவீன நிகழ்த்துவெளியில் தன்னின் அடையாளத்தைப் பதித்து வருபவர். இவரின் நெறியாள்கையில் உருவான ‘நான் சாவித்திரிபாயைப் படிக்கிறேன்’ எனும் நவீன நாடகப்பனுவலை காவ்யா இதழ் வழியாக வாசித்தேன். வாசிப்பதற்கான பனுவலாக அமைந்திருப்பதோடு இந்நாடகத்தினைப் பார்க்கவேண்டும் என்கிற ஆவல் என்னில் ஏற்பட்டது. உடனே அண்ணன் முருகபூபதியிடம் கோபியின் அலைபேசி எண் வாங்கி பேசினேன். உடனே நாடகத்தைப் பார்ப்பதற்கு ஏதுவாக அதன் பதிவினை அனுப்பிவைத்தார். இந்நாடகத்தை நேரில் பார்த்துப் பயன்பெற வேண்டுமென எண்ணினேன். சமகாலத் தேவைக்கான பொருண்மையில் ஒரு நாடகம் அமையும்போது அது அதிக நிகழ்த்துதலை நோக்கிப் பயணப்படவேண்டும். இந்நாடகத்தினை கோபி அவரின் துணைவியாரான ஸ்டெல்லா அவர்களைக் கொண்டு ஒரு நபர் நடிப்பாக நெறியாள்கை செய்திருந்தாலும் அரங்கப்பொருள்கள், சாவித்திரிபாய் பாவனையான முகமூடி, சிம்னி விளக்கொளி, மெல்லிய இசை, புத்தகக்குறிப்பு என நிகழ்த்துப் பொருள்களையும் ஆவண நிகழ்த்துதலையும் திறம்படச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ஒரு நபராக அரங்கில் தோற்றினாலும் குரலின் லயத்திற்கு ஏற்றவாறு ஒரு நடிகையாகவும், சாவித்திரியாகவும், ஜோதிராவாகவும், தன்னிடம் படிக்கும் பள்ளிக்குழந்தைகளாகவும், தங்களைத் தாக்க வந்தவராகவும், அதிகார வர்த்தினராகவும், ஆதரவற்ற கர்ப்பிணிப் பெண்ணாகவும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு தாயாகவும், நாவிதராகவும், ஆதிக்கப்பார்ப்பனராகவும், பார்ப்பனப்பெண்களின் ஆதிக்கக் குரலாகவும், ஜோதிராவின் நிழலாகவும், அமைப்பை வழி நடத்தும் தலைமைத்துவம் கொண்ட பெண்ணாகவும் இப்படி இப்படி எண்ணற்ற படிம உருக்களை மொழிதலின்வழி தன் நடிக உடலில் கொண்டு வந்துள்ளது சிறப்புக்குரியது. நாடக நெறியாளரின் நிகழ்த்துமுறைமைகளை உள்வாங்கி நிகழ்வெளியில் நிகழ்த்தும் போதும் நடிகர்-நெறியாளர் இருவருக்குமான நிகழ்த்துதல்சார் பொதுமை ஒரே புள்ளியில் இயங்கும்போதும் அரங்கின் வழியான புரிதல் சாத்தியப்படும்போதும் அரங்கு அர்த்தப்படும் வகையில் பரவலாக்கம் பெறக்கூடியதாகிறது. இந்தப்பரவலாக்கம் பல நிகழ்த்துதலை சாத்தியப்படுவதோடு பார்வையாளர்களின் மனவெளியில் பல பரிவர்த்தனையை உருவாக்குகிறது. அந்தவகையில் நான் சாவித்திரிபாயை படிக்கிறேன் நாடகம் ஆவண அரங்கிற்கான தன்மையில் புரிதலை நோக்கி நகர்கிறது. சாவித்திரிபாய், மகாத்மா பூலேவையும் படித்தவர்கள் பார்ப்பனியத்தையும், ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியின் அவசியத்தையும், அரசின் மேல் விசாரணை எழுப்பவேண்டிய தேவையும் அறிந்திடக்கூடும். இந்தப் புரிதல் அதிகாரத்தின் மேல் கேள்வி எழுப்பி தமக்கான அதிகாரத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் என்பதைக் காட்டுகிறது. இப்புரிதலையே நான் சாவித்திரிபாயைப் படிக்கிறேன் நாடகம் முன்வைத்துள்ளது.
பனுவல் வழியான கதைகூறல் நிகழ்த்துதலாகும் போதும் வாசிக்கும் போதும் பார்வையாளர்களின் கற்பனைவெளி காட்சிகளாக விரிவடைகிறது. அரங்கில் காட்சிப்படுத்தப்படும் காட்சிகள் நாடக நெறியாளர் உருவாக்கியதிலிருந்து காணுவதாகும். நாடகப்பனுவலை வாசிக்கும்போது வாசிப்பாளர் மனத்திலிருந்து உருவாகும் காட்சிகள் நிகழ்த்தும்போது உருவாகும் காட்சிகளில் இருந்து வித்தியாசப்படுகின்றது. இருப்பினும் பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து கதை, புனைகதைப்பனுவல் வாசிப்பின்வழியான அர்த்தத்தள விரிவு வாசகனின் கற்பனை சார்ந்ததாகிறது. இருப்பினும் வாசிப்பிற்கான பனுவலாகவும் நிகழ்த்துப் பனுவலுமான தன்மையிலும், வரலாற்றுத் தரவுகளைப் புனைவாக்குதல் என்கிற தன்மையிலும் இந்நாடகத்தை அவதானிக்க முடிகிறது.
சாவித்திரி பாயின் படிப்பினையும் அதனூடே ஜோதிராவ் பூலேயின் சரித்திரம் புனைவாகப்பட்டுள்ள விதம் எதார்த்தத் தரவுகளோடு பொருந்திப்போகிறது. இந்நாடகத்தில் சாவித்திரிபாய் வழியாக மகாத்மா பூலேயின் சரித்திரத்தை நிகழ்த்துதலாக்கப்பட்டுள்ளது. பெண் சமத்துவத்தையும் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலையோடு பார்த்தபார்வை நாடகத்தில் பார்க்க முடிந்தாலும் சாவித்திரியின் சுயம் ஜோதிராவை மய்யமிட்டது போல் சாவித்திரியின் உரையாடல் தொனிப்படுகிறது. ஒடுக்கப்பட்டோருக்கான கல்வி வழங்குவதற்கும் கல்வி பெறுவதன் மூலம் அறிவார்ந்த நிலைக்கு ஒடுக்கப்பட்டோர்களை உயர்த்துவதற்கும் பூலே மேற்கொண்ட முயற்சிகள் முன்மாதிரியானவைகளாகும். கல்வி பெறுவது என்பதே தலித்துகளின் விடியலுக்கான முதல்நிலை என்பதை ஜோதிராவ் பூலே உணர்ந்திருந்தார். இதனை சாவித்திரிபாய் விசாலப்படுத்தினார் என்பதை நாடகம் எடுத்து இயம்புகிறது. சாவித்திரிபாய் ஜோதிராவ் பூலே அவர்களை மணமுடித்த பின்னர் நூல்கள் வாசிப்பின் முக்கியத்துவத்தை அறிந்ததோடு சாவித்திரிபாயிக்கு கல்வி போதித்துத்தருவதற்குப் பேருதவியாக இருந்தது மட்டுமல்லாது சமூக இயங்கியலைப் புரிந்து கொள்ள உதவியதை நாடகத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
கல்வி இல்லாததால் அறிவிழந்ததும் அறிவில்லாததால் சொத்து இழந்ததும் சொத்து இல்லாததால் ஒடுக்கப்பட்ட தன்மை உருவானதும் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையினை வரலாற்றில் பார்க்க முடிகிறது. ஆதலால் தான் மகாத்மாபூலே கல்வி நிறுவனத்தைத் தோற்றுவித்து ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்கவேண்டும் என்பததோடு பெண்கல்வியை வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக பெண்கள் கல்வி பெறவேண்டும் என்பதற்காகக் கல்விக்கூடத்தை நிறுவியுள்ளார். ஓடுக்கப்பட்டவர்களுக்கான கல்விப்பணியில் மற்ற சமுதாயத்தினர் கல்வி கற்பித்துத்தருகின்ற போது ஆதிக்கத்தினரின் அச்சுறுத்தலால் ஆசிரியர்கள் கற்பிக்க வரமறுதலிக்கும் சூழலை மகாத்மா பூலே முன்னமே அறிந்திருந்து ஓடுக்கப்பட்ட மக்களை வாசிப்பதற்கும் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் பழக்கப்படுத்தியதால் அதிகார வர்க்கத்தினரால் தாக்குதல் ஏற்பட்ட போதிலும் அதை அவர்கள் சமாளித்த விதம் தன்னை பள்ளியை வழிநடத்தவும் பயிற்றுநராகப் பயிற்சியளிக்கத் தன்னை ஆயத்தமாக்கியதாக சாவித்திரி பாயின் உரையாடலின் பின்புலத்தை ஜோதிராவ் வாழ்வின் வழிநின்று தொடங்கிய கல்விப்பணியின் வழியாக சாவித்திரிபாய் சுயாதினமாகச் செயல்படுவதற்கான உத்வேத்தை உணர்கின்றதை நாடகம் காட்டுகிறது.
சாவித்திரி பாய் அனுபவித்த ஒடுக்குமுறைகளும் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட சமூக விடுதலைக்கும் தன் வாழ்வை ஜோதிராவோடு இணைத்துக் கொண்டதுமான வாழ்வியலை நடிப்பில் கொண்டு வருவதற்கு, ஒரு நடிகை நாடகவெளியில் பாத்திரமாதல் நிகழ்கிறது. “இப்ப நான் சாவித்திரி பாயைப் படிக்கிறேன்” என்று கூறிவிட்டு, சாவித்திரி பாயின் முகவுருவை தன் முகத்தோடு பொருத்தி, “நான் சாவித்திரி பாய்” “நான் சாவித்திரி பாய்” எனக் கூறி அறிமுகமாகி பெண்ணின் வாழ்வில் குழந்தைப்பருவத்தில் பறவைகளையும், மரம் செடிகொடிகளையும் நேசிப்பவராக இருந்து குழந்தைப்பருவத்திற்குப் பின்னான வாழ்வில் திருமணத்திற்கு முன் தான் பிறந்த இடத்தில் அடிமையாகி, மணமான பின்னர் கணவரின் வீட்டில் அடிமைத் தொழிலுக்கான இயந்திரமாக ஆக்கப்படும் பெண்ணின் வாழ்க்கை அமைகின்றது. சாவித்திரிக்கு இயல்பான பெண்ணின் மனப்பாங்கு இருந்தாலும் ஜோதிராவின் செயல்பாடுகள் சாவித்திரிபாயை முற்போக்கிற்கு இட்டுச்சென்றுள்ளது. “வரலாற்றை எங்கிருந்து தொடங்குவது” எனத் தன்னிலை விளக்கமாகக்கேட்டு பின்னர் திருமணத்திற்குப் பின்னர் தொடங்குவோம் என்று கூறி பேசுவது திருமணத்திற்கு முன்பும் பின்பும் பெண்ணினத்திற்கு ஏற்படும் அடிமை வாழ்க்கையாக வாழும் சராசரிப் பெண் போல் சாவித்திரியின் திருமணத்திற்குப் பின்னான வாழ்வு அமையவில்லை என்பதை நாடகம் காட்டுகிறது. அறியாமையின் இருளை முதலில் தான் உணர்ந்து பின்னர் பிறருக்குக் கற்றுதருவதில் சுடர்வீசும் ஒளியாக சாவித்திரிபாய் ஒளிர்ந்தார். தன் இணையர் பூலே மறைவிற்கும் பின் தாம் கொண்ட குறிக்கோளை தளராமல் சீர்திருத்தத்தை நோக்கியே செயல்பட்டார் என்பதை நாடகம் முழுக்க உரக்கச்சொல்கிறது.
தமிழ் அரங்க மரபில் ஒரு நடிகையாக பெண் பாத்திரம் ஏற்பது என்பது அந்தக்காலத்தில் சாத்தியமில்லாத சூழலிலே இருந்தது. பெண்கள் நாடகம் பார்த்தல் என்பது பெண்ணுக்கு உரிமை மறுக்கப்பட்ட காலப்பகுதியில் அரங்கவெளிக்கு அனுமதிக்கப்படாத தன்மையும் ஓரத்தில் நின்றுகொண்டு பார்க்கப்படுவதும் பெண்வாழ்வில் இருந்தது. அதனால் தான் பெண்கள் பாத்திரத்தை ஏற்று நடிக்கும் சூழல் மறுக்கப்பட்டது. ஆதலால் தான் பெண் பாத்திரத்தை ஆண்களே நடித்துவந்தார்கள். பெண்ணியச் சிந்தனை தளம் உருவானதால் பொதுத்தளத்தில் முன்வைக்கும் வரையறையை பெண் மீறுவதும் பொதுவெளியில் பெண்ணின் பாத்திரத்தை பெண் உணரவேண்டும் என்பதையும் பெண்ணின் இருத்தலை உணர்ந்து தன்மீது சுமத்தும் அடிமையினையும், ஒடுக்குமுறையையும், அவலங்களையும் பெண்வழிப் பார்வையாக, நான் சாவித்திரிபாயை படிக்கிறேன் எனும் நவீன நாடகம் அமைந்துள்ளது. ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கலகக்குரலை சாவித்திரிபாயின் வாழ்வில் பாhக்கமுடியும் என்பதை நாடகம் காட்டுகிறது.
ஒரு நடிகையின் சுய அறிமுகத்தோடு தொடங்குகிறது நாடகம். தன்னை அறிமுகம் செய்வதாக தனக்குத்தானே அறிமுகம் செய்கிறார். “ஒரு நடிகையாக இருந்து தான் முன்வைக்கும் கருத்து எவ்வளவு நிதர்சனமான உண்மையை நோக்கி நகர்கிறது என்பதைத் பொதுத் தளத்தில் இருக்கும் பொய்மையை உடைக்கக் கூடிய சாத்தியப்பாடுகள்” அரங்க வெளியில் நிகழும் என்பதை இந்நாடகம் உணர்த்துகிறது. மரபு மீறல் கருத்தியலை உடைக்கக் கூடிய வல்லமை வாசிப்பின் மூலமாக ஏற்படும் என விவரிக்கிறார். “இந்த உலகத்தில் இருக்கிற உண்மை பொய் இரண்டையும் நான் மனதாலும் உடலாலும் உணர்கிறேன் அதனால் இந்த உலகம் முன்வைக்கிற எந்த ஒரு கருத்தையும் நான் ஏத்துக்கறதில்ல. அப்படியான பொதுக் கருத்துக்கு எதிராக வேலை செய்கிறது தான் என்னோட நடிப்பு. நடிக்க நான் நிறைய வாசிப்பு முறை இப்படித்தான் இருக்கும் என்பதை நிறையக் கற்றுக்கொள்கிறேன்” என்கிற உரையாடல் நவீன முதலாளித்துவச் சூழல் ஒவ்வொருவரையும் மாற்றியுள்ளதை படிப்பதன் மூலம் பெற வேண்டும் என்பதையும் முற்போக்கான வாசிப்பே நம்மை வழி நடத்தும் என்பதைக்காட்டுகிறது. இது ஜோதிராவ் உண்மையின் தேடலை தன் வாழ்வில் மேற்கொண்டார் என்பதைக் காட்டுகிறது. இவ்வுரையாடல் வழியாக, ஒவ்வொரு நடிகரும் நவீனநாடகக்குழுகள் தயாரிக்கும் நாடகங்களில் நடித்தோம் அத்தோடு நாடகத்தின் மையத்திற்கும் நடிகருக்கும் எந்தத் தொடர்பாடும் இல்லையென்று தப்பித்துத் செல்லமுடியாது என்பதைக் காட்டுகிறது.
சாதியாதிக்கத்தாலும், மதவெறியாலும் புரையோடிய சமூகத்தை மாற்ற தினையளவு அக்கறை வேண்டும் என்கிற உணர்வை நாடக உரையாடல் காட்டுகிறது. “பார்ப்பனர்களின் சுயநலத்தால் ஆங்கிலேயர் உள்ளே வரக்காரணமாக இருந்தது”என்று நாடகத்தில் கூறுவதும் புதுப்புரிதலுக்கு இட்டுச்செல்கிறது. பார்ப்பனர்களின் போலி பேதாவித்தனத்தை ஆங்கிலேயர் உணர்ந்ததோடு பார்ப்பணியம் ஆங்கிலேயர்களையும் உள்ளிழுத்தாலும் ஆங்கிலேயக் கல்வி சாதியத்தை உள்வாங்கியே வினையாற்றியுள்ளது. ஓரிரு மேலை நாட்டுக்கிறித்தவ குருக்கள் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் நின்றுள்ளார்கள் என்றே தோன்றுகிறது.
ஜோதிராவ் பூலே சாவித்திரி பாய் இருவரும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை கல்வியின் வழியாக தான் பெறமுடியும் என்கிற சிந்தனையை பிற்காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான கல்வி தளத்திற்கு வழிகோலியது குறிப்பிடத்தக்கதாகும். இவர்களின் செயல்பாடு குலவழிக்கல்விக்கு எதிரானதாகவே இருந்தது. கல்வி பாரபட்சத்தை மாற்றக்கூடியது மைய நீரோட்டக் கருத்தை உடைக்கக்கூடிய, மாற்றக்கூடிய வடிவமே கல்வி. கல்வியின் வழியான ஒடுக்குமுறை பண்பாட்டு ஒடுக்குமுறை, பொருளாதார ஒடுக்குமுறை முதலியவைகளை களைவதற்கு ஒரு கருவியாக கல்வியை முன்மொழிந்தது உலக வரலாற்றில் எவரும் செய்யாத ஒன்றாகும். பெண்கல்வி பெண் சமத்துவம் கல்விவழிப் புரிதலுக்கான பாதையை வகுத்ததில் சாவித்திரிபாய் பூலே மூலவர்களாவார்கள். இந்திய வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி அதன் மூலமாக சமத்துவத்தை நிலைநாட்டவும், ஆதிக்கக் கருத்தியலை மாற்றக்கூடிய வலிமையை ஒடுக்கப்பட்டோர் பெறவேண்டும் என்கிற சிந்தனையை வலியுறுத்தியும் குறிப்பாக பெண் கல்வியின் முக்கியத்துவத்தையும் சாவித்திரி பாய் முன்மொழிந்தார். இதற்கு மகாத்மா பூலே அடித்தளமிட்டது குறிப்பிடத்தக்கதாகும். இருவரும் வாழ்வில் இணைந்து ஒடுக்குமுறைகளைக் களைவதற்கு கல்வியைக் கருவியாகவும் மாற்றுச்சிந்தனையை உருவாக்க கல்வி வழியாக, மாற்றுக் கற்றலை முன்வைத்தது இந்திய கல்வி வரலாற்றில் குறிப்பிடத்தக்கதாகும். இந்தியக்கல்வி வரலாற்றில் ஒடுக்குமுறைக்கான கல்வியை மாற்றுக்கல்வி வடிவமாக ஒடுக்கப்பட்டோர் பெண்கள் உட்பட கல்விபெற வேண்டும் எனச் சொல்லளவில் இல்லாமல் செயல்பாட்டு நோக்கில் அமைந்திருந்ததோடு, கற்றல் வழியாக ஆதிக்கத்திற்கு எதிராக சமர் செய்தல் என்பதை முன்வைத்து பல இன்னல்களைத் தாங்கிக்கொண்டு ஒடுக்கப்பட்டோருக்கான கல்வியை முன்வைத்தது முன்மாதிரியானவையாகும்.
வேதங்கள் மனிதர்களிடத்தில் பேதங்களைக் கற்றுத்தருகின்றன. வேதங்களை முன்மொழியும் இந்து மதத்தை வேரறுக்க, ஒடுக்கப்பட்டவர்களுக்குக் கல்வியை வழங்கிட துணிந்தது பார்ப்பனியத்தை ஒழிக்க கல்விகற்க வேண்டும். முதலில் சாவித்திரிபாயிக்கு கற்றுத்தருவதற்கு பல முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்ட நூல்களை வாசிக்கச் செய்தார் மகாத்மா பூலே. அமைதியாக நின்றவாறே பூலே படிப்பதைப்பார்த்தவுடனே தான் படிக்கும் புத்தகத்தைப் படித்துக் காட்டினார். வாசிப்பின் தாகத்தை உணர்ந்த பூலே அடுத்தடுத்து வாசித்துக் காட்டினார். வாசிப்பின் ஆதிப்புள்ளியாக வாசிக்கக்கேட்டதற்கு வீரசிவாஜியின் வாழ்க்கை வரலாற்றினை எடுத்து வாசித்துக்காட்டினார். பின்னர் வார்த்தைகள் எழுத்துக்கள் சித்திரக்கதைகள் எனத்தொடர்ந்து எனக்குக் கற்பித்துத்தர ஆரம்பித்துவிட்டார். மொழி, கணிதம். வரலாறு. சமயம. ;தத்துவம், வரலாறு, ஒடுக்கப்பட்டோருக்கான வரலாறு. பெண்விடுதலை என, எனக்கான கல்வியை முழு முயற்சியோடு கல்வியறிவு பெறுவதற்கு வழிவகை செய்தார. ; முழுமைதரும் துணிச்சலில் பல கேள்விகள் அவரிடம் கேட்டதுண்டு இதையெல்லாம் படித்து நாம் என்னசெய்யப் போகிறோம். ? என ஜோதிராவிடம் கேட்டதற்கு, “இந்துமதத்தின் அதிகாரப் பிடியில் இருந்து எளியோர்களை மீட்கமுடியும் என நான் நம்புகிறேன். முடியும் என நம்பவேண்டும். ” எனக் கூறினார். சுத்தம் அசுத்தம் எனும் நம்பிக்கை தோன்றியதற்கும் நாம் படிக்காமல் இருப்பதற்கும், அவர்கள் மேலானவர்களாக இருப்பதற்கும் சுயநலமே காரணமாகும். படித்தால் மட்டுமே இந்தச்சாதிப் பிரச்சினையை ஒழித்துக் கட்டமுடியும் என ஜோதிராவ் நம்பினார். அதனால் தாழ்த்தப்பட்ட மக்கள் படிக்கவேண்டும் என எண்ணினார். ஜோதிராவின் பேச்சிலிருந்து சாவித்திரிபாய் நம்பிக்கை ஏற்பட்டது போல எண்ணினார். பேசுவதோடு நின்றுவிடாமல் செயல்பாட்டாளராக விளங்கியதற்கு பள்ளிகளைத் தோற்றுவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
“காலத்துக்கு என்ன குறை?அது எப்பொழுதும் உழைக்கிறவர்களின் பக்கமே நிற்கும்” என்று அதிகாரத்துக்கு எதிராக சாவித்திரிபாய் கலகக்குரலை ஏற்படுத்தி இருப்பது நாடகத்தில் தொனிப்படுகிறது. தொடர்ந்து இரண்டு பள்ளிகள் ஆரம்பித்த சூழலில் ஆதிக்க வர்க்கத்தினரால் பள்ளிகளை ஒன்றும் செய்யமுடியவில்லை என்று நினைத்து ஆசிரியர்களைத் துன்புறுத்த ஆரம்பித்தனர். தெருவில் நடந்துசெல்லும் போது சானத்தால் அடிப்பதும் “இது எங்க போயி முடியப்போகுதோ பகவானே” எனக் குற்றம் செய்பவர்களைப் பார்த்து பேசுவதைப் போல வசைமொழிகளைச் சந்தித்த சாவித்திரிபாய் பல தடைகளை தாண்டி ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை நோக்கிய கல்விப்பயணத்தில் தொடர்ந்து அடியெடுத்து வைத்துள்ளார். இதனால் பல ஆசிரியர்கள் சொல்லாமலே ஊரைவிட்டு ஓடிச்சென்றதும் உண்டு. ஆனால் இதைப் பொருட்படுத்தாமல் சாவித்திரிபாய் பள்ளிக்குச் செல்லும்பொழுது பழைய ஆடையை உடுத்திக்கொண்டு பின்னர் பள்ளியில் வந்து புது ஆடையை உடுத்திக்கொண்டு பாடம் நடத்துவது ஒடுக்கப்பட்டவர்களுக்கான கல்வி வரலாற்றில் மறக்கமுடியாத காரியமாகும. ; இங்குதான் சாவித்திரிபாய் தான் ஒரு பெண் ஆசிரியர் அதுவும் இந்தியாவில் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் பெண்ணுரிமைக்காகப் பாடுபட்ட முதல் ஆசிரியர் என்று உயர்ந்திருக்கிறார். இந்தியா ஏன் சாவித்திரிபாய் பிறந்த ஜனவரி-3 நாளினை ஆசிரியர் நாளாகக் கொண்டாட முன்வரவில்லை என்பதும் பார்ப்பனர்களின் சூழ்ச்சி என்றே சொல்லலாம். சமூக மாற்றத்தை விரும்புவர்கள் மக்களுக்கான ஆசிரியர் சாவித்திரிபாய் பிறந்தநாளை தலித் விடுதலைக்கான கல்வி தினமாக ஜனவரி 3 ஆசிரியர் தினமாக அனுசரிக்க வேண்டுமென எண்ணத்தோன்றுகிறது. “ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட மக்களும் இதை உணரவேண்டும். தாழ்த்தப்பட்டமக்கள் படித்து பள்ளிக்கூடங்களுக்கு ஆசிரியராக வரவேண்டும். அதுவே தாழ்த்தப்பட்ட மக்களுக்கான விடுதலை” என ஜோதிராவ் முன்மொழிந்து, அதோடு தன்னை ஒரு ஆசிரியராக கற்பிக்கப் பள்ளிக்கு அனுப்பியது “சாவித்திரி இன்று முதல் நீ பள்ளிக்கூடத்துக்கு ஆசிரியர். பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்குப் பாடம் கற்பித்ததுதா” என்றதும் சாவித்திரி மனம் பயம் ஏற்பட்டது. தன்னால் இயலுமா என நினைத்தார். பின்னர் தான் முன்னின்று பள்ளிநடத்தவேண்டும் என எண்ணி, தெருவில் இறங்கி துணிந்து பள்ளிக்குச் சென்றார. ; பல கூச்சல்கள் உருவான போதும் அதைப் பற்றி ஒருபோதும் சாவித்திரிபாய் கவலை கொள்ளவில்லை. சாவித்திரிபாய் பள்ளியில் ஆசிரியரான உடனே “ஜன்னல்களின் கதவுகளையும் மூடுங்கள் என் பிஞ்சுகுழந்தைகளின் அதிகாரவர்க்கத்தால் பாதிக்கப்படுவர். ” என்று நாடகத்தில் கூறும்போது சாவித்திரிபாய் பள்ளிக்குழந்தைகளின் மீது கொண்டுள்ள அன்பு வெளிப்பட்டுள்ளது. இக்காட்சியின் போது முகபாவனையும் வார்த்தைத்தொனிப் பொருளும் சிறப்பாக அரங்கில் வெளிப்பட்டது. இன்றைய சூழலில் கல்வியை அறப்பணியாகக் கருதாமல் வியாபாரமாகக் கருதி பணம் பெறும் தொழில்நிறுவனமாகப் பார்க்கும் அளவிற்கு ஆக்கியுள்ளது அரசும், அரசின் கல்விக்கொள்கையும். சுதந்திர இந்தியாவில் இலவசக்கல்விக்கு வித்திட்டவர்களான சாத்திரிபாய் மகாத்மா பூலே இவர்களின் சிந்தனையை மறந்துவிட்டு முதலாளித்துவப் பிடியில் சிக்கித் தவிக்கிறப் போக்கு உருவாகியுள்ள இன்றைய காலகட்டத்திற்கு இந்நாடகம் தேவையாகப்படுகிறது.
சாவித்திரிபாய் பூலே நடத்தும் பள்ளி மாணவர் எழுதிய மதமும் நானும் எனும் கட்டுரையை நாடகத்தில் வசிப்பது ஆவண அரங்கிற்கான, வரலாற்றுப்பிரதி வாசிப்பாக கூடுதல் பலம் தருகிறது. “வேதங்களை நாங்கள் மட்டும் தான் படிக்கவேண்டும் என்று கூறுகிறார்கள். இதிலிருந்து எங்களுக்குக்கானது இல்லை என்பது மட்டும் தெரிகிறது, எந்தவித மத புனித நூல்களும் எங்களுக்கு இல்லை என்பது தெளிவாகிறது. வேதங்கள் பார்ப்பனர்களுக்காகவே தான் சொந்தம் என்றால் அவர்கள் தான் அதன்வழி நடக்கக் கடமைப்பட்டவர்கள். புனித நூல்கள் எங்களுக்கு சொந்தம் இல்லை என்றால் அவற்றை நாங்கள் படிக்கக்கூடாது என்றால் அவற்றில் பொறிக்கப்பட்டவை எங்களுக்கு பொருந்தாது என்று ஆகிறது. எனவே தெய்வங்களே உங்களது மதங்களில் எது எங்களுக்கு உரியது என்று கூறும். நாங்கள் அதன்படி நடக்கிறோம்” என்று கூறுவது சனாதனமுறைக்கு எதிராக மக்கள் செயல்படவேண்டும் என்பதைக் காட்டுகிறது. ஒரு சிறுமியின் விவாதத்தின் பொருளிலிருந்து விளக்கியுள்ள இக்கருத்து ஒடுக்கப்பட்டமக்களின் கல்விச்செயல்பாட்டிற்கு அடித்தளமான, அவசியமான வினாவாகத் தோன்றுகிறது. நாம் எதைக் கற்கவேண்டும்?எச்சிந்தனை வழி நடக்கவேண்டும்? எச்சிந்தனையை நமக்கான சிந்தனையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்? நம் வாழ்வியலுக்கு எதிரானவைகள் எவையெவை என்கிற புரிதலை நோக்கியே ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விஅமைய வேண்டுமென மகாத்மா ஜோதிராவ் சாவித்திரிபாய் மேற்கொண்டதை நாடகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் புனித இடங்களாக சொல்லப்படும் காசி நாசிக் புனே போன்ற இடங்களில் அப்பாவிப் பெண்களின் நிலையினை அறிந்து, வாழ்க்கையில் ஆண்களால் ஏமாற்றமடைந்த கர்ப்பிணிப் பெண்களுக்கான காப்பகம் ஒன்றை தொடங்கியதும் பெண்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் கொடுமைகளிலிருந்து மீள்வதற்குக்காப்பகம் தேவை என ஜோதிராவ் நினைத்து காப்பகத்தைத் தொடங்கினார். இருவருக்கும் வாரிசு இல்லை என்ற போதிலும் காப்பகத்தின் மூலமாக வளர்க்கப்படும் குழந்தைகளைத் தங்கள் குழந்தைகளாக எண்ணி வளர்த்தார்கள். இரத்த சொந்தங்களுக்கு அப்பாற்பட்ட குழந்தைகளின் மீதான நேசிப்பு சாவித்திரியிடம் இருந்ததை நடிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. வாழ்வில் ஒருபோதும் நம்பிக்கையை கைவிடாமல் துணிச்சலுடன் தன்னம்பிக்கையோடு செயல்படுவதற்கு ஜோதிராவ் வழிகாட்டியாக சாவித்திரிபாயிக்குத் துணை நின்றுள்ளதை நாடகம் காட்டுகிறது. இது சுயநலமில்லாப் பொதுநல வாழ்வைத் தன் வாழ்நாள் இறுதிவரையிலும் கொள்ளைநோய் தம்மை ஆட்கொண்ட போதும் மக்களுக்கு சேவை செய்வதையே தன் பணியாகக் கொண்டிருந்தார் என்பதை நாடகம் காட்டுகிறது. சாவித்திரிபாயாக நடித்தநபர் சாவித்திரிபாயின் முகவுருவையும் பெற்று, “சிந்தனை தான் மனிதனை வாழச் செய்யும் நான் சாவித்திரிபாய். நடித்துவிட்டேன் படித்துவிட்டேன் தன் வாழ்நாள் முழுக்க ஒடுக்குமுறைக்கு எதிராக வேலை செய்த சாவித்திரிபாய் நீங்களும் படித்து, சாவித்திரிபாய் உங்க மனசுல, உங்க செயல” என்று கூறியபடியே பார்வையாளர்கள் பக்கம் போய் கலந்துவிட நாடகம் நிறைவுபெறுகிறது. நாம் ஒவ்வொருவரும் ஒடுக்குமுறைக்கு எதிராக பெண் கல்விக்காக குரல் கொடுக்கும் போதும் சாவித்திரிபாயாகவும் சாவித்திரிபாய் சிந்தனை கொண்டவராகவும் வாழமுடியும் என முன்வைக்கிறது நாடகம்.
இந்நாடகத்தில் மனுசாஸ்திரத்தின் வடிவமாக விளங்கும் இந்து மதத்தையும் பார்ப்பனியத்தையும் வேரறுக்க நினைத்த ஜோதிராவின் செயல் நாடகத்தில் வெளிப்பட்டுள்ளது. “எங்களை கடவுளின் குழந்தைகள் என்று சொன்ன பார்ப்பனர்கள் தான் என்னைத் தெருவில் வைத்து துன்புறுத்தினார்கள்”. “ஆதிக்கசாதிகளின் வன்மக் கூச்சல் என் பள்ளியின் பிஞ்சுக் காதுகளுக்குக் கேட்கவேண்டாம் என்பதற்காக சன்னல்களையும் கதவுகளையும் மூடிக்கொண்டு பாடம் நடத்தினோம்”. என சாவித்திரிபாய் துணிவோடு கூறுவதாக உரத்தகுரலில் உரையாடுவதோடு, நானும் என் மதமும் எனும் கட்டுரை பள்ளியில் படிக்கும் பெண் குழந்தை எழுதியதை வாசித்துக் காட்டுகிறார். ஆணவகொலைகள் அரங்கேறி வருவதை இந்நாடகம் சாடுகிறது. பெண் ஆண்களால் தனித்துவிடப்பட்ட சூழலை எதிர்த்துகுரல் கொடுக்கிறார். இதற்கென பெண்களுக்கான விடுதி ஒன்றையும் ஆரம்பித்தார. ; பெண் குழந்தைகளைக் காப்பதற்கும் சிசுக்கொலையை தடுப்பதற்கான செயலில் ஜோதிராவ் சாவித்திரிபாய் இருந்திருப்பதைப் பார்க்கமுடிகிறது. தண்ணீரையும் பகடைக்காய்களாகப் பார்க்கும் போக்கினை நாடகம் எதிர்க்கிறது. இரட்டைக்குவளை முறை, தீட்டு என்கிற கொடுமைகளை நாடகம் சாடுகிறது. ஆணாதிக்கத்தால் ஏமாற்றப்பட்டு தனித்துவிடப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஆதரவாக காப்பகம் ஏற்படுத்தி வாழ்வளித்தை நாடகத்தில் பேசப்பட்டுள்ளது. இந்நாடகத்தில் நடித்தவர் சாவித்திரிபாயாகவும் ஜோதிராவாகவும் பள்ளிக் குழந்தைகளாகவும் தான் உருமாறி ஒர் உடலில் பல உடல்களாக பல பாத்திரங்களை ஏற்று சிறப்பாக உரையாடலை வெளிப்படுத்தியுள்ளார்.
மாற்றுச்சடங்கை உருவாக்கவேண்டும் என்கிற தன்மையில் சடங்கு சம்பிரதாயங்களுக்கு எதிராக திருமணத்தை நடத்துவது துணிச்சலான காரியமாகும். மேலும் பஞ்சகாலங்களில் வறியவர்களுக்கு உதவவேண்டும் என்று ஜோதிராவ் எண்ணியதை நாடகம் வெளிப்படுத்தியுள்ளது. “எழுபதுகளில் புனே போன்ற நகரங்களில் ஏற்பட்ட பஞ்சத்தின் விளைவால் உணவும் தண்ணீருமின்றி மக்கள் பரிதவித்தார்கள. ; ஒருநாட்டின் சமநிலை இல்லாத சூழலில் முதலில் பாதிக்கப்படுவது ஒடுக்கப்பட்ட மக்களே இந்தப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகரமாக தங்களால் முடிந்த அளவிற்கு உணவுகளையும் தண்ணீரையும் வழங்கினோம். பலருடைய பசியைத் தீர்த்து வைத்த சந்தோசத்தை அவர்களிடம் பார்க்கமுடிகிறது என்று கூறுவது ‘உண்டிக்கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ எனும் பௌத்தச் சிந்தனையை ஜோதிராவ் சாவித்திரிபாய் தன் வாழ்நாளில் கடைபிடித்துள்ளதைப் பார்க்கமுடிகிறது. கணவனை இழந்த பெண்களுக்கு மொட்டை அடிக்கும் வழக்கத்திற்கெதிராக ஒட்டுமொத்த நாவிதர்;களை அழைத்துப் பேசி, மாநாடு ஒன்றை நடத்திய வரலாற்றுச் செய்தியை நாடகத்தில் பேசப்பட்டுள்ளது. பெண்களின் முடியை மழிப்பதற்கு எதிராக நாவிதர்களை யோசிக்கச் செய்துள்ளார் பூலே. பம்பாயில் மிகப்பெரிய ஓர் ஊர்வலத்தை ஏற்படுத்தி “நாளைமுதல் நாங்கள் பெண்களுக்கு முடியை மழிக்கமாட்டோம”; என முடித்திருத்துவோர் மனமாற்றமடைந்ததை நாடகம் காட்டுகிறது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி வழங்குவதன் மூலம் அரசியல், சமூக, பண்பாட்டுத் தளங்களில் விழிப்புணர்வு பெறுவதோடு சாதிய இழிதொழிலிருந்து விடுபடும் நிலை உருவாகும். இதனால் தான் அண்ணல் அம்பேத்கர், அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், தந்தை பெரியார் போன்ற சிந்தனையாளர்கள் தலித்துக்கள் அறிவு பெறுவதே விடுதலையின் முதல்நிலையாகக் கொண்டார்கள். கல்வி பெற்று இட ஒதிக்கீட்டைப் பயன்படுத்தி வேலை வாங்குவது மட்டுமல்ல ஒடுக்கப்பட்டோர்க்கான கல்வி. கல்வியின் மூலம் சமூக உளவியலைப் புரிந்து கொள்வதும் தன்னிலை அறிவதும், அதிகாரத்த்தைப் பெறுவதும், சமூக வினைகளினூடாக எதிர்வினை ஆற்றுவதும், விழிப்புணர்வு அடைவதுமான குறிக்கோள்களை சமூக விடுதலைக்கான கல்வியின் நோக்கமாகும். இதன் தேடலாக ‘நான் சாவித்திரிபாயை படிக்கிறேன்’ நாடகம் அமைந்துள்ளது. சாவித்திரி பாய் பூலே இவர்களின் ஒட்டுமொத்த வாழ்வியலையும் நிகழ்த்துப் பனுவலுக்குள் கொண்டு வந்துள்ளார் ஞா. கோபி. இவரின் நிகழ்த்து முறைமைகளை அரங்கவெளியில் கொண்டு வந்ததோடு சாவித்திரிபாயாக உருமாறி, பார்வையாளருக்குள் ஊடுருவி நாம் சாவித்திரியாக மாறுவதற்கு உள்ளத் திண்மையைக் கொடுத்ததோடு சாவித்திரிபாயாக வாழப்பழக்கியுள்ளார் என்றே சொல்லத்தோன்றுகிறது. சாவித்திரிபாய் பூலேவின் சரித்திரத்தை மராட்டியச் சூழலில் பள்ளி, கல்லூரிகளில் நாடகம் போடுவதும் உரையாடுவதும் அதிக நிகழ்விப்புகளைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக சுஷ்மா தேஸ் பாண்டே மராட்டிய அரங்கியலில் சாவித்திரிபாய் பூலே சமூகச்செயல்பாட்டினை முன்வைத்து பலமுறை நாடகமாக நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தமிழ் அரங்க வரலாற்றில் முதல்முறையாக ஜோதிராவ் சாவித்திரிபாயின் விடுதலைக்கான தேடலை தனிநபர் நடிப்பினூடாக நிகழ்த்தியுள்ளது சிறப்பிற்குரியதாகும்.
“நான் சாவித்திரிபாயைப் படிக்கிறேன்" நாடகம், 5. 5. 2018 கேரள சாகித்திய அகாடமியும் வம்சி பதிப்பகமும் இணைந்து நடத்திய ‘என்சிறகுகள்’ எனும் நிகழ்வில் இந்நாடகம் அரங்கேற்றப்பட்டது. மேலும், மாற்று நாடக இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்ட நாடக விழாவில் 30. 5. 18 அன்று நிகழ்த்தப்பட்டது. மேலும் கேரள அரசுப்பண்பாட்டு மையமும் பாலக்காடு நாவரங்கும் இணைந்து 15 ஏப்ரல் 2109 அன்று இந்நாடகம் அரங்கேற உள்ளது. குறிப்பாக நாடக நிகழ்வுகளில் மேடைப்பொருட்கள் வடிவமைத்த பாண்டிச்சேரி எஸ். தனசு, ஒளிவடிவமைப்பாளர் சந்தானபூபதி மற்றும் இசை வடிவம் ஜெயான் சுரேந்தர் சுரேன் ஆனந்த், சமிதி பார்த்திபன், வேல் ஆகியோர்கள்; அரங்கியல்-படைப்பியல் ரீதியிலான பங்கேற்பு இந்நிகழ்த்துப்பனுவலுக்குக் கூடுதல் பலமாக இருந்ததாக கோபி கூறியுள்ளார். நடிகர்களின் நடிப்பு வழியேதான் நிகழ்த்துதல் நிகழ்வாகிறது எனும் நிலையில் நடிகர் ஸ்டெல்லாவின் நடிப்பு உழைப்பு விரிவாக பேசவேண்டியது. நாடக நிகழ்வில் கண்ட நடிப்பைப் பற்றி பேசுபவர் குறைவாக உள்ள தமிழ் அரங்கச்சூழலில் சோர்வுறாமல் ஸ்டெல்லா பதினைந்து ஆண்டுகளாக அரங்கச்செயல்பாட்டில் ஈடுபட்டு வருவது பாராட்டிற்குரியது. புகைப்படம் எடுத்ததோடு மட்டுமல்லாமல் நாடகப்பொருட்களை ஏற்றி இறக்குவது வரைக்குமான எல்லா வேலைகளிலும் ஈடுபட்டோடு செய்த புகைப்படக்கலைஞர் அபிஷேக் மானி நம்பிக்கைக்குரியவர். நடிகர் பிரபேந்திரனின் அவதானிப்பும் உடனிருத்தலும் நிகழ்விற்கு கூடுதல் உத்வேகமளிக்கிறது. தளம் கொடுத்து உதவிய பார்த்திபராஜாவுக்கும் நன்றியும் அன்பும். . . நினைவு பரிசு கொடுத்து மரபு மீறுதல் சாத்தியமென தோள் தட்டி உற்சாகப்படுத்திய தோழர் ஆதவன் தீட்சண்யாவுக்கும் நன்றிகள். இவ்வாறு அரங்கிற்குப் பின்னான பின்புலத்தைப் பகிர்தலை உரையாடலின் வழி வெளிப்படுத்தினார் கோபி.
- ம.கருணாநிதி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர்-625 514