பிப்ரவரி 20, 21 பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்போம்! பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளின் ஆணவத்துக்கு பதிலடி கொடுப்போம்!

தொழிற்சங்க அங்கீகாரத் திருத்தச் சட்டம் வேண்டும்.

L A BILL 47/2008க்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற வேண்டும்.

ஒப்பந்தத் தொழிலாளர் நலன் காக்க அவர்களுக்கான சட்டம் திருத்தப்பட வேண்டும்.

தமிழ்நாட்டின் டெட்ராய்ட் என்று ஆட்சியாளர்கள் பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் திருபெரும்புதூரின் நிரந்தரமற்ற தொழிலாளர்கள் வாழ்க்கை நிரந்தரமான நிச்சயமின்மையிலேயே தொடர்கிறது. நிரந்தரத் தொழிலாளர்கள் சங்க உரிமைகள், ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு தங்கக் கூண்டுக் கிளிகளாக உள்ளனர்.

பன்னாட்டு, இந்நாட்டு தொழில் நிறுவனங்கள் கொள்ளை கொள்ளையாய் லாபம் ஈட்டுவதை உறுதி செய்ய, அந்த நிறுவனங்களில் வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தாங்கள் எந்த நேரமும் வேலையை விட்டு விரட்டப்படலாம் என்ற அச்சத்திலேயே வாழ்கிறார்கள்.

மனித உடல் எவ்வளவு, சூடு தாங்கும், எவ்வளவு பனி தாங்கும் என்று சோதிக்க ஹிட்லர் யூதர்களை பயன்படுத்தியது போல், மனித உடல் எவ்வளவு உழைப்பைத் தாங்கும் என்று பரிசோதிக்க, இன்றைய ஹிட்லர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களைப் பயன்படுத்துகிறார்கள்.

தமிழக முதலாளிகள் பலர், பெரும்பான்மைத் தொழிலாளர்கள் ஆதரவு பெற்ற சங்கங்களை அங்கீகரிக்க மறுக்கிறார்கள். 1926 தொழிற்சங்கங்கள் சட்டம், அங்கீகாரம் பற்றி பேசவில்லை எனப் பதில் சொல்கிறார்கள். மேற்கு வங்கத்தில், கேரளாவில் 1926 தொழிற்சங்கங்கள் சட்டத்தின் கீழ் திருத்தம் கொண்டு வந்து, ரகசிய வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்ம தொழிற்சங்கத்தைக் கண்டறிந்து அதனை அங்கீகரிக்க வழி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், என்எல்சி, அரசு போக்குவரத்து கழகம், நுகர்பொருள் வாணிப கழகம் ஆகிய துறைகளில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் பெரும்பான்மை உள்ள சங்கத்தை கண்டறிந்து அங்கீகாரம் தரும் நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ளது.

மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, மத்திய தொழிற்சங்க சட்டத்திற்கு, தமிழகத்திலும், மாநில சட்டமன்றத்தில் திருத்தம் கொண்டு வந்து, தொழிற்சங்க அங்கீகாரத்திற்கு வழி செய்ய வேண்டும்.

நிலையாணை சட்டத்திற்கு திருத்தம் கொண்டுவந்து பயிற்சியாளர்கள் மற்றும் பிற நிரந்தரமற்ற தொழிலாளர்களின் பணி நிலைமைகளில் மாற்றம் கொண்டு வர, தமிழக சட்டமன்றம் 14.05.2008 அன்று ஒரு திருத்த மசோதா கொண்டு வந்தது.

நிரந்தரமற்றவர்களின் பணிக்கால அளவை குறைப்பது, நிரந்தர தொழிலாளர் எண்ணிக்கையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் தாண்டி நிரந்தரமற்ற தொழிலாளர்கள் இருக்கக் கூடாது போன்ற மாற்றங்கள் கொண்டு வர, இத் திருத்தச் சட்டம் கதவுகளைத் திறந்தது. 4 வருட மவுனத்திற்குப் பிறகு, மத்திய அரசு, இத் திருத்த சட்டத்தின் உயிரை ஆன்மாவை ஒழிக்கப்பார்க்கிறது.

சட்ட வரையறையில் இருந்து பயிற்சியாளர்களை எடுத்துவிடுமாறும், நிரந்தரமற்ற தொழிலாளர் எண்ணிக்கைக்கு வரம்பு கட்டுவது முதலீட்டாளர்களை துரத்தும் என்றும் வாதாடுகிறது. முதல்வர், மத்திய அரசின் தொழிலாளர் விரோத நிலையை, தமிழக மக்களிடம் சட்டமன்றம் மூலம் அம்பலப்படுத்தி, சட்டமன்றம் மூலமே இந்தத் திருத்த சட்டத்திற்கு ஒப்புதல் தர, மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் தர வேண்டும்.

தமிழகத்தில், ஒப்பந்தத் தொழிலாளர் (நீக்குதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல்) சட்டம் 1970ன் கீழ், ஒப்பந்த முறை நீக்கம் என்பதே கிட்டத் தட்ட நடைபெறவில்லை. போதாக் குறைக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்று, ஒரு நிறுவனத்தில் ஒப்பந்த முறை சட்டப்படி நீக்கப்பட்டாலும், சம்பந்தபட்ட தொழிலாளர்கள், தானாக, (ஆட்டோமேட்டிக்) அந்த நிறுவனத் தொழிலாளர்களாக ஆக முடியாது என்கிறது.

இவர்கள் தொடர்பான சட்ட விதிகளில் மட்டும், சம வேலைக்கு சம ஊதியம் எனச் சொல்லப்பட்டுள்ளது. சம ஊதியம் சம பணி நிலைமைகள் தராமல் இருக்கவே, நிரந்தரம் ஆக்காமல் ஒப்பந்த தொழிலாளியாய் வேலைக்கு அமர்த்தும்போது, சம ஊதியம் தர முன்வருவார்களா?

ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் முதன்மை வேலையளிப்பவர் பதிவு, ஒப்பந்தக்காரர் உரிமம் ஆகியவை, ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரப் பணியில் அமர்த்தினால் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், அப்போது அந்த ஒப்பந்த தொழிலாளர்கள் தானாக முதன்மை வேலை அளிப்பவரின் தொழிலாளர்கள் ஆவார்கள் என்றும், ஒப்பந்த முறை நீக்கப்பட்டால் அந்த ஒப்பந்த தொழிலாளர்கள் தானாக முதன்மை வேலை அளிப்பவரின் தொழிலாளர்கள் ஆவார்கள் என்றும், சட்டத் திருத்தம் கொண்டு வர, தமிழக அரசு மத்திய அரசை வற்புறுத்த வேண்டும்.

மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் அமைச்சகங்கள், 6 மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பந்த தொழிலாளர்களின் சமஊதியம், பணி நிலைமைகள் தொடர்பான தணிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

உழைக்கும் மக்கள் பிரச்சனைகள் பற்றி விவாதிக்க சிறப்பு சட்டமன்றக் கூட்டத் தொடர் வேண்டும்!

பிப்ரவரி 2 - 12, மாநிலம் தழுவிய பிரச்சாரப் பயணம்.

பொதுக் கூட்டம் :- பிப்ரவரி 12, தானா தெரு, புரசைவாக்கம், சென்னை.

நாமின்றி நாடில்லை. நாடோ நமக்கில்லை.
நாமே நாடாவோம்! நாட்டையே நமதாக்குவோம்!

தொடர்புக்கு :- அகில இந்திய தொழிற்சங்க மய்ய கவுன்சில் ( AICCTU)
2, கம்பர் தெரு, திருபெரும்புதூர், காஞ்சிபுரம் மாவட்டம் - 602 105. 044-2674 9984, 98403 40741

Pin It