18.08.2012 அன்று கோவை இராமநாதபுரம் S.N. திருமண மண்டபத்தில் பெரியார் திராவிடர் கழகமாக இயங்கி வந்த தோழர்கள் ஆனூர் செகதீசன் தலைமையிலும், வழக்கறிஞர் செ.துரைசாமி, கோவை கு.இராமகிருட்டிணன் ஆகியோர் முன்னிலையில் ஒன்று கூடி எதிர்கால திட்டங்கள் குறித்து தீர்மானித்தனர்.

தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பெரியார் தொண்டர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் அமைப்பு, செயல்பாடுகள் குறித்து கீழ்க்கண்ட முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளன.

1)            தந்தை பெரியார் திராவிடர் கழகம் எனும் பெயரில் தொடர்ந்து இயங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.

2)            தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கொடி மேலிருந்து கீழாக கருப்பு, சிவப்பு. கருப்பு வண்ணத்தில் மூன்று பங்கு அகலமும் இரண்டு பங்கு நீளமும் இருக்கும். இதில் மேலும் கீழும் கருப்பு இரண்டு பங்கு நடுவில் சிவப்பு ஒரு பங்கு அளவில் இருக்கும் என தீர்மானிக்கப்படுகிறது.

3)            தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவராக ஆனூர் செகதீசன், துணைத்தலைவராக வழக்கறிஞர் செ.துரைசாமி,. பொதுச்செயலாளராக கோவை கு.இராமகிருட்டிணன், பிரச்சாரச் செயலாளராக சிற்பி இராசன், மகளிர் அணிச் செயலாளராக மதுரை வெண்மணி, புதுவை மாநில அமைப்பாளராக வீர.மோகன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

மண்டல அமைப்பாளர்களாக வடக்கு மண்டலம் (சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் புதுவை அடங்கியது) கரு.அண்ணாமலை

கிழக்கு மண்டலம் (கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் அடங்கியது) வழக்கறிஞர் சா.பகுத்தறிவாளன்.

மேற்கு மண்டலம் (தருமபுரி, கிருட்டிணகிரி, சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், நாமக்கல் அடங்கியது) காசு.நாகராசன்

தெற்கு மண்டலம் (திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி அடங்கியது) திண்டுக்கல் சம்பத் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

4)            தந்தை பெரியார் திராவிடர் கழக ஏடு மாதம் இருமுறை என ஆசிரியர் குழு அமைத்து சென்னையிலிருந்து வெளியிடுவதென தீர்மானிக்கப்படுகிறது.

5)            தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சட்ட திட்டங்களை தயாரித்து வழங்க வழக்கறிஞர் சு.குமாரதேவன் தலைமையில் வழக்கறிஞர்கள் ப.அமர்நாத், இ.மு.சாஜித், சா.பகுத்தறிவாளன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

 ***

தீர்மானங்கள்

1)            கடந்த சூலை 5ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. இராமச்சந்திரன் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட கிருட்டிணகிரி மாவட்ட கழக அமைப்பாளர் தோழர்.பழனிச்சாமி கொலை வழக்கினை விரைந்து புலன் விசாரணை நடத்தி முடித்து குற்றப்பத்திரிக்கையினை தாக்கல் செய்தும், வழக்கு விசாரணையினை விரைவில் முடிக்க வசதியாக சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டுமென தந்தை பெரியார் திராவிடர் கழகம் தமிழக அரசை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது. மேற்படி இராமச்சந்திரன் கும்பலால் நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களை விசாரிக்க தனிப் புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

2)            இந்திய அரசியல் சட்டத்தின் 17வது பிரிவில் ‘சாதி ஒழிப்பு’ என்பதற்குப் பதிலாக பார்ப்பனர் சூழ்ச்சியால் 'தீண்டாமை ஒழிப்பு' என்று எழுதப்பட்ட காரணத்தால், சட்டப்படி சாதி பாதுகாக்கப்படுகிறது.

தந்தை பெரியாரின் பேருழைப்பால் இன்றைய தினம் பெரும்பாலான இடங்களில் சாதி ஒழிக்கப்பட்டு வருகின்ற நேரத்தில் பார்ப்பன ஆதிக்கமான கோவில் கருவறையில் மட்டும் பார்ப்பனர் அல்லாதார் நுழையக்கூடாதென்று நிலை இருப்பதால் அரசியல் சட்டத்தின் 17வது பிரிவைத் திருத்தி 'தீண்டாமை ஒழிப்பு' என்ற சொல்லுக்கு பதிலாக ‘சாதி ஒழிப்பு’ என்று திருத்தம் கொண்டுவர வற்புறுத்தி தந்தை பெரியாரின் நினைவு நாளான திசம்பர் 24ஆம் நாள் (2012) அன்று, சாதி சனாதனத்தின் கடைசிப் புகலிடமான கோவில் கருவறையில் நுழையும் கருவறை நுழைவுப் போராட்டத்தை சென்னை மயிலை கபாலீசுவரர் கோவிலில் நடத்துவதென தீர்மானிக்கப்படுகிறது. கருவறை நுழைவுப் போராட்டத்தை விளக்கும் தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பரப்புரைப் பயணங்களை நடத்துவதெனவும் தீர்மானிக்கப்படுகிறது.

3)            தந்தை பெரியார் தன்னுடைய உழைப்பால் ஈட்டிய சொத்துக்களையும். பொதுமக்களால் வழங்கப்பட்ட பணத்தையும் கொண்டு பகுத்தறிவு பிரச்சாரம் செய்வதற்கும், இயக்க வளர்ச்சி தடையின்றி நடக்க வழி செய்யும் வகையிலும் நிறுவனம் ஒன்றை உருவாக்கினார். ஆனால் பெரியாரின் மறைவுக்குப் பின் அந்நிறுவனம் தனி மனித அனுபவத்தில் இருந்து வருகிறது. இதனால் தந்தை பெரியார் காண‌ விரும்பிய பகுத்தறிவு சமுதாயம் மலர்வதற்கான வாய்ப்புகள் வெகு தூரத்திலேயே இருந்து வருகிறது. இந்த இடைவெளியை நிரப்பும் வகையில் தந்தை பெரியாரின் சொத்துக்களை கையகப்படுத்தி நாட்டுடமை ஆக்க வேண்டுமென தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

4)            ஈழத் தமிழர்களின் துயர் துடைக்க தமிழகம் கிளர்ந்தெழும் போதெல்லாம் மத்திய அரசு அந்தப் போராட்டத்தை நசுக்குவதும், இன வெறியன் இராஜபக்சேவுக்கு துணை போவதும் தொடர்கதையாக வருகிறது. அந்த அடிப்படையில் தற்போது ‘ஈழம்’ என்ற சொல்லை தமிழர்கள் பயன்படுத்தக் கூடாதென்று தடுத்து பின் கடும் எதிர்ப்பின் காரணமாகப் பின் வாங்கியது. இந்நிகழ்வு தமிழர்களின் சுயமரியாதையையும், இன உணர்வையும் கேள்விக்குள்ளாக்கும் செயலாகவே தந்தை பெரியார் திராவிடர் கழகம் கருதுகிறது. இனிமேலும் மத்திய அரசு தமிழர்களின் ஊனோடும், உறவோடும் கலந்து விட்ட ‘ஈழம்’ என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என்று கூறுமானால் மத்திய அரசுக்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகம் மக்களைத் திரட்டி பெரும் போராட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

Pin It