நீதியும் அறமும் கொல்லப்பட்ட ஒரு காலச்சூழலுக்குள் நாம் வாழ்கிறோம். நாட்டின் வளர்ச்சி, வல்லரசுக்கனவு ஆகியவற்றின் பெயரால் மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினரைப் பலியிடவும் நாம் தயாராகி விட்டோம். கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாக கூச்சமற்ற பொய்களைக் கூறும் எவருமே அணு உலையால் ஆபத்தில்லை என்று சொல்லவில்லை. அதிக ஆபத்தில்லை, அதிக கதிர்வீச்சில்லை என்று மட்டுமே சொல்கிறார்கள். உலக வரலாற்றில் பல லட்சம் மனித உயிர்களைத் தின்றுவிட்ட அணுவெறி வர்த்தகமும் போர் மோகமும் இப்போது காந்தீய தேசத்தையும் பீடித்திருக்கிறது. ஆனால்  அணு விபத்தொன்று நடந்தால் வட தமிழகத்தில் கல்பாக்கமும், தென் தமிழகத்தில் கூடங்குளமுமே போதும் தமிழகத்தை சுடுகாடாக்க...

ஆனால் அப்துல் கலாம் தொடங்கி,  அணு உலையை ஆதரிக்கும் அத்தனை பேருமே நாட்டின் வளர்ச்சிக்கு இது தேவை என்று கூவிக்கொண்டிருக்கிறார்கள். இந்த கூவலின் சாராம்சத்தில் அவர்கள் ஒரு படி மேலே சென்று, ’விபத்து எங்குதான் நிகழவில்லை. இதற்கெல்லாம் பயந்தால் நாடு முன்னேறுமா?’ என்று கேட்கிறார்கள். சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் தனியார்  தாராளமயத்தைக் கொண்டு வந்த நரசிம்மராவ் அரசு,நாட்டின் வளர்ச்சி என்று சொல்லியே காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.  இந்த பதினைந்து ஆண்டுகளில் மிகச் சிறிய பிரிவினர் வீங்கவும் ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகியிருப்பதைத் தவிர என்ன மாற்றம் நடந்து விட்டது? நாடெங்கிலும் பல இலட்சம் விவாசாயிகள் தற்கொலை செய்து கொண்டதைத் தவிர.

இதே கவர்ச்சிக் கோஷங்களோடுதான் அமெரிக்காவோடு அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் மன்மோகன். ஆனால்,போபாலில் பல்லாயிரம் பேரின் உயிரைக் குடித்த யூனியன் கார்பைட்டின் நிழலைக் கூட தொட முடியவில்லை இந்திய அரசால்.இன்று வரை உறவினர்களையும் இழந்து விஷவாயுவால் பாதிக்கப்பட்ட போபால் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஏழைகளின் போராட்டத்தை எந்த அரசியல்வாதி கண்டு கொண்டார்? நீண்ட காலம் போராடும் அந்த மக்களின் குரல்களை எந்த அதிகார பீடம் கண்டு கொள்ளவில்லையோ அவர்கள்தான் கூடங்குளம் அணு உலையைக் கண்டு அச்சப்படாதீர்கள் என்று அறிவுரை கூறுகிறார்கள். இந்த அறிவுரையைத்தான் நமது ஊடகங்களும் எடுத்துக் கூறுகின்றன.

1988 ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அணுஉலை அமைக்கும் ஒப்பந்தத்தை ரஷ்யாவோடு செய்து கொண்டு அதை கூடங்குளத்தில் நிறுவும் முடிவை எடுத்த போதே அந்தப் பகுதி மீனவ மக்கள் போராடத் துவங்கி விட்டார்கள். இன்றுள்ள ஊடக வெளிச்சம் எதுவும் அன்றைக்கு போராடிய மக்களுக்கோ போராடியவர்களுக்கோ கிடைக்கவில்லை. தமிழ் வார இதழான ஜூனியர் விகடன் அப்போது நடந்த போராட்டம் தொடர்பாக பல காத்திரமான கட்டுரைகளை வெளியிட்டாலும் பெரிய கட்சிகளின் ஆதரவின்மை காரணமாக அப்போராட்டம் வெளித்தெரியாமல் போனது. கடந்த 25 ஆண்டுகளாக நடந்த போராட்டம் இன்று மீனவ மக்கள், விவசாயப் பெருங்குடிகள், தலித்துகள் உள்ளிட்டோரின் கூட்டுப் போராட்டமாக உருவாகியுள்ளது.

பொதுப் பிரச்சனைகள், சாதியைத் தாண்டி அடித்தட்டு மக்கள் திரள் கூடங்குளத்தில் போராடி வருகிற நிலையில் இன்று போராடும் மக்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக சில அரசியல் தலைவர்களும் ஊடகங்களும் பேசியும் பிரச்சாரம் செய்தும் வருகின்றனர். ஆனால் கூடங்குளம் பகுதியில் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அறிவு சார் சமூகம் தன்னால் ஆன பங்களிப்பைப் போராடும் கூடங்குளம் மக்களுக்கு வழங்க வேண்டும். சமகாலத்தில் நாம் சந்தித்த எல்லா மனிதப் பேரழிவுகளிலும் நாம் எதிர்வினையாற்றியிருக்கிறோம். கொல்லவருகிறது இந்த கூடங்குளம் என்று தெரிந்த பின்னரும் நாம் அமைதியாக இருப்பதென்றால் பேசாமல் நாம் கரப்பான்பூச்சி ஆகிவிட வேண்டியதுதான். ஏனெனில் அணுக் கதிர்வீச்சை அதிகளவு தாங்கும் சக்தி கரப்பான்பூச்சிக்கு தான் உண்டு.

அரங்க கூட்டம்

தலைப்பு: கூடங்குளம் அணு உலை - அழிவின் விளிம்பில் மக்கள்
நாள் : 04-02-2012, சனிக்கிழமை மாலை 5.30 மணி
இடம்: பி.எட். அரங்கம், லயோலா கல்லூரி, நுங்கம்பாக்கம், சென்னை.

பேச்சாளர்கள்:

செயப்பிரகாசம்
மனுஷ்யபுத்திரன்
குறும்பனை பெர்லின்
மாலதி மைத்ரி 
பாஸ்கர் சக்தி
அமரந்தா
அஜயன் பாலா
பாமரன்
ஞாநி

அணு உலைக்கு எதிரானப் படைப்பாளிகள் இயக்கம்

ஒருங்கிணைப்புக் குழு:

அருள்எழிலன், சந்திரா, யுவபாரதி
93603 33336, 96000 87529

Pin It