சென்னை இலயோலா கல்லூரியில் கடந்த 04/02/2012 அன்று கூடங்குளம், அணுஉலை – அழிவின் விளிம்பில் மக்கள் – என்ற தலைப்பில், எழுத்தாளர் அருள் எழிழன் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு, மணிகண்டன் அவர்கள் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அமைய அணு உலைக்கு எதிரான படைப்பாளிகள் சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது .

பாமரன் முதல் கொண்டு ஞானிவரை என்று சொல்லத்தக்க வகையில் பல படைப்பாளிகள் அவரவர்தம் கருத்தை முன்வைத்தனர்.

1970 களில் கரிசல் இலக்கியம் படைத்த திரு.செயப்பிரகாசம், அணு உலைக்கு எதிரானவர்கள் எல்லாம் தேசத்துரோகிகளாக கூறப்படுவதை முன்னிறுத்தி பேசினார். முன்னாள் ஜனாதிபதி உயர்திரு அப்துல் கலாம் அவர்களின் செயல்பாடு சிறுபிள்ளைத்தனமானது என்றும், பேச்சுவார்த்தக்கு செல்லும் வழியில் அணு உலைக்கு எதிராகப் போராடியவர்களை தாக்கியது என்பது, அடிப்படை ஜனநாயகக் கொலை என்று முடித்தார்.

தொடர்ந்த குறும்பனை பெர்லின், கடற்கரையில் பிறந்து வாழ்வதே ஆண்டவன் கொடுத்த தண்டனயோ எனக் கேள்வி எழுப்பி, புற்று நோய் தாக்கம் குறித்தும், மணலாலை ஒன்றினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கினார். .

அழர்சாமியின் குதிரைப் புகழ் பாஸ்கர் சக்தி தமிழர்கள் ஒரு துரதிருஷ்டமான காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், அதிகார அரசியல்வாதிகளும், அகங்கார அறிவியலாரும், பாதுகாப்பு குறித்து உண்மைக்குப் புறம்பாக பேசி வருவதாகவும், மக்களிடம் உள்ள அச்சத்தை போக்குவது என்பது, பொய்யை நம்புகிற அளவுக்கு சொல்லி, ஏமாற்றுவது என்று முடித்தார்.

நிர்மலா கொற்றவை, தினமலரின் உண்மைக்குப் புறம்பான செற்பாடுகளை கூறி, அந்த நாளிதழைப் புறக்கணிக்க வேண்டும் என சொல்லியதுடன், இந்துத்துவ மடங்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று அரசு ஆராயுமா என்ற கேள்வியை எழுப்பினார்.

திரு அஜயன் பாலா மூன்று எதிரிகளாக, பொருளாதார சுழற்சி, மண்ணின் மைந்தருக்கு எதிரான செயல், அரசு, தினமலர் போன்றவற்றின் கீழ்த்தரமான விளம்பரங்கள் என்று நிகழ்வுகளை விவரித்தார்.

அடுத்தாக வந்த படைப்பாளர் மனுஷ்யபுத்திரன் இது போன்ற அவலங்களுக்கு எல்லாம், படித்த, வசதி படைத்த மற்றும் ஆளுமை செலுத்தும் அதிகார வர்க்கமே முழுமுதற்காரணம் எனத் தெளிவாக எடுத்துரைத்தார். அதிக வருமானம் ஒன்றையே குறியாகக் கொண்ட மக்கள் தரப்பே, மற்றவர்க்கான இழப்பு குறித்து கவலைப்படாமல், செயல்படுகிறது என்றும் கூறி, இவர்களே அடிப்படைக் காரணம். என்றார்.. பாதிக்கப்பட்டவர்கள் அத்தகையவர்களால் தொடர்ந்து ஏமாற்றப்படுவதால், அவர்கள் தங்களது கேள்விகளுக்கான நியாயமான பதில்களுக்காகவே தெருவுக்கு வருகிறார்கள். உண்மையான காரணத்தை ஆணித்தரமாக சொன்ன இவரே கருத்து தெரிவித்தவர்களில் ஒரு நிமிர் சுடராக விளங்கினார் எண்றால் அது மிகையாகாது .

தொடர்ந்த பாமரன், பாமர மக்களுக்குப் புரியும் வகையில் பல கருத்துக்களை நகைச்சுவயுடன் முன்வைத்தார் .கம்யூனிஸ்டுக்களை CPI நம்புவதே ஒரு மூடநம்பிக்கை என்றார்..

இறுதியாக பேச வந்த ஞானி அணு உலை ஆதரவர்களால் வைக்கப்பெறும் கேள்விகளுக்கு சரியான பதில்களைச் சொன்னார்..அணு உலை ஒன்று பொதுமக்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து, அயல் நாடு ஒன்றில் மூடப்பட்டது குறித்தும், ஆன செலவுகளை மின்சாரக்கட்டணத்துடன் SURCHARGE ஆக கட்ட மக்கள் ஒப்புதல் குறித்தும் சொன்னதுடன், தற்போதுள்ள கட்டமைப்புகளைக் கொண்டு, மாற்று வழிகளில் மின்சாரம் தயாரிக்க முடியும் என்பதாகவும் சொன்னார் . மக்களுக்கு தற்போது அணு உலையினால் ஏற்படக் கூடிய பாதிப்பின் அச்சம் நியாயமானது என்று நன்றாகவே தெரிந்து அணு உலை வேண்டாம் என்பதில் தெளிவாக உள்ளார்கள். தெரியாத அச்சத்தைப் போக்கத்தான், கூட்டங்கள் தேவை. தற்போது அதற்கு அவசியமில்லை என்பதை மிகத் தெளிவாக சொன்னார்.

ஞானி தகவல்களை திரட்ட அதிகமாகவே மெனக்கெட்டிருக்கிறார் என்பது உரையில் புரிந்தது. கூடங்குளத்தைத் திறக்காதே, கல்பாக்கத்தையும் மூடு என்ற எதிர்ப்புக் குரலாக அமைந்தது இந்த கருத்தரங்கம்.

என்னைப் பொறுத்தவரையில் திரு மனுஷ்ய புத்திரனின் இத்தகைய அவலங்களுக்கு எல்லாம் காரணம் பேராசை கொண்ட படித்தவர்களும், ஆதிக்க வெறி பிடித்த ஆளும் வர்க்கமும் என்ற கருத்து மறுக்கமுடியாத உண்மையென எனக்குப் பட்டது..

பொதுவாக அரங்கில் முன்னால் ஜனாதிபதியின் செயற்பாடுகள் எதிர்மறையான விமர்சனத்திற்கு உட்பட்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது.

Pin It