இலைகள் இலக்கிய இயக்கம் சார்பில் கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம் என்ற என் புத்தகத்தின் வெளியீட்டு விழா 05-02-2011 அன்று நாகர்கோவிலில்  நடைபெற்றது. அரங்கத்திற்கு  ஒத்த பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். எல்லோருமே கடைசி வரை நிகழ்வுகளை அவதானித்தார்கள் என்பது மனநிறைவளித்தது.

 கூட்டத்திற்கு மொழிப்போர் தியாகி கொடிக்கால் ஷேக் அப்துல்லா தலைமை தாங்கினார். பேராசிரியர் ஜே.ஆர்.வி எட்வர்ட், சிறுகதையாளர் குமாரசெல்வா ஆகியோர் புத்தகம் குறித்து விரிவாக பேசினர். குறிப்பாக குமாரசெல்வா இந்த புத்தகத்தை அதிகம் உள்வாங்கி பேசியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தன்னுடைய உரையில் அவர் எட்வர்ட் செய்த் குறித்த மதிப்பீட்டை தெளிவாக முன்வைத்தார். பாலஸ்தீன் விடுதலை போராட்டத்தில் அவரின் பங்களிப்பு, பல்வேறு பிரச்சினைகளில் அவர் மேற்கத்திய அறிவுஜீவிகளுடன் நடத்திய உரையாடல், ஐரோப்பிய மையவாதம்  கீழைக்கோட்பாட்டாளர்களின் அதற்கான எதிர்வினை ஆகியவை குறித்து விரிவாக பேசினார்.

இதே மாதிரியே ஜே.ஆர்.வி எட்வர்ட் இன் உரையும் அமைந்தது. அவர் கீழைச்சிந்தனைகள் என்ற வகைபாடு சரியானது தானா என்ற கேள்வியையும் இதில் முன்வைத்தார். விழாவுக்கு தலைமையேற்ற மொழிப்போர் தியாகி கொடிக்கால் ஷேக் அப்துல்லா தமிழ்ச்சூழலில் இம்மாதிரியான புத்தகம் அதிகம் தேவைப்படுகிறது என்றார். குறிப்பாக எவ்வித அறிவார்ந்த தேடலுமற்ற இஸ்லாமிய தளத்திற்கு இது அறிமுகப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்றார். புத்தகத்தின் முதல் பிரதியை பெற்றுக்கொண்ட என்.டி.ராஜ்குமார் என்னுடனான அவரின் இளமைக்கால உறவுகளை விரிவாக எடுத்துரைத்து, புத்தகத்தின் உள்ளடக்கம் மற்றும் அதன் வடிவமைப்பு பற்றியும் குறிப்பிட்டு பேசினார். இலைகள் இலக்கிய இயக்க பொறுப்பாளர் ஹசன் மைதீன் நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

இத்தொகுப்பானது கீழைத்தேய சிந்தனையாளர்கள் பத்துபேர்கள் குறித்த அறிமுகம், அவர்களின் கருத்தியல் தளம், நேர்காணல் இவற்றை உள்ளடக்கிய ஒன்றாக வெளிவந்திருக்கிறது. இவர்கள் ஒரு சிலரிடத்தில் நானே நேரடியாக நேர்கண்டிருக்கிறேன். மேலும் இந்த வரிசையில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவருமே தமிழுக்கு புதியவர்கள். மிகுந்த சிரமத்திற்கிடையே அடையாளம் பதிப்பகம் இதை வெளியிட்டிருக்கிறது. அதன் வடிவமைப்பை குறித்து பலரும் சிலாகித்தார்கள். சாதிக் அவரின் பதிப்பு நுட்பத்தோடு இதனை வெளியிட்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே.

மனச்சிக்கலின் விளைவாக புத்தகத்தை குறித்த அவதூறுகள் பதிப்பாளருக்கு நேரடியாகச் சென்றன. அதனை பொருட்படுத்தாமல் அவர் வெளிக்கொண்டு வந்தது அதன் நேர்த்திக்கு காரணமாக அமைந்தது.வாசிப்பிற்கும், சிந்தனைக்கும்,   விமர்சன கோட்பாட்டு எழுத்து செயல்பாட்டிற்குமான பல்வேறு சாத்தியப்பாடுகள் எனக்கு தற்போது உருவாகி இருக்கின்றது. அதனை உள்வாங்கி நான் எனக்கான தூரத்தை கடந்து கொண்டிருக்கிறேன். தமிழ்ச்சூழலுக்கு இது அவசியம் என்ற என் உள்ளுணர்வு சரியானது என்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பை வாசகனிடத்தில் நான்  விட்டு விடுகிறேன்.

வெளியீடு: அடையாளம் பதிப்பகம், 1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சி மாவட்டம்

விலை: ரூ 170

Pin It