கோதாவரி பருலேகர் - தமிழில் கமலாலயன்
வெளியீடு: சவுத் விசன்
132 (251) அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம். சென்னை 600086, விலை :125 ரூபாய்.

அவன் படித்த அந்த குக்கிராமத்தில் பஞ்சாயத்து போர்டு நடத்தி வந்த படிப்பகம் ஒன்று இருந்தது. கீற்றுக் கொட்டகையில் தான். (அந்த படிப்[பகம் இருந்த கீற்றுக்கொட்டகையை விட MGR படம் ஓடும் டூரிங் டாக்கீஸ் கீற்றுக்கொட்டகை மீது அவனுக்கு சபலம் அதிகம்.) படிப்பகத்தில் சில பெரியவர்கள் செய்தித்தாள் படித்துக்கொண்டு இருப்பார்கள் பகலில் சூரிய வெளிச்சத்திலும் இரவில் லாந்தர் விளக்கு வெளிச்சத்திலும், அப்போது அவனது கிராமத்தில் மின்சார வசதி இல்லை..

“அங்கே போய் செய்தித்தாள் படித்தால்தான் பொது அறிவு வளரும், தினமும் பள்ளி முடிந்து வீட்டுக்குப் போகும் போது கட்டாயம் செய்தித்தாள் படிக்க வேண்டும் இல்லையென்றால் முதுகுத்தோல் உரிந்து விடும்” என்று பொடிமட்டை வாத்தியார் மிரட்டியதால்தான் தொடங்கியது அவனது நூலக நுழைவு. எப்போதுமே படிக்க செய்தித்தாள் கிடைத்து விடாது. பெரியவர்கள் ஆளுக்கு ஒரு தாளாக பிரித்துப் படித்துக் கொண்டிருக்கும் போது அவனைப் போன்ற சிறுவர்களுக்கு கிடைப்பது சுதேசமித்திரன் சிறுவர் மலர், கல்கண்டு, குமுதம், ஆனந்தவிகடன் போன்ற வார இதழ்கள்தான். அவற்றில் ஆனந்த விகடனில் திரு. பிலோ இருதயநாத் என்பவர் அவ்வப்போது ஆதிவாசிகள் பற்றி எழுதியதால் ஆதிவாசிகள் அவனுக்கு அறிமுகமானார்கள். அந்த வயதில் ஏற்பட்ட வியப்பும் விந்தையும் இனி எந்த விலை கொடுத்தாலும் யாருக்கும் வரப்போவதில்லை.

ஆனாலும், வாலிபத்தில் ‘வனவாசி’ (ஆரண்யகா) என்ற வங்க நாவல் மூலமாக தாராசங்கர் பந்தோபாத்யா மீண்டும் அவன் மனதில் ஆதிவாசிகள் பற்றிய ஆர்வத்தை / அக்கறையைத் தூண்டிவிட்டார். பின்னர் மகாஸ்வேதா தேவியின் “காட்டில் உரிமை”, எத்திராஜ் மொழிபெயர்த்த ‘அவன் காட்டை வென்றான்’, ஊட்டியில் மாணுடவியல் ஆய்வுமைய ஆய்வாளர்களுடன் தங்கி உரையாடிய அனுபவங்கள், அந்தமானில் நேரடியாகவே பார்த்த ஆதிவாசிகள், அவர்கள் பற்றிய ஆங்கில நூல்கள், அவர்கள் வாழ்வு பற்றி ஆராய்ந்த அக்கறை செலுத்திய பாதிரியார்களின் நூல்கள் , கடைசியாகப் படித்த இருளர்கள் பற்றிய சி.ஆர் ரவீந்திரனின் “மணியபேரா” இப்படியான பல பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது.

கோதாவரி பருலேகரின் இந்த நூல். சென்னை வாசகவட்டம் வெளியிட்டு பல வருடம் கழித்து, மறைந்த தோழர். திருவொற்றியூர் ராகவன் மறு பதிப்பு செய்த ‘எல்வின் கண்ட பழங்குடி மக்கள்’ குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு நூல். மானுடவியல் அறிஞர் பக்தவச்சல பாரதியின்(PILC) முன்னுரையுடன் மறுபதிப்பு வெளிவந்தது. கோதாவரி பருலேகரின் ‘மக்கள் விழித்தெழும் போது’ என்ற நூல் இப்போது மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கிறது. இதனை என் கவனத்துக் கொண்டுவந்த தோழர்.பாலாஜிக்கு மெத்த நன்றி!

இந்த நூலின் சிறப்பு என்னவெனில் நான் ஏற்கனவே குறிப்பிட்டவை போன்ற ரகத்தில் சேராது இது. பழங்குடி மக்களைப் பற்றி தான் அவதானித்து ஆய்வு செய்து எழுதியவற்றுக்கும் அவர்களுடன் தங்கி அவர்களுக்கு கற்பித்து ஒன்று சேர்த்து புரட்சியில் இறக்கிய பொதுவுடமை இயக்க ஊழியர் தம்பதிகளின் நினைவுக் குறிப்புக்கும் மிகுந்த வேறுபாடு இருப்பது இயற்கை. இது ஒரு நல்ல மொழிபெயர்ப்பும் கூட. படிக்கப் படிக்க கிளர்ச்சியும் நினைக்க நினைக்க அதிர்ச்சியும் உண்டாகிறது. அதிர்ச்சி என்னவென்றால் ஒரு காலத்தில் இப்படிப்பட்ட அர்ப்பணிப்பு உணர்வுடன் கட்சி ஊழியர்கள் இருந்திருக்கின்றனர். தங்களது சுகபோக சவுக்கியங்களை உதறித்தள்ளி இலட்சிய வெறியுடன் உழைத்து இருக்கின்றனர். பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போனதுவே! எனப் புலம்புவதில் இருந்து தப்பிக்க இயலவில்லை

இந்த நூலுக்குள்ளிருந்து சில வாசகங்களை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

“பம்பாயிலிருந்து 50 மைல் தூரத்தில் ஒரு பெரும் மக்கள் கூட்டம் அடிமைகளைக் காட்டிலும் தரங்குறைந்த நிலையில் சிதலமடைந்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதைப்பற்றி நமது (நகர) மக்கள் எவ்வித விமர்சனமும் இல்லாது அறியாமையில் மூழ்கி உள்ளனர். ஆதிவாசி மக்களின் துணிச்சலையும் அவர்களுக்கு இழைக்கப்படும் சித்திரவதைகளையும் பற்றிக் கவலையற்று இருப்பது நிச்சயம் அவமானகரமானதொன்று.” என்று 1940ஆம் ஆண்டு ஜூலை முதல் §தையன்று ஆதிவாசி சேவா மண்டல் சார்பில் வெளியிட்ட ஒரு பிரசுரத்தில் திரு. பி.ஜி.கெர் கூறுகிறார்.

எது அங்கே நிறைந்திருந்தது என்றால் துளைத்தெடுக்கும் வறுமை, மனிதத்தன்மையற்ற நிலைமை, கடுந்துயரம் நோய்கள் மற்றும் அறியாமை ஆகியவைதாம். சுரண்டலின் பிடியிலும் மரணத்தின் பிடியிலும் கிடிக்கிப்பிடி போடப்பட்டிருந்த இந்த மக்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு பயங்கரம் நிறைந்த வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர். அரசாங்கம் திரு.சைமிங்டன் என்ற அதிகாரியை நியமனம் செய்து பழங்குடி மக்கள் நடுவே சென்று விசாரணைகள் மேற்கொண்டு அவர்களுடைய வாழ்க்கை நிலைகள் என்னவென்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.

அவர் தனது அறிக்கையில்குறிப்பிட்டார் : “காட்டுவாசிகளான பழங்குடி மக்கள் எத்தகைய நிலமைகளின் கீழ் அங்கு வாழ்கிறார்கள் என்பது சொல்லொணாத உச்சபட்ச துயரச்சுமையாக உள்ளது. அவர்கள் மீது இழைக்கப்படும் அத்துமீறல்கள் (அரசாங்க) நிர்வாகத்தின் மீது ஒரு பெரும் கரும்புள்ளியாகவே எப்போது இருக்கும்”.

“பம்பாயின் தானா மாவட்டத்தில் உள்ள அடர்ந்த காடுகளில் ஒரு பெண் கம்யூனிஸ்ட் அந்த நிலங்களின் நீண்டகால உரிமையாளர்களான ஆதிவாசிகளின்-வார்லிகளின்-புரட்சியைத் தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கிறார்.” என ஆஸ்திரேலியன் ¦டௌலி டெலிகிரா•ப் பத்திரிகையின் செய்தியாளரான மிக்கெய்ல் பிரவுன் எழுதினார்.

ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் பாதுகாவரும் மகாத்மா காந்தியின் வழிநடப்பவருமான திரு. நரகரி பாரேக் 1947 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதியிட்ட அரிஜன் இதழில் எழுதுகிறார் :

“தஹானு வட்டாரத்தில் நிகழ்ந்த ஆதிவாசிகளின் (வார்லிகளின்)கலகங்கள் நமக்கெல்லாம் கண்களைத் திறக்கச் செய்த ஒரு நிகழ்வாகும். போலீசும் ராணுவமும் இந்தக் கலவரங்களை அடக்கிவிடும் என்பதிலோ ‘அமைதி’ நிலை நாட்டப்பட்டு விடும் என்பதிலோ எந்தச் சந்தேகமும் கிடையாது. ஆனால், அதற்கு அர்த்தம் பிரச்சனை முற்றிலும் தீர்க்கப்பட்டு விட்டது என்பதல்ல. இத்தகைய கலவரங்கள் உடலுக்குள் முற்றிகொண்டிருக்கும் ஒரு தீவிர நோயின் வெளிப்புற அடையாளம் மட்டுமே. அந்த நோய்க்கான வேர்க்காரணத்தைக் கண்டறிந்து அதை அகற்றாத வரைக்கும் வெளிப்புற அடையாளங்களுக்காக மேற்கொள்ளப்படும் மேலெழுந்தவாரியான சிகிச்சைகள் எந்தப்பாலனையும் தரப்போவதில்லை.

இந்த கலகக்காரர்கள் மிக நீண்ட காலமாகத் துணிவற்ற - முற்றிலும் நம்பிக்கை அற்றவர்களாகவே இதுகாறும் சித்தரிக்கப்பட்டு வந்தனர். அவர்களுடைய வறுமை மற்றும் அறியாமை போன்றவை விவரிப்பதற்கும் அப்பாற்பட்டவை. பல யுகங்களாக அவர்கள் அந்தந்த காலத்து நிலப்பிரபுக்களாலும் அந்தந்த காலத்து அரசர்களாலும், அந்தந்த காலத்து வட்டிக்கடைக்காரர்களாலும் தொடர்ந்து சுரண்டப்பட்டுள்ளனர். அந்த நிலங்களின் உண்மையான உர்மையாளர்கல் அவர்களே. ஆனால் அதே நிலங்களில் கொத்தடிமைகளாக உழைக்க வேண்டுமென்று நிர்பந்திக்கப்படுகின்றனர்.

இப்போதைய புதிய நிலப்பிரபுக்களும் வட்டிக்கடைகாரர்களும் மேற்கண்டவர்களின் உழைப்பினால் நியாமற்ற வரம்பிற்கு உட்படாத அளவிற்கு லாபம் சம்பாதிக்கின்றனர். இந்தக் கொடூரமான சுரண்டலுக்குப் பின்னால் மறைந்திருந்து திடீரெண்று தாக்கும் வகையில் அதிர்ச்சியளிக்கும் உச்சபட்ச அநீதியும் ஒடுக்குமுறையும் காத்திருக்கின்றன. இந்தச் சுரண்டலும் ஒடுக்குமுறையும் அநீதியும் அகற்றப்படாமமல் நீடித்திருக்கும் வரையில் அமைதி திரும்பிவிடும் அல்லது நிலத்திருக்கும் என்று நம்புவது உபயோகமற்ற நம்பிக்கையாகும். டூந்த விரக்தியினாலும் நிர்க்கதியான நிலையினாலும் எரிச்சல் அடைந்து வன்முறையைக் கையாண்டால் அதில் ஏதேனும் ஆச்சர்யம் உண்டா ? . . . . . .

“திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிற ஆதிவாசி அவர்களது பாரம்பரிய மரபுப்படி திருமணத்துக்கென்று விதிக்கப்பட்டுள்ள எல்லாச் சடங்குகள் சம்பிரதாயங்களை நிறைவேற்றித்தீர வேண்டுமென்றால் குறைந்த பட்சம் 100 முதல் 200 வரை பணம் செலவிடுவதற்குத் தயாராக இருக்க வேண்டும். இந்தத்தொகையைத் திரட்டுவது என்பதுமிகத்தீவிரமான ஒரு பிரச்சனை. ஆதிவாசிகள் செய்யும் பணிகளுக்கு ஈடாக ஒருபோதும் சம்பளம் எதுவும் வழங்கப்பட்டதே இல்லை என்பதால், அவர்களுக்கு ஏதேனும் தேவை ஏற்படும்போது சில பைசாக் காசுகளை சேர்த்து எடுத்து வருவது என்பதே மிகக் கடினமான ஒன்றாகும்.

திருமணம் என்பது ஓர் இயற்கையான மற்றும் அத்தியாவசியமான சமூகத் தேவை. தேவையான தொகையை நிலப்பிரபு அல்லது வட்டிக்கடைக்காரனிடமிருந்து கடனாகப் பெறுவது தான் ஒரே மார்க்கமாக இருந்தது. இவ்வாறு பணம் வாங்கும் சமயத்திலிருந்தே வார்லிகள் ஓர் ஒப்பந்தத்துக்கு உடன்பட்டு விடுகிறார்கள். கடன் வாங்குகிறவரும் அவரது மனைவியும் கடன் கொடுப்பவரின் வீட்டில் என்னென்ன விதமான பணிகள் உண்டோ அவ்வளவையும் இந்தக்கடனை அடைத்து முடிக்கிறவரை செய்வதற்கு உற்தி ஏற்றுக்கொள்கின்றனர்.

இப்போது கடன் கொடுப்பவர்களின் கணக்குகள் மிகவும் வஞ்சகம் நிறந்த விதத்தில் கணக்கிடப்பட்டு தந்திரமாக முன் வைக்கப்படுவதால் இந்தக் கடன்கள் ஒரு போதும் அடைபடுவதாகத் தெரிவதில்லை. கடன் வாங்குகிற இவர்கள் எவ்வளவு நீண்ட காலத்துக்கு வேலை செய்து கொண்டிருந்த போதிலும் ஏன் வாழ்நாள் முழுதுமே என்றாலும் சரியே பிராமிசர்ய் நோட்டுக்கள் உருவாக்கப்பட்டு அவ்ற்றின் மூலம்கடன் வாங்குகிறவர்களின் மகன்கள் இந்தக் கடன்களை மரபுரிமையாக ஏற்றுக்கொள்ளவும் வேலை செய்வதன் மூலம் அவற்றைத் திருப்பிச் செலுத்திக்கொண்டே வரவும் நிர்பந்திக்கப்பட்டு வந்தார்கள்.

இந்த வகையில் ஒட்டு மொத்த குடும்பமுமே அடிமைப்பட்டு வந்தது. இந்தக் கடன்களுக்கான வட்டி நூறு ரூபாய்க்கு வருடம் ஒன்றுக்கு ரூபாய் 72 அதாவது 6 சதவீதமாக இருந்தது. ஒரு வருட உழைப்பிற்கு அவர்கள் கூலியாகப் பெறுவதெல்லாம் ஆணுக்கு ஓர் லக்கொட்டி மற்றும் சட்டை எப்போதேனும் கொஞ்சம் புகையிலை ஒரு டர்பன் துணி. பெண்ணுக்கோ ஒரு சோளித்துணியும் ஒரு போதும் ஒன்பது கஜ நீளம் இருக்காத புடவையும் தான். சம்பளம் என்று ஒரு போதும் கொடுக்கப் பட்டதில்லை கடனும் அடைபட்டதில்லை.”

“வார்லியிடம் ஏற்பட்டுள்ள பிரதான மாற்றம் என்பது அவனுடைய பெருமித உணர்வின் எழுச்சியும் மனித ஜீவன் என்ற வகையில் சுய உணர்வுந்தான். ஓர் அமைப்பின் உறுபினன் என்ற வகையில் அவனுடைய தன்னம்பிக்கைகளின் வெளிப்பாடாக அவனுடைய நடை உடை பாவனைகளும் பண்பாடுகளும் மாற்றம் பெற்றன. தன்னுடைய அச்சத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் விட்டொழித்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உலக அரசியல் குறித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தால் உந்துதல் பெற்றான். அச்சத்தால் தயங்கி நின்றிருந்த அதே ஆதிவாசி கோர்வையாக இரண்டு வார்த்தைகள் பேச முடியாமல் திணறிய ஆதிவாசிஇப்போது மேடைமேல் நின்று அரசியல் சொற்பொழிவு நிகழ்த்துகிறான்.”

மேலே உள்ள மேற்கோள்கள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், இந்த மாபெரும் இயக்கத்தை, அது பற்றிய நினைவுக் குறிப்புகளைப் பற்றி மற்றவர் சொன்னவைதான். தோழர்.கோதாவரி பருலேகரும் அந்த காலத்து கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களும் சொன்னவற்றையும், அவர்கள் பட்ட சிரமங்கள் எதிர்கொண்ட அடக்குமுறைகள் சந்தித்த வழக்குகள், தலை மறைவு வாழ்க்கை சிறைவாசம் எனச் சொல்ல வேண்டிய ஏராளமான விஷயங்களுக்கும் வாசகர்களுக்கும் இடையே நந்தியாய் நான் ஏன் ?

“நானும் எனது மறைந்த கணவர் ஷாம்ரான் பாருலேகரும் நமது கட்சி அமைப்புகளின் மூலம் தொழிலாளிகள், விவசாயிகள், ஆதிவாசிகள், பெண்கள் மற்றும் சமூகத்திலுள்ள ஏனைய சுரண்டப்பட்ட மக்களின் உரிமைகளைப் பேண என்கள் பணியைச் செய்தோம். இப்படித்தான் இருவருமே ஒரே சமயத்தில் கட்சியுடன் நின்று கொண்டிருந்தோம். இதன் விளைவாக, இயல்பாகவே எங்கள் நலனும் கட்சியின் நலனும் இரண்டறக்கலந்து ஒன்றுபோல் அமந்து விட்டது. நமது கட்சியைத் தவிர்த்து நாங்கள் வேறு எந்தவித அறிவார்த்த அரசியல் அல்லது உணர்வுபூர்வமான வாழ்க்கையைத் தனிப்பட்ட முறையில் பெற்றதில்லை.

நானும் எனது மறைந்த கணவரும் எதற்காக எங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தோமோ, அப்பணிகள் எனது சாவுக்குப் பிறகும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். அப்பணிகளை மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியினால் மட்டுமே செய்ய முடியும். ஆகவேதான் எனது அசையும் அசையா சொத்து அனைத்தையும் மார்க்சிஸ்ட் கசிக்கே கொடுக்க முடிவு செய்து விட்டேன்.” என்ற உயிலை தான் இறப்பதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பே எழுதி வைத்துவிட்டார்.

காலம் கடந்து தமிழ் வாசகர்களை வந்தடைந்தாலும் இந்த மொழிபெயர்ப்பு தவிர்க்க முடியாத அனுபவக் களஞ்சியம் மட்டுமல்ல கற்க வேண்டிய படிப்பினைகளும் தான்.!

- புதுவை ஞானம் puthuvai_gnanam rediffmail.com
Pin It