சென்னை மாநகரின் தலைச்சன் பிள்ளை வடசென்னை. எப்போதுமே ஒரு குடும்பத்தில் பிறந்த முதல் குழந்தைக்குப் பொறுப்பும், கடமையும் அதிகம். அதைப்போல தலைப் பிள்ளைக்கு மிகுந்த செல்வாக்கும் அந்தக் குடும்பத்தில் உண்டு. அப்படித்தான் வடசென்னை வளர்ச்சி பெற்றது. அனல் மின் நிலையம், எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலை, சென்னை உரத் தொழிற்சாலை, கஞ்சிதொட்டி மருத்துவமனை என்று ஆரம்ப காலத்தில் அழைக்கப்பட்ட ஸ்டான்லி மருத்துவமனை, சென்னைத் துறைமுகம், தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் இப்படிப் பல்வேறு வளர்ச்சி நிலைகளை எட்டிய வடசென்னை இன்றைய நாளில் எப்படிப் பார்க்கப்படுகிறது?

kabilan book 500அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதி, வெட்டுக்குத்து என்ற வன்முறை மனப்பான்மை கொண்டவர்கள் வசிக்கக்கூடிய பகுதி, மரஆணி அடிக்கும் ‘கட்டை அடித்தல்’ போன்ற குடிசைத்தொழில் செய்யும் பகுதி, நிலத்தடி நீரும் - சுவாசிக்கும் காற்றும் மாசுபட்டுச் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளான பகுதி, மீனவ குப்பங்களின் தொகுப்பு, அதிக அளவிலான குற்றச்சம்பவங்கள் நடக்கும் பகுதி, நெரிசலான சாலைகள் உள்ள பகுதி, மேட்டுக்குடித்தன்மை இல்லாத பகுதி என்று வடசென்னையின் குறைகளை மட்டுமே சொல்லி வருகிறோம். சமீபத்தில் சாலையோரங்களிலும், கால்வாய் ஓரங்களிலும் வசித்து வந்த மக்களுக்கு – நூலகம், உடற்பயிற்சிக் கூடம், நியாய விலைக்கடை, கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்ட குடியிருப்பு வசதியைத் தமிழ்நாடு அரசு செய்து தந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உண்மையில் வடசென்னைக்கு வேறு முகமும் உண்டு. இப்பகுதி அரசியலையும் - கலாச்சாரத்தையும் பாதுகாத்து வைத்திருக்கும் துடிப்பான பகுதி. ஏமன் நாட்டிலிருந்து வந்த மக்களுக்குத் தாயகமாகவே மாறிவிட்டது பாரிமுனை என்றால் நம்மில் எத்தனை நபர்கள் நம்புவதற்குத் தயாராக இருக்கிறோம்! ‘சென்னை தின’த்தின்போது வடசென்னை குழந்தைகள் தென் சென்னைக்கும், தென் சென்னை குழந்தைகள் வட சென்னைக்கும் சென்று பார்த்து நகரத்தின் முழுமையான அழகை அறிந்து கொண்டார்கள். பெரும்பாலும் ‘சென்னை தினம்’ தொடர்பான எல்லா விதமான கொண்டாட்டங்கள் - தென் சென்னையிலும், மேற்கு சென்னையிலும் நடைபெறுகின்றன.

வடசென்னைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியத்தை இனியாவது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் சென்னை குறித்த பாரம்பரியத்தைத் தெரிந்து கொள்ள வடசென்னை பற்றிய புரிதல் அவசியம். வடசென்னை பகுதியில்தான் சென்னை பிறந்தது என்பது சென்னை வரலாற்றாசிரியர் எஸ். முத்தையாவின் கருத்து. சரக்குப் பெட்டக முனையம், பழங்காலக் கல்லறைத் தோட்டம், கடலுக்குள் மூழ்கியிருக்கும் மண்ணரிப்புத் தடுப்புச் சுவர்கள் - இன்னும் எத்தனையோ வரலாற்றுத் தகவல்களைத் தன்னுள் பொத்தி வைத்துப் பாதுகாத்து வருகிறது. வடசென்னையின் நீள அகலத்தை இம்மியளவும் குறையாமல், பூமியை நோக்கி வரும் மழையைப் போல அழகியலுடன் பதிவு செய்திருக்கிறது ‘நகர்ப்பறை’ என்ற கவிஞர் கபிலனின் கவிதைத் தொகுப்பு.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குள் ஒளிந்திருக்கும் கடற்கரைக் கிராமத்தை எப்படியோ கண்டுபிடித்து நமக்குக் காட்டியிருக்கிறது தூரிகை வெளியீடாக வந்திருக்கும் இந்தக் கவிதைத் தொகுப்பு - 'நகர்ப்பறை'. இன்று பொதுச் சமூகத்தில் வடசென்னை பற்றிய வேறொரு பிம்பமே பிரதானமாக எழுப்பப்பட்டிருக்கிறது. பொய்யான பிம்பத்தை மாற்றி டீசல் புகையினூடாக மண்வாசனையையும், சாணத்தின் வாசனையையும் நுகர வைத்திருக்கிறது கவிதைத் தொகுப்பு. வடசென்னையின் வாழ்க்கையை அச்சு அசலாக உயிர்போடு தந்திருக்கிறார் கவிஞர்.

வடசென்னைவாசிகள் எந்தச் சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்படாமல் வன்முறையாளர்களாக இருப்பார்கள் என்பன போன்ற சித்திரங்களை உடைத்துப் போட்டிருக்கிறது இந்தப் படைப்பு. ஆடு மாடு இறைச்சிக் கடையில் வேலை பார்க்கும் ஒருவரின் பதிவாகக் கவிதை ஒன்று வெளிப்படுகிறது. தோல் உரிப்பது, ரத்தத்தைக் கூறு கட்டி வைப்பது, சாணம் அள்ளுவது என்று இப்படி வரிசையாய் அவருடைய பணியைச் சொல்லிக் கவிதை நகர்கிறது...

“நாப்பது வருஷமா தொட்டியில

வேல பார்க்கிறேன்

எல்லார் கையிலும்

கத்தி அருவாமணை இருந்தும்

ஒருநாள்கூட நடந்ததில்லை

வெட்டுக்குத்து”

என்ற வரிகள் மிகவும் கவனத்திற்குரியவை!

கவிதை கவிஞரின் பள்ளி வாழ்க்கைக்குள் திரும்புகிறது. ஆரம்ப காலங்களில் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அழைத்து வருவதில் மதிய உணவு பெரும் பங்காற்றியது. பள்ளிக்கூடத்திற்குப் போனால் மதிய உணவுக்கு உத்தரவாதம் உண்டு என்று பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினார்கள் என்பதே எதார்த்தம். தனியார் பள்ளிக்கூடங்கள் பெருகிவிட்ட இந்த நாளில், குழந்தைகளைப் படிக்க வைப்பதற்காகவே சம்பாதிக்கத் தொடங்கியிருக்கும் பெற்றோர்கள் இருக்கும் இந்த நாளில், அரசுப் பள்ளிக்கூடத்தில் வழங்கப்படும் மதிய உணவைப் பற்றி யாருக்கு என்ன கவலையிருக்கிறது?

படிப்பு குறித்த புரிதல் இல்லாத சிறுவன், மதிய வேளையிலாவது வயிறார உண்ணலாம் என்று நினைக்கிறான். என்ன காரணத்தினாலோ பள்ளிக்கூடத்திற்குத் தாமதமாக வரும் அந்தச் சிறுவன் ஆசிரியரின் கண்டிப்புக்கு உள்ளாகிறான். ஆசிரியர்கள் சொல்லும் வேலைகளைச் செய்துவிட்டு மதிய வேளையில் வழங்கப்படும் உணவைப் பெறுவதற்காக நீண்ட வரிசையில் நிற்கிறான். அந்த வரிசை நத்தை ஊர்ந்து செல்வதைப் போல அவ்வளவு மெதுவாகச் செல்கிறது என்ற இடத்தில் நம் வயிற்றுக்குள்ளும் பசிக்கத் தொடங்குகிறது. இதுகூட பரவாயில்லை, மதிய உணவுக்காகப் பள்ளிக்கூடத்தில் மணி அடித்த பிறகும் பிள்ளைகளைச் சாப்பிடுவதற்கு அனுப்பாமல் வகுப்பு நடத்தும் ரோசலின் ஆசிரியரை,

“மதிய உணவுக்காகவே

பள்ளிக்கூடம் வருபவனை

பட்டினி போடுவது

எந்த ஊர் நீதி...”

என்ற வரிகள் விளிம்பு நிலை மக்கள் வீட்டிலிருக்கும் குழந்தைகளின் வாழ்க்கையை நினைத்து இரக்கப்பட வைக்கிறது.

தீபாவளி நாளின் கொண்டாட்டத்தைப் பட்டாசுகள் தீர்மானிக்கின்றன. அதற்கு முன்பாகவே காலையில் உடுத்திக் கொள்ளும் புத்தாடை பண்டிகையை மேலும் அழகு செய்கிறது. மதுவுக்கு அடிமையாகிவிட்ட அப்பா தன் பிள்ளைகளின் தீபாவளி கொண்டாட்டத்தைப் பற்றிக் கவலைப்படுவது கிடையாது. என்னதான் அப்பா தன்னை மதுவில் கரைத்துக் கொண்டாலும், அந்த வீட்டுப் பிள்ளைகளுக்கும் தீபாவளி கனவுகள் இருக்கத்தானே செய்யும்! இதற்காக வீட்டு வேலை செய்தாலும் பிள்ளைகளுக்குப் புத்தாடையும் - பட்டாசுகளும் கிடைக்க வேண்டும் என்பதில் அம்மாவுக்கு இருக்கும் அக்கறை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மூன்று பிள்ளைகளைப் பெற்றிருக்கும் அந்தத் தாய் தீபாவளியை முன்னிட்டு முன்கூட்டியே தீபாவளிச் சீட்டு கட்டுவது வழக்கம்.

அப்படித்தான் அந்தத் தீபாவளிக்கும் துணிக்கடை வைத்திருக்கும் சேட்டுவிடம் சீட்டு கட்டுகிறாள். தான் கட்டிய சீட்டுப் பணத்திலிருந்து ஆண் பிள்ளைகளுக்கும், மகளுக்கும், தனக்கும், தன் கணவனுக்கும் புத்தாடைகளை வாங்கிக் கொண்டாள். கட்டிய பணத்தில் மீதமிருக்கும் தொகையைப் பெறுவதற்காக சேட்டுவிடம் காத்து நிற்கிறாள். விடிந்தால் தீபாவளி என்ற நிலையில் ஊரே தூங்கிப் போன பிறகும் சேட்டுக் கடையில் காத்திருக்கும் அந்த அம்மாவைப் பற்றிச் சொல்லும் போது,

“பட்டாளம் ஜவுளிக் கடை சேட்டுவிடும்

ஏக்கத்தோடு நின்று கொண்டிருந்தது

அம்மாவின் உருவில் என் குடும்பம்”

என்ற வரிகளிலிருக்கும் அப்பட்டமான வறுமையை எப்படி ஒழிப்பது!

இன்றைய நாளில் பொழுதுபோக்கிற்கு ஏராளமான சாதனங்கள் இருக்கின்றன. திரைப்படம் பார்ப்பதற்காகக் கீற்றுக் கொட்டகைகளில் அமர்ந்து படம் பார்த்த அனுபவத்தைக் கவிஞர் பதிவு செய்திருக்கிறார். குழந்தையாக இருக்கும் மகனை இடுப்பில் தூக்கிக் கொண்டும், விரல் பிடித்து நடக்க வைத்தும் திரைப்படம் பார்ப்பதற்கு அழைத்துச் சென்றிருக்கிறாள் தாய். இன்று வீட்டிலிருந்தபடியே திரைப்படங்கள் பார்க்கக்கூடிய வசதி இருக்கிறது. திரையரங்கில் இருக்கக்கூடிய அத்தனை தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டு வந்து வீட்டிலேயே சேர்த்திருக்கிறது அறிவியல்.

கீற்றுக் கொட்டகையில் அமர்ந்து படம் பார்த்தபோது கதாநாயகன் அறிமுகமாகும் காட்சியில் வெறி பிடித்த ரசிகர்கள் சூடம் ஏற்றி அந்தத் திரையை எரித்து விடும் கொடுமையும் நடக்கும். சண்டைக் காட்சிகளில், பாடல் நேரத்தில், முக்கியமான வசனங்களில் கை தட்டியும், விசில் அடித்தும் கதாநாயகர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதே கேட்காமல் செய்துவிடுவர். பிறகு இயற்கைக் காற்று வீசும் வகையில் அமைந்த திரையரங்குகளில் துண்டு காகிதங்களைப் பறக்க விடுவார்கள். ஒருவேளை பறவைகள் பறக்கின்றனவோ என்று நினைக்கத் தோன்றுமாம்! இன்று குளிரூட்டப்பட்ட திரையரங்கில் திரைப்படங்களைப் பார்க்கும் பொழுது கீற்றுக் கொட்டகையின் அனுபவம் கிடைப்பதில்லை. எத்தனையோ வகையில் மாற்றம் நடந்தாலும், ஒன்றை மட்டும் நினைவுகளிலிருந்து பதிவு செய்கிறது கவிதை.

“அலமாரியிலிருக்கும் அம்மாவின் மூக்குத்தியாய்த்

திரை வெளிச்சத்தில் ஒரு மின்மினி

பறந்து சென்றது!”

என்று கவிதை முடிகிறது. அம்மாவின் நினைவுகள் என்றுமே மறக்க முடியாதவை என்பதை இதைக் காட்டிலும் அழகியலுடன் சொல்ல முடியாது.

வெற்றியைப் பணத்தின் அடிப்படையில் தீர்மானிப்பவர்களுக்குப் படைப்புக் கலையை எப்படிச் சொல்லிப் புரிய வைக்க முடியும்? ரோஜாவின் முட்களுக்குக் காயம்படாமல் மலரைப் பறிக்கத் தெரிந்தவன் கவிஞன். கனவு காண்பதை அனுமதிக்காத சமுதாயத்தில் சில்லறைகளின் சலசலப்பு புகாத கனவுக் கோட்டைக்குள் அரியாசனமிட்டு அமர்ந்திருப்பான். கல்மனம் படைத்தவர்களையும் முத்தம் தந்து மொத்தமாகத் திருத்துபவன். காசுக்கு விலை போகாத அவனைப் பைத்தியம் என்று முத்திரை குத்துகிறது சமுதாயம்.

பைகளுக்குள் பணம் நிரம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கும் சமுதாயத்தில், புத்தகங்களைக் கவிதைகளால் நிரப்பிக் கொண்டிருப்பான். வடசென்னையிலிருக்கும் புளியந்தோப்பு மணிக்கூண்டு பகுதியில் ஒரு பூங்கா உண்டு. அந்தப் பூங்காவில் அமர்ந்தபடி கவிதையோடு உரையாடிக் கொண்டிருக்கும் கவிஞனின் சிரிக்கும் தருணங்களை ‘கடவுளின் புன்னகை’ என கவிதை விளக்குகிறது. ஒரு கட்டத்தில் கவிதைப் பித்தனை மனநல மருத்துவமனைக்குள் சேர்த்து விட்டது சமூகம்.

கவிஞரைப் பார்க்க வரும் நண்பர்கள் அவர் எழுதுவதற்கு உதவும் எழுதுகோலையும், புத்தகத்தையும் பரிசாகத் தருகின்றனர். மனிதர்களிடம் உரையாடல் சாத்தியமில்லாத பொழுதுகளில் தனக்குத்தானே பேசிக் கொள்ளும் மனிதர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று குற்றம் சாட்டுவோரும், பொருளாதாரத்தின் பின் ஓடக்கூடிய பணப் பைத்தியர்கள்தானே! மனநல ஆலயத்தில் இருக்கும் கவிஞருக்கு எழுதுகோலையும் - புத்தகத்தையும் பரிசாகத் தருபவர்களை, கவிதை எழுதுவதால் மனநலம் பாதிக்கப்பட்ட இவருக்குக் கவிதை எழுதுவதற்கான சூழலை உருவாக்கித் தருபவர்களை மருத்துவர்கள் வெறுப்புடன் கடிந்து கொள்வதே இயற்கை.

வாழ்க்கை இரண்டு வகைப்படும்: ஒன்று செல்வாக்கு பெற்ற வாழ்க்கை, மற்றொன்று சாதாரண மனிதர்களின் வாழ்க்கை என்று வகைப்படுத்தி விடலாம். பிரபலமாகாத காலகட்டத்தில் ஒரு மனிதனாக மதிக்கப்படாத ஒருவர் பின்னாளில் கவிஞராக, பாடலாசிரியராகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார். அவர் மீது பூசப்பட்ட சந்தனத்தை வழித்துக் கொள்வதற்காகச் சொந்தம் என்ற பெயரில், நட்பு ரீதியில் சிலர் சுற்றிச்சுற்றி வருகின்றனர். இது கவிஞருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. புத்தகக் கண்காட்சியில் பார்க்கக்கூடிய அறிமுகமில்லாத மனிதர்கள் கவிஞருடன் படம் எடுத்துக் கொள்ள விரும்புகின்றனர். கல்லூரி நண்பனோ தன்னுடைய கவி நண்பனுக்கு தேநீர் பரிசாக்க விரும்புகிறான். சமுதாய அங்கீகாரத்துடன் இருக்கும் கவிஞர் புத்தகத்தை வெளியிட்டால் கூடுதல் கவனம் பெறும் என்று கணக்குப் போடுபவர்கள் உண்டு. புத்தகக் கண்காட்சியின் போது நூல்களுக்குப் பத்துச் சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும் என்பதால் புத்தகக் கடைகளில் பூக்களை மொய்க்கும் பட்டாம்பூச்சிகளைப் போலப் படிப்பாளிகள் மொய்த்துக் கிடந்தனர்.

ஒரே மேடையில் எதிர் - எதிர் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் நடந்த காலம் உண்டு. அதுபோல குழுக்களாகப் பிரிந்திருக்கும் இலக்கியவாதிகள் புத்தகக் கண்காட்சியில் ஒன்றாகத் திரண்டிருந்தனர். ஆனால் அவர்கள் மனதளவில் ஒன்றாக இல்லை என்பதையும், இளம் வயதில் தன்னுடைய புத்தகங்களை வெளியிடுவதற்கு மறுப்பு தெரிவித்த பதிப்பகங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்ற பிறகு கவிஞரின் படைப்புகளை விற்பதற்கான உரிமையாவது கொடுக்கச் சொல்லி கெஞ்சுகின்றன என்பதையும் கோபத்துடன் சொல்லிச் செல்கிறார். இப்படியான சூழலில் கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகளைப் போல தொலைந்து போய்விட்டார் கவிஞர் என்று சொல்வதில் மனதளவில் விலகிப் போன இன்றைய வாழ்க்கைச் சூழல் பெருங்குரலெடுத்து அழுகிறது.

தன்னால்தான் இந்தச் சமுதாயம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று நினைப்பவர்கள் உண்டு; தான் இல்லாமல் போனால் இந்த உலகமே இல்லாமல் போய்விடும் என்று கற்பனை செய்பவர்கள் உண்டு; தனக்காகவே பூக்கள் பூத்துக் கொள்வதாகக் கருதுபவர்களும் உண்டு; படைப்பாளி என்பதாலேயே வானத்திலிருந்து குதித்ததாக நினைத்துக் கொள்பவர்களும் உண்டு. இவர்களுக்கு மத்தியில் சாதாரண மனிதர்களுடன் இயல்பான உரையாடலை நடத்துகிறது கவிதை. பாத்திரக் கடைக்கு வரும் கவிஞர் அங்கே இருக்கும் பாத்திரங்களை வரிசைப்படுத்துகிறார். வழிபாட்டுக்குரிய பூசைப் பாத்திரங்களும், சமையல் பாத்திரங்களும், கல்யாண சீர்வரிசை பாத்திரங்களும், குங்குமச்சிமிழ், பல்லாங்குழி - இப்படிப் பலவற்றையும் வரிசைப்படுத்திய கவிஞர் கடைசியாகப் பாத்திரத்தில் பெயர் எழுதும் தொழிலாளியுடன் பேசுவதாகக் கவிதை முடிகிறது.

பழங்காலத்திலிருந்து தான் பயன்படுத்தக்கூடிய பொருட்களில் தன் பெயர்களை எழுதி வைக்கும் பழக்கம் தமிழர்களுக்கு உண்டு என்பதைப் பல ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன. விரல் அளவு இருக்கக்கூடிய தங்கக் கட்டிகளிலும் தன்னுடைய பெயரைத் தமிழர்கள் பொறித்து வைத்திருந்தனர். தான் பயன்படுத்தக்கூடிய பானைகளிலும் தன் பெயர்களைக் கீறி வைத்திருந்தனர். அதனுடைய தொடர்ச்சியாக இன்றும் வீட்டில் புழங்கும் பொருட்களின் மீது உரியவரின் பெயர் பொறிக்கப்படுகிறது. அன்பளிப்பு தருபவர்களின் பெயர்களும் அப்படி எழுதப்படுவது வழக்கம். பாத்திரத்தில் பெயர் எழுதும் அந்தத் தொழிலாளியுடன்,

“உன்னை போலவே

நானும் கூலிக்காரன்

நீ பாத்திரத்தில் எழுதுகிறாய்

நான் பாத்திரத்துக்காக எழுதுகிறேன்”

என்ற வரிகளில் உயர்வு – தாழ்வு என்ற கருத்தாக்கத்தை உடைத்துப் போடுகிறார் கவிஞர். திரைப்படத்தில் பாடல் எழுதும் எத்தனையோ கவிஞர்கள் தன்னைத் தேவலோகத்திலிருந்து வந்தவர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கும் பொது மக்களுக்கும் இருக்கும் தொடர்பைத் துண்டித்துக் கொள்ளத் தயாராகிறார்கள். ஆனால் ஒரு படைப்பாளி எப்படி இருக்க வேண்டும், செய்யும் தொழிலில் வித்தியாசம் பார்ப்பது நியாயமில்லை என்பன போன்ற சிந்தனைகளை இந்தக் கவிதை தூண்டுகிறது. ஒரு படைப்பு என்ன செய்துவிட முடியும் என்று கேட்பவர்கள் இது போன்ற படைப்புகளை வாசிப்பது நலம்!

குயவன் ஒருவர், தன் வயிற்றுப் பசியைப் போக்குவதற்காகச் செய்த பானைகளை எந்த அளவுக்கு விலை குறைவாகப் பேரம் பேசப்படுகிறது என்பதை அறச்சீற்றத்தோடு பதிவு செய்கிறது நகர்ப்பறை. மண் வயல்களில் பூத்த தாமரை போலப் பானைகள் கொசப்பேட்டையில் உருவாகின்றன. மிக நேர்த்தியாகச் செய்யப்படும் பானைகள், சூளையின் சூட்டில் வேக வைக்கப்படுகின்றன. இந்தச் செயல்முறையில் உடைந்து போகும் பானைகளும் உண்டு. தரமான பானைகளைக் கடைத்தெருவுக்குக் கொண்டு வந்து விற்கும் தொழிலாளியிடம் மிக மோசமாக விலை பேசுகிறது சமூகம். இந்தப் புதுப்பானைகளை வைத்துப் பொங்கல் கொண்டாடும் சமுதாயத்தில் உழைப்பாளியைச் சுரண்டும் அவலம் நடக்கிறதே தவிர உழைப்புக்கு மரியாதை உண்டா!

“காவிச் சாயம் பூசப்பட்ட பானையைச்

செங்கல் அடுப்பில் எரித்து

பொங்கல் கொண்டாடுவது

தமிழர் திருநாள்”

என்று கொண்டாடப்பட வேண்டிய தொழிலாளிகள் திண்டாட்டத்திற்கு ஆளாகின்றனர் என்று வேதனையோடு சொல்கிறது கவிதை. குழந்தைகள் மீது வன்முறையைச் செலுத்திக் கொண்டு குழந்தைத் தினத்தைக் கொண்டாடுவதால் என்ன பயன். அதைப்போலத் தொழிலாளிகளின் உழைப்பை அங்கீகரிக்காத ஒரு சமுதாயத்தில் பொங்கல் கொண்டாட்டம் எப்படி மகிழ்ச்சியாக இருக்கும்!

மருத்துவராக வேண்டும் என்ற கனவு பறிக்கப்படும் போது தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் மாணவர்களில் ஒருவரை அடையாளம் காட்டுகிறது கவிதை. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த அந்த இளைஞன் மருத்துவக் கனவுக்குத் தன்னைத் தின்னக் கொடுத்து விட்டான். அவனுடைய உடல் ஓட்டேரியிலிருக்கும் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்படவிருக்கிறது. மயான வீதிகளில் வசிப்பவர்களுக்குப் பறையோசை இசையாக மாறிக் கொள்கிறது. ரயில் செல்லும் வழிகளில் வசிக்கும் மக்களுக்கு, ரயிலின் சத்தம் இசையாக மாறிவிடுவது போலப் பறை இசையும் அமைகிறது என்ற ஒப்பீடு வாசகனைச் சிந்தனையில் ஆழ்த்துகிறது. மரண ஊர்வலத்தில் இறந்த பூக்கள் தூவப்படுகின்றன என்றும் ஊதுபத்தியின் புகை கண்ணீர் புகையாகி விட்டன என்றும் சவ ஊர்வலத்தின் போது பட்டினத்தார் பாடல்கள் ஒலிக்கப்படும் என்றும் சிவராத்திரி அன்று நடக்கும் மயான கொள்ளை இறந்தவர்களின் கல்லறைகளுக்கு அசைவ உணவைக் கொண்டு வந்து சேர்க்கும் என்றும் மொத்தத்தில் நகரத்தில் இருக்கும் சுடுகாடு சிறு தெய்வங்களின் சின்னங்கள் என்றும் பேசிக்கொண்டே போகிறது கவிதை.

இந்தச் சூழலில் கைவண்டி இழுத்து, ஆட்டோ ஓட்டிப் பிழைத்த குடும்பத்தில் தற்கொலை செய்து கொண்ட அந்த இளைஞனை எத்தனையோ பிணங்கள் புதைக்கப்பட்ட மண்ணில் மீண்டும் குழி வெட்டிப் புதைக்கின்றனர். கவிஞர் தான் சொல்கிறார் அந்த இளைஞனின் உடலுக்கு மேலும் ஓர் உடலை அடக்கம் செய்து விடாதீர்கள் என்று. இந்த மயானத்திலாவது அவனை மேலே இருக்க அனுமதியுங்கள் என்ற இடத்தில் நம்மையும் மீறிக் கண்கள் கண்ணீர் சொரிகின்றன. இங்கே கவிதையின் ஆன்மா பளிச்சிடுகிறது!

அஞ்சல் பெட்டிக்குள் குருவி கூடு கட்டியிருப்பதாக ஒரு கவிதை நம்மை வரவேற்கிறது. இந்தக் கவிதை மதிப்பிழந்து போன அஞ்சல் நிலையங்களை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. அது வெறுமனே காலாவதியான அஞ்சல் நிலையங்களைப் பற்றி மட்டும் பேசவில்லை. ஒவ்வொரு காலங்களிலும் நாம் மறந்து போன திண்ணை வீடுகளையும், ஜவ்வு மிட்டாய்களையும், தட்டச்சு பயிற்சி மையங்களையும், மாட்டு வண்டிகளையும், பக்கத்து வீட்டிலிருந்து வரும் மீன் குழம்பையும், இன்னும் காணாமல் போன எத்தனையோ நினைவுகளையும் நினைத்துப் பார்க்க வைக்கிறது.

கடிதப் போக்குவரத்து, வாழ்த்து அட்டை அனுப்புதல், பிள்ளைகளுக்குப் பெற்றோர் அனுப்பும் பணவிடை என்று அஞ்சல்காரர்களுடன் நட்பு பாராட்டிய முந்தைய தலைமுறை மின்னஞ்சல் மூலமாக வரும் தகவல் பரிமாற்றத்தை எந்தச் சுவாரசியமும் இல்லாமல் படித்துக் கொள்கிறது. பொதுத்துறை செல்வாக்கு இழக்கும் போது அல்லது மூடப்படும் போது ஏற்படும் பாதிப்பு விளிம்பு நிலையில் இருக்கும் மனிதர்களை நிச்சயம் பாதிக்கும். இன்று விமான நிலையம் போன்ற பொதுத்துறைகள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுகின்றன. அந்த அலுவலகங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் நிலைமை என்ன? என்று கவிஞரின் உள்ளத்தை அசைத்துப் போடும் இந்தக் கேள்வியை வாசகனுக்கும் கடத்தியிருக்கிறார். கொஞ்சம் சமூக உணர்வுடன் வாழ வேண்டும் என்ற விருப்பத்தையும் சேர்த்தே கடத்தியிருக்கிறார்.

குருவியின் மீது கவிஞர்களுக்கு இருக்கும் விருப்பம் அலாதியானது. மரத்தில் கூடு கட்டி வாழும் பறவைகள் மழைநாளில் கூரையில்லாத, குடையில்லாத அந்தக் கூட்டில் எப்படித் தங்கும் என்ற கேள்வி மனிதாபிமானம் கொண்ட படைப்பாளியை உலுக்குகிறது. பந்தயம் வைத்துக்கொண்டு பறப்பதைப் போல அவ்வளவு வேகமாகப் பறக்கவேண்டும் என்ற விருப்பம் குருவிகளுக்கு இருப்பதில்லை. நெல்மணிகளுக்காகச் சோதிடம் சொல்லும் கிளிகளைப் போல் இல்லாமல் விடுதலை உணர்வுடன் இருக்கக்கூடியது. ‘‘விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக் குருவியைப் போலே’’ என்று பாரதியார் பாடுவதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.

மாடங்கள் அற்ற மாடிக் கட்டடங்கள் உருவாகிவிட்ட இந்நாளில் குருவிகள் தங்குவதற்கான இடமில்லை. அலைபேசி கோபுரங்கள் இல்லாத கொடைக்கானலில் குருவியைப் பார்த்த நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொள்ளும் கவிஞர் குருவிக்கு இன்றைய மழலை என்ன பெயர் வைத்திருக்கிறது என்பதையும் சேர்த்தே பகிர்ந்து கொள்கிறார். தன் வீட்டு வாசலிலிருக்கும் முருங்கை மரத்தின் கிளையில் அமர்ந்தபடி சொற்களற்ற இசையாகப் பாடிக்கொண்டிருந்த குருவியைக் காட்டி ‘‘இது என்ன பறவை’’ என்று நான்கு வயது மகனிடம் கேட்கிறார். அந்தக் குழந்தையோ இது ‘பேபி காக்கா’ என்று பதில் சொல்கிறது. அந்தக் குழந்தை இதுவரை குருவியைப் பார்க்காமல் இருந்ததற்கு யார் காரணம்? வாழ்க்கைமுறையை மாற்றிக் கொண்டு இயற்கையைச் சூறையாடிய நாம்தான் காரணம். இந்த உண்மையை நமக்குப் புரிய வைப்பதற்கு ‘பேபி காக்கா’ என்ற சொல் போதுமானதாக இருக்கிறது.

இந்த உலகத்தில் யாரை வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். ஆனால் கடவுளைக் கேள்வி கேட்கக் கூடாது. கடவுளை நோக்கிச் செய்யப்படும் வழிபாடுகளும் கேள்விகள் அற்றதாகவே இருக்கும். கடவுளை நோக்கிக் கேள்வி கேட்பவர்களைக் கடவுள் மன்னிக்காது, தண்டிக்கும் என்பன போன்ற கற்பிதங்கள் சமீபகாலமாக அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சங்ககாலத்தில் காதலில் சிக்கித் தவிக்கும் பெண் தன் காதலனைப் பார்க்க முடியாத சூழலில் உண்ணாமல் உறங்காமல் இருப்பாள். பெற்றோர் அவளுக்குப் பேய் பிடித்துக் கொண்டது என்று நினைத்துச் சாமியாடியை அழைத்துப் பேயோட்டச் சொல்வார்கள். தட்சணைக்காக வானுக்கும் பூமிக்குமாகக் குதித்துச் சாமியாடுவான் பூசாரி. காதல் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் நோயைச் சாமியாடியால் எப்படிக் குணப்படுத்த முடியும் என்று தெரிந்தும் பூசாரி அழைத்ததற்காக அவன் உடம்பில் இறங்கியிருக்கும் முருகனைக் காதல் வசப்பட்ட பெண்ணின் தோழி, ‘‘உண்மையிலேயே நீ கடவுள்தானா!’’ என்று முருகனைப் பார்த்து கேள்வி கேட்பது நம்முடைய மரபு. அந்த மரபுக்கு மேலும் அழகு சேர்ப்பது போல ஐயனார் பற்றிய கவிதை அமைகிறது.

பாண்டிச்சேரியிலிருக்கும் ஐயனார் கோயிலுக்குப் பிள்ளைகளுடன் செல்லும் ஒரு தாய் தன்னுடைய கணவனுக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறாள். ஐயனாரும் சாராயம் குடிப்பவர் என்று தெரிந்தும், தெரியாமலும் மக்கள் தங்கள் குறைகளை ஒரு சீட்டில் எழுதி அங்கே வைத்து விட்டு வருவார்கள். அந்தத் தாயும் அப்படித்தான் தன்னுடைய கவலைகளை மாற்ற வேண்டும் என்று சொல்லி ஒரு சீட்டு எழுதி வைத்துவிட்டு வந்தாள். அந்த மகன் பேசுவதாக ஒரு கவிதை:

“அய்யனார் கத்தியில் சீட்டு கட்டுவதும்

அதிகாரியிடம் மனு கொடுப்பதும்

வித்தியாசம் தெரியவில்லை எனக்கு”

என்ற கவிதை கடவுளின் மீது கல் எறிகிறதா, கடவுளை நம்புகிறவர்கள் மீது கல் எறிகிறதா, கடவுள் சார்ந்த மக்கள் பழக்க வழக்கத்தின் மீது கல் எறிகிறதா என்பதை வாசகர்களின் பார்வைக்கு விட்டு விடுகிறேன்.

இப்படி வடசென்னையின் ஆழத்தையும் - அகலத்தையும் நமக்குத் தெளிவாகப் புரிய வைத்திருக்கிறார் கவிஞர். இந்தக் கவிதைத் தொகுப்பு தாஜ்மஹால் வரை சென்று வந்திருக்கிறது. காதலுக்கு மரியாதை செய்யத் தெரியாத சமுதாயத்தில் காதல் சின்னமான ‘தாஜ்மகால்’ என்ற மும்தாஜின் கல்லறை உலக அதிசயமாவதில் என்ன வியப்பு இருக்கிறது! புயல் மழையில் வெள்ளைக்காடாய் மிதக்கும் வடசென்னைப் பகுதிகளின் வேதனை ஒருபுறம்; தீப்பற்றிக் கொண்டு சாம்பலாகிப்போன குடிசை வீடுகள் மறுபுறம். வீடே தீப்பற்றி எரிந்தாலும் சமைப்பதற்கான நெருப்பு மட்டும் அந்த மக்களுக்குக் கிடைப்பதே இல்லை என்ற துயரம் வாசகனைத் துரத்துகிறது.

உலகம் முழுக்க இரவு - பகலை அறிவிக்க சூரியனும் - நிலவும் இருக்கின்றன. ஆனால் கவிஞருக்கோ இட்லியும், விறகு அடுப்பும் இரவு - பகலை உணர்த்துகின்றன. தாய் பரிமாறக்கூடிய உணவின் சுவை நினைவடுக்குகளில் அழியாமல் உறங்கிக் கொண்டிருக்கும். அப்படித்தான் கவிஞருக்கும் அம்மா அவித்த இட்லி நிலவாகவும், அவள் சமைக்கும் விறகு அடுப்பு சூரியனாகவும் மாறிக் கொள்கின்றன. தன்னுடைய பால்ய வயதில் நடந்த நிகழ்வுகளை மறைக்காமல், வெளிப்படையாகச் சொல்லிக் கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தவர்கள் குழந்தைப் பருவத்தை முழுமையாக அனுபவித்தவர்கள் என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில் களவு போகாத குழந்தைப் பருவம் கவிஞருக்குக் கிடைத்திருக்கிறது. இந்தப் பூமிக்கு வரும் குழந்தைகளைக் குழந்தைத் தன்மையோடு வாழ வைப்பதற்கு இனியாவது முயற்சி செய்வோம்!

- முனைவர் இரா.மஞ்சுளா

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.