நேசிக்காமல் இருப்பதென்பது ஒரு துரதிருஷ்டம். இன்று நாம் எல்லோரும் இந்த துரதிருஷ்டத்துக்கு இரையாகிக் கொண்டிருக்கிறோம். - ஆல்பெர் காம்யு

காம்யு - இந்த பெயரே எம்மில் ஆழ்ந்து பதிந்த ஒரு தூரத்து நினைவோடை போல தான் இருக்கிறது.

அவரின் "அந்நியன்" நாவலில் அபத்தம் என்றொரு வடிவத்தின் வழியே அவர் வாழ்வை பார்த்த விதம் உலகை உலுக்கியது. எதையெல்லாம் உறவுள்ள தருணமாக நினைத்தோமோ அதையெல்லாம் மறு பரிசீலனை செய்ய வைத்தது. காரண காரிய ரீதியாக உலகை புரிந்து கொள்ள விழையும் மனிதனுக்கு விளக்கங்களை அளிக்காத உலகத்தின் மறுப்பு தான் அபத்தம் என்கிறார். சரி தானே. இங்கு பதில்களை விட கேள்விகளே அதிகம் மிஞ்சுகின்றன. நீ யார் என்பதற்கு பெயரை பதிலாக சொல்ல தான் இந்த உலகம் பழக்கியிருக்கிறது.

albert camus bookகாம்யுவிற்கு இது நூற்றாண்டு.

இந்த தருணத்தில் அவரின் கடைசி நாவல்... "முதல் மனித"னை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படிக்க படிக்க நமக்குள் இருக்கும் முதல் மனிதன் வெளியே வரும் தருணத்தை விளக்க காம்யுவாக தான் ஆக வேண்டியிருக்கிறது. இரு முறை படித்த பிறகே ஒரு முறை புரிய நேரிட்டது. வாழ்வின் ஆழத்தை... வடிவத்திலும் ஆழமாகவே வடித்திருந்த லாவகம் விரிந்து கொண்டே செல்லும் பிரபஞ்சம் போன்றது. நின்று நிதானிக்க இடமில்லை. நிகராக நகர்ந்து கொண்டே செல்வதில் தான் காம்யு நண்பர் ஆகிறார்.

1957 ல் நோபல் பரிசு வாங்குகிறார். 1960 ல் ஒரு விபத்தில் மரணமடைகிறார். இன்னும் கொஞ்சம் நாள் இருந்திருந்தால்... இன்னும் கொஞ்சம் மானுடம் புரிய... மனிதன் மல்லுக்கட்டியிருப்பார். இயற்கை தற்செயலாக செய்யும் சல்லித்தனங்களில் இந்த மாதிரி விபத்துகள் நிகழ்ந்து நம்மை எங்கோ ஓரிடத்தில் நிறுத்தி விடுகின்றன.

அவர் விபத்தில் மரித்து கிடந்த போது... அவர் கைப்பையில் எழுத்து பிரதியாக தான் இந்த "முதல் மனிதன்" முழுமையடையாத நாவலாக இருந்திருக்கிறது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு பல கட்ட யோசனைக்குப் பின் அவரின் மகள் இந்த நாவலை வெளியே கொண்டு வந்தார். நல்லவேளை கொண்டு வந்தார். இல்லையெனில் காம்யுவின் பால்யம்.... சிறுவயது கடினமான வாழ்வு... வறுமையின் பிடியில் சிக்கி தவித்த அந்த சின்ன மனதின் ஆழம் தெரியாமலே போயிருக்கும். தந்தைக்கு ஏங்கிய எப்போதும் பரிதவிப்பிலேயே இருந்த அந்த இதயத்தின் உன்னதம் புரிய ஒரு வாய்ப்பு இது.

வெளிச்சம் இல்லாத ஒரு பண்ணையில்... ஒரு மழை இரவில்தான் ழாக்கின் பிறப்பு நிகழ்கிறது.

அப்படியே வரைந்து கொண்டே போவதில் இருக்கும் நுட்பம் தான்... எழுதிக் கொண்டே போகும் வேகமும். தமிழில் மொழி பெயர்த்த "வெ ஸ்ரீராம்" போற்றுதலுக்குரியவர். காம்யுவாகவே மாறி அவர் மொழியை எங்கும் நீர்த்து விடாமல் நீக்கமற நிறைத்து விட்டார். முதலில் கடினமாக இருந்தாலும்... போக போக கவிதையாக மாறி விட்ட "முதல் மனிதன்" ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னை நினைவூட்டும்.

பிறப்பு காட்சி முடிந்த அடுத்த பகுதியே நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு தான். திரையை நிறுத்தி 40 ஆண்டுகளுக்கு பிறகு... இது திருப்பு காட்சி என்ற எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் தான் தலைவனின் தூரிகை நம்மை திக்கு முக்காட செய்கிறது. காம்யுவின் பக்கங்களில் எதற்கும் தயாராக இருக்கும் மனதை பழக்கப் படுத்த வேண்டும்.

இந்த நாவலின் மையமே 29 வயதில் உலக போரில் மரித்து போன தன் தந்தையின் கல்லறையைக் காண ழாக் பயணிப்பது தான். தனக்கு ஒரு வயது கூட நிரம்பாத நிலையில் இறந்து போன அப்பாவின் கல்லறையை... தன் தாய்க்கு எங்கு இருக்கிறது என்றே தெரியாத அந்த கல்லறையை தன் 40 வது வயதில் காண செல்கிறான். அப்பாவின் நினைவுகள் எப்போதுமே அவனை அழைக்கழித்தபடியே தான் இருந்திருக்கிறது. அப்பாவின் இடம் எப்போதும் அவனிடம் காலியாகத்தான் இருந்திருக்கிறது. சிறு வயதில் யாரிடம் கேட்டாலும் சரியான பதில் கிடைத்ததில்லை. அம்மாவுக்கு காது கேட்காது. பேச கொஞ்சம் தான் வரும். அவள் சிறு வயதிலேயே பெரும் மலையை தலையில் கவிழ்த்துக் கொண்டவள். அவளுக்கு உலகமும் தெரியாது. உண்மையும் புரியாது.

வீட்டில் எல்லாமே கண்டிப்பான பாட்டி தான். ஒரு ரூபாய் தொலைத்ததுக்கு சாட்டையில் வெளுத்து விட்ட பாட்டி ழாக்கின் கடிவாளம். நண்பன் பியரோடு கடற்கரையில் விளையாடியதை எத்தனை மறைத்தும் தலையை தொட்டு பார்த்து.. மணல் ஒட்டி இருப்பதை கண்டு பிடித்து....அதற்கும் அடி வெளுத்த பாட்டி... பார்த்து பார்த்து குடும்பத்தை நடத்துகிறாள். சிக்கனத்தில் சிக் ஆகும் குடும்பத்துக்கு எப்படியும் அவள் தான் ஒளி விளக்கு. அம்மாவின் தம்பி மாமாவுக்கும் காது கேட்காது. ஆனால் அவர் தான் அவனுக்கு வழிகாட்டி. வேட்டைக்கு கடற்கரைக்கு சினிமாவுக்கு என்று அழைத்து போய் சின்னஞ்சிறு வயதின் வாழ்வை ஓரளவுக்கு காட்டியவர் அவர். வியாழக் கிழமையும் விடுமுறை நாட்களும் எப்போதும் கொண்டாட்டத்துக்கானவை. விளையாட்டு விளையாட்டு என்று அலைந்து திரியும் அவனுக்கு சாயந்திரம் ஆனதும் பாட்டியின் நினைப்பு பயத்தை அள்ளி கொட்டும்.

பள்ளியில் இவன் ஏழ்மையை தெரிந்து கொண்டு உதவித்தொகைக்கு உதவுகிறார் பள்ளி ஆசிரியர். இவருக்கு தான் நோபல் பரிசு வாங்கிய போது காலத்தால் அழியாத கடிதத்தை எழுதினார் காம்யு. எத்தனை படித்தாலும் எவ்வளவு உயர்ந்தாலும்... ஆரம்ப பள்ளி ஆசிரியரே முதல் வழிகாட்டி. அந்த வகையில் அவரும் முதல் மனிதன் தான். அல்ஜீரியாவில் வந்து குடியேறிய முதல் மனிதனாக ழாக்கின் அப்பா இருக்கிறார். அதனால் அவரும் முதல் மனிதன் தான். எந்த கேள்விக்கும் சரியான பதில் கிடைக்காமல் பதில்களை தானே உருவாக்க அதனை நோக்கி நகர்ந்ததால்... ஒன்றுமே இல்லாத இடத்தில் இருந்து உருவாகி தன்னை ஒன்றுக்கும் இணையில்லாத இடத்தில் நிறுத்தி விட்டதால் காம்யுவும் முதல் மனிதன் தான்.

உதவித்தொகை வாங்குவதால் சக மாணவர்களின் கேலிக்கு ஆளான மனநிலையை ழாக் யாரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை. அது விதையாக உள்ளே விழுகிறது. கேலி செய்தவர் எல்லாம் வாழும் போதே செத்து போக... காம்யு செத்தும் வாழ்வது தான் அந்த விதையின் விருட்சம். ஆழமான சிந்தனைவாதியாக... வாழ்வை திரும்ப திரும்ப புரிந்து கொள்ளும் தத்துவவாதியாக... இதோ முதல் மனிதனாக இன்றும் நிற்கும் காம்யு.. "ஒரு விதைக்குள்ள அடைபட்ட ஆலமரம் கண் முழிக்கும்... அது வரை பொறு மனமே" வரிக்கு கால சான்று.

29 வயதில் மரித்து போன தன் தந்தையை விட இப்போது தனக்கு வயது அதிகம் என்று யோசிக்கையில்... காலத்தின் ஒழுங்கு சிதைவதாக உணர்கிறார். மீண்டும் தந்தையை தனியாகவே விட்டு விட்டு வருவதில் அபத்தத்தின் அர்த்தம் இதுவாகவும் இருக்கும் என்று நாமும் நம்புகிறோம். எத்தனை அழைத்தும் பிரான்ஸ்க்கு வராத தாயை சந்திக்க அதன் காலனி ஆதிக்கத்தில் இருக்கும் அல்ஜீரியாவுக்கு நீண்ட வருட இடைவெளிக்கு பின் செல்கிறார் ழாக்.

நினைவும் புனைவுமாக அதன்பின் நீளும் நாவலின் நேர்த்தி நம்முள் குட்டி போடுகிறது.

கணவனின் கல்லறையைப் பற்றி பட்டும் படாமல் விசாரிக்கையில்... அந்த இளம் விதவையின் மன கல் மெல்ல அசைவதாக உணர்கிறோம். ஆதலால் தான் இந்த "முதல் மனித"னை... இந்த புத்தகத்தை ஒருபோதும் படிக்க இயலாத உனக்கு என்று தன் தாய்க்கு அர்ப்பணித்திருக்கிறார்.

முடிக்காத வார்த்தைகள்... இன்னும் சேர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்த பக்கங்கள் என்று ஆங்காங்கே காம்யுவின் நெருக்கம் நமக்கு கிடைக்கிறது. இரண்டு இடங்களில் தன்னையும் மறந்து ழாக் என்று எழுதுவதற்கு பதிலாக காம்யு என்றே எழுதி இருக்கிறார். ஆனால் இறுதி வடிவத்தில் கண்டிப்பாக மாற்றி இருப்பார் என்று சொல்லும் அவரின் மகள் காதரின் காம்யு.. இந்த முப்பது ஆண்டுகளில் காம்யுவை இன்னும் ஆழமாக புரிந்து கொண்ட உலகை காண்கிறேன். ஆதலால் இந்த நூலை தைரியமாக வெளியிடுகிறோம் என்று 1994 ல் வெளியிடுகிறார்கள். முதல் முதல் வாரத்திலேயே 50 ஆயிரம் பிரதிகள் விற்கின்றன. காம்யு காலத்தில் நின்று விடுகிறார்.

இந்த நூலின் இறுதி அத்தியாயம் - தனக்கு தானே ஒரு புதிர் - அது தான் முதல் மனிதனின் முழுமை.

காசை அவன் தேடியதே இல்லை. ஆனால் கனவை விரட்டிக் கொண்டே இருந்தான். எத்தனை அறிவுக்கு அவன் சென்றபோதும் தன் தாய்க்கு முன் தான் ஒன்றுமில்லை என்றான். வறுமையும் அறியாமையும் ஏழ்மையும் இயலாமையும் இருந்த வீட்டில் இருந்து ஒரு சுடர்... ஓர் அட்சய பாத்திரம்... அறிவு வேட்கை கொண்ட ஒரு பெரும் தத்துவம் இப்படித்தான் வெளி வந்தது. எங்கே இருந்தாலும் தனக்கான ஓரிடத்தை அவன் தாயாரித்துக் கொண்டான். இனி இந்த பூமியில் இருக்கும் எல்லாமே தனக்கு கிடைக்கும் என்று நம்பினான்.

தானே தெரிந்து கொண்டு தானே உணர்ந்த வாழ்வை தான் காம்யு வாழ்ந்திருக்கிறார். எழுதியிருக்கிறார். தன்னை தானே உருவாக்கிக் கொண்ட இந்த "முதல் மனிதன்" கட்டாயம் படிக்க வேண்டிய ஓர் உன்னதம். ஆழ் மூச்சில் படிப்போருக்கு உயிர்ப்போடு நம்மை வந்தடைகிறதுதரிசனம். சோர்வடையாத முதுமையை தாராளமாக பெறுவதுடன்... கிளர்ச்சி செய்யாத மரணம் தனக்கு வாய்க்கும் என்று நம்புவதாக நாவல் முடிகிறது.

அவன் பெட்ரோல் விளக்கில் படித்த இருண்ட படிக்கட்டுகள் இன்று ஒளி வீச தொடங்கி விட்டன. அதன் துளி எடுத்து தான் தன் ஆசிரியருக்கு... நோபல் பரிசு வாங்கிய பிறகு கடிதம் எழுதி இருக்கிறான்.

- கவிஜி

Pin It