jeyaprakash novel saa‘சா’ நூலை வாசிக்கும்போதே மலரும் நினைவுகளில் மூழ்கி பின் இயல்பு நிலைக்கு திரும்பும்படியானது.

36 வருடங்களுக்கு முன் நான் வசித்து வந்த தெருவில் இருந்த பெரிய புளிய மர நிழலில் தான் விளையாட்டு. ஒரு நாள் இருள் துவங்கியபோது திடீரென காற்றுடன் கூடிய மழை, அனைவரும் மரத்தின் அருகில் நின்றோம். மறுநாள் குட்டியின் அண்ணன் பிறவியிலேயே வாய் பேசமுடியாத ராசு இறக்கும் தருவாயில் இருப்பதை கேள்விப்பட்டு பையன்கள் எல்லாம் அவன் வீட்டிற்கு ஓடிச் சென்று பார்த்தோம்.

புளிய மரத்தில் எதையோ பார்த்த பயந்த கோளாறு என்று ஒரு பாட்டி சொல்லும்போது உயிர் பிரிந்தது. சின்ன வயதில் முதன்முதலாக நேரில் சாவினைப் பார்த்தேன். காலங்கள் கடந்தன. சமூக சேவையில் ஈடுபடும் இந்நேரத்தில்தான் புற்றுநோய் பாதித்த கார்த்தியின் சிகிச்சைக்கு உதவினோம். ஆனாலும் மரணத்தில் முடிந்தது.

அடுத்து 11 படிக்கும் பள்ளி மாணவன் சாலையைக் கடக்கும்போது விபத்தில் என் கரம் பிடித்து கண் முன்னே உயிர் பிரிந்தபோது அதிர்ச்சியுற்றேன். அன்றிலிருந்து சாவை எண்ணி பயம் தொற்றிக் கொண்டவனாய் பயணித்தேன். திடீர் திடீரென நெஞ்சுவலியால் கொஞ்ச வயதில் நண்பர்கள் இறந்துவிடும் செய்தியும் எமை இம்சைப் படுத்தியது.

தவித்துக் கொண்டிருந்தபோது தான் கு. ஜெயபிரகாஷ் எழுதிய 'சா' நூலை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் முன் தத்துவங்கள் பின் கதையின் நகர்வு. எனக்கு ஒரு நம்பிக்கையை உருவாக்கிற்று. சோர்ந்து போய் வாழ்க்கையே அவ்வளவுதான் என்றெண்ணியபோது

'எல்லா விஷயங்களும் முடிவுக்கு வருவதாக நீங்கள் நினைத்துப் பயப்படும் நாள்தான் நீங்கள் எல்லையற்றதாக மாறும் பிறந்த நாள்' - செனகா

107வது பக்கத்திலுள்ள இத்தத்துவக் கோட்பாட்டை படித்தவுடன் சாவை பற்றிய பயம் குறைய ஆரம்பித்தது.

இப்புத்தகம் அச்சிடும் முன் ஒரு தடவை, அச்சிட்ட பின் ஒரு தடவை பிழைகளைக் காண வேகமாக வாசித்தேன். எனக்காக மூன்றாவது முறை சுவைத்த போதுதான் 97-வது பக்க தத்துவமான "பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு, கோழைத்தனத்தின் தோழன், உறுதியின் எதிரி, மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரண பயம். இந்த மரண பயத்தை வென்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தன் மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகிறான்." - வேலுப்பிள்ளை பிரபாகரன்.

இதைக் கண்டவுடன் தெளிவு பிறக்க ஆரம்பித்தது.

பக்கம் 100-ல்

'நிறைவாழ்வு வாழவும் மரணத்தை இனிதாக ஏற்கவும் நேசிப்பு நமக்கு அளிக்கப்படும் ஆற்றல். அப்போது மரணம் நம் வாழ்வின் முடிவல்ல; வாழ்தலின் ஒரு பகுதி.' - பெல் குக்ஸ்

மரணத்தைப் பற்றிய பயம் எனைவிட்டு நீங்க தெளிவு பெறக் காரணமாக விளங்கியது ஆசிரியர் பயன்படுத்திய தத்துவக் கோட்பாடுகள் முக்கிய காரணியாக அமைந்துள்ளது.

இனி இப்புதினம் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தைக் காண்போம்.

தற்கொலை முயற்சியை தள்ளிப் போட்டதின் விளைவு வாழ்க்கை வாழ்வதற்கே, பொறுமையுடன் காத்திருப்பவர்களுக்கே வாழ்க்கை வசமாகும் எனப் புரிந்து கொள்ளவும், மரணத்தைப் பற்றிய பயம் எனக்கு கிடையவே கிடையாது என வெளியில் சொன்னாலும் உள்ளூர ஒரு பயம் எத்தகைய மனிதருக்கும் இருக்கும் என்பதை உணர்த்தியுள்ளார்.

ஒவ்வொரு கதாபாத்திரமும் படிப்பினையை அள்ளித் தெளித்துச் செல்கிறது. ஆசிரியர் சமூக ஆர்வலர் என்பதைப் புரிந்து கொள்ள பள்ளிக் கல்வியில் மதிப்பெண் பின்னால் அணிதிரண்டு மக்கள் செல்லும் முட்டாள்தனத்தையும், அருவிகளுக்குச் செல்லும் குடிமகன்கள் குடித்துவிட்டு பாட்டில்களை உடைத்துப் போடுவதால் விளையும் தீமைகளை நச்சென்று பதிவிட்ட பாங்கும், தான் வளர்க்கும் நாய்க்குட்டிக்கு அரசு என்று பெயர் வைத்து அரசுக்கு சாட்டையடி கொடுப்பதும், எட்டு வழிச்சாலைக்கான எதிர்ப்பினை நேரடியாகக் கூறிய விதமுமே சான்று.

காட்சிப்படுத்தியதில் சாமந்திப் பூவை நம்மையும் நாசியில் இழுத்து மணத்தினை நுகரச் செய்திருப்பார், நல்ல குரல்வளம் கொண்டவள் மரணித்திருக்கும்போது உறக்கத்திலிருப்பவளை எழுப்பி பாடச் சொல்லும் விதமாக துயரத்தைத் தூவியிருப்பார் கண்கலங்காமல் கடந்து செல்ல இயலவில்லை. வாழ்க்கை விதிபோன போக்கென்பதை மாற்றி நதிபோன போக்கில் நகர்ந்து சென்று ஒவ்வொரு நிகழ்விலும் ரசித்து வாழ பழகிக் கொள்ள நம்மை கைபிடித்து அழைத்துச் செல்கிறார்.

சாமந்திப்பூ, சாலை விரிவாக்கம், சாந்தி, சாவித்திரி, சாதனா, சாராயம், சாமி, சாதியை கண்டுபிடிக்கத் துடிக்கும் மக்களின் மனசு, சாவிலும் உரமாகி அடுத்த கட்ட நகர்வுக்கு கொண்டு செல்லுதல், சாவைக் கண்டு பயப்பட வேண்டாம் வாழ்ந்துவிட்டு சாவை சந்திக்கலாம் என்று பத்தாவது மாடியில் தற்கொலைக்கு முயன்றவனை ஒவ்வொரு மாடியிலிருந்தும் கீழே இறங்க வைத்து வாழ்வில் நம்பிக்கை ஒளியை ஏற்றியுள்ளார்.

'உயிரை, மெய்யை நெடிலாக்கும் எழுத்து 'சா'. எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே' - தொல்காப்பியர்.

அனைவருக்கும் இப்புதினம் பிடிக்கும் காரணம் மனிதருக்குப் பிடிக்காத சாவினை நேர்மறையாக மாற்றி

'வாழ்க்கையின் மறுபெயர் மரணம்
மரணத்திள் மறுபெயர் வாழ்க்கை" - எனப் புரிய வைத்துள்ளார்.

புதினத்தின் கடைசிப் பகுதியினை நேரில் காணும் வாய்ப்பினை ஆசிரியர் எனக்கு ஏற்படுத்தித் தந்தார். எனை தனது பைக்கில் அமர வைத்து அவ்விடத்திற்கு அழைத்துச் சென்றார்.

வாழ்த்துகள் ஜெ பி...

நூல்: சா
ஆசிரியர்: கு. ஜெயபிரகாஷ்
பதிப்பகம் : ஆதிப்பதிப்பகம்
15,மாரியம்மன் கோவில் தெரு
பவித்திரம்
திருவண்ணாமலை.
விலை : ரூ. 120/-

- செல்வக்குமார், இராஜபாளையம்

Pin It