C Saravanan 400‘எங்கேயும் எப்போதும்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்கள் பல்வேறு இதழ்களிலும், இணையதள இதழ்களிலும் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது. தரமான தாள்களில் அழகிய வடிவமைப்புடன் தொகுக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் அபி ,மார்க்ஸிய சிந்தனையை ஏற்றுக் கொண்டவர் என்பதால் அவருடைய ஒவ்வொரு கதையிலும் மனிதநேயம் பொங்கி வழிகிறது.

இந்த சமூகத்தில் தான் அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கதையாக வடித்துள்ளார். பெரியார், மார்க்ஸ், அம்பேத்கர் போன்ற மக்கள் விடுதலை சிந்தனை யாளர்களின் கருத்தை உள்வாங்கி உருவாகும் படைப்பாளிக்கு சமூக அக்கறைதான் முதன்மையானது என்பது உண்மையாகும்.

அந்த அடிப்படையில் எழுத்தாளர் அபி அவர்கள் இந்த சமூகத்தின் முதன்மையான பிரச்சனைகளான ஜாதீ, மதம், பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கை, முதலாளித்துவச் சுரண்டல் என அனைத்தையும் தன் கதையில் கொண்டுவந்திருப்பது மிகச் சிறப்பு ஆகும்.

பொதுவாக இலக்கியவாதிகள் மக்களுக்கு புரியாமல் எழுதுவதையே சிறந்த கலைப்படைப்பாக நினைக்கும் சூழலில் வாசகர்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் படைப்பு ஒவ்வொன்றும் நமது இதயத்தை தொட்டுச் செல்கிறது. ஒவ்வொரு கதையும் சமூக அக்கறையோடு எழுதப்பட்ட சூழலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கதைகளை மட்டும் காட்டாறு வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

‘உள்ளே வெளியே’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கதையில் ஒரு திருமணமான பெண்ணின் உணர்வுகளைக் கணவன் எவ்வாறு புரிந்து கொள்கிறான் என்பதை மிக நேர்த்தியாக பதிவு செய்துள்ளார். தமிழ் இலக்கியங்களும், திரைப்படங்களும் ஆணின் கடந்த கால,நிகழ்கால, வருங்கால காதல் என அனைத்தையும் பதிவு செய்வார்கள். ஆனால் பெண்ணின் கடந்தகால காதலை, நட்பை, அவர்களின் உணர்வைப் பதிவு செய்யமாட்டார்கள். ஏனெனில் மனுதர்மம் அவர்களின் மூளையில் பெண்களைப் பற்றிப் பதிவு செய்துள்ள பிம்பம் அது.

எனவே, ஆண்களில் பொதுவாக தமிழ்க் கலாச்ச்சாரத்தைக் காக்க நினைக்கும் காவலர்கள் தங்களின் காதலை ‘ஆட்டோகிராப்‘பாக படம் எடுப்பார்கள். இந்தக் கதையில் கீதா அவர்கள் “வளையோசை கல கல” பாடல் மூலம் தனது பழைய நினைவுக்கு திரும்பும் சம்பவத்தை மிக அழகாக பதிவு செய்து அதை அவரின் கணவன் ஏற்றுக் கொள்ளுவதையும் பதிவு செய்கிறார்.

மேலும் தான்  “ஆயிரம் தாமரை மொட்டுக்களே” பாடல் கேட்பதையும் தனது மகளுக்கு ஹேமலதா எனப் பெயரிட்டுள்ளதையும் ஒப்பிட்டு தனது மனைவியின் உணர்வை நியாயப்படுத்தும் போக்கு சிறப்பு ஆகும். இந்த பக்குவம் இல்லாத்தால் தான் பல ‘கீதா’க்களின் வாழ்க்கை சீரழிந்து விடுகிறது.

ஆணாதிக்கமும் மூடநம்பிக்கையும் கைகோர்த்துக் கொண்டு அதற்குத் துணையாக கடவுள் நம்பிக்கையும் சேர்ந்து கொள்ளுமானால் ஒரு பெண்ணின் வாழ்வு எப்படி கேள்விக்குள்ளாகிறது என்பதை ‘இதுவும் யுத்தம்’ என்ற கதையின் மூலம் அழகாகப் பதிவு செய்கிறார். இந்துமதம், அது உருவாக்கிய மூடநம்பிக்கையும் அதிகமாக பெண்களைத்தான் பாதிக்கிறது.

ஏனெனில் இங்கு ஒடுக்கப்பட்டவர்களாலும் ஒடுக்கப்படுவர்கள் பெண்கள் ஆகும். “லலிதா என்ற ஆசிரியை தனக்கு குழந்தை இல்லை என்பதைக் காரணம் காட்டி இரண்டாவது திருமணம் செய்யத் தயாராகும் கணவன் கனகராஜ் இருவரும் மருத்துவப் பரிசோதனைக்குச் சென்று தன் மீது தவறில்லை என்பதைக் கணவனிடம் விளக்கிச் சொல்லும் போது, பக்தி என்னும் ஆயுதத்தை வைத்துக் கொண்டு தன்னைக் குறி சொல்பவராக அவதாரம் எடுக்கும் ஆண் திருந்துவார் எனும் எதிர்பார்ப்பில் லிதாவின் காலம் ஓடுகிறது”.

எழுத்தாளர் அபி அவர்கள் இந்தக்கதையின் லலிதா மணவிலக்குக் கேட்பதாக அமைந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். பொதுவாக இலக்கியவாதிகள் ஒரு செய்தியை மென்மையாக சொல்லக்கூடியவர்கள் என்பதால் லலிதா காத்திருப்பதாக முடித்திருக்கலாம் எனத் தெரிகிறது.

உலகம் முழுவதும் சமூகம் ஏழை, பணக்காரர் என்ற அடிப்படையில் முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கம் என்ற அடிப்படையில் பிரிந்துகிடக்கும். முதலாளி வர்க்கம் சுரண்டும் வர்க்கமாக இருக்கும். ஆனால் இந்தியத் துணைக்கண்டத்தில் இந்துமதத்தின் கோரத்தால் சமூகம் ஜாதிகளாகப் பிரிந்து கிடக்கிறது. நான்கு வர்ணங்களும், அவற்றால் ஆயிரக்கணக்கான ஜாதிகளும் உருவாகி ஒருவருக்கொருவர் கொள்வினை, கொடுப்பினை,  சேர்ந்து உண்பது என எதிலும் ஒற்றுமை கிடையாது. தேநீர் கடையில் தொடங்கி மனிதன் இறந்தபின்பு புதைக்கும் சுடுகாடு வரைக்கும் ஜாதி தான் தீர்மானிக்கிறது.

இந்த ஜாதி அமைப்பைச் சட்டாாக விளக்குவது மனுசாஸ்திரம். எந்த எந்த ஜாதி எப்படி உருவானது, அது எப்படி இருக்க வேண்டும், யார் யாரோடு திருமணம் செய்ய வேண்டும், யார் என்ன தொழில் செய்ய வேண்டும் என சட்ட விதியாக இருப்பது மனுதர்மம். அதன் அடிப்படையில்தான் இந்து லா உருவாக்கப்பட்டது. அந்த மனுதர்மத்தின் பிரச்சாரகர்களும் அதைச் சொல்லிக் கொடுக்கும் பேராசிரியர்களாகவும் இங்கு பார்ப்பனர்கள்தான் இருக்கிறார்கள்.

ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போதும் சரி, இன்றைக்கம் சரி மனுதர்ம கட்டமைப்பைத் தகர்க்கும் எந்த நடவடிக்கைக்கும் முதல் எதிர்ப்பு பார்ப்பனர்களிடமும் அவர்கள் சார்ந்த அமைப்புகளிடமும் தான் வரும் அப்படிப்பட்ட சூழலில் எழுத்தாளர் அவர்கள் ‘கரை கடந்த நதி’ என்னும் கதையில் சாமிநாதய்யர் என்னும் கதாபாத்திரத்தை தீண்டாமை ஒழிப்புக் காரராகவும், தர்மகர்த்தாவை ஜாதி வெறியராகவும் காட்டியுள்ளது, இந்தச் சமூக அமைப்பதைத் தோழர் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

எப்படி முதலாளித்துவச் சமூகத்தில் சிறுமுதலாளிகளை சுரண்டல் சக்தியாகக் காட்டி பன்னாட்டு முதலாளிகளைப் பொதுவுடமையாளர்களாக காட்டுவது தவறோ, அப்படித்தான் பார்ப்பனர்களை நல்லவர்களாக காட்டுவது ஆகும். ஏனெனில் தீண்டாமையின் பிறப்பிடம் கோவிலும் அங்கு உள்ள பார்ப்பனர்களும்தான். அவர்களிடம் கற்றதைத்தான் பிற்படுத்தப்பட்ட மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களிடம் காட்டுகிறார்கள்.

எனவே முதலாளித்துவச் சமூகத்தில் பெருமுதலாளிகள் எப்படி சுரண்டல் சக்தியோ அப்படித்தான் ஜாதிய சமூகத்தில் பார்ப்பனர்களும். பெருமுதலாளிகளிடம் கற்றதைத்தான் சிறுமுதலாளிகள் தனது நிறுவனங்களில் நடைமுறைப்படுத்துகின்றனர். அதைப்போலத்தான் பிற்படுத்தப்பட்ட மக்களும், எனவே சுரண்டல் சக்திகளான பெருமுதலாளிகளையும், பார்ப்பனர் களையும் எதிர்ப்பதுதான் சரியாக இருக்கும். சமூக அக்கறையுள்ள ஒரு நல்ல கதைத் தொகுப்பை காட்டாறு வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமைப்படுகிறோம்.

வெளியீடு: – அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம், 10 ஈ 55, 3 வது குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர் (வீ.வ.வா) திருவான்மியூர், சென்னை - 600041. செல் எண் 9894602949. விலை 160

Pin It