தமிழ் இலக்கியப் பரப்பில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட மக்களின் வாழ்க்கையையோ, அடிப்படை ஆதாரத் தொழிலான வேளாண்மையையோ எழுதிய எழுத்தாளர்கள் மிகமிகக்குறைவு. அக்குறையைக் களையும் முகமாக வண்டல்நிலம் சார்ந்த, அம்மக்கள் வாழ்வு சார்ந்த அரிய நடையிலான எழுத்து கைவரப் பெற்ற எழுத்தாளர் சி.எம்.முத்து. தஞ்சை மாவட்ட வேளாண்மக்களின் அச்சு அசலான வாழ்க்கையை மையமாக வைத்து ‘கறிச்சோறு’, ‘பொறுப்பு’, ‘வேரடி மண்’ ஆகிய நாவல்களுடன், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். அவரின் ‘மிராசு‘ நாவல் சமீபத்தில் வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

தஞ்சை பாபநாசத்திலிருந்து சாலியமங்கலம் செல்லும் சாலையில் திருக்கருக்காவூருக்குப் பக்கத்தில் இடையிருப்பு என்ற கிராமத்தைச் சேர்ந்த அவரை ‘உங்கள் நூலகம்’ இதழுக்காக அவரது வீட்டில் சந்தித் தோம். வெற்றிலை பாக்கு மணக்கும் சிவந்த உதட்டோடு உற்சாகம் பொங்க வரவேற்று விசாலமாகப் பேசினார். இந்திய விவசாயியின் எளிமையான தோற்றத்திலிருந்த அவர் விவசாயியாகவும் எழுத்தாளனாகவும் ஒருசேரக் களத்திலிருந்து வெள்ளந்தியாக இலக்கியம், விவசாயம் குறித்துப் பேசியவை உங்கள் பார்வைக்கு... 

நேர்காணல்: ஜி.சரவணன்

வணக்கம். ‘கறிச்சோறு’ நாவல் மூலமாக தமிழ் இலக்கிய உலகில் பெருஞ்சலனத்தை ஏற்படுத்திய நீங்கள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதி வந்திருந்தாலும் சமீபத்தில் வெளிவந்திருக்கும் ‘மிராசு’ நாவல் பலராலும் பாராட்டவும் விவாதிக்கவுமாக தமிழிலக்கியத்தில் கவனிக்கத்தக்க மறுபிரவேசம் ஆகியிருக்கிறீர்கள். இதனை எப்படி உணர்கிறீர்கள்?

நான் எதிர்பார்த்ததைவிட நாவலுக்கு அதிகமான வரவேற்பு இருக்கு. தெனக்கிம் யாராவது ஒருத்தர் போன்ல பேசுறாங்க. ரிட்டயர்ட் ஜட்ஜ் ஒருத்தர் புத்தகத்த படிச்சிட்டு ரொம்ப நேரம் பேசுனாரு. நேர்ல வந்து பாக்கறதாவும் சொன்னாரு. சில எடத்துல விமர்சனக்கூட்டம் நடத்தறதாவும் சொல்லிருக்காங்க.

ஆரம்பத்தில் மிகவும் விரிவாக சொல்லப்பட்டு வருகிற கதையில் பாதிக்கு மேல் சடசடவென்று தாவித்தாவிப் போய் டக்கென்று நாவல் முடிந்துவிடுவதுபோலத் தெரிகிறதே...

நீங்க சொல்றது சரிதான். அத இன்னுங் கொஞ்சம் விரிவா கொண்டு போயிருக்கணும். ஆழமா எடுத்துட்டு போயிருக்கணும்னுதான் எனக்கும் ஆச. ஆனா நாவல் வாசிப்புங்கறது இவ்வளவு பக்கம் படிப்பாங்களாங்குற ஒரு கேள்வியும் எனக்குள்ள வந்ததுனால அத நான் கொறச்சிகிட்டு அந்த நாவல முடிக்கிற ஒரு சூழ்நிலை வந்துடுச்சி. இல்லன்னா இன்னொரு எரநூறு பக்கத்துக்கு அது போயிருக்கும். அப்டிப் போயிருந்தா இன்னமும் ஆழமா இருந்துருக்கும். அதுல மாற்றமே கெடையாது. அப்டிதான் கொண்டு போவணுமின்னு நெனச்சேன். இப்பவும் ஒண்ணும் இல்ல, அந்த விரிவான பகுதிய இன்னொரு நாவல்ல நான் சொல்லிடுவேன். ஏன்னா மனசுக்குள்ள இருக்குற அந்த விஷயங்கள் என்ன தொந்தரவு படுத்திகிட்டே இருக்கறத நான் நிச்சயமா இன்னொரு நாவல்ல சொல்லிடுவேன். ஏன்னா முழுமையா இருக்கும்போதுதான் அது நிறைவா இருக்கும் அப்டிங்கறது என்னுடைய மேன்மையான கருத்து. அத வந்து நான் சொல்லியே ஆகணும். எனக்குப் பிறகு உள்ள சந்ததிகள் அவர்களுக்குப் பிறக்க உள்ள பிள்ளைகள் அதை பூர்வாங்கமா அனுபவிக்கணும். அந்தத் தொந்தரவுகள் என்ன அப்படிங்கறத அவங்க புரிஞ்சிக்கணும். புரிஞ்சி கிட்டு தண்ணிய எவ்வளவு சேமிக்கமுடியும் அப்டிங்கற தெல்லாம் கருத்துல வச்சிகிட்டுதான் எழுதிருக்கேன். இனிமே நீரை சேமிச்சிதான் நாம வாழமுடியும் அப்படிங்கற ஒரு நெலமைக்கு வந்துட்டம். நீரை சேமிக்காம எதையுமே பண்ணமுடியாது. ஏன்னா இருக்குற நீர் கொஞ்சம்தான். அதக்கொண்டுதான் நாம எல்லாருமே வாழ்ந்தாகணும்.

தண்ணீர் என்று நீங்கள் சொன்னதால் கேட்கிறேன். அடிப்படையில் விவசாயியான நீங்கள் காவிரி உள்ளிட்ட நீராதாரப் பிரச்சினை பற்றிக் கூறுங்களேன்...

அதாவது நடுவர் மன்ற தீர்ப்பு வந்தும் தண்ணிக்காக விவசாயிங்க போராடுனாங்க. இப்ப மேலாண்மை வாரியம் அமைக்கணும்னு சொல்றாங்க. இந்தக் கூக் குரல்லாம் அந்த நீர இங்கக் கொண்டு வந்துருமாங்கிற கேள்வி ஒண்ணு இருக்கு. மேலாண்மை வாரியம் அமைக்கிறதோ நடுவர்மன்றத் தீர்ப்போ இதுனாலல்லாம் எதுவும் செய்யமுடியாதுன்னுதான் சொல்றன். ஏன்னா நீர வச்சி அரசியல் செய்யிற காலமா போச்சி. அதனால ஆட்சி செய்றவங்களுக்கு மனசு இருக்கணும். அந்த மனசு இருந்தாதான் மக்கள காப்பாத்தமுடியும். தமிழ்நாட்டு ஜனங்க அப்டிங்கறத வுட்டுருங்க. நீர்ங்கறது உலகத்துக்கே பொதுவானது அப்டிங்கறத நான் சொல்றன். அது ஒருத்தருக்கும் உரிமை இல்லாதது. ஆனா உரிமை உடையது. அதனால தாய்மனசோட அவங்க நமக்குத் தண்ணி தந்தாதான் உண்டு, இல்லன்னா எதுவும் பயன் கிடையாது. எல்லா ஜீவராசிகளும் நீர் இல்லாம ஒண்ணும் பண்ணமுடியாது; தாவரங்கள்லேருந்து நீரைக்கொண்டுதான் ஜனிக்க முடியும். நீர் இல்லன்னா ஒண்ணுமேயில்ல. இதுல அரசியல் பண்றதுக்கோ வியாபாரம் பண்றதுக்கோ அனுமதிக்கக்கூடாது. இந்தப் போராட்டமெல்லாம் விழலுக்கு இறைச்ச நீர்தான். இதத்தாண்டி அரசியல் காரர்கள் தாய்மனம்கொண்டு உலகத்தமிழர்களை யெல்லாம் ஒன்றிணைக்கும்போதுதான் அது நடக்கும்.

சரி. ஒரு அப்பட்டமான விவசாய வாழ்க்கையை உங்கள் அனுபவத்திலிருந்து நாவலாக எழுதியிருக்கிறீர்கள். அப்படி எழுதுவதற்கு உதவியாக இருந்த முன்னோடி இலக்கியங்கள் என்று எதையாவது சொல்லமுடியுமா?

எதுவும் இல்லை, இலக்கியங்கள்லாம் நான் படிச்சதே கிடையாது. எந்த இலக்கியத்தையும் நான் ஆழ்ந்து படிச்சதே கிடையாது. படிச்சாலும் எனக்குப் புரியப்போறது இல்ல. ஏன்னா கல்வி பலம் என்கிட்ட அதிகமா கிடையாது. அப்படிங்கறது மிகப்பெரிய காரணம். கல்வி பலம் இருந்தா அத நான் சுவைத்திருக்க முடியும். அது மூலமா நெறய விஷயங்கள தெரிஞ்

சிருக்க முடியும். அந்த சக்தி என்கிட்ட கிடையாது. என்னுடைய குறைந்த படிப்பை வச்சிகிட்டுதான் என்னுள்ளேருந்து வர்ற அந்த விஷயங்களை, எனக்குத் தெரிந்த விஷயங்களை நான் சொல்றேன், அவ்வளவு தான். அந்தக் கால இலக்கியங்களைக் குறைச்சே மதிப்பிட முடியாது. அது மிகப்பெரிய தாக்கத்தைத் தமிழ்ல கொண்டுவந்துருக்கு. அது எனக்குப் போதாமை அப்டின்னு வரும்போது அத நான் பொருட்படுத்தறது இல்ல; பொருட்படுத்தவும் தெரியாது. அந்தச் சூழல்தான் எனக்கு வாய்த்தது. என்னுடைய அனுமானத்திலேர்ந்து இப்படிப் போனா நல்லாருக்கும், இப்படிப் போனா நல்லாருக்காது அப்புடிங்கறத மட்டும்தான் நான் வச்சிகிட்டு எழுதறேன்.

சரி, உங்கள் எழுத்தின் வேர் என்று எதனைக் கருது கிறீர்கள்?

அருமையான கேள்வி. அருமையான கேள்வி. என்னுடைய வேர்தான் என்னுடைய எழுத்தின் பலம். என்கிட்டயிருந்துதான் எல்லாம் வருது. பிறர்ட்டேருந்து அது வரல. பிறர்ட்டேருந்து அத நான் எடுக்கல. என் மூலமாகவே அது கிடைக்குது. சுயம்பான கலைஞன் மாதிரி என்கிட்டருந்துதான் அது வருது. நான் பார்த்த அனுபவங்கள், என்னுடைய கேள்வி ஞானத்தில் வந்த விஷயங்கள். பெரியவர்கள் சொன்ன எல்லாத்தையும் நான் உள்வாங்கிக்கறேன். அந்த மாதிரி சில விஷயங்கள் எனக்கு ஆச்சரியப்படத்தக்க விதமால்லாம் கிடைச் சிருக்கு. அது எல்லாம்தான் என்னுடைய நாவல்.

நீங்கள் எழுதும்போது என்ன வரையறை வைத்துக் கொண்டு எழுதுகிறீர்கள்?

நான் எனக்கு தெரிஞ்ச ஜனங்களோட வாழ்க் கையத் தான் எழுதுறன். உண்மையத் தவுத்து உயர்வான இலக்கியம் எதுவுமில்ல என்பது என்னோட கோட்பாடு. அதனால எனக்குத் தெரிஞ்ச மக்கள் நான் பொழங்கி கிட்டு இருக்குற அந்த விஷயங்களத்தான் நான் எழுத முடியும். வெறும் கற்பனையா ஒண்ண இட்டுக்கட்டி எழுதுறது அவ்வளவு ஆழமா இருக்காதுன்னு நினைக் கிறேன். இப்படித்தான் என்னுடைய எழுத்த முடிவு செஞ்சுக்கிறேன்.

முப்பது வருடத்துக்கு மேல் தொடர்ந்து எழுதிக்கொண்டு வருகிறீர்கள். உங்களைத் தமிழ்இலக்கிய உலகம் போதுமான அளவு கண்டுகொள்ளவில்லை என்று நினைத்ததுண்டா?

என்னக் கண்டுக்காதது பத்தி நான் கவலப்பட்டதே கிடையாது. இதுநாள் வரைக்கும் என் பெயரைச் சொல்லலியே அப்படின்னு நான் கவலப்பட்டதே கிடையாது. யாரும் என் பெயரைச் சொல்லணும்ங்கற அக்கறையும் எனக்கு இல்ல. என்னுடைய பெயரை உச்சரிப்பவர்கள் உச்சரிப்பார்கள் அப்டிங்குற ஒரு நம்பிக்கை இருந்தது. இந்த மிராசுவுடைய ஒரு பக்கத்தை எல்லாரும் சொல்லிட்டாங்க. அதாவது மிராசு என்றால் சாணிப்பால் அடி, சவுக்கடி இப்படிப்பட்ட ஒரு பிம்பத்த நம்பள்ட்ட தோற்றுவிச்சிருக்காங்க. அது உண்மையுங்கூட, அத நாம மறுக்கமுடியாது. அப்படித் தான் நடந்தது. ஆனால் நவீனகாலம் என்று வரும்போது அந்த பிம்பங்கள் உடைக்கப்பட்டன. ‘மிராசு’வில் கம்யூனிஸ்டுகள் செவப்புக் கொடி பிடிச்சிகிட்டு ‘உழுதவனுக்கே நெலத்த சொந்தமாக்கு’, ‘கூலி உயர்வு கொடு’ன்னு கேட்டு ஊர்வலம் வர்றாங்க. அதுக்கு முன்னாடி அந்த ‘மிராசு’ல வர்ற காளிங்கராயரு தன்னுடைய இனத்துக்காரனையே உட்காரவச்சிப் பேசாம நின்னமேனிக்கே பேசிட்டு அனுப்பி வச்சிடுறாரு. ஆனா கம்யூனிஸ்ட் கட்சி வந்ததுக்குப் பின்னதான் அவரு தன்னுடைய நிலைமையை மாத்திக் கிறார். ஓகோ உலகம் இப்படில்லாம் போயிட்டிருக்கு, நம்மளயும் நாம மாத்திக்கணும், மனிதாபிமானத்தோட வாழணும்னு அவர் ஒரு நிலைக்கி வந்த பிற்பாடுதான் ‘இவ்வளவு பெரிய பெஞ்சு கிடக்குல்ல, உக்காருங்க, காப்பி சாப்பிடுங்க’ என்று எல்லாரையும் அரவணைக் கிறார். இந்த வரலாற்று மாற்றத்தைத்தான் நான் என் நாவல்ல சொல்லிருக்கேன்.

நீங்கள் ‘கள்ளர்’ என்ற ஒரு சமூகத்தைப் பற்றி மட்டுமே தூக்கிப் பிடித்து எழுதுவதாக எழும்பும் குற்றச்சாட்டுகள் குறித்து என்ன சொல்கிறீர்கள்?

நீங்க சொல்றமாறி இருக்கலாம், நான் இன்ன சாதிதான் ஒசத்தின்னு எங்கயும் எழுதியிருக்கனா, இல்லியே, எனக்குத் தெரிஞ்ச மக்கள அவங்க வாழ்க்கைய உண்மையா எழுதியிருக்கேன். சாதிப் பெருமைன்னு நான் எழுதல, இந்த சாதியில இருக்கிற சடங்குகளை, கலாச்சாரத்தை, பண்பாட்டை, திருவிழாக் களை எழுதியிருக்கிற மாதிரி இங்கருக்குற வன்மத்தை, மூர்க்கத்தை, துரோகத்தை, வப்பாட்டி வச்சிக்கறத, சாராயம் குடிச்சி வம்பளிஞ்சி போறதன்னு எல்லா பிரச்சினைகளையும்தான் எழுதிருக்கேன். இந்த சமூகத்துக்கான நாட்டார் தெய்வங்களப் பத்தியும் எழுதிருக்கேன்.

முழுமையாக யதார்த்த இலக்கியத்தையே எழுதிவரும் உங்கள் பார்வையில் சிறந்த படைப்பாளிகளாக அன்றும் இன்றும் நீங்கள் கருதுபவர்களைப் பற்றி சொல்ல முடியுமா?

சா.கந்தசாமி ஒரு இலக்கிய மேதை. அவரோட சாயாவனம் மிகப்பெரிய இடத்துக்கு அவர கொண்டு போச்சி. உண்மையை மட்டும்தான் எழுதணும்னு நெனச்சி அவர் எழுதுனாரு. ந.முத்துசாமி நல்லா எழுதுனாரு, அப்புறம் இசை, நாடகம்னு கலை

களுக்குப் போயிட்டாரு. கரிச்சான்குஞ்சு, கு.ப.ரா., எம்.வி.வி, தி.ஜானகிராமனல்லாம் ரசனை எழுத்துன்னு சொல்லலாம். எனக்கு எழுத்த சொல்லிக்கொடுத்த ஆசானா தஞ்சை பிரகாஷ் இருந்தாலும் சிறுகதைங்குற இடத்த அவர் கண்டுபுடிக்க முப்பது வருசம் ஆச்சி.

ஒரு சிறுகதையின் லட்சணம் என்னன்னா ‘ஷணத்தில் தோன்றி ஷணத்துக்கு முன்னும் பின்னுமாய் உள்ள இடைப்பட்ட காலத்திலேயே ஒரு சிறுகதை முடிந்துவிடவேண்டும். அப்படி முடியாத ஒரு கதை சிறுகதையே அல்ல.’ இப்ப நிறைய பேரு பம்மாத்தா எழுதிகிட்டு வர்றாங்க. ஆனா யார்மாதிரியும் நான் எழுதுறதுல்ல, எனக்குத் தெரிஞ்ச உண்மையைத்தான் எழுதறேன். என் எழுத்துங்கறது ஒரு தனிப்பட்ட வகை. என் ஜனங்களுக்கு ஒட்டுமொத்த தமிழ் சமூகத்துக்கு நானறிஞ்ச வாழ்க்கையை சொல்லவேண்டிய தேவை இருக்குறதால நான் எழுதுறேன். எனக்கு முன்னயும் பின்னயும் யாரயும் நான் கருதல.

புதுத் தலைமுறையில சு.தமிழ்ச்செல்வி அவங்க நாவல்ல நாத்தாங்கால்ல நாத்து பறிச்சி வயல்ல நடுறதுக்கு முன்னாடி ‘நாத்து மாலை’ விடுறதப்பத்தி அற்புதமா எழுதிருக்காங்க. ஒரு உரையாடல் எப்டி யிருக்கணும்ங்கறத ரொம்ப அனுமானிச்சி அவங்க எழுதியிருக்கிறத நான் ரொம்ப சிலாகிச்சிப் படிச்ச ஆளு. நான் ஒரு எழுத்தாளனா படைப்பாளியா இருந்தாலும் சு.தமிழ்ச்செல்வியோட வாசகன்னு சொல்லிக்கறதுல எனக்கு ஒண்ணும் வெட்கமே கிடையாது. அந்த சு.தமிழ்ச்செல்வி மறக்கடிக்கப்பட்டது, மறைக்கப் பட்டது எதனால்? அப்புடின்னு யாராவது கேக்கணும். ஜி.கார்ல்மார்க்ஸோட சிறுகதைத் தொகுப்ப சமீபத்துல படிச்சேன். அவரப் பாத்தா கட்டித் தழுவணும்னு தோணுது. அந்தக் கதையை வளைத்துக்கொண்டு செல்லும் நடை மிக அற்புதமா இருக்கு. புதுத்தலை முறை எழுத்தாளரா அவரை நான் சொல்றதுன்னா நவீனத்துக்கு அருகாமையில நின்னு பழைய காலத்து நடைமுறை வாழ்க்கைக்கு அவர் போறாரு. அந்தக் கதை களோட தோற்றப்பொலிவு மிக மிக அற்புதமா இருக்கு.

அப்புறம் ஜி.பி.இளங்கோவனோட ஒரு கவிதையைப் படிச்சேன்.

வீடுதிரும்பும் குழந்தைகள்

வெள்ளரி விற்கும் அம்மா

கொத்து வேலைக்குப் போகும் அப்பா

கூடவே வருகிறது கோடை

ஒருவர் பின்

ஒருவராக...

சத்தியமா சொல்றேன் அந்தக் கவிதை அப்டியே என்ன எங்கியோ கொண்டு போயிடுச்சி. நாலே நாலு வரிதான். அது சுருட்டி மடக்கி நம்மள அப்படியே உட்கார வச்சிடுது. அதயெல்லாம் சொல்லாம இருக்க முடியாது.

saravana muthu 600பொதுவாக உங்கள் பாணி எழுத்துகள் பழமை வாதத்தைப் போற்றுவதாக எழும் குற்றச்சாட்டுகள் பற்றி சொல்லுங்களேன்...

அதாவது மூலம்னு ஒண்ணு இருக்கு. மூலத்தைத் தவிர்த்து நம்ம கிடையாது. ஒரு குடியானவன் ரொம்ப கஷ்டப்பட்டு சிறுகச்சிறுகச் சேத்து ஒரு காளை மாடு வாங்குறான். அந்த மாட்ட கிராமத்துல நாலஞ்சி பேர் வந்து பாத்துட்டு ‘நல்லாருக்குப்பா’ன்னு சொல்லிட்டுப் போயிடுறாங்க. அதே நேரத்துல ஒடன் பங்காளி ஒருத்தன் வாரான். அவன் வந்து ‘ஏண்டா இத வாங்கின, இந்தக்காலத்துல ஏர்மாட்ட வச்சிகிட்டு யார் விவசாயம் பண்றா? இந்தப் பணத்த வச்சிகிட்டு ஒரு நூறு குழி ஒத்தி புடிச்சிருந்தீன்னா உனக்கு சோத்துக்கு ஆயிருக்கும். அத வுட்டுபுட்டு இதப்போயி வாங்கியிருக்கிறே’ன்னு கேட்டுட்டுப் போறான். இவனுக்கு அது உறுத்துது. இவன்ட்ட கலப்பை செய்யிறதுக்கு காசு இல்ல. அந்த பங்காளி வூட்டுக்குதான் போறான். அவர் வூட்டுல வெட்டிக் காஞ்சி கிடக்குற மரத்த ‘அண்ணே எனக்குக் கலப்பை செய்யிறதுக்கு அந்த மரத்துண்ட கொஞ்சம் தரமுடியுமா’ன்னு கேக்குறான். ஆனா அந்தப் பங்காளி ‘அந்த மரமெல்லாம் பீரோ கட்டில் செய்யிறதுக்காக வெட்டிப்போட்டுருக்கேன், அதெல்லாம் தர முடியாது’னு சொல்லி அனுப்பிடுறார். அப்புறம் ஒரு நாள் வயலுக்கு அண்டை வெட்டுற வேலக்கிப் போறான். அங்க ஒரு கருவ மரம் வயல் பக்கம் சாஞ்சாப்ல நிக்குது. அந்த மேகிளையை வெட்டிபுட்டா வயல்ல நிழலும் வுழாது. இவனுக்குக் கலப்பையும் தேறிக்கும்ன்னு கணக்கு பண்ணிகிட்டே வேலை செய்றான். அப்ப வயகாரரு கிட்ட ‘எனக்கு கூலிகூட குடுக்கவேணாம்ங்க, இந்த பெரிய மரக்கிளையை நான் வெட்டிகிட்டன்னா கலப்ப செய்ய ஆவும்’ன்னு சொல்றான். அந்தாளு ‘வெட்றதுக்கு ஆள் இல்லாமதான் அப்படியே கிடக்கு, நீ வெட்டி எடுத்துக்க, உனக்குக் கூலி குடுக்கறதக் குடுத்துர்றேன்’ அப்டின்னு சொல்லிடுறாரு. வெட்டி எடுத்துகிட்டு வந்து கலப்பை செஞ்சுர்றான். அப்புறம் ஒருநாள் அந்தப் பங்காளி இவன்ட்ட வந்து ‘தம்பி, தம்பி, உன் ஏர் மாட்ட ஓட்டிகிட்டு வாப்பா, என் நாத்தாங்கா ஏர் உழுவணும்’னு கேக்குறாரு. அதுக்கு இவன் ‘நீங்கதான் டிராக்டர்லாம் வச்சி உழுதுருப்பீங்களே’ங்கிறான். அந்தப் பங்காளி ‘இல்லப்பா சுத்தி எல்லா பக்கமும் நட்டுபுட்டான்ய்யா, டிராக்டர் போறதுக்கு வழியில்லய்யா, ஏர் மாடு இருந்தா தான் நாத்தாங்காலு உழுவமுடியும்’ அப்டின்னார்.

இப்ப புரியுதா நான் மூலம்னு ஒண்ணு இருக்குன்னு சொன்னனே, எல்லா நவீனங்களின் எல்லைகளும் மூலத்தை நோக்கிதான் நகரும். அதுக்கான தேவை எப்பவும் இருந்துகிட்டுதான் இருக்கும். உணவு உற்பத்திங்கறது முக்கியம். நவீனமா இருந்தாலும் பழைய முறையா இருந்தாலும் எல்லாக் காலத்திலும் உணவு உற்பத்திங்கறது அவசியம். ஆக விவசாயங்கறது ரொம்ப ரொம்ப முக்கியம். இதப் பதிவு செய்யவேண்டியதுதான் எல்லா இலக்கியத்தோட நோக்கமாக இருக்கணும். என் எழுத்து அந்த வேலையைத் தான் செய்யிது.

ஒரு எழுத்தாளனாக உங்களுக்கு சமூக மரியாதை உயர் வான அந்தஸ்து என்று ஏதும் கிடைத்திருக்கின்றனவா?

இல்லை. அப்டில்லாம் எதுவும் கிடையாது. அத எதிர்பார்க்கிறவனும் நான் அல்ல. நிலம் நீச்சுன்னு வச்சிருக்கறதால அந்த மரியாதைக்கெல்லாம் எனக்கு ஒண்ணும் பஞ்சமில்ல.

அப்படியென்றால் கலை, இலக்கியம், எழுத்து பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

எளிமையாக எழுதுவது, உண்மையை எழுதுவது, ரசனையோடு எழுதுவது அவ்வளவுதான். கலை, இலக்கி யத்தை விட வாழ்வாதாரம் மிக அவசியம். இன்னிக்கி அவனுக்கு சோறு வேணும், அதுக்கப்புறம்தான் கலை. அவன் வயிறு நிறைஞ்சாதான் அவனுக்குக் கலை. கரிச்சான்குஞ்சா இருந்தாலும் எம்விவியா இருந்தாலும் வயித்தப் பாக்காம அந்தக் கலையை நேசிக்கமுடியாது. வயிறு நெறஞ்சாதான் கலையைப் பத்தின சிந்தனையே வரும். வயித்துப் பிரச்சினைதான் மத்த விஷயங்களைப் பத்தி முடிவெடுக்க வைக்குதுங்கறதுதான் உண்மை. அது தீந்தா மட்டுந்தான் அவங்களால மத்த இடங்களுக்குப் போகமுடியுங்கறது முக்கியமான கருத்து.

எனக்கு நான் உழைக்காம இருந்தாகூட சாவுற வரைக்கும் கவலை யில்ல. கோடிக்கணக்கான சொத்து எங்கப்பா சம்பாரிச்சி வச்சிருக்காரு. ஆனா மத்தவங்களுக்கெல்லாம் அப்படி இருக்கா இல்லையான்னு எனக்கு சொல்லத் தெரியல. நான் ஒருமுறை கோவிச்சிகிட்டுப் போய் நாலுநாள் பட்டினியா கிடக்கப்ப பசியோட சாபத்தத் தெரிஞ்சி கிட்டன். பட்டினிங்கறது எவ்வளவு கொடுமங்கறத அப்ப நான் உணர்றேன். என்னுடைய வீம்பாலயோ என்னோட பெற்றோர்கள் என்னுடைய கருத்தை அனுமதிக்காததாலேயோ நான் அப்டி ஒரு நிலை மைக்குப் போகும்போது அந்தக் கஷ்டம் எனக்குத் தெரியவருது. அதாவது லௌகீக வாழ்க்கைக்குல்லாம் அப்புறம்தான் கலை. லௌகீக வாழ்க்கைங்கறது என்ன? நம்முடைய புடம்போட்ட அத்தனை வாழ்க்கையையும் மீறி அதற்கப்புறம் ஏற்படுவதுதான் லௌகீக வாழ்க்கை. அங்கதான் நாம மனுசனா நிக்கிறோம். அங்கதான் நம்முடைய தேவை என்னன்னு தெரியுது. எதிர்பார்ப்பு என்னன்னு தெரியுது.

சரி, நிறைவாக ஒரு கேள்வி. இந்த 68 வயசுல ஒரு விவசாயியாகவும் எழுத்தாளனாகவும் ஒருசேரப் பயணிக்கும் நீங்கள் இன்றைய விவசாயம் பற்றி உங்கள் பார்வையில் விரிவாகச் சொல்லுங்கள்...

அதாவது இப்ப ஆழ்குழாய் விவசாயம் பண்ண ஆரம்பிச்சாச்சு. ஆத்துத்தண்ணி இன்னும வராதுன்னு நிலமை வந்ததுக்கப்புறம் வசதி உள்ளவன் போரப் போடுறான். எந்தக்காலத்திலயும் நிலத்த விட்டு வக்கறதேயில்ல. முப்போவம் நடுறான். அது ரொம்ப தப்பு. ஒரு பருவத்துக்கும் அடுத்த பருவத்துக்கும் நிலத்துக்கு ஓய்வு கொடுக்கணும். ஆனா கரண்ட் இருக்கறப்பல்லாம் நைட் பகலா ஓடுது. இவன் கரண்ட்டுக்குப் பணமே கட்டத் தேவையில்ல. ஆனா பக்கத்து நிலத்துக்காரன்ட்ட ‘மணிக்கு அம்பது ருவா குடு’ன்னு கேக்கிறான். ஒரு ‘மா’வுக்கு ஆயிரம் ருவா வரைக்கிம் வாங்குறான்.  பெரிய தேய்மானம்னு ஒண்ணும் வரப்போறதில்லன்னாலும் பெருவிவசாயி சின்ன விவசாயிங்ககிட்ட கொள்ளையடிக்கிறான். அதயும் தன்னோட வருமானமா பெருக்கிக்கிறான். கும்பகோணம் காவிரிக்கரை ஓரமாக கிடைக்கிற தண்ணி, இளநீ மாறி இருக்கு. அவ்வளவு அற்புதமான தண்ணி. இங்க வெண்ணாறு, வெட்டாறு பாசனம். இந்தத் தண்ணி அப்படியிருக்காது, ஏன்னா நிலத்தடி நீரிலேயே கடல் தண்ணி கலந்துடுச்சி. இங்க முப்பதடி போர் போட்டு தண்ணி இறைச்சப்ப பயிர்ல்லாம் நல்லாருந்துச்சி. முந்நூறு அடிக்குப் போனதுக்கப்புறம் பயிர்ல்லாம் கருக ஆரம்பிச்சிடுச்சி. அதுக்கு சிங் சல்பேட் அடி, அந்த சல்பேட் அடி, இந்த சல்பேட் அடி, அப்பதான் தெளியும்ங்கறான். 

ஆத்துத்தண்ணி, மழைத்தண்ணி விவசாயம் மாறி இப்ப கிடையாது. மழை ஏன் பெய்யலன்னா நிலத்தடி நீர உறிஞ்ச உறிஞ்ச, காடுகளை அழிக்க அழிக்க மழை பெய்யல. தாழ்வுநிலை கடல்ல உருவானா கடல் கொந்தளிச்சா மட்டுந்தான் மழைங்கிற நிலமை உருவாயிடுச்சி. அதுவும் போதுமான அளவுக்கு மழை பெய்யறதில்ல. இதற்கெல்லாம் காரணம் இயற்கையை நசுக்கியதால் வந்த வினை, இயற்கையைக் கொலை செய்ததனால் வந்த வினை. இதயெல்லாம் சரி பண்றதுக்கு நிறைய வழியிருந்தாலும் அதுக்கு இந்த சமூகம் இடம் கொடுக்கறதில்ல. மக்கள் கையில் அதிகாரம் எதுவும் கிடையாது; அவங்க கூப்பாடு போடவும், போராட்டம் பண்ணவும்தான் முடியும். நீ திரும்பத் திரும்ப நவீனத்துக்குள்ள போன்னுதானே இந்த சமூகம் நிர்ப்பந்தம் பண்ணுது. அதுனால என்ன நடக்குது? அந்தக்காலத்துல ஆட்டு மாட்ட வச்சிகிட்டு பத்து மேனி (5 மூட்டை) அறுக்கும்போது அவன் இருக்குற நெல்ல பட்டறையைப் போட்டு வச்சான்.

இன்னிக்கு 10 மூட்டை அறுக்குறான். உரம் அது இதுன்னு போட்டு 5 மூட்டை அதிகமாதான் அறுக்கிறான். ஆனா ஒண்ணுகூட மிஞ்சல. அந்தளவுக்கு செலவுபண்ணிதான் இந்த 10 மூட்டையைக் கொண்டு வரமுடியுது. ஆனாலும் பெருசா ஒண்ணுமில்ல. இதுல புதுசா ஒரு களைக்கொல்லி மருந்து வந்துருக்கு. பயிரும் களையுமா வளந்திருக்கிற வயல்ல அத அடிச்சா களை மட்டும் அழிஞ்சிபோயி பயிர் மட்டும் மேல விளைஞ்சி வரும். அப்ப அந்தக் களைக்கொல்லியோட வீரியம் அந்தப் பயிர்லயும் பாதிக்கும்தானே.

இந்தக் களைக் கொல்லியை அடிக்கக்கூடாது, என் மக்கள் எனக்கு வேணும், என் மக்கள்தான் எனக்கு முக்கியம், என் மக்கள் பாதிக்கப்படக்கூடாதுன்னு அதுக்கு எதிரா ஊருக்குள்ள போராட்டம் பண்ணிகிட்டிருக்கேன். இந்த ஊர்ல போர் போடறதுக்கு ரொம்ப செலவாவுங்கறதால் அதிகமாக யாரும் செய்யறதில்ல. எங்கண்ணன் ரெண்டு லட்ச ருபாய்க்கு மேல செலவு செஞ்சி ஒரு போர் போட்டுக் கொடுத்திருக்கார். அத அப்படியே சாக்கு போட்டு மூடி வச்சிருக்கேன்.

நான் ஒருத்தன் மட்டும் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்துட்டா பக்கத்துல இருக்கிற பூரா நெலத்திலயும் ஈரப்பசையே இல்லாம போயிடும்னு சொல்லி இன்னிக்கிவரக்கிம் அத உபயோகப்படுத்தவே இல்ல(வீட்டுக்குப் பின்புற வயலில் தரையிலிருந்து ஒரு அடி மட்டத்திற்கு தெரிகிற குழாயில் சாக்குமூடிக் கட்டி வைத்திருப்பதை அழைத்துச் சென்று காட்டினார்.)

எழுதறதானாலும் விவசாயமானாலும் மனசாட்சி யோடதான் இப்பவரக்கிம் நடந்துகிட்டிருக்கேன்.  இப்பவரக்கிம் என் எழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன். இனிமயும் அபாரமா அந்த ஜீவன கொண்டு வரணும் அப்டிங்கறதத் தவித்து வேற

கனவோ எதிர்பார்ப்போ அப்டில்லாம் என்ட்ட எதுவும் கிடையாது.

இரண்டு மணி நேர சந்திப்பு முடிந்து புறப்படும் போது அவர் பாடிக்காட்டிய வயலைக் கொத்தும்போது பாடுகிற அந்தப் பாடலைக் காற்றில் சுமந்தபடியே ஊர் வந்து சேர்ந்தோம்.

‘ஏ... ஏலேலோ ஏலஏலோ... எறக்கி வெட்டு...

ஏலஏலோ ஏலேலோ... ஆழ வெட்டு...’

Pin It