murasu paraiyar 420தமிழக அரசின் தொல்லியல் துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தி.சுப்பிரமணியன் எழுதியிருக்கும் நூல் ‘முரசுப் பறையர்’ (2018). முரசுப் பறையரின் வரலாறு, சமூகம், பண்பாடு முதலியனவற்றைப் பதிவு செய்திருக்கும் இந்நூலை அடையாளம் வெளியிட்டிருக்கிறது. பறையர் இனத்தில் ஒரு பிரிவாகக் கருதப்படும் ‘முரசுப் பறையர்’ பற்றிய முழுமையான இனவரைவியல் என்னும் வகையில் இந்நூல் குறிப்பிடத்தக்கது.

1990க்குப் பிறகு தமிழில் இனவரைவியல் நூல்கள் நிறைய வந்துள்ளன. இனவரைவியலைப் புனைவு தளத்திலிருந்து பேசிய சில நாவல்களும் கூட வெளிவந்துள்ளன என்றாலும் பறையர் இனம் குறித்த முழுமையான இனவரைவியல் இல்லை எனும் குறையைத் தீர்த்து வைத்துள்ளது இந்நூல். பறையர் இனம் குறித்து தெளிவான இனவரைவியல் இல்லாமைக்குக் காரணம் எழுத ஆட்களோ, சூழலோ இல்லை என்பதல்ல. மாறாக, அந்த இனம் மிகப்பெரிய தேசிய இனமாக தமிழகம் முழுமைக்கும் தமிழகம் தாண்டியும் பரந்து வளர்ந்து இருக்கிறது என்பதுதான். அதுமட்டுமின்றி வரையறுத்துச் சொல்ல முடியாத அளவுக்கு உட்பிரிவுகளை கொண்ட இனமாகவும் இருக்கிறது என்பதும் மற்றொரு காரணம். இருந்தாலும் சுப்பிரமணியன் முரசு பறையரை மட்டும் எல்லையாகக் கொண்டு எழுதியிருக்கும் இந்நூல் சில பதிவுகளுக்காகக் கவனம் பெறுகிறது.

முரசு நாடு பழங்காலத்தில் கொண்டிருந்த சமூக அமைப்பு, பறையர் இனம் பற்றி வழங்கி வரும் வழக்காறுகள், முரசுப் பறையருக்கான குலதெய்வம், திருமணம், பண்டிகை எனும் நிலைகளில் நின்று சுப்ரமணியன் இனவரைவியலைச் செய்திருக்கிறார். எதனோடும் ஒட்டும் உறவும் இல்லாத பேரினமான பறையர் இனத்தின் உட்பிரிவுகளில் ஒன்றான முரசுப் பறையர் இனம் வாழும் நிலப்பகுதியை முதலில் வரையறை செய்திருக்கும் இந்நூல், கால்நடை வளர்ப்பையே அடிப்படையாக கொண்டுள்ள முரசு பறையரின் வாழ்விடம் தகடூர் பகுதி என்று நிறுவி இருக்கிறது. 1500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளைக் கொண்டு முரசு பறையரின் வாழ்விடத்தை வரையறை செய்திருப்பதும், முரசு அவர்களின் குலக்குறியாக இருந்தது என்று நிறுவியிருப்பதும் முரசுப் பறையர் தனிப்பண்பாட்டை உடையவர்களாகவும் வரையறுக்கப்பட்ட வாழ்விடத்தைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்திருக்கிறது.

பறையர், வண்ணார், அருந்ததியர் முதலியவர்களுக்கும் மேல் சாதியினர் என்று கூறிக்கொள்கிறவர்களுக்கும் இடையே ஏற்படுகின்ற சிக்கலைத் தீர்ப்பதற்கு ‘செட்டி’ என்ற அமைப்பு இருந்ததாகக் குறிப்பிடும் சுப்பிரமணியன், முரசுப் பறையர் கன்னடத்தின் ஒரு பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும் அவர்களுக்குள் ‘செட்டி’ என்கிற பட்டம் பெரும்பாலும் லிங்காயத்து பிரிவினருக்கே வழங்கப்பட்டது என்றும் குறிப்பிடுகிறார்.

ஊர் கூடும் முறை, தீர்ப்பு வழங்கும் முறை, தண்டனை முறை, குலத்தூய்மையைக் கடைப்பிடிப்பதற்காக இருந்த பல கட்டுப்பாடுகள் முதலியவற்றை விரிவாக விளக்கும் இந்நூல், முரசு பறையருக்கு உள்ளேயே 160 இனங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டு, 40க்கும் மேற்பட்ட இனங்களைச் சான்றாகக் காட்டியிருக்கிறது. திருமணம், இறப்பு சடங்குகள் பற்றிய செய்திகள் விரிவாக இடம்பெற்றுள்ளன. சடங்குகள் அனைத்தும் உயர்சாதியினர் என குறிப்பிடப்படுகிறவர்களின் சடங்குகளோடு ஒத்துள்ளபோதிலும் முரசுப் பறையரைத் தாழ்ந்த சாதியினர் என குறிப்பிடுவதற்கு ஆதிக்க மனநிலையும் பார்ப்பன சூழ்ச்சியுமே காரணம் என்கிறார் நூலாசிரியர்.

 சமநிலங்களை அதிகமுடைய வளமான நிலங்களில் வளர்ந்த வைதிகம், முரசுப் பறையர் அதிகமாக வாழ்ந்த பகுதிகளில் வளராமைக்குக் காரணம், அவர்களின் வாழ்விடம் மேடுகளையும் சமநிலையற்ற நிலப்பகுதியையும் கொண்டதாக இருந்ததே எனும் காரணம் வலுவான சான்றுகளோடு நிறுவப்பட்டிருக்கலாம். அதைப் போலவே 15, 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களின் காலத்தில் திருவிழாக்கள் அதிகமாக உருவாக்கப்பட்டன என்று சொல்லுகின்ற கருத்திருக்கும் சான்றுகளைக் காட்டி இருக்கலாம். முரசுப் பறையர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சமூகம் இன்று சற்று முன்னேறியிருப்பதற்கு ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியும் ஆங்கிலேயர்களுமே காரணம் எனச் சொல்லுகிற செய்தி ஏற்புடையதாக அமைந்திருக்கிறது. அந்தவகையில் தமிழக இனவரைவியலில் மிகவும் குறிக்கத் தகுந்த நூல் ‘முரசுப் பறையர்’ எனத் துணிந்து சொல்லலாம். அதைவிட பறையர் இனத்தின் ஒவ்வொரு உட்பிரிவுக்கான இனவரைவியலை எழுதுவதற்கானத் தேவையை உணர்த்தி இருப்பதுதான் இந்த நூலில் ஆகப் பெரும் வெற்றி என்பது சாலப் பொருந்தும்.

- ஞா.குருசாமி

Pin It