தொண்ணூறுகளின் நடுப்பகுதியிலிருந்து எழுதிவரும் பெண்ணியா, இதுவரை ‘என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்புவை’ மற்றும் ‘இது நதியின் நாள்’ ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்டிருக்கிறார்.

‘இது நதியின் நாள்’ கவிதைத் தொகுப்பு 2008ஆம் ஆண்டு, மார்கழி மாதம் வெளிவந்திருக்கிறது. இத்தொகுப்பில் காணப்படும் அதிகமான கவிதைகள் 2007- 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எழுதப்பட்டுள்ளன. இலங்கையைப் பொறுத்தவரை இந்தக்காலப்பகுதி யுத்தத்தின் கோரப்பிடிக்குள் சிக்குண்டிருந்தமையால் இங்கு வாழ்ந்த எல்லா இன மக்களும் ஏதோ ஒரு வகையில் அதன் பாதிப்புக்குட்பட்டேயிருந்தனர். ஆதலால் இக்காலப்பகுதியில் எழுந்த அனேகமான படைப்புக்களில் அதைப்பற்றிய பதிவுகள் உள்ளதை அவதானிக்க முடிகிறது. இதற்கு மாறாகப் பெண்ணியாவின் கவிதைகள் இதினின்றும் விடுபட்டுத் தனிமனித நெகிழ்வுகள், உடைவுகள், வலிகள், இயலாமை பற்றியே தன்னை அதிகமும் வெளிப்படுத்துகின்றன. தவிரவும் பெரும்பாலான கவிதைகள் பெண்மொழி பேசுவையாகத் தம்மை இனங்காட்டுகின்றன.

‘கயல்விழி விரிந்த தோள்’ எனும் கவிதையில் ‘படுக்கை விரிப்பைச் சரி செய்வதையும் புதிய சமையலைக் கண்டுபிடிப்பதையும் விட இந்த உலகம் விரிவதேயில்லை’ என்று மிகவும் எளிமையான புழங்கும் வார்த்தைகளால் தன்னைச் சுற்றியுள்ள சமுகத்தின் மீது உள்ள வெறுப்பையும் சினத்தையும் வெளிப்படுத்தி நிற்கின்றார். ‘நிகழ்தல்’, ‘அரசியாகும் ஓர் கழுகு’, ‘பூக்கள்’, எனத்தொடரும் இவருடைய ஒரு சில கவிதைகளை வாசித்துணர்கையில் பெண்களின் நெருக்கடியான பொழுதுகளைப் பேசுவதோடு ஆண் உறவுகள் மீதான கேள்விகளோடும் அவையுள்ளன

‘இரவினில் நீ

இரைந்து கத்துகிறாய்

பகல்களையும்

விட்டுவிடாமல்

உன்

அவதூறு கொண்டு

அலங்கரிக்கத்தொடங்குகிறாய்...’

என்று கவிதையின் ஆரம்பத்திலேயே பேச்சு மொழிச்சாயல் பூசப்பட்டு அது தன்னை நெகிழ்த்திக் கொள்வதால் கவிதை பலமின்றிப் போய்விடுகிறது. இறுதியில்

‘இதற்கெல்லாம் பதிலாய்

அவள் தன்னை

ஆழ்ந்த மௌனத்தில்

வெளிப்படுத்திக்கொண்டேயிருக்கிறாள்’

என கவிதையின் முடிவில் பெண்ணியா தனக்கான அவதானிப்பை வெற்றிகரமாகத் தக்கவைத்துக்கொள்கிறார். இது போன்றே ‘காதல், நீலமான இரவு’ எனும் கவிதையிலும் பெண்ணியாவின் ஆளுமை சுயம் பேசுதல் எனும் வகை பாகத்தினூடாக வெளிப்படுகிறது.

‘ஆண்மை வழியும் இரவில்

இராப்பிச்சைக்காரனின்

கெஞ்சலும் தோற்றமும்

மிகைப்பட

கையேந்துகிறாய் ஒரு இரவுக்காக...’

என்று தன்னுடைய பிறிதொரு கவிதையில் அந்தரங்கங்களையும் கூட விட்டுவைக்காமல் பேசியிருக்கிறார். அனார், பகிமாஜஹான், சலனி போன்ற ஏனைய கவிஞர்களோடு ஒப்பிட்டுப்பார்க்கின்றபோது பெண்ணியாவின் கவிதைகள் பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான குரலாக வெளிப்படுகிறது எனலாம்.

‘இரவுநேரத் தொ ழிலாளி தன் பங்கிற்கு இரவினில் எழுகிறான் மரங்களை வெட்டுகிறான் அவர்களுக்கான உணவினையும் சமைக்கிறான்...’ இவ்வாறு தொடர்ந்து செல்லும் வரி வார்த்தைகள் இறுதியில் ‘தனக்கான ஒரு நிமிடம் தானும் ஒதுக்கமுடியாத தொழிலாளி எதற்காய் தொழில் புரிகின்றான்...?’ எனத் தன்னை எதிர்ப்பால் நிலையில் உருவகித்து எதுவுமற்றுப் போகின்ற வாழ்க்கையினை உணரவைக்கிறார். பெண்ணியாவிற்கு இந்தக் கவிதை ஓர் ஆறுதல் நிலையைத் தரலாம், உலகில் எத்தனையோ தாய்மார்கள் இரவு நேரத்தொழிலாளிகளாகவே வாழ்ந்து வாழ்வை நிறைவும் செய்திருக்கிறார்கள் என்பது உண்மையே.

‘என் குழந்தை ஓவியம்’ என்னும் பெண்ணியாவின் கவிதை அவருக்குக் கைவரப்பட்ட ஓர் கவிதையாக வெளிப்படுகிறது. உண்மையில் கவிதை, எழுதுவதற்கான ஓர்

படைப்புக்கலையல்ல: அது அனுபவங்களால் தன்னைக் கட்டிக்கொள்கிறது அல்லது செய்யப்படுகிறது என்றேதான் கூறவேண்டும். ஏனெனில் கவிதையுணர்வு எல்லோருக்கும் வாய்த்துவிடும் ஒன்றல்ல. அது பல தடவைகள் கவிஞர்களையே ஏமாற்றியும் விடுகிறது. (மேற்படி கவிதையில் குழந்தை பற்றிய செயலுணர்வுகளை நம்மில் தொற்றவைத்தாலும்) ‘தனித்த இடைவெளியில் அவன் வரைந்த சுவர் ஓவியங்களின் உருவங்கள் இறங்கி வந்து அவனை ஒத்த பாவனைகள் செய்து தங்கள் தங்களின் இடங்களில் உறைகின்றன என் வீடு முழுக்க ஓரு குழந்தையால் நிரப்பப்பட்டிருக்கிறது.’

எனும் இந்த வரிகளில் கவிதையில் ‘மௌனம்’ என்று சொல்லப்படுகின்ற உச்ச நிலை வெளிப்படுகின்றது. இது போன்ற பெண்ணியாவின் அனேகமான கவிதைகளில் குறிப்பிட்ட வரிகள் கவிதையின் நுண்ணுணர்வை வெளிப்படுத்துகின்றன.

பெண்ணியாவைப்பற்றிச் சலனி குறிப்பிடும்போது ‘இந்தச் சமூகம் பெண்ணுக்கென வழங்கியிருக்கும் வாழ்வை நன்கறிவேன். இதற்குப் பெண்ணியாவும் நானும் எனது நண்பிகளும் விதிவிலக்கானவர்கள் அல்ல. எனவே இந்த வாழ்வு, சமூகப்போக்குமீது பெண்ணியா ஆற்றும் எதிர்வினை என்னுடையதும் தான்’ எனக்குறிப்பிடுகிறார்.

ஒரு சமூகத்தின் மீது எதிர்வினையாற்றுதல் என்பது அதனுடைய பல பாகங்களையும் பல பரிமாணத்தன்மையில் நோக்குதலையே கொண்டிருத்தல் வேண்டும். தவிர எதிர் வினையாற்றலால் நாம் சாதித்துக் கொள்பவை யதார்த்தத்தில் பெரும் வெற்றிடமாகவே இருந்தும் விடுகின்றது. இது கூர்ந்தும் நோக்கப்படவும் வேண்டியது. ஆண் ஒடுக்குறவுக்கெதிராக அவ்வது ஆண் வெறுப்புணர்வைப் பேசும் பெண்மொழிகள் பெரும் துக்கத்துக்குரியதாகவே இருந்து விடுகின்றது. ஏனெனில் குறித்த கவிஞர்கள் படைப்புணர்வுகள் இதற்குப்பின் வாழ்வை எதிர் கொள்ளல் என்பது பெரும் போராட்டங்களுடே அமைந்தும் விடுகின்றது. பெண்ணியா தனது எல்லாக் கவிதைகளுக்கும் அப்பால் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அதற்கு அப்பாலும் அவர; செல்ல வேண்டியபாதை இருந்து கொண்டேயிருக்கிறது.

- மருதம் கேதீஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It