"பா மீனாட்சி சுந்தரம், கவியன்பன் பாபு" என்ற இரட்டை கவிஞர்களால் எழுதப்பட்டு 25.02.2018-ல் சங்கமம் சார்பில் வெளியிடப்பட்ட "நேரிசையில் ஊரிசை" வெண்பா நூல்... என்னை சிதறடித்தது. பொதுவாக சிறகடிக்க பழக்கப்பட்டவன் நான். ஆனால் நேற்று சிதறடிக்கவும் பழக்கம் பெற்றேன். சிந்தனை முழுக்க நொய்யல் ஆறும்...வாலாங்குளமும் ஊறிக் கொண்டே இருந்தது. தமிழ் கொண்ட அடர்த்தியில்... தவம் கொண்ட கவிதைகள் சத்தியமாய் காலம் வெல்லும். இப்புத்தகத்தில் இருப்பவை... வரம் பெற்ற வார்த்தைகள். ஒருவர் கேள்வி கேட்பது போல அல்லது இப்டி இருக்கு... அடுத்து என்ன... என்பது போல... இருவரியில் வெண்பா வடிக்க......அடுத்தவர்... அதற்கு பதில் கூறுவது போலவோ...அல்லது.. அது அப்படியும் இருக்கோ.. இல்லை... இப்படி இருக்கலாம்.......இல்லல்ல அது இப்படி தான்... என்று கூறும் பதிலும் வெண்பாவிலேயே இருக்க.... நான்கு வரியில்.... கோவையின் வரலாறு காலத்தை சுருட்டிக் கொண்டு எட்டிப் பார்க்க துவங்குகிறது. ஒவ்வொரு வெண்பாவை படித்த பின்னும் அந்தக் கவிதையின் பின்புலத்தை தேடி ஓடுவதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாது. அது கவிதை கற்றுக் கொடுக்கும் காலத்தின் கண்கள். அதுதான் வாசகனின் தேடலுக்கு ஆரம்பம்.

கோவை என்றொரு நகரத்தின் வரலாற்று பின்னணி சற்று அசைத்து தான் பார்க்கிறது. அத்தனை ஆச்சரியங்களை இவர்கள் வெண்பா 102 முறை துடித்து துடித்து பிரசவிக்கிறது. படிக்கும் வாசகனுக்கு படித்து முடிக்கும் வரை நிமிடத்துக்கு102 முறை துடிக்கலாம் வெண்பா இதயம்.

எழுதிய இவர்களே இத்தனை விசாலமாய் மீண்டும் ஒரு முறை அவ்வெழுத்தின் வழியே அப்பொருள் கொண்ட மெய்வெளியில் மேய்த்திருப்பார்களா, அவ்வான நீள்பரப்பில் மீண்டும் மீண்டும் வட்டமிட்டிருப்பார்களா என்பது தெரியவில்லை. ஆனால் "கவிஞர் காமு" அவர்கள் மதிப்புரையில் "நேரிசையில் ஊரிசை" கோவை வரலாற்றை தூசு தட்டி மெய்ப்படுத்த அரங்கம் அதிர்ந்தது. அறிவு சுரங்கம் பெயர்ந்தது. நிலைப்படுத்த வந்த கவிதைகள்.......புதுக்கவிதையோ நவீன கவிதையோ இல்லை என்பதுதான் இங்கே சிறப்பு. இது முழுக்க முழுக்க வெண்பாவால்... தன் பா ஆன கவிதைகள். ஒரு ரசிகனின் ஆசுவாசத்தோடு.... ஒரு கலைஞனின் கவனத்தோடு.... ஒரு படைப்பாளியின் பங்களிப்போடு.... "கோவை காமு" விவரித்த கவிதைகளை மீண்டும் ஒருமுறை இரட்டை கவிஞர்கள் எழுதிப் பார்த்துக் கொண்டார்கள் என்பது வியப்பின் யாப்பு.

இந்த இரு பெரும் ஆளுமைகளை கண்ட பிறகு... பேச்சடைத்து நிற்பதைத் தவிர வேறொன்றும் செய்ய தோன்றவில்லை. கொஞ்ச நேரம் மூச்சடைத்து நின்றாலும் தகும்.

இதுவரை பன்னிமடையை பன்னிமடையாகத்தான் தெரியும். ஆனால் அது பல்நீர்மலை என்று இவர்கள் கவிதையின் வழியாகத்தான் தெரிந்தது. பொள்ளாச்சிக்கும் கோவைக்குமான சாலையே முன்பொரு காலத்தில் யானையிட்ட சாலை என்றும்...RS புரம் எப்படி வந்தது.... குதிரை கோர்ட் எங்கே இருக்கிறது.... சமணர் கோவில் கட்டிய கைகள் யாருடையவை.... என்று கோவையின் வரலாற்றை இத்தனை வலிமையாக இவர்கள் சேகரித்திருக்கும் செயல் வியப்பின் உச்சம். இனி நூறாண்டுகள் கழித்து கோவையின் வரலாற்றை ஒருவன் தேடுவானாயின் அப்போது அவன் கையில் இருக்க போவது இவர்களின் "நேரிசையில் ஊரிசை" புத்தகமே.

இவர்கள் நிறைகுடங்கள். ஒரு கணமும் தளும்பவில்லை. ஆனால் நாம் எத்தனையோ கால்குடங்களை எல்லாம் காண்கிறோம். முகமூடிகளையும்... முகமற்ற களையும் ஊருக்கு ஊர் நிறைந்திருக்க அந்த காலக்கொடுமை களை யோசித்து பார்க்கிறேன்.

எல்லா கால கட்டத்திலும் ஓர் அதி தீவிர வெளிச்சம் நமக்கே தெரியாமல் நம் அருகே இருக்கும். அந்த வெளிச்சத்தை அந்த காலம் விட்டு விடும். பிறகு அகழ்வாராய்ச்சி செய்து தேடி பிடித்து கொண்டாடும். அகழ்வாராய்ச்சிக்கு முன்னமே தேடிப்பிடித்து கொண்டாடப் பட வேண்டிய வெளிச்சம் இப்புத்தகம். அதை அழகாக நேர்த்தியாக விருத்தமான தன் தமிழ் மொழியாலும் திருத்தமான தன் உடல் மொழியாலும் நையாண்டி பேச்சாலும்......நகைச்சுவை வீச்சாலும்...... மேடையை இலகுவாக்கி பொருளை கனமாக்கினார் "கவிஞர் காமு".

முதல் வரியை முந்திக் கொண்டு இரண்டாம் வரி வந்து விழும் பாத்திரத்தில் இவர்கள் அட்சயமென நிறைந்து நிற்கிறார்கள். மீனாட்சி சுந்தரம் மென் ஜோதி என்றால்... கவியன்பன் தீ பந்தம். இவர் பட்டாம் பூச்சிகள் செய்கிறார். அவர் பேரண்டம் நெய்கிறார். படைப்பாளிக்கு அறிவுச்செருக்கு வேண்டும். அதுவே அவனை படைப்பாளியை வைத்திருக்கும் என்று கூறும் கவியன்பன் பாபு அவர்களை தமிழின் உயர்ந்த சிம்மாசனத்தில் வைத்து பார்க்கிறேன்...

சுண்ட காய்ச்சிய பால் இந்த வெண்பா. இன்னுமும் காய்ச்சுங்கள். அப்போது இன்னும் செறிவு பெரும் என் தமிழ் மொழி என்று மீனாட்சி சுந்தரம்மார் தட்டி பேசும் போது... எங்குமே தலை தட்டவில்லை. மாறாக வானம் எட்டுகிறது....

புதுக்கவிதை நவீன கவிதை எழுதுவோர்க்கெல்லாம் இவர்கள் வைக்கும் கோரிக்கை..... மரபை படி... பிறகு புதுமை செய் என்பதே.

வாழ்வின் மீதான கோபம் இவர்களின் பேச்சிலும்... மௌனத்திலும் காண முடிந்தது. வாழ்வின் மீதான நம்பிக்கையும்... பற்றும் இவர்களின் கவிதைகளிலும்... கனவுகளிலும் காண முடிந்தது.

இவர்கள் இவ்வெண்பாக்களை அலைபேசி வழியாகத்தான் பேசி பகிர்ந்து எழுதினார்கள் என்பது வியப்பின் உச்சம். வியத்தலுக்கும் இனி இவர்கள் மீது இருக்கும் பேரச்சம்.

மேடையிலேயே காமு அவர்கள் கொடுத்த ஈற்றடி "வேறு வழி உண்டோ விளிம்பு" என்பது... அவர் பேசி முடித்த போது வெண்பா தயாராகி இருந்தது.

கொங்குத்தேன் ஊற்றேடுத்த
காமுவின் சொற்பொழிவில்
அங்கம் நனைந்த அடியேன் நான் -
பொங்கிய சோறில்லை என்றாலும் சொர்க்கச்
சுவையுணர
வேறுவழி உண்டோ விளம்பு

- பா மீனாட்சி சுந்தரம்

ஈர நிலாத் தூறல் எதிரே புவியரசு
நூற்சுவை காமுற்றேன்
நண்பகலில்- ஏறு புகழ்
பாரமென்று தள்ளவில்லை
பாக்கெட்டில் வைத்துவிட்டேன்
வேறுவழி உண்டோ விளம்பு

- கவியன்பன் பாபு

இனிமெல்ல சாகுமென சொல்பவனை கொல்லப் பாரு
சொல் தமிழெப்போதும் வெல்லும்பாகு

- கவிஜி

இத்தனையும் தாண்டி முன்வரிசையில் முனிவரை போல அமர்ந்து பார்த்து ரசித்து சிரித்து பாராட்டிக் கொண்டிருந்தார்....எங்கள் கவி அரசு கவிஞர் புவியரசு.

நேரிசையில் ஊரிசை இனி ஓரிசையில் பேரிசை!!

Pin It