நூல் அறிமுகம்: உய் . . . உய் . . . ரசிகர் மன்றங்களின் நோக்கும் - போக்கும்

நூலிலிருந்து...

தான் நடித்த படங்களை ஒப்பீட்டளவில் பேசக்கூடிய ரசிகர்களையோ, தான் ஏற்ற கதாபாத்திரங்கள் பற்றி அலசக் கூடிய ரசிகர்களையோ கொண்ட அமைப்பை உருவாக்குவதில் நடிகர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. ஒரு சில ரசிகர்கள் தாமாகவே இப்படிப்பட்ட ரசனை மனப்பான்மையை வளர்த்துக் கொண்டாலும் அவர்களுக்கு ரசிகர் மன்றங்களில் பெரிய முக்கியத்துவம் கிடைத்துவிடுவதில்லை.

ரசிகர் மன்றங்கள் சார்பாக மாதம் ஒரு முறையோ, வாரம் ஒரு முறையோ தான் நடித்த படங்களைத் திரையிடச் செய்து அது குறித்து ரசிகர்கள் விவாதிப்பதற்கான சூழலை உருவாக்க இன்றைய இளம் நடிகர்கள் முன்வருவார்களேயானால் தமிழ்த் திரையுலகின் போக்கிலேயே குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை உருவாக்க முடியும். தற்போதுள்ள இளம் நடிகர்கள் பெரும்பாலும் படத்திற்கு படம் மாறுபட்ட பாத்திரங்களை ஏற்று நடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். போட்டி அதிகமாக இருப்பதால், இப்படிச் செய்தால் தான் திரைத்துறையில் நிலைக்க முடியும் என்கிற நிலைமை. இந்தச் சூழலில், தங்கள் ரசிகர்களையும் இது குறித்து ஆலோசிக்கச் செய்வது, நிச்சயமாக பாலாபிஷேகத்தை விட அதிக பலன் தரும். நடிகர்கள் அதற்குத் தயாராக வருவார்களா என்பதுதான் முக்கியம்.

(நிச்சயமாக இந்த புத்தகத்தை நடிகர்களோ அவர்களது ரசிகர் மன்றத்தினரோ படிக்கப் போவதில்லை. படிப்பில் ஆர்வமும் திரைத்துறையில் பழக்கமும் உள்ள யாரேனும் மெனக்கெட்டு இந்த கருத்தை கொண்டு போய்ச் சேர்த்தால்தான் உண்டு.)

கட்சிக்கனவை விதைத்து வைப்பதன் மூலமே ரசிகர்களைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என நினைக்கும் நடிகர்கள் பாலாபிஷேகத்தைத் தான் விரும்புவார்களே தவிர, விவாத அரங்கங்களை உருவாக்கி நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். நடிகர்கள் புதிது புதிதாகத் தொடங்கும் கட்சிகளும் அவற்றிற்கு ஊடகங்களில் கிடைக்கும் விளம்பரமும், பழைய கட்சிகள் மீது இன்றைய தலைமுறைக்கு இருக்கும் விரக்தியும் சேர்ந்து இளம் நடிகர்களுக்கு முதல்வர் ஆசையை வளர்த்துக் கொண்டிருக்கிறது.

ஏறத்தாழ எல்லா நடிகர்களுமே ‘நாளைய தமிழக’மாகவும், ‘வருங்கால முதல்வர்’களாகவும்தான் சுவரொட்டிகளில் சித்தரிக்கப்படுகின்றனர். புதிய கட்சி தொடங்கினால், தங்கள் ‘தலைவர்’ முதல்வராகிவிடுவார் என்றும் தங்களுக்கும் முக்கிய பதவிகள் கிடைக்கும் என்றும் ரசிகர்கள் நம்புகின்றனர். ஒரு எம்.ஜி.ஆர். முதல்வரானதால் எல்லா நடிகர்களும் எம்.ஜி.ஆராக நினைப்பதுதான் இதற்குக் காரணம்.

நூல்: உய் . . . உய் . . . ரசிகர் மன்றங்களின் நோக்கும் - போக்கும்

ஆசிரியர் : கோவி.லெனின்

வெளியீடு : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்,

105, ஜானி ஜான்கான் ரோடு,

சென்னை-14, தொலைபேசி : 43993000

விலை :       ரூ.80 

 

Pin It