Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

திருடர்களை பற்றியும், திருட்டை பற்றியும் பயமில்லாதவர்கள் இருக்க முடியுமா? திருடர்கள் பற்றி தினசரிகளில் வரும் செய்திகளை 'ஒரு செய்தியாக' சுவாரசியம் வேண்டி வாசித்து கடந்துப் போகும் நம்மைப் போன்ற பலரின் மனசித்திரத்தில் திருடர்கள் என்னவாக இருப்பார்கள்? அயோக்கியர்கள், அபாயகரமானவர்கள், இழிவானவர்கள், கறுப்பர்கள்..... நானும் அவ்வாறாகவே நினைத்திருந்தேன், பதினேழு வயதில் திருச்சூரில் இரண்டு திருடர்களிடம் கையிலிருந்த பணத்தை இழக்கும் வரை. அவர்கள் என்னோடு தமிழில் உரையாடினார்கள்; ஒருவரை ஒருவர் பரஸ்பரம் தெரியாதவர்கள் போல் காட்டிக்கொண்டார்கள்; தமிழ்நாட்டின் பல ஊர்களின் பெயர்களை நினைவில் வைத்திருந்தார்கள்; ஒருவர் பணக்காரராகவும், இன்னொருவர் ஏழையாகவும் நடித்தார்கள்; கொஞ்சம் மிரட்டினார்கள் பின் கெஞ்சினார்கள். ஆம், திருடர்களுக்கென்று தனித்த அடையாளம் எதுவும் இல்லை.

thirudan maniyampillaiஅவர்கள் நம்மை சுற்றியே இருக்கிறார்கள். அவர்களுக்கு குடும்பம் இருக்கிறது, கனவுகள் இருக்கிறது, எல்லா வித அசிங்கங்களில் இருந்தும் விடுபட வேண்டுமென்ற ஆசையும் இருக்கிறது. ஆனால், வாழ்க்கை என்பது அவரவர் கையில் மட்டும் இல்லையே (!). இப்படியாக சமூகமும், அரசும், அதிகாரவர்க்கமும்,விதியும் கசக்கி எறிந்த மனிதர் தான் திரு.மணியன் பிள்ளை. அவருடைய சுயசரிதை தான் 'மணியன் பிள்ளையுடே ஆத்மகதா', தமிழில் 'திருடன் மணியன்பிள்ளை'. மணியன்பிள்ளை தனது கதையை சொல்ல சொல்ல அதை தொகுத்து எழுத்தாக்கியவர் திரு. ஜி.ஆர். இந்துகோபன். நிஜமாக நடந்த கதையை நமது கண்ணுக்கு முன்பாக நடப்பது போல சுவாரசியமாக எழுத்தில் வடித்திருக்கிறார். இதனை தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் குளச்சல் மு.யூசுப். இருவரையும் எத்தனை பாராட்டினாலும் தகும்.

"இந்தப் புத்தகத்தை உங்களால் சுவாரசியமாக வாசிக்க முடியும். காரணம், நீங்கள் சட்டத்தின் கண்களில் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்" என்ற எதார்த்தத்தை பொட்டில் அறைந்தது போல சொல்கிறார் மணியன்பிள்ளை. உண்மை தான், சுமார் 590 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை வாசிக்க எனக்கு மூன்று நாட்களே தேவைப்பட்டது. பதினேழு வயதில் முதல் திருட்டு குற்றத்திற்காக சிறைக்கு சென்றதில் இருந்து, கர்னாடக அரசின் அதிகாரத்தின் மைய இருக்கைகளுக்குள் கொண்டு சென்ற மைசூர் வாழ்க்கை, தமிழ்நாட்டில் தேசாந்திரியாய் ஓடி ஒளிந்த நாட்கள், தன்னுடைய திருமணங்கள், தொடுப்புகள், ஜெயில் வாழ்க்கை என எதையும் மிச்சம் வைக்காமல் நம் முன் கொட்டித் தீர்த்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

திருட்டுக்களை அவர் நடத்திய விதத்தை இப்புத்தகத்தின் வழி அறிந்துக்கொள்ளும் போது ஒரு பெரும் சாகசக்காரனின் முகம் நம் கண்முன் வந்து நின்றாலும், அத்திருட்டுக்களின் நிமித்தம் போலீசாரிடம் தான் வாங்கிக்கட்டிய லத்தி அடிகளையும், அதன் நிமித்தமாக தன்னுள் உருவாகிய நோய்கள் குறித்தும் இங்கே அவர் குறிப்பிட மறக்கவில்லை. தன்னை துரத்தி துரத்தி காதலித்த மனைவியோடு நிம்மதியாக வாழ முடியாமல் போனதையும் , எந்த பாதுகாப்பும் அற்று சமூகத்தாலும் சொந்தங்களாலும் 'திருடன்' என்ற பட்டப்பெயருடன் துரத்தி விடப்பட்ட வாழ்க்கை வேறு யாருக்கும் வேண்டாம் என்ற வேண்டுகோளும், திருட்டுக்கதைகளை வாசிக்கும் உற்சாகத்தில் அவை ஒரு சமூக தீமையாக அமைந்துவிடக் கூடாது என்ற கரிசனமும் புத்தகம் முழுக்க பரவிக்கிடைக்கிறது.

தொழில் கற்றுக்கொள்வதற்காக குட்டப்பன் என்ற குறவரின் வாட்ச் ரிப்பேர் பெட்டியை சுமக்கிறார். 'குறவனின் பெட்டியை நாயர் பையன் சுமப்பதா?' என்ற உறவினர்களின் வசைக்கு 'குறவனோ துலுக்கனோ தோட்டியோ, எவனா இருந்தாலும் எனக்கு ஒண்ணு தான். என்னால் பட்டினி கிடந்தது சாவ முடியாது' என்று பதிலடி கொடுக்கிறார். ஆனாலும், இந்த 'பெருமித' சாதி சமூகம் அக் குறவரை அடித்து துரத்துகிறது, மணியனின் பட்டினி வயிற்றுக்கு பதில் சொல்லாமலே.

திருடிய பணத்தை ஏழைகளுக்கு கொடுத்து மகிழ்ந்தது, அநாதரவான வேசிகள் மேல் அவர் காட்டிய அக்கறை, சிறை சீர்திருத்தத்திற்க்காக அவர் எழுதிய கடிதங்கள் அதன் நிமித்தம் கிடைத்த உதைகள், மதங்கள் குறித்தான அவருடைய பார்வை, 'களவுக்கு உட்படாமலிருக்க ஒரு வீட்டை அமைப்பது எப்படி?' என அவர் நமக்கு கூறும் அறிவுரை(!) என மணியன்பிள்ளையின் இன்னொரு முகத்தை இப்புத்தகம் வழியாக காணலாம். 'திருடன் மணியன்பிள்ளை' ஒரு திருடனின், நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவரின், முன்னாள் சிறைவாசியின் புத்தகம் என்ற அளவில் என்னால் கடந்துப்போக இயலவில்லை. ஒரு மனிதன் எதைச் செய்யக்கூடாது, தவறிழைத்தால் சொந்த வாழ்க்கையிலேயே எதை எல்லாம் இழக்க வேண்டி வரும் என்பதை அனுபவபூர்வமாக வாழ்ந்து உணர்ந்த ஒரு முதியவரின் ஒப்புதல் வாக்குமூலமாகவே பார்க்கிறேன்.

'மனம் குரங்குத்தனம் கொண்டது. அதற்குப் பெருந்தன்மை கிடையாது. தோல்வியை அவ்வளவு சுலபமாக அது ஏற்பதில்லை' என தன்னைப் பற்றியே விமர்சிக்கும் மணியன்பிள்ளையோடு ஏனோ பேச தோன்றியது. அதிகம் சிரமப்படாமல் அவரது அலைப்பேசி எண் கிடைத்தது. நான் 'ஹலோ' என்றதும் 'நமஸ்காரம்' என்று லேசான ஒடுங்கிய குரலில் பதில் வந்தது. என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும் 'சார்' எனக் கூப்பிட்டு பேசத் துவங்கினார். 'என்னை அப்படி கூப்பிடாதீர்கள், உங்கள் வயதில் பாதி கூட இல்லை' என்றேன்.'நீங்கள் பார்க்கும் உத்தியோகத்திற்காவது மரியாதை கொடுக்க வேண்டாமா சார்' என எனது வாயை மூடினார். இப்புத்தகத்தின் மலையாள பிரதியின் மூலம் கொஞ்சம் காசு கிடைத்ததையும், தமிழில் இப்புத்தகம் வழியாக பெரிய வருமானம் வராததின் வருத்தம் அவர் உள்ளுக்குள் இருந்ததை என்னால் உணர்ந்துக்கொள்ள முடிந்தது. நிறைய பேசினோம். தமிழில் இதை சினிமாவாக எடுக்க முயற்சிகள் நடந்து வருவது குறித்த தகவலை மன நிறைவாக பகிர்ந்து கொண்டார்.

பைபிளில், மனம் தவறிப் போன மைந்தன் குறித்தான கதை ஒன்று உண்டு. வீட்டைப் புறக்கணித்து ஓடிப்போன இளையமகனை அவனது மனமாற்றத்திற்குப் பிறகு அவன் தந்தை மனமகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார். நம்முடைய உறவினரோ, நண்பரோ அல்லாத மணியன்பிள்ளையை நாம் நேரடியாக அரவணைத்துக் கொள்வதில் நமக்கு சங்கடங்கள் இருக்கலாம். ஆனால், 'நான் கடந்து வந்த பாதையைப் பற்றி சொன்னால் நீங்கள் ஒருவேளை என்னைக் கல்லெறிந்து கொல்வீர்கள்' எனச் சொல்லி, இப்புத்தகத்தின் வழி தன்னுடைய கொடிய வாழ்க்கை அனுபவத்தை இறக்கி வைத்திருக்கும் மணியன்பிள்ளையின் இப்போதைய திருந்திய வாழ்க்கைக்கு நம்மாலும் உதவ முடியும், இப்புத்தகத்தை வாங்குவதின் மூலம்.

மணியன்பிள்ளையை தற்போதும் தொடரும் உடல் மற்றும் மன சங்கடங்களில் இருந்து வெளியே வரும் ஆற்றலை இப்புத்தகத்தின் வெற்றி தரட்டும்.

- ம.ஸ்டாலின் பெலிக்ஸ்

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

+1 #1 Francilin 2015-02-18 15:38
Nice article stalin
Report to administrator

Add comment


Security code
Refresh