நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தனது கவிதைப் பங்களிப்புக்களை இலக்கிய உலகில் செய்துவரும் கலாபூஷணம் பாலமுனை பாறூக் அவர்கள் எழுதிய தோட்டுப்பாய் மூத்தம்மா என்ற குறுங்காவியத் தொகுதி பர்ஹா வெளியீட்டகத்தின் வெளியீடாக 87 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது. இது நூலாசிரியரின் நான்காவது நூல் வெளியீடாகும். இந்த நூலாசிரியர் ஏற்கனவே பதம் (கவிதை 1987), சந்தனப் பொய்கை (கவிதை 2009), கொந்தளிப்பு (குறுங்காவியம் 2010) ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் மரபு சார்ந்த கவிதைகளில் தன்னை அடையாளப்படுத்திக் காட்டிக் கொண்டாலும், நவீன கவிதைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர்.

balamunai_farook_303தோட்டுப்பாய் மூத்தம்மா என்ற குறுங்காவியத் தொகுதிக்கு 2012 கொடகே தேசிய சாகித்திய விருது விழாவில் சிறந்த கவிதை நூலுக்கான பணப்பரிசு, சான்றிதழ் ஆகியவையும், இலங்கை இலக்கியப் பேரவையின் (யாழ்ப்பாணம்) சிறந்த கவிதை நூலுக்கான சான்றிதழும், 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த கவிதை நூலுக்கான அரச சாகித்திய விருது, பணப்பரிசு போன்றவை கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் மக்களின் பண்பாட்டுக் கோலங்களைப் பதிவு செய்திருக்கும் முற்போக்கான படைப்பு என்ற தலைப்பிட்டு பேராசிரியர் சே. யோகராசா அவர்கள் இந்நூலுக்கு சிறந்ததொரு முன்னுரையை வழங்கியுள்ளார். அவர் மிகவும் சுருக்கமாக இந்நக் காவியத்தைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

நீண்டகாலமாக நிலவி வரும் சமூகப் பிரச்சினை என்ற விதத்தில் பொருத்தமற்ற திருமண முயற்சியினால் முஸ்லிம் குடும்பப் பெண்ணான செய்னம்புவுக்கு ஏற்படும் மனப் போராட்டங்களும், விவாகரத்தினை மேற்கொள்வதும் பின்னர் தந்தையின் முயற்சியினால் ஏர்வை வண்டி இசுமாயிலை மறுமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியோடு வாழ்வதும், ஊருக்கு உதவுவதும், கணவர் மறைந்த பின்னர் அநாதரவான நிலையில் வாழ்ந்து இறுதியில் மரணிப்பதுமே இக்காவியத்தின் உள்ளடக்கமாகிறது என்று குறிப்பிடுகிறார்.

பன்னூலாசிரியர் ஏ.பீ.எம். இத்ரீஸ் அவர்கள் தனதுரையில் இந்நூல் பற்றி பின்வருமாறு சிலாகித்து குறிப்பிட்டுள்ளார். சுமார் நூறு வருடங்களுக்கு முந்திய அதற்கு முன் பல நூறு வருடங்களாக உருவாகி வந்த நமது சோனகப் பண்பாட்டின் வாழ்வியலை, அதில் பெண் பெற்றிருந்த வகிபாகத்தை, அவள் அடைந்த வெற்றி தோல்விகளை இக் குறுங்காவியம் பதிவு செய்கிறது. செவ்வியல் பிரதித் தன்மையைப் பெறுவதற்கான அந்தஸ்தை இக் குறுங்காவியம் பெறுகின்றது.

நெல் காய வைக்கப் பயன்படுத்தப்படும் நீண்ட பாயே இங்கு தோட்டுப்பாய் என்று குறிப்பிடப்படுகின்றது. தோட்டுப்பாய் மூத்தம்மா என்ற இக்காவியமானது, தோட்டுப்பாய் விரித்த மூத்தம்மா, அகலக் கண் திறந்த அடக்கத்தலம், குடிசைக்கு வந்த குதூகலம், சிற்றூரில் பூத்த செய்னம்பூ, பெருமைகள் நிறைந்த பெரியம்பி, அதபாய் வளர்ந்த அழகு, பருவம் பூத்த பளபளப்பு, சுடுதண்ணி என்ற மறு நாமம், மஞ்சக் குருவி வடிவு, மருக் கொழுந்து வாசம், ஏர்வை வண்டி இசுமாயில், கலியாணம் பேசும் களிப்பு, மாற்றியெடுத்த மருதோண்டி, காவின் பதிந்த கலியாணம், மனம் பொருந்தாத மணம், ஒட்ட முடியாத உடைவு, மறுமணம் பூசிய மருக்கொழுந்து, பற்றூரில் இருந்து பயணிப்பு ஆகிய பதினெட்டுத் தலைப்புக்களில் விரிந்து செல்கிறது.

யாரிந்த மூத்தம்மா? என்ற கேள்விக்கு கவிஞர் பின்வருமாறு பதில் சொல்லிக்கொண்டே போகின்றார். கைக் குத்தரிசியிலே இரவு உணவைத் தயாரிக்க எண்ணி அதை உண்ணாமல் போய்ச் சேர்ந்த மூத்தம்மா.. கன நாளாய் ஒரு நேர உணவினையே உண்டு கழித்திருந்த மூத்தம்மா.. மாப்பிள்ளையோடு மாட்டு வண்டியிலே வந்திங்கு சேர்ந்தவளாம்.. ஊரார் ஒரு துண்டு நிலம் உபயம் என அளிக்க வேர் பிடுங்கிக் காடழித்து வசிக்கவென இல்லிடத்தை ஏற்படுத்திக் கொண்டவளாம்.. மாப்பிள்ளையோடு மனமொன்றிச் சேர்ந்திருந்து பார்த்திருந்தோர் கண்படவே பாசத்தைப் பிழிந்தவளாம்.. கிளியும் மொழியும் எனப் பழகி அவள் அன்பினையே பொழிந்து அவரோடு பொருந்தியே வாழ்ந்தவளாம்.. இப்படி பாலமுனை பாறூக் அவர்கள் மிகவும் அழகாக இந்த தோட்டுப்பாய் மூத்தம்மா பற்றி மிகவும் ரசனையாக சொல்லிக் கொண்டு போகிறார்.

காத்தான்குடியைப் பின்புலமாகக் கொண்டு அப்துல் காதர் புலவர் அவர்களினால் உருவாக்கப்பட்ட செய்னம்பு நாச்சியார் மாண்மியம் என்னும் மிகச் சிறந்த காவியம் முஸ்லிம் மக்களது திருமணச் சடங்கை மாத்திரமே எடுத்துரைத்தது. கலாபூஷணம் பாறூக் அவர்கள் அதைவிட ஒரு படி மேல் சென்று திருமணச் சடங்கை மட்டுமல்லாமல், மையத்துச் சடங்கு முறைமை, பிறப்புச் சடங்கு முறைமை, பெரிய பிள்ளைச் சடங்கு முறைமை முதலானவை பற்றியும் இக்காவியத்தில் சுவைபடக் கூறியுள்ளார். இதனால் இக்காவியம் விஷேடமான இடத்தைப் பிடித்துக் கொள்கிறது.

செய்னம்புவை முதல்நிலைப் பாத்திரமாகக் கொண்ட கதையம்சத்தோடு தென்கிழக்கு முஸ்லிம் மக்களின் பேச்சு மொழி, பழக்க வழக்கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், என்பவற்றைப் பதிவு செய்யும் படைப்பாகவே இக்குறுங் காவியம் அமைந்திருக்கின்றது. அதாவது இங்கு செய்னம்பு என்ற பெண் பாத்திரத்துக்கே மிக முக்கியமான இடம் வழங்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் சமூகப்பான்மையோடு எழுதியிருக்கும் இந்தக் காவிய நூல் மிகவும் அற்புதமானது. அனைவரும் வாசிக்க வேண்டியது. ஜனாப் பாலமுனை பாறூக் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - தோட்டுப்பாய் மூத்தம்மா (குறுங்காவியம்)
நூலாசிரியர் - பாலமுனை பாறூக்
வெளியீடு - பர்ஹாத் வெளியீட்டகம்
தொலைபேசி - 0718035305
விலை - 200 ரூபாய்

Pin It