கவிஞர் க. ஆனந்த் அவர்களுடைய "ஒவ்வொரு மழையிலும்' எனும் இக்கவிதை நூலைப் படிக்கும்பொழுது, ஒவ்வொரு கவிதையிலும் இத்துணை உயிர்ப்பா? துடிப்பா? என்றெண்ணி மனம் களிநடம் புரிகின்றது. கற்கண்டுக் கட்டியில் குறித்த இடமென்றிக் கட்டி முழுதும் இனிப்பதுபோல, இந்நூலில் இந்தக் கவிதைதான் சிறந்தது என்று தனித்துச் சொல்ல முடியாமல், அத்துணை கவிதைகளும் அமுதமாய் இனிக்கின்றன. கருத்துச் செறிவு, சிந்தனைத் தெளிவு, சொல்லும் முறையில் புதுமை, பாடுபொருளின் பாங்கு என, கவிதைக்குரிய அனைத்துச் சிறப்பும் அமைந்துள்ள அரிய தொகுப்பு ஆகும்.

"ஒவ்வொரு பொருளிலும், ஒவ்வொரு நிகழ்விலும் ஒளிந்து கொண்டிருக்கிறது கவிதை; அதைக் கண்டுபிடித்துத் தருபவன்தான் கவிஞன்' எனக் கவிஞனுக்கோர் இலக்கணம் வகுத்துள்ளார் ஆனந்த். அவர் சொல்லும் அந்த இலக்கணத்திற்கு முற்றிலும் பொருந்தியவராய் ஆனந்த் விளங்குகிறார் என்பதற்கு அவருடைய ஒவ்வொரு கவிதையும் சான்று பகர்கிறது. "ஏதோவோர் நிகழ்வில் ஏற்பட்ட உயிர் அதிர்வில் பிறந்தவையே கவிதைகள்' என்கிறார் ஆனந்த். இந்நூல் அமைந்துள்ள கவிதைகள் அனைத்தும் அவருடைய "உயிர் அதிர்வே' என உறுதியாகக் கூறலாம்.

"அறிந்ததனை அறிந்தவர்க்கும், சொல்லும்போது, அறிந்ததுதான் என்றாலும் சொல்லுவதில் எத்துணை அழகு, என்று அறிந்தாரையே மகிழ வைக்கும் அருங்கலையே கவிதை' என்பார் பேரறிஞர் அண்ணா. அந்த வகையில் பழங்காப்பியங்களில் நாமறிந்த செய்திகள் இன்றைய நிகழ்வுகளோடு இணைத்து ஆனந்த் பாடியிருப்பது, "என்ன அழகு' என்று சொல்லச் செய்கிறது. முன்பெல்லாம் கிராமங்களில் மாலை வேளையில் சிறுவர்கள் பம்பரம் விடுதல்,

பாண்டியாடுதல், குனிய வைத்துக் குதிரை தாண்டுதல் போன்ற விளையாட்டுகளால் தெருக்கள் உயிரோட்டம் உள்ளனவாய் கலகலப்பாக விளக்கி வந்தன. இன்றோ, கம்ப்யூட்டர், வீடியோ கேம், வீட்டுப்பாடம் எனப் பிள்ளைகள் வீடுகளுக்குள்ளேயே சுருண்டு கிடக்கின்றனர். ஆதலால் கிராமத் தெருக்கள் எந்நிலையில் உள்ளன?

ஆனந்த் கூறுகிறார், அவை

குழந்தைகளின்

பாதம்படாத அகலிகைகளாக

கிடக்கின்றனவாம்.

"அகலிகை' கவிதையை நுழைத்துக் கவிதையை அழகு செய்துள்ளார்.

வரதட்சினைக் கொடுமையை இன்று பாடாத கவிஞர்களே இல்லை; ஆயினும் ஆனந்த் இதுபற்றிப் பாடியுள்ளதில் ஒரு தனித்த சோகத்தைக் காணமுடிகிறது.

வரைந்த தூரிகைக்கு

வசதியில்லாததால்

வாங்கப்படாத

ஓவியம்

எனும் கவிதையில், வசதியில்லாத தூரிகை, வாங்கப்படாத ஓவியம் என்ற தொடர்கள் ஆளப்பட்டுள்ள தன்மையில் உயர்ந்த

கவித்துவத்தைக் காணமுடிகிறது.

இயங்கிக் கொண்டேயிருக்கும்

முதுமைக்கு கூட

இன்னொரு பெயர்

இளமை தான்

இன்றைய தமிழக முதல்வர் முத்தமிழறிஞர், கலைஞர் போன்ற பெருமக்களைக் காணும்போது இப்பாடல் துதிகளின் உண்மைத் தன்மையை நன்கு அறிகிறோம்.

காதல் கவிதைகளை நனி நாகரிகத்துடன் பாடுவதில் ஆனந்த் வல்லவராய் உள்ளார் என்பதை அவருடைய கவிதைகள் உணர்த்துகின்றன. காதலியின் வெட்கம், சிணுங்கல், கோபம், கேள்வி, எதிர்ப்பு, ஒப்புதல் எனும் அனைத்து உணர்ச்சிகளையும் "ம்'... என்னும் ஓரெழுத்து வார்த்தையிலேயே அடக்கிக் காட்டியிருக்கிறது ஒரு கவிதை.

"வலி பொறுத்து, வலி பொறுத்து வாழ்ந்து காட்டுவதே வலிமை', "பெறுதலினும் தருதல் சுகம்' என்பன போன்ற அரிய தொடர்கள் பலவற்றை ஆனந்த் கவிதைகளில் காணமுடிகிறது.

"அரசியல் ஒரு சாக்கடை; அது அயோக்கியர்களின் புகலிடம்' எனச் சொல்லி நல்லவர்கள் அரசியலிலிருந்து விலகிச் சென்றால் நல்ல அரசினை நாம் எவ்வாறு பெறமுடியும்? அரசியலில் உன்னிப்பாக, நேர்மையாக உழைத்தால் ஓராயிரம் நன்மைகளைச் செய்யமுடியும்.

மக்கள் நலனொன்றே சொத்தெனச் சேர்த்தால்

மண்ணில் நிலைக்கும் உண்பெயர்;

ஐந்தாண்டுகள் தாண்டி ஐந்தாம் தலைமுறைக்கும்

திட்டங்கள் தீட்டலாம் நீ

வாக்கை நீ காப்பாற்றினால்

வாக்குகள் உன்னைக் காப்பாற்றும்

என்பன போன்றவற்றை எடுத்துக்கூறி,

ஆதலினால் இளைஞனே,

அரசியல் செய்ய விரும்பு

என எதிர்மறை முறை தவிர்த்து, உடன்பாட்டு முறையில் செய்திகளைச் சொல்லும் ஆனந்த் அவர்களைப் பெரிதும் பாராட்ட வேண்டும். "அறம் செய விரும்பு' எனும் ஔவை வாக்கினை "அரசியல் செய விரும்பு' என ஆக்கியிருக்கிறார் ஆனந்த். இவ்வாறு நூலிலுள்ள பாடல் ஒவ்வொன்றையும் சுவைத்து விளக்கலாம்; சுருக்கம் கருதி சில மட்டுமே எடுத்துக் காட்டப்பட்டன.

ஆனந்த் அவர்களின் இந்த முதல் கவிதைத் தொகுப்பே அவர் ஒரு சிறந்த கவிஞர் என்பதை உறுதிப்படுத்துகிறது. வருங்காலத்தில், தமிழகத்தின் தலைசிறந்த கவிஞர்களுன் ஆனந்த் ஒருவர் என நாடு பாராட்டும் என்னும் நம்பிக்கையை இந்நூல் நமக்குத் தருகிறது.

வாழ்க கவிஞர் ஆனந்த்!

வளர்க அவர் கவித்திறன்!

- சு.செல்லப்பன்

 

'ஒவ்வொரு மழையிலும்...'

க.ஆனந்த்,

அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்,

41, கல்யாண சுந்தரம் தெரு,

பெரம்பூர்,

சென்னை - 11

விலை ரூ.60

 

Pin It