என்னோட பேரு ஜெபராஜ், ஜெபராஜ் திருச்சபை. ஒரு தனியார் வங்கியில் கடன் பிரிவு அதிகாரியாக பணிபுரிகிறேன். கிளை அலுவகம் புதுக்கோட்டையிலிருந்தாலும், வாரந்தோறும் குறிப்பிட்ட நாளில் வாராக் கடன்களை வசூல் செய்ய வேண்டி சம்பந்தப்பட்ட நபர்களை நேரில் சந்திக்கச் செல்வேன்.

கடனின் நிலையைப் பொறுத்து சில சமயம் இரண்டு மூன்று நாட்கள் கூட தொடர்ந்து செல்ல வேண்டியிருக்கும். இருந்தாலும் அப்பயணங்கள் சில மணி நேரமோ, அரை நாளோ எனக்கு அவை பணி அழுத்தங்களிலிருந்தும், நகர மூச்சுமுட்டல்களிருந்தும் என்னைச் சற்று விடுவித்துக் கொள்ளவும் உதவும் கூட.

ஆகவே, கடன் பெற்றவரின் நிலைமை அங்கே எப்படி இருப்பினும், ஸ்பாட்டை அடையும் வரை நான் ஏதோ சுற்றுலா செல்லும் பயணியைப் போலத்தான் மனதளவில் திளைத்துக் கொண்டிருப்பேன். ஆனால் அதே உற்சாகம் கஸ்டமரை சந்திக்கும்போதும், அங்கிருந்து திரும்பும்போதும் இருக்குமா என்றால் பெரும்பாலும் சந்தேகம்தான்.

சரி, மணி பதினொன்று ஆகிவிட்டது! இப்போது வேட்டையராஜா வசூலுக்கு கிளம்புகிறார்! கிளம்புகிறார்!

டவுனிலிருந்து கிராமங்களுக்குச் செல்வதே ஒரு அனாயாச சந்தோசம்தான். எங்கோ நெடுநேரம் வெயிலில் அலைந்து காய்ந்த பறவையொன்று, அடர்ந்த காட்டிலுள்ள தனது கூட்டை நோக்கி விரைந்து பறப்பது போலிருக்கும். ஆங்காங்கே தென்படும் ரோட்டோரக் கடைகளில் டீயோ, இளநீரோ, சர்பத்தோ, இல்லை சாத்துக்குடி ஜூஸையோ, எதையோ ஒன்றைக் குடித்துக் கொண்டு புத்துணர்வை புதுப்பித்துக் கொள்வேன்.

ஆனால் செல்லும் டெம்ப்ளேட் எல்லாம் ஒரே மாதிரியா இருந்தாலும், அனுபவங்கள் ஒன்றாக இருப்பதில்லை. மனிதர்கள் நாம் எல்லோரும் ஒரே மாதிரியாகவா இருக்கிறோம்? சில நேரங்களில் அயற்சியில் மட்டுமல்ல சில அச்சங்களிருந்தும் விடுபட கூட மேற்சொன்ன கடைகளில் ஒதுங்குவதுண்டு.

அப்படியென்ன அச்சம் என்கிறீர்களா.. போகும் வழியில் யாரேனும் கைகாட்டி வண்டியை நிறுத்தக் கூடும், அங்கே இறக்கி விடுங்க, இங்கே இறக்கி விடுங்க என்று உதவிகள் கேட்க கூடும். நிறுத்தி ஏற்றிக் கொள்வேன், பிறகுதான் என் அடிவயிறு தனது வேலையை காட்டத் தொடங்கும்.

ஏறியவர் ஏதும் முரட்டு ஆளாக இருந்தால் எங்கே இவர் நம்மை அடித்துப் போட்டுவிட்டு, உள்ளதையெல்லாம் பிடுங்கிக் கொண்டு ஓடிவிட்டால் என்ன செய்வது? என்ற லேசான உதறல்கள் ஆரம்பிக்கும்.

அது போன்ற நபர்கள் ஏறிக்கொள்ளும்போது, என்ன செய்கிறார் ஏது செய்கிறார் என்று அவ்வப்போது திரும்பிப் பார்க்க மனம் உந்தும்! எந்த நேரத்திலும் கழுத்திலோ, இடுப்பிலோ கத்தியை வைத்து மிரட்ட வருவது போல மனதிற்குள் பயமூட்டும் பிம்பங்கள் தோன்றத் தொடங்கும்.

சத்தம் போட்டால் கூட கேட்க ஆளிருக்காது. ஏனென்றால் போவது பெரும்பாலும் காட்டு வழி! இப்படி பல உள்ளூற சந்தேகங்களும் பயங்களும் மேலிட்டாலும் கூட, யாரும் கையசைத்து நிறுத்தினால், நிற்காமல் செல்லவும் மனசு வராது.

சரி, யாரும் திடகாத்திரமானவர்கள் ஏறினால்தானே இந்த பயங்களெல்லாம் என்றால், அதுவும் இல்லை. சிலரைப் பார்க்க பாவமாக இருக்கும், பஸ்ஸுக்கு காசில்லை, இடத்தைச் சொல்லி கொஞ்சம் அங்கே இறக்கி விட்டுறீங்களா? என்று ஒரு நாள் ஒருத்தன் கேட்க, சரி என்று கொண்டு சேர்த்தால், அவன் போன இடம் ஒயின்ஷாப்!

இங்கேயும் கூட இதுபோல ஆட்களைக் கண்டால் ஒரு வித பயம் வந்துவிடும், நல்லவேளை குடிச்சிட்டு ஏதும் ஏறித் தொலையலையேன்னு என்னை நானே தேற்றிக் கொள்வேன். அப்புறம் யாரும் குடிச்ச மாதிரி யாரும் நின்றுகொண்டு கை காட்டினாலும், கொஞ்ச தூரம் வரை மெதுவாகப் போவது போல் போய் அவனை நெருங்கியதும் ஆலாகப் பறந்து வந்துவிடுவேன்.

அப்படி தப்பித்துச் செல்லும் வேளைகளில், எந்த நேரமும் அவன் வீசும் கல் நமது பிடரியைப் பதம் பார்க்கலாம் என்ற ஒரு பதைபதைப்பு அங்கிருந்து சில மீட்டர்கள் பறந்து கடக்கும் வரை நெஞ்சுக்குள் அடித்துக் கொண்டேயிருக்கும்.

இதில் முதியவர்களும், பள்ளிக்குழந்தைகளும் இன்னொரு லிஸ்ட். செல்லும் வழியில் சட்டென அந்த அம்மாவுக்கோ, ஐயாவுக்கோ மயக்கம் வந்து கீழே ஏதும் விழுந்து விட்டால்? அனைவரையும் நான் பொறுப்பற்று வண்டி ஓட்டியதாக குறை சொல்வார்களோ? ஒருவேளை அடியேதும் பட்டுவிட்டால்?

 அவர்கள் வீடு அருகிலேயே இருந்து, அவர்களைத் தேடி வரும் மகன் முரடனாக இருந்துவிட்டால்? சட்டையைப் பிடித்துக் கொண்டு நஷ்டஈடு கோரினால்? யாரும் இல்லாமல் ஆஸ்பத்திரிக்கு நானே கொண்டு சென்று சேர்க்க நேர்ந்தால் என்று அவர்கள் இறங்கும் வரை ஒரு பதட்டம் மனதிற்குள் ஓடிக் கொண்டேயிருக்கும்.

இதில் பள்ளிக்குழந்தைகளை, மற்ற குழந்தைகளை ஏற்றினாலும் கிட்டத்தட்ட அதே நிலைமைதான். போகும் வழியில் விபத்து எதுவும் நடந்து, அதற்கு நாம் பொறுப்பேற்றுக் கொள்ள நேர்ந்தால் என்ன செய்வது? பெற்றோர்கள் சும்மா விடுவார்களா?

இப்போதுதான் கண்ட கண்ட வாட்சப் வீடியோக்கள் வேறு நாளுக்கொரு புரளியோடு சுற்றிச் சுற்றி வருகின்றனவே! குழந்தைகள் ஆங்காங்கே பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகிறார்கள் அவர்களை நாம்தான் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள வேண்டும், முன்பின் தெரியாத யாருடனாவது தங்களது குழந்தைகளைக் கண்டால் நன்றாக விசாரிக்க வேண்டும், சந்தேகப்படும்படி குழந்தைகள் புகார் ஏதும் சொல்ல நேர்ந்தால் சம்பந்தப்பட்ட ஆளை சும்மாவிடக் கூடாது, அடித்து உதைத்து போலீசில் ஒப்படைக்க வேண்டும், அவனை வீடியோ எடுத்து 'குழந்தைகளைக் குறி வைக்கும் காமக்கொடூரன்!' என்று தலைப்பிட்டு பலருக்கு அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்ட இடம் வரும் வரை கண்ட கண்ட அசரீரிகள் பல அத்துமீறி என்னுடைய காதுகளைக் கிழித்துக் கொண்டிருக்கும்!

இருந்தாலும் நிறுத்தாமல் சென்றுவிட முடிகிறதா? இதை வெறும் லிப்ட் என்று மட்டும் சொல்லிவிட முடியாது, பாட்டிகளில் பலர் இறங்கியவுடன், 'மகராசனா நல்லாருப்பா!' என்று நன்றி மல்க கைகூப்பும்போது எனக்கும் மனசு கரைந்து விடும். சட்டென கைகள் பர்ஸ்லிருந்து கிடைத்த தாள்களை எடுத்து நீட்டிவிட்ட சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. அப்புறம் அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் என்பதுபோல் இரு தரப்பு கண்களும் கலங்கி நின்ற தருணங்கள் கூட உண்டு.

குழந்தைகள் விசயத்தில் அப்படியல்ல, இறங்க வேண்டிய இடம் வந்தவுடன், 'தேங்க்ஸ்ண்ணே! தேங்க்ஸ் அங்கிள்!' என்று கூறிக்கொண்டே, அவர்கள் கைகளை அரை வட்டத்தில் அசைத்து அசைத்து ஆட்டியபடி ஓட்டமும் விளையாட்டுமாய் செல்வதைக் கண்டு ஒரு சித்தப்பாவாய், பெரியப்பாவாய், மாமனாய் நானும் உருகி ரசித்திருக்கிறேன்! அந்த குதூகலப் பூஞ்சிட்டுகளை காணக் காண மகள் மெர்சியுடைய ஞாபகங்கள் வந்து போகும். அவர்கள் பாதைகளில் மறையும் வரை சாலையிலிருந்தே மெய்சிலிர்த்துப் பார்த்ததுண்டு. அதன் பின் மனதில் பாரமேது? துக்கமேது? அட பயமேது!

 அப்படிதான் இன்று கூட புதுக்கோட்டையிலிருந்து ஆலங்குடி பக்கமிருக்கும் கிராமங்களுக்குச் சென்று கொண்டிருந்தேன். இருபுறமும் ஒரே காடு. காலை வெயிலுக்கும் இதமான குளிர்க்காற்றிற்கும் மிகவும் ரம்மியமாக உணர்ந்தேன்.

அந்த வழியில் ஒரு பெண் மட்டும் தனியாக ஒரு சிறிய வலைக்கூடையோடு பின்புறம் இரண்டு மேளங்களை கட்டிக்கொண்டவள் போல வேகமாக குலுங்கி குலுங்கி நடந்து கொண்டிருந்தாள். வண்டியின் சத்தத்தைக் கேட்டதும், தனது மேள வாத்தியங்களை மறைத்துக் கொண்டவளாகத் திரும்பி, கை நீட்டி நிறுத்தினாள். வயது முப்பதைத் தொட்டிருக்கும்.

ஏதோ ஒரு திரைப்படத்தில் அவளைப் போலவே ஒரு நடிகை ஒரு பாட்டுக்கு மட்டும் வந்து ஆடியிருக்கிறாள். கிட்டத்தட்ட அவளும் அதே உடை போன்ற ஒன்றில்தான் தளுக்கு மொழுக்கென இருந்தாள். ஆடைகளை மீறிய அவளது வாளிப்பு, கீற்றை மீறிய குலையாய் வெளியே திமிறிக் கொண்டிருந்தன.

"பஸ்ஸ உட்டுட்டேன்.. (ஊரோட பேரைச்சொல்லி) அந்த மில்லு பக்கம் எறக்கி வுட்றியளா..? சிப்ட்டு கொஞ்ச நேரத்துல ஸ்டார்ட் ஆயிரும்! கொஞ்சம் உட்ரூங்களேன்!' என்று கெஞ்ச, எப்போதும் போல மனசு கேட்கவில்லை, ஏற்றிக்கொண்டேன்.

முன் சொன்ன முரட்டு உருவங்கள், குடிமகன்கள், பெரியவர்கள், குழந்தைகள் போலில்லை. முன்பின் தெரியாத, இது போன்ற ஒரு பெண்ணோடு பயணிப்பது, அதுவும் அத்துவான காட்டுப் பகுதியில் இதுவே முதல் முறை!

 ஒரே அமைதி.. இதுபோன்ற அசாதாரண சூழலில் வண்டியின் வேகமும் இயல்பாகவே கூடிவிடும். எதிரிலோ பின்னாலோ ஒரு வண்டி வரத்தையும் கூட காண முடியவில்லை. தனியாகச் செல்கிறோம்! அப்போது பார்த்து ரோசாப்பூ ரவிக்காரி படத்தில் வரும் 'என்னுள்ளே எங்கோ ஏங்கும் கீதம்..'ங்கிற பாட்டு வேற புறச்சூழலுக்கு ஏற்ற மாதிரி மனசுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.

பொதுவாக அப்படி தோணும் வேளைகளில் சில நேரம் வாய்விட்டும் பாடி விடுவேன். நல்லவேளை அப்படியெல்லாம் எதுவும் நடந்துவிடவில்லை. ஒரு வேளை பாடினால் அந்த பாட்டு இவளுக்குப் புரியுமா? புரிந்தால் என்ன செய்வாள்? அவ்வப்போது அவளது லேசான உரசல்களும் என்னை என்னவோ செய்து கொண்டிருந்தன. எண்ணங்கள் அலைபாயத் தொடங்கின.

எதுவும் பேச்சு கொடுக்கலாமா என்றும் தோன்றியது. இப்போது இருக்கும் மனநிலையில் எது பேசினாலும் அது முனகல் போலத்தான் வெளிப்படும். சட்டென அதிலிருந்து மீண்டவனாக, "கர்த்தாவே! எனக்கு என்ன ஆகிவிட்டது? ஏன் இவ்வளவு மோசமாக சிந்திக்கிறேன்!" என என்னை நானே கடிந்து கொண்டேன்.

ஆனால் இப்போது எப்போதும்போல மற்ற மற்ற அச்சங்கள் தொற்றிக் கொள்ளத் துவங்கின. இருவரும் இப்படி போவதைப் பார்த்துவிட்டு, சந்தேகப்பட்டு அவளுடைய கணவனிடம் யாரும் சொல்லிவிட்டால்? அவன் கொலைகாரனாக, பெரும் கோபக்காரனாக இருந்து, அரிவாளோடு எதிரில் வந்து நின்றுவிட்டால்? ஒரே வீச்சில் அவளையும் என்னையும் கொன்றுவிட்டால்? ஐயோ கர்த்தாவே.! நினைக்கவே குலை நடுங்குகிறதே!

 மனசு திக் திக்கென்று தாறுமாறாக அடித்துக்கொண்டபடி, நொடி முள் போல் வாகனச் சத்தத்தையும் மீறி நெஞ்சுக்கூட்டில் தும் தும்மென ஒலிக்கத் தொடங்க, அப்போதுதான், "அண்ணே, இங்கேயே நிறுத்துங்க! இதிலிருந்து நானே நடந்து போய்க்கிறேன். மில்லு இங்கிட்டுதான் இருக்கு!" என்று சற்று தாழ்வாரத்திலிருந்த ஒரு பெரிய கட்டிடத்தைக் காட்டினாள். உயிர் போய் மீண்டது போல் எனக்கும் அப்பாடா என்பது போல் அதிர்ச்சி கலந்த தெளிச்சி!

 ச்சேய்..! கொஞ்ச நேரத்தில் எவ்வளவு மட்டமான சிந்தனைகள்..! இது போன்ற தேவையில்லாத எண்ண ஓட்டங்களிருந்து எப்போதுதான் மீளப் போகிறேனோ என்று வழக்கம்போல என்னை மனதிற்குள் திட்டிக்கொண்டேன். ”ரொம்ப நன்றிங்கண்ணே..!” என்று கைகூப்பியபடி, குழந்தையுள்ளம் கொண்ட வெள்ளந்தியாக அவள் சிரித்துக் கொண்டே சென்றபோதுதான் எவ்வளவு மரியாதைக்குரியவளாய் தெரிந்தாள்!

அவளைப் போய் யார் யாருடனோ அல்லவா ஒப்பிட்டுக் கொண்டும், யோசித்துக் கொண்டும் வந்தேன்! கடைசியில் அண்ணன் என்று சொல்லி மனதைக் கலங்கடிக்க வைத்து விட்டாளே... என்னுடைய கசடான மனதை நினைத்து, மிகவும் வருந்தத் தொடங்கினேன்.

எதையும் இப்படி அத்துமீறி நினைக்கும் இந்த மனதை எப்படி கட்டுக்குள் வைப்பது என்றுதான் தெரியவில்லை! கொஞ்சம் நேரம் இந்த சிந்தனைகளிருந்து வெளிவர வேண்டும்! சற்று தூரத்தில் தென்பட்ட ஐஸ் மோர் மற்றும் கூழ் வகைகள் விற்கும் கடையருகே வண்டியை நிறுத்தினேன்.

என்னைக் கண்டதும் அங்கே நின்று கொண்டிருந்த அழகான பெண், “ஆலங்குடி வரை போகணும்... லிஃப்ட் கிடைக்குமா சார்?" என்றாள்.

- இத்ரீஸ் யாக்கூப்

Pin It