தலைவலியோ.. மண்டைக்கனமோ.. ஏதோ தலையில் ஏற்பட்ட நமநமச்சலை பொருட்படுத்தாமல் காக்கா குளியல் கூடத் தோற்றுப் போகும் பெருமாளின் குளியல் தோரணையைப் பார்த்து..

அம்மா வாரேன் … என்ற ஒற்றைச் சொல்லை உதிர்த்து விட்டு..

புத்தகப்பையை எடுத்துக் கொண்டு விரசாய் கிளம்பினான்..

பேருந்து நிலையம் கடந்து .. தெற்கு குப்பை மேடு கடந்து கிட்டாங்குழி கடந்து… பிள்ளை இலத்தி மரம் கடந்து.. வயக்காடு கடந்து மொட்டைக்கிணறு கடந்து தென்னந் தோப்பு தாண்டி இரட்டைக் கால்வாய் என…

ஓட்டமும் நடையுமாக அவன் பள்ளி இருக்கின்ற ஊரை கடந்து பள்ளி வந்து சேர்ந்தான் ஒருவேளையாக..

பள்ளிக்கூடம் வாயிலில் கால் வைக்கும் போது மணியடித்தாய் விட்டது..

வெகுநாட்களுக்குப் பிறகு பெருமாள் வகுப்பைக் கவனிக்க ஆரம்பித்தான்..

குறிப்பு வேறு ஆங்காங்கே சிதறிய சோற்றுப் பருக்கை போல அனைத்து பாடங்களுக்கும் ஒரே நோட் மட்டுமே என்பதை அவனது வறுமை காட்டியது..

கவனித்தான்.. கவனித்தான்.. பாடம் கடந்து ஆசிரியர் கடந்து மேசை, நண்பர்கள் கடந்து பெருமாளின் சிந்தனை சிட்டுக்குருவி போல சிறகு விரித்துப் பறந்தன..

அன்றைய நாள் பொழுது கழிந்தது கூடத் தெரியவில்லை..

நான்கு மணி பெல்லடித்ததும்.. கனக்காத பையை எடுத்துக் கொண்டு கனமான பசியுடன் பள்ளியை விட்டு கிளம்பினான் என்று கூடச் சொல்ல முடியாது ஓடினான்…

ஒருவழியாய் அனைத்து இயற்கைகளையும் தாண்டி வீடு வந்து சேர்ந்தான்..

வந்ததும் மாட்டுக் கொட்டகையில் சாணியள்ளும் வேலை இவனுக்காககத் காத்திருந்தது…

அனைத்துத் தலைமயிரையும் இழந்த வயசான மொட்டை வெளக்கமாறும் அழகியல் தன்மையிழந்த கூடையையும் எடுத்துக் கொண்டு தொழுவத்திற்குள் நுழைந்தான்..

பெருமாளின் வருகையை எதிர்பார்த்தது போல மாடு நக்கலாய் செருமியது .. வாடி வா என்ற தோரணையிலும்…

இவ்வளவு நேரம் எங்கடி போயிருந்த உனக்காகவே சாணியை போட்டுத் தள்ளியிருக்கின்றேன்.. என்பது போல மாட்டின் பார்வை உணர்ந்து கொண்டான் பெருமாள்..

கடமை கண்ணியம் கட்டுப்பாட்டைக் கசடறக் கற்றிருந்த பெருமாளுக்கு சாணிகளை அள்ளி தொழுவத்தை தூய்மைப் படுத்தும் கலை ஒன்றும் பெரிதாய் தெரியவில்லை…

அப்பாடா முடிந்தது எனக் குறுக்கை நிமிர்த்திய போது..

சுர்..சுர்..சுர்ர்ர்ர்h.. எனக் கோமாதா கோமியத்தைக் கொட்டியது..

கோவம் பொத்துக் கொண்டு வந்தது.. பெருமாளுக்கு..

சினத்தை அடக்கும் கலையை முழுமையாகக் கற்றிருந்தததால்.. கோவத்தால் கோமியத்தை ஒன்றும் செய்ய முடியாது என்றறிந்த தத்துவத்தை தெரிந்த சகலகலா வல்லவனான பெருமாள் தொழுவை விட்டு வெளியே வந்தான்..

அவனது அக்கா என்னலே.. இவ்வளவு நேரமான ஒத்த மாட்டு சாணியை அள்ளுன.. என மிகப் பெரிய கேள்விக்கு …

ரெண்டு மாடும் ஒரே நேரத்தில் கத்தினா என்ன செய்ய..

சொல்லி விட்டு நக்கலாய் நகர்ந்தான்..

ஏலே யார மாடுங்குற.. என்ற பதிலைக் கேளாமல்.. நைசாக நகர்ந்தான்..

பொழுது கருக்கலாய் இருட்டியது..

சிம்னி விளக்கு சிணுங்கி சிணுங்கி எரிய ஆரம்பித்தது…

யம்மா.. ! யம்மா ..! என்றான்..

என்னலே கருவாப் பயலே காட்டு ஓணான் கதவுல ஓண்ணுக்குப் போறதப் போல கத்துற…

இப்போ கண்டிப்பா படிக்கணுமா யம்மா .. நான் படிச்சு என்னமா ஆகணும்.. நாளைக்குப் படிக்கிறேன்.. யம்மா..

நீ இன்னைக்குப் படுச்சாத் தான் நாளைக்கு நம்ம ஊருக்கு கலெக்டர் ஆக முடியும் பேசாம படிடா..

நான் கொழம்பு வைக்கணும்..

சரி ஒனக்காக கலெக்டர் ஆகித் தொலைக்கிறேன் என முணுமுணுத்தான்..

பக்கத்து வீட்டு விருமாயி மதினி கேட்டாள்.. பெருமாளு..! பெருமாளு..!

நாளைக்கு நீ கலெக்டர் ஆயிட்டேனா.. மதினிக்கு என்ன செய்வ…

மெதுவாகவும் நக்கலாகவும் ஒன்னையை மொதல்ல என்கவுண்டர்ல போடணும் னு சொன்னான்…

மதினியை அது வாயா..! இல்ல கல்லொடைக்கிற மொசினானு தெரியல.. என பெருமாளு புலம்பிக் கொண்டே படிக்க ஆரம்பித்தான்…

சிறிது நேரம் கழித்து.. அம்மா அழைத்தாள்… பெருமாளு கடைக்குப் போய் புளி வாங்கி வாடா.. என்றாள்..

புலியை புளி வாங்க வைக்க முடியுமா … என்ற தோரணையில் மாலைக் கண் நோய் போல மாலைக் காதனாக நடித்தான் !

நடிப்பில் தேறியிருந்தான் என்பதை கடைக்கு போகும் வேலையை அவனது அக்கா ஏற்றுக் கொண்டு கடைக்குப் போன போது தான் தெரிந்து கொள்ள முடிந்தது..

கருவாப் பயலே படிக்கிறனு சொல்லி ஊரா ஏமாத்திட்டா திரியுர .. என பெருமாளை கரிச்சிக் கொட்டினாள்..

சாப்பிட நேரமாயிருந்ததால்…

சிட்டு குழம்பு வைப்பதில் ஒன்றும் மெனக்கட மாட்டாள்..

பத்தே நிமிடம் தான் எந்தக் குழம்பானாலும்…

தான் குழம்பு வைப்பதில் வித்தைக்காரி எனப் பெரும்பாலும் நினைத்துக் கொள்வதுண்டு..

குழம்பு சூப்பருடா .. என்ற சொல் மட்டுமே சுவையாக இருக்கும்… என்பதை பெருமாளு களிக் குண்டானையும் புளிக்குழம்பையும் பதம் பார்த்து விட்டு உறங்கப் போனதைப் பார்த்து தன்னைத் தான் சிலாகித்துக் கொண்டாள்..

ஏலேய் சீக்கிரம் தூங்கு .. காலையில் மாட்டுக்கு கொழுத்தாடைக்கு போகணும் என்ற சொல்லும் போது..

வக்கத்தவளின் மகன் அநேகமாக தூங்கியே விட்டாள்…

Pin It