பகல் நீண்ட கோடை நாளின் மாலை நேரம் பரவசமானது.

பார்க்க பார்க்க கோர்க்கும் மாலையை போன்றது. நிகழ்வது என்னவென்று உணர செய்யும் ஓர் ஒய்யாரம் மனதுக்குள் வீசுவது. சூடான காற்றின் ஊடாக இருக்கும் தூரத்து ஈரத்தின் சாரத்து மையம் எனலாம்.

ஊருக்கு சென்றிருக்கிறேன்.

சொந்தம் பந்தங்களோடு இப்படி வீட்டுத் திண்ணையில் அமர்ந்து தேநீர் குடிப்பதே ஒரு மே மாத விடுமுறை ஓவியத்தை வீட்டோடு தீட்டுவது தான்.

நானும் முரளியும் திண்ணையில் சுவரோரம் சரிந்து அமர்ந்திருக்கிறோம். துரையும் ஜெயந்தியும் திண்ணை ஒட்டி இருக்கும் தூணில் சாய்ந்து நிற்கிறார்கள். எங்களை விட சிறுவர்கள் என்பதால் நாங்கள் பேசுவது எல்லாமே வியப்பு தான். பார்த்துக் கொண்டே இருப்பார்கள். வசந்திக்கா.. வாசல் பெருக்க... சிந்தியாவும்... ஜீவாவும் தண்ணீர் பிடித்து வந்து வந்து ஊற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு பின்னால் அந்த புது பெண். வந்ததிலிருந்தே பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். பார்த்து முடியாத முகம் போல சின்ன முகத்தில் பெரிய கருவிழிகள். செம்பட்டை பூத்திருந்த கூந்தலில் செம்பருத்தி மலர்ந்திருந்தது.

மஞ்ச செடியில் சிவப்பு பூ என்ற கவிதையை எப்போதாவது எழுத வேண்டும். சுவற்று சித்திரமா இவள் செவத்த சித்திரமா. வெட்கம் கெட்ட வழிசல் வார்த்தைக்கு தடுமாறியது.

யார் இது என்றேன்.. கேட்டு விட்டதாக நம்பிய மனதில் என்னவோ திக் திக். வீதி புரண்ட வெயில் காற்றில் வேர்வை பூக்கள் உதிர்கின்றன.

சொந்தம் தான். ஓட்டுப் பட்டறைலருந்து வந்துருக்கா.

முரளி விஷமத்தோடு சொன்னான். எள் என்றால் எண்ணெய் வாங்கி வந்து விடும் குறுக்கு வழி கிறுக்கு அண்ணன். பெரியம்மா பையன்.

இது ஐந்தாவது நடை. குடம் இடுப்பில் இருக்க... அவள் என் தலையில் நடந்து கொண்டிருந்தாள். தாள லயம் டபக் டபக் என சிமிட்டும் கண்களில். பூனை முடி காதிறங்கும் கன்னத்தோரம். ஆரஞ்சு உதடுகள். மேல் உதடு விளிம்பில் நான் விட்டு வைக்க வேண்டிய மச்சம். ஆசை பொங்கியது. அசைந்து நடக்கையில் எகிறி குதிக்கும் கொத்து நீரில் முத்த சலசலப்பு.

ப்ரவுன் நிற சட்டையையும் க்ரே நிற பூ போட்ட பாவாடையையும் அவள் நடை நனைந்திருந்தது. இடையில் கொஞ்சம் கூடிய ஈரம். ஈரம் பட்ட இடத்தில் எல்லாம் வரம் பெற்ற நீர் வடும்பு. வெச்ச கண் வாங்க வில்லை நான். வாங்க வேண்டும் இன்னும் நான்கு ஜோடி கண் என்று தோன்றியது.

என்ன இவ இத்தனை அழகா இருக்கா. சின்ன மூக்குத்தி மின்ன... சினுக்கு நடை மெல்ல. அவள் எனைக் கடந்து போகையில் எல்லாம் அவள் வேர்வையும்... வைத்திருக்கும் செம்பருத்தியும்... அதில்லாமல் வேற என்னவோ வாசம். பிடிபடவில்லை. ஆனால் பிடித்திருந்தது.

சிற்பம் நடந்து சிற்பியை அசையாமல் செய்து விட்ட காட்சியை அவளே கலைத்தாள். கலாய்த்தாள்.

"பாத்தே முழுங்கிடாதீங்க..." என்று பற்கள் ஒட்டிய பொய் கோபத்தை வாய் பேசியது. இன்னும் கொஞ்சம் பாரேன் என்று முழங்கி பேசின கண்கள். கை அள்ளிய கொத்து நீரை பூங்கொத்து சிதறலாக என் மீது தெளித்தாள். எனைத் தொட்டதும் தான் தாமதம்...போதை பூக்கள் ஒவ்வொரு துளியிலும்.

"ஏது... ஊருக்கு போம்போது ஓட்டுப்பட்றக்காரிய கூட்டிட்டே போயிருவ போல...." முரளி சும்மாவே சலித்தெடுப்பான். பார்த்தும் விட்டான். பொதுவாக புன்னகைத்தேன். சுவர் தாண்டி போனவள் நின்று தலையை வெளியே இழுத்து திரும்பி இதழ் விரித்தாள். யுகம் வெடித்தது போல.

கோடை விடுமுறையை இப்படி உறவுகளோடு கொய்யும் போது தான் குதூகலம். அதுவும் இந்த முறை இந்த மினாலியும் கூட இருப்பது மனதுக்குள் தென்றல் அடிக்கிறது. அதென்ன பேரு மினாலி... ஆனாலும் சொல்ல சொல்ல இனிக்கிறது.

"தென்னை மரத்துல தென்றல் அடிக்குது...நந்தவனக் கிளியே..." எவனோ ரேடியோவை திருப்பறான்.

மூன்று நாளாக ஒரே பாவாடை ஒரே சட்டை தான். ஆனாலும் அது அவளுக்கு நன்றாக இருந்தது. ப்ரவுன் நிறத்தில் அவளை பிரியாமல் இருக்கும் சட்டை... கசங்கி நீர் பட்டு வேர்வை பட்டு... நிழல் பட்டு... காற்று பட்டு... என் அருகாமை பட்டு.. மொத்தத்தில் அவள் 40 கிலோ பட்டு. சித்தத்தில் நானோ இளையராஜா மெட்டு. நிமிர்ந்த நெஞ்சோடு அவள் என்னை பார்த்து கண்கள் விரிகையில்.... உடன் நடந்து உராய்ந்து சிறகு பொறுத்துகையில்... என்னமோ ஏதோ.

பகல் முழுக்க புள்ளா கோயில் வாசலில் விளையாட்டு.

குண்டு... பம்பரம்... ஒளிந்து விளையாடுவது கூட. ஒளிஞ்சு விளையாட்டு எங்களுக்கு வசதியாக இருந்தது. அவள் ஒளியும் இடத்தை கண்களாலே சொல்லி விட்டு தான் ஒளிவாள். நான் தேடி போவேன். மற்றவர்கள் ஒளிந்தபடியே இருக்க நாங்கள் அருகருகே கண்டு பிடித்துக் கொண்டே இருப்போம்.

என்ன விளையாட்டு இது.. எப்ப பாரு அவனே கண்டு பிடிக்கிறது. போங்க... நான் கண்டு பிடிக்கறேன் என்பான் முரளி. அப்போதும் நாங்கள் அருகருகே தான் ஒளிர்ந்து கொண்டிருப்போம்.

எப்போதும் ஏதாவது கசமுசா சொல்லி விட்டு நகர்ந்து விடுகிறவன்... போன வாரம் போகிற போக்கில் "பாத்து... புள்ள பெத்தராதீங்க" என்று சொன்னது எப்போது நினைத்தாலும்...அவளுக்கு வெட்க சிரிப்பு. எனக்கு திக்கும் சிரிப்பு.

மதிய நேரத்தில் ஐஸ்காரர் வருவார். ஆளாளுக்கு சேர்த்து வைத்திருக்கும் காசை எடுத்துக் கொண்டு ஓடுவோம்.

அன்றொரு நாளில் சட்டென்று ஜெயந்தி கண்களில் தீவிரம்.

"இல்ல.. நல்லா தெரியும். பால் ஐஸ் தான் நீங்க வாங்குனீங்க. மினாலி ஆரஞ்சு தான் தின்னா. இப்போ மாறி இருக்கு..." என்று புள்ளா கோயில் திடலில் சத்தியம் செய்தாள்.

இல்லவே இல்லை என்று மறு சத்தியம் செய்தோம். ஆனாலும் மினாலி கண்களில் கலக்கம். நான் வேற சாமி கும்புடுவதால்.. நாக்கை நீட்டி உள்ளிழுத்து... ப்ச்... ஒன்னும் ஆகாது என்றேன். எல்லார் பார்வையும் எங்கள் மீது விழ எங்கள் பார்வையும் எங்கள் மீதே விழுந்தது.

மாலை நேரம் ஆகி விட்டாலே... அத்தனை நேரம் இருக்கும் வெயிலின் உக்கிரம் மெல்ல மெல்ல வடியும். கோடை காற்று...பார்த்தீனிய செடிகளினூடாக புகுந்து நீந்தி வரும். வேர்த்து குத்திய உடலில் ஒத்தடம் தருவது போல.. உணர்வோம். நால்பாதையில் இருக்கும் அடி பம்பு பைப்புக்கு தண்ணி எடுக்க கூட்டமாக செல்வோம். பொட்டல் காட்டில் புரளும் மாலை வெயிலும்... மலரும் காற்றும்... எங்களையும் தழுவி செல்லும். மினாலியின் செம்பட்டை கூந்தல்... காற்றில் அல்லாடும். கவிதைக்கு சொல் தேடும். பார்க்க பார்க்கவே தூக்கி நாய்க்குட்டியை கொஞ்சுவது போல கொஞ்சலாம் போல தோன்றும். முயல் குட்டி போல முகிழ்ப்பாள்.

"என்ன... முறைக்கறீங்க...?" என்பாள். மலர்ந்த முகத்தில் மாலை சூடும் சூரிய துளிகள்.

லூசு முறைக்கலடி... எனை உரைக்கிறேன் என்று சொல்ல சொற்கள் இன்றி புன்னகைப்பேன்.

பெரிய கண்களை உருட்டி மிரட்டுவதாக செய்வாள். அப்படியே தூரத்தில் இருக்கும் ஒற்றை பனை உச்சியில் தொங்கும் கள் பானையை சுற்றும் வண்டை போல உணர்வேன்.

"ஏன் உரசிகிட்டே தான் நடப்பீங்களோ..." என்று இடையில் புகுந்து இடைவெளி ஆக்கிக் கொண்டே முன்னேறுவான் முரளி. எல்லோரும் சிரிப்பார்கள். எனக்கோ கோபம் கொப்பளிக்கும். அவளுக்கோ வெட்கம் பூத்து நிற்கும்.

கோடை மாலையா... நீண்ட வெளிச்சத்தை பதுக்கி பரவிக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் குறைய குறைய அதிலும் நிழலோடு சேர்ந்து சுடரும் ஜோதியாக அவள் முகம் ஜொலிப்பது எனக்கு மட்டும் தானா. கண்கள் சுழலும் இடமெல்லாம்... தூரத்து பனைகள்... பார்த்தீனிய செடிகள்... மேட்டாங்காட்டு செந்நிறம்... கள்ளி செடிகளின் அணிவகுப்பு. ஓவியத்தில் புகுந்து திரையை உலுக்கி கொண்டு போகும் குன்னத்தூர் டு பெருந்துறை டவுன் பஸ். ஒதுங்கி நிற்கையில் கூட என்னோடு தான் உரசி நின்றாள்...அந்த செம்படை சித்தாள்.

வசந்திக்கா... கண்டும் காணாமல் முன்னால் குடம் சுமந்து போய்க்கொண்டிருந்தது. நாங்கள் அடி பைப்பில் விளையாடி... அப்படியே தலையை நீரில் சொட்ட விட்டு... வீடு வருகையில்..மணி 7 தாண்டி இருக்கும். நாளுக்கு முளைத்த வால் சுருளும் நேரம். ஆனாலும்... மிச்ச வெளிச்சம் வீதியில் தேங்கி தவிக்கும். இருளுக்கு காத்திருக்கும் கண்களில்... சிறு வெளிச்சம் அழகூட்டுவது எங்களுக்கு மட்டுமா. இருள் வீதியில் இன்னும் கொஞ்ச நேரம் மிச்சமிருக்கும் வெளிச்சத்துக்கு மினாலியை அருஞ்சொற் பொருளாக்கினேன். ஆனாலும் இரு விழி கொண்ட இருளில் மூழ்கிடவே விருப்பம்.

வீதியில் நொண்டி விளையாட்டு. பாட்டு பாடி... விட்ட இடத்தில் இருந்து இன்னொரு பாட்டை தொடரும் விளையாட்டு.

"இந்த மாமனோடு மனசு... மல்லிகை பூ போல பொன்னானது" என்று நான் பாடினேன். முந்திக்கொண்டு "தூக்கணாங் குருவி கூட்டுல... மாமன் கைய வெச்சானே" என்று பதில் பாட்டு பாடினாள்.

"ஏய் மின்னாலி... இப்ப ஜீவா பாடணும்.... நீயே பாடிட்டுருக்க.....?" முறைத்தான்.. முறை மாமன் முரளி.

அட என்னை ஏன்டா பாக்குற என்று நான் பம்மிக்கொண்டேன்.

கதை சொல்வதில் வந்து முடியும் இரவு உணவின் பின்னான விளையாட்டு. வழக்கம் போல பேய் கதை தான். போட்டு தாக்கியது. மினாலியின் முக பாவனையில் பல பேய்களை கண்டேன். ஆனால் அத்தனையும் தேவதைகள்.

பெரியவர்கள் எல்லாரும் திண்ணையில் வரிசை கட்ட... நாங்கள் எல்லாரும் வீட்டுக்குள் வரிசை ஆனோம். திறந்திருக்கும் ஜன்னல் வழியே ஊர் காற்று உறுமிக் கொண்டு வர... ஆளாளுக்கு நெருக்கி அடித்து படுத்திருந்தோம். அப்படி படுத்துக்கொண்டு ஒரே போர்வையை அந்த பக்கமும் இந்த பக்கமும் இழுத்து... ஆஹா அவைகள் அற்புத ராத்திரிகள். நான் இந்த மூலை. அவள் அந்த மூலை. சதிகாரன் முரளி பிரித்திருந்தான். ஆனாலும் போர்வையை இழுத்து இழுத்து சங்கேத பாஷையில்.. சற்று நேரம் சங்கதிகள் பரி மாறிக்கொண்டோம்.

அடுத்த கொஞ்ச நேரத்தில் நானும் அவளும் தூங்கி விட்டோம். மற்ற எல்லாரும் தூங்குவது போல கவனமாக படுத்திருந்தார்கள். போர்வை அசையாத போதும் அவர்கள் பார்வை அசைந்தபடியே இருந்தன.

காலையில் கல்லாகுழியில் வைத்து முரளி சொல்லி சொல்லி தலையில் அடித்துக் கொண்டான். துணி துவைத்துக் கொண்டிருந்த வசந்திக்கா ஜெயந்தி சிந்தியா எல்லாருக்கும் சிரிப்பு. பனம் பழம் பொறுக்கி கொண்டே வந்த மினாலிக்கு வெட்கம். அந்த காலை நேரத்திலும் வேர்த்திருந்த அவளை பார்த்த எனக்கோ பெருமூச்ச்சு.

பகல் எல்லாம் ஊர் சுற்றி விளையாடி விட்டு மாலையெல்லாம் நீர் பிடித்து காற்றாடி விட்டு... இரவெல்லாம் கனவு கண்ட மே மாதம் தன் மூட்டை முடிச்சை கட்ட இன்னும் ஐந்து நாட்கள் இருக்கையில்... அய்யனார் கோயில் விஷேசம். திரை கட்டி போட்ட "பட்டணத்தில் பூதம்" படத்தை எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்க... அப்போது தான் கவனித்தேன்...முரளி அங்கிருந்து நகர்ந்து தூரத்தில் பக்கத்தூர் செல்லும் பாதையில் நடந்து கொண்டிருக்கிறான்.

என்ன ஏதென்று தெரிய நான் அவன் பின்னால் ஓட... என் பின்னால் மினாலியும் ஓடி வந்து விட்டாள். நாங்கள் வேகமாய் கூப்பிட்டுக் கொண்டே செல்ல...முரளி திரும்பி பார்க்காமல் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன் போல போய்க் கொண்டே இருக்கிறான்.

"இந்த நேரத்துல இவன் ஏன் இங்க போயிட்டுருக்கான்...!?" நான் முரளி என்று கூப்பிட வாயெடுத்தேன். மினாலி சட்டென வாயை பொத்தி சத்தம் போடாதீங்க என்று ஜாடை செய்தாள்.

அப்போது தான் நாங்கள் நடந்து கொண்டிருந்தது சுடுகாடு என்று புரிந்தது.

சுற்றிலும் மண் மேடுகளும்... சாம்பல் காடுகளுமாக இரவும் நிலவும் பொங்கி வழியும் பவுர்ணமி பளீரென வலையை வீசிக் கொண்டிருக்கிறது.

நான் அவளை செய்வதறியாது பார்த்தேன். பின்னால் வந்து கொண்டிருந்த துரையையும் சிந்தியாவையும் காணவில்லை.

இது என்னடா வம்பா இருக்கு என்று ஒன்றும் முடிவெடுக்க முடியாமல் தடுமாறினேன். சத்தம் போடாம வாங்க என்று அவள் முன்னால் நடக்க நானும் நடையை கூட்டினேன். போனவன் போய்க்கொண்டே இருக்கிறான்.

முரளி ...முரளி என்று சிறு குரலில் பெரும் காற்றை செய்தாலும்.... அவன் திரும்புவதாக தெரியவில்லை. நிலா வெளிச்சத்தில் பவர் கூடியது போல இன்னும் தீவிரம் காட்டியது ஒளி சிதறல்.

பழுப்பு பூத்த காட்டில் திக்கென எங்களை கடந்து என்னவோ போனது போல இருக்க... திகில் பாய்ந்து அந்த பாழடைந்த கோயில் சுவரோரம் சரிந்தோம். டக் டக் டக் டக் என்ற காலடி சத்தம் இப்போது நெருங்கியது. மீண்டும் எங்களை கடந்து செல்கையில் தான் நன்றாக பார்க்க முடிந்தது.

முரளி தான். கோவேறு கழுதை மீது அமர்ந்து அந்த கோயிலை சுற்றிக் கொண்டிருக்கிறான். அவன் முகம் சூனியத்தில் குதித்துக் கொண்டிருந்தது.

ஏன் இப்பிடி பண்றான். என்னாச்சு.. என்று யோசிக்க யோசிக்க... அருகே மேய்ந்து கொண்டிருந்த இன்னொரு கோவேறு கழுதை மீது மினாலி தாவி ஏறினாள். இப்போது முரளியின் கோவேறு கழுதையை அவள் கோவேறு கழுதை விரட்டுகிறது. முன்பு போலவே வட்டமடித்து முரளி மீண்டும் என் பக்கம் வந்து கடந்தான். சுவரோரம் இன்னும் இறுகி நின்று கவனித்தேன். உள்ளங்காலில் கூட வியர்வை. பின்னால் வந்த மினாலி என்னையும் கோவேறு கழுதையில் ஏற சொல்லி ஜாடை காட்ட...சடுதியில் உணர்ந்து நானும் ஓடி லாவகமாக ஏறி அமர்ந்து விட்டேன்.

படக் படக் படக் என்று அவன் வட்டமடித்துக் கொண்டே இருக்கிறான். அவனுடல் காற்றில் ஓர் அலையென அசைந்தபடியே இருக்கிறது. மெய்மறந்தவனின் மேனியில் ஒரு யாருமில்லை அமர்ந்திருக்கிறது. முரளியை விரட்டி வட்டமடித்துக் கொண்டே இருந்த எங்கள் கோவேறு கழுதை சட்டென ஒரு கட்டத்தில் வட்டத்தை விட்டு வழி மாறி செல்ல தொடங்கியது.

டக் டக் சத்தம் அடுத்தடுத்து கேட்டுக் கொண்டே ஒன்று தூரத்துக்கு போனது. ஒன்று தூரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.

பவுர்ணமி இரவு. புல்வெளி தூரங்கள். எதிரே மலர்வனம். தென்றலும் பூக்களும் மிதக்கும் மலை முகடுகளில் கோவேறு கழுதை மேல் அவள் அமர்ந்திருக்க... அணைத்தபடி பின்னால் நான் அமர்ந்திருக்க... வான்காவின் ஓவியத்தில் ஒன்று இப்படித் தான் நிகழ்ந்திருக்கும். தடக் தடக் சத்தம்.. இதயத்தின் லப் டப் லப் டப் சத்தத்தை ஒத்திருந்தது. காற்றுக்கு பறக்கும் அவள் செம்பட்டை கூந்தல்.. ஓவியம் தாண்டிய உற்சாகமாய் மினுங்கியது. கழுத்தோரம் மினுமினுக்கும் அவள் வாசம்... அவள் கன்னத்து சிவப்பு மச்சம்... பின் கழுத்தில் கூட ஒரு சிறு மச்சம் ஊதா நிறத்தில். முகம் மலர்ந்து கூந்தலில் சரிந்தேன்.

முரளிய காணோம் என்றேன்.

நம்மளையும் தான் காணோம் என்றாள்.

ஒரு மாய பெண்ணும் ஒரு மந்திரவாதியும் தூர தேசத்துக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள். கோவேறு கழுதை ரிதம் ரிதமாய் ஓடிக்கொண்டே இருக்கிறது. ராத்திரி வகை வகையாய் தோகை விரிக்கிறது.

அவள் கழுத்தை திரும்பி இதழை கொஞ்சமாக திறந்து முத்தத்துக்கு ஏங்குகிறாள். கொஞ்சம் குனிந்து கன்னம் உரசி இதழுக்குள் இதழ் நிறைக்க... மரங்கள் சூழ்ந்த ஒற்றையடி மூளையில் தூரம் செய்கிறது.

அய்யனார் இழுத்துகிட்டு போன முரளியை கண்டு பிடித்து கொண்டு வந்திருந்த கூட்டம்... எங்களை காணாமல் திகைத்துக் கொண்டிருந்தது. அடுத்து எங்களைத் தேடும் வேட்டையில்... நாங்கள் காலை வரை கிடைக்கவே இல்லை.

ஹ்ம்ம்....வருடங்கள் நிறைய ஓடி விட்டன. அதே மே மாதம்...

முரளியின் பொண்ணுக்கு சீர். ஊருக்கு வந்திருக்கிறோம்.

பழைய நினைவுகள்... பழைய உறவுகள்... என்று நிறைய பேசினோம். எல்லாரும் பெரியவர்களாகி விட்டதாக நினைத்துக் கொண்டோம். சாப்பாடு பரிமாறுகையில்... குனிந்த மினாலியை அத்தனை அருகே பார்த்தேன். கண்களில் எந்த மாற்றமும் இல்லை. கன்னம் தான் சற்று கூடி இருந்தது.

"ஏய்.. மின்னாலி... என்ன யோசனை... சீக்கிரம் போடு... எல்லாரும் வெயிட் பண்றங்கள்ல" சிறுக கத்தினான்... முரளி.

திரும்பி ஒரு முறை முறைத்து விட்டு... அதே நேரம் என்னை பார்த்து முகம் முழுக்க குறும்பு புன்னகையில் நகர்ந்தாள்.

சாப்பிட்டு முடித்ததும் வேகமாய் வந்து அருகே அமர்ந்து கொண்டாள். வாயிலிருக்கும் வெற்றிலையை காட்டி வேணுமா என்றாள். அதே வெட்க சிரிப்பு. வேண்டாம் என்று நான் சொல்ல வில்லை. கண்கள் பார்த்து புன்னகைத்தேன்.

ஊருக்கு கிளம்புவது பற்றிய பேச்சினூடாக... "ஏன் இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போகட்டும்" என்ற மினாலியை.. "நீ போயி புள்ளைய கவனி..." என்று முறைத்தான் முரளி.

"பெரிய ஆபீசரு... கட்டளை போட்டுட்டாரு... எல்லாரும் போகட்டும்... அப்புறம் இருக்கு" என்று சொல்லி முறைத்துப் போன மினாலியை பார்த்துக் கொண்டே இருந்தேன். எல்லாருக்கும் சிரிப்பு.

ஊருக்கு கிளம்பும் அடுத்த நாள் மினாலி அறையை விட்டு வெளியே வரவே இல்லை.

பேருந்து நிறுத்தத்துக்கு வழி அனுப்ப வந்த முரளி... பஸ் -ல் ஏறும் முன் ஒரு பேப்பரை கொடுத்தான்.

"ரெம்ப நாளா இதை உன்கிட்ட குடுக்கணும்னு சொல்லிட்டே இருந்தா... பிரிச்சுப் பாரு..." என்றவன் எதுவுமற்ற முகத்தில் பார்த்தான். வண்டி கிளம்பி விட்டது. ஜன்னலோரம் அமர்ந்த அடுத்த நொடி காகிதத்தைப் பிரித்தேன். கண்கள் நிறைய மனதும் கண்டது. அதில் ஒரு கோவேறு கழுதையில் ஒரு நாயகனும் நாயகியும் காற்றில் கூந்தல் பறக்க ஒரு மலை மேட்டில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மனம் பொங்கும் குளம்பு சத்தம். அந்த இரவு அவள் சொன்ன அந்த கதை. ஏனோ கண்களில் நீர் கோர்த்து விட்டது. இதயம் நிரம்பும் அவள் வாசம்...நான் நல்லா வரைவேன் என்ற அவள் இளங்குரலை கூவியது. இனி இங்கு வரவே கூடாது என்று நினைத்த தருணம் கை நழுவிய ஓவியம் ஜன்னல் தாண்டி காற்றில் மிதக்கத் தொடங்கியது.

காற்றெங்கும் டக் டக்... டக் டக்... டக் டக்...

- கவிஜி

Pin It